All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

நாட்டின் டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 4.59 சதவீதம்

நாட்டின் டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 4.59 சதவீதம் 

India’s Retail Inflation to 4.59 Percent – December 2020

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer price index) என சொல்லப்படும் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சந்தை எதிர்பார்த்ததை விட குறைவான அளவில் முடிந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற நிலையை கொண்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக சில்லரை பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல், மத்திய வங்கியின் இலக்கினை தாண்டி தான் வந்துள்ளது. வங்கி வட்டி குறைந்து வரும் நிலையில், நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் எதிர்பாராமல், 4.59 சதவீதம் என்ற அளவில் முடிந்துள்ளது. 2020ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இது 6.93 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2020 மாத பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் காணப்படாத குறைவான விகிதமாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது உணவுப்பொருட்களில் காணப்பட்ட விலை குறைவு தான். முன்னர் 9.50 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் தற்போது 3.41 சதவீதமாக(டிசம்பர் 2020) இருந்துள்ளது.

புகையிலை பொருட்களின் பணவீக்கம் மட்டும் சற்று உயர்ந்து 10.74 சதவீதத்தில் நிறைவு பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தில் 3.19 சதவீதமாக இருந்த வீட்டுமனை துறை, டிசம்பர் மாதத்தில் 3.21 சதவீதமாக இருந்துள்ளது. இது போல ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) பணவீக்கம் 1.90 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

விழா காலங்களில் காணப்பட்ட தேவையால், துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலைவாசியும் சற்று உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதன்முறையாக தற்போது தான் மத்திய வங்கியின் பணவீக்க இலக்கிற்குள் சில்லரை விலை பணவீக்க விகிதம் வந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கு சந்தை எதிர்பார்த்த 5.28 சதவீதத்தை விட குறைவாகவும் பணவீக்க விகிதம்(CPI Retail Inflation) இருந்துள்ளது. அடுத்து வரும் காலக்கட்டங்களில் விலைவாசி குறையும் நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பொதுவாக பணவீக்கம் குறைவாக இருக்கும் போது, வங்கி வட்டி விகிதமும் குறைவாக தான் காணப்படும். இது பங்குச்சந்தைக்கு சாதகமான நிலையாக மாறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன் சிக்கல் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன் சிக்கல் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  

Bad loans issue not seen in last 20 years – RBI Financial Stability Report 2021

கடந்த வெள்ளிக்கிழமை(08-01-2021) அன்று பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் போது நிதி சந்தையில் அனுமதிக்கப்பட்ட பணப்புழக்கத்தை திரும்ப பெற போவதாக பாரத ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பணப்புழக்க மேலாண்மை கட்டமைப்பின்(Revised Liquidity Management Framework) கீழ் ஜனவரி 29,2021 அன்று வங்கிகளிடம் இருந்து ரூ.2,00,000 கோடியை ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மத்திய வங்கி வாங்க உள்ளது.

இதன் காரணமாக சந்தையில் உள்ள பணப்புழக்கம் சற்று குறையும். மேலும் கொரோனாவுக்கு முன்னர் இருந்த சாதாரண பணப்புழக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் என்பது நாட்டில் உள்ள வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பணம் பெறுவது அல்லது கடன் பெறும் நடவடிக்கையாகும்.

சொல்லப்பட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று(11-01-2021) வெளியிடப்பட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில்(Financial Stability Report) சில பொருளாதார விஷயங்கள் அலசப்பட்டன. பெருந்தொற்று காலத்தில், மத்திய வங்கியின் கொள்கை செயல்பாடுகள் பொருளாதார சரிவை குறைத்ததாகவும், தொழில் மற்றும் தனிநபர் வருவாயில் ஏற்பட்ட சிக்கலை மீட்டெடுப்பதற்கும் உதவியதாக ரிசர்வ் வங்கி சொல்லியுள்ளது.

தடுப்பூசி வளர்ச்சி நேர்மறையான செய்தியாக இருந்தாலும், இரண்டாம் அலை அதிகப்படும் நிலையில் அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கலாம். வங்கிகளின் கடன் வளர்ச்சி அடக்கமாக உள்ளதாகவும், ஒழுங்குமுறை விநியோகங்களின் உதவியுடன் வங்கிகளின் செயல்திறன் மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதே வேளையில் செப்டம்பர் 2020 முடிவின் படி, நாட்டில் உள்ள வணிக வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் விகிதம்(GNPA) 7.5 சதவீதமாக இருந்துள்ளது. இது வரும் செப்டம்பர் 2021க்குள் 13.5 சதவீதமாக உயரக்கூடும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரக்கூடிய காலங்களில் உலக பொருளாதாரம் கடும் மந்தநிலையை அடையும் நிலையில், இந்த வாராக்கடன் விகிதம் 14.8 சதவீதம் வரை செல்லக்கூடும் எனவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

கடந்தாண்டின் செப்டம்பர் காலத்தின் படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 9.7 சதவீதமாக உள்ளது. அடிப்படை நிலையில்(Base Scenario) இந்த விகிதம் 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 16.2 சதவீதம் வரை செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. இது தனியார் வங்கிகளில் 4.6 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாகவும், அன்னிய வங்கிகளில் 2.5 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக செல்லும் என கூறப்பட்டுள்ளது.

கடுமையான பொருளாதார மந்தநிலையில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 17.6 சதவீதம், தனியார் வங்கிகளில் 8.8 சதவீதம் மற்றும் அன்னிய வங்கிகளில் 6.5 சதவீதமாக இருக்கலாம் என பாரத ரிசர்வ் தெரிவித்துள்ளது.

இது போன்ற நிலை கடந்த 20 வருடங்களில் காணப்படாத வாராக்கடன்  விகிதமாக இருக்கலாம். கடந்த சில வருடங்களாக மத்திய வங்கி சார்பில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளிலும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிலும் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்காக மூலதன உட்செலுத்தல்(Capital Infusion) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

20 வருடங்களுக்கு வட்டியில்லா வங்கிக்கடன் – எங்கே ?

20 வருடங்களுக்கு வட்டியில்லா வங்கிக்கடன் – எங்கே ?

Zero Percent Fixed Interest rate loan for 20 Years – Homeowners

வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைவாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கான வட்டி விகிதமும் மிக குறைவாக தான் உள்ளது. ஒரு வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்திற்கு கீழாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள்(Bank rates) குறையும் போது, கடன் பத்திரங்களுக்கான(Bonds) தேவை அதிகரிக்கும். இதன் மூலம் பத்திரங்களுக்கான வட்டி விகிதம், வங்கிகளை காட்டிலும் அதிகரிக்க செய்யும். இது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும். தற்போதைய நிலையில், வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதால், பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின்(Debt Mutual Funds) வட்டி விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 8-9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, முதலீட்டாளர்களுக்கு வங்கியில் வாய்ப்பு இல்லையென்றாலும், வங்கிக்கடன் பெறுவோருக்கு இது அரிய வாய்ப்பாக தான் அமையும். நடப்பில் வீட்டுக்கடனுக்கான(Home loans) வட்டி விகிதம் சராசரியாக 7.5 சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. விலைவாசியை தவிர்த்து பார்க்கும் போது, இது மேலும் நீடிக்கும் நிலை தான் தற்போது உள்ளது.

உலகளவில் காணப்படும் வட்டி விகிதங்களில் பெரும்பாலும் ஆசிய, ஆப்பிரிக்க  நாடுகளில் தான் சற்று அதிகமாக காணப்படுகிறது. வளர்ந்த நாடுகளின் வட்டி விகிதங்கள் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. அமெரிக்கா, ஆத்திரேலியா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள வட்டி விகிதம் 0.5 சதவீதத்திற்கு குறைவே.

ஜப்பானில் சொல்லவே வேண்டாம். வங்கியில் உங்கள் பணத்தை வைத்திருக்க நீங்கள் தான் வங்கிக்கு பணம் கட்ட வேண்டும். அந்த அளவுக்கு அந்நாட்டின் விலைவாசியும்(பணவாட்டம்), வட்டி விகிதமும் உள்ளது. ஜப்பானின் 10 வருட அரசு பத்திரங்களின் வருவாய்(Bond yield) 0% ஆக உள்ளது.

இது போல டென்மார்க்கிலும் அதன் பணவீக்கம் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த எட்டு வருடங்களாக அந்நாட்டின் வட்டி விகிதம் 0% க்கு குறைவாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. 2013-2017 காலகட்டங்களில் டென்மார்க் நாட்டின் மத்திய வங்கியினுடைய வட்டி விகிதத்தை, அதன் சராசரி பணவீக்கத்தில் கழிக்கும் போது, கிடைக்கப்பெறும் நிகர விகிதம் (-1.40) சதவீதமாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு, 20 வருட கடன் பத்திரங்களின் வருவாய், டென்மார்க்கில் 0% ஆக சொல்லப்பட்டிருந்தது. இதனை ஒட்டி தற்போது டென்மார்க்கின் டோட்டல் கிரெடிட்(Totalkredit) என்ற வங்கி, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை 0% ஆக கூறியுள்ளது. அதாவது 20 வருட வீட்டுக்கடனுக்கு, வட்டியில்லா அசலை மட்டும் செலுத்துவதை அந்த வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே இதனை போல சில நிறுவனங்கள் கடந்த காலங்களில் மிக குறைந்த வட்டி விகிதத்தை டென்மார்க் நாட்டில் வெளியிட்டுள்ளது.

வரக்கூடிய நாட்களில் மேலும் சில வங்கிகள் இது போன்ற செயல்பாடுகளை கடைபிடிக்கும் என சொல்லப்படுகிறது. பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் எதிர்மறை நிலையில்(Negative Rates) செல்லும் போது, நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு வட்டி வருவாய் அளிக்கப்படாமல், அபராத கட்டணம் செலுத்த நேரிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜனவரி 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜனவரி 2021

Small savings scheme interest rate for the Period – January to March 2021

நாட்டில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித மாற்றம், காலாண்டுக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் காணப்படும் திட்டங்கள், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் தான் வருகிறது. கடந்த சில வருடங்களாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுக்கான (ஜனவரி-மார்ச்) சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 2020 வரையிலான வட்டி விகிதமே இம்முறையும் தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.

அடிப்படை சேமிப்பு கணக்குக்கான(Savings account) வட்டி விகிதம், ஜனவரி-மார்ச் 2021 காலத்திற்கு 4 சதவீதம் என்ற அளவில் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் வங்கிகளில் காணப்படும் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும். ஒரு வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 5.50 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு மற்றும் மூன்று வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் 5.50 சதவீதமாக உள்ளது. ஐந்து வருட காலத்திற்கான டெபாசிட் தொகைக்கு(Term Deposit) மட்டும் இது 6.70 சதவீதமாக உள்ளது. 5 வருட தொடர் சேமிப்பு திட்டத்திற்கு(Recurring Deposit – RD) 5.80 சதவீதமாக இருக்கிறது.

Small savings scheme interest jan 2021

மூத்த குடிமக்களுக்கான(Senior Citizen savings scheme) ஐந்து வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.4 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள்(Sukanya Samriddhi) திட்டத்தில் வட்டி விகிதம் 7.60 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அதிக வட்டி விகிதத்தை செல்வமகள் திட்டம் மட்டுமே பெறுகிறது.

5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டத்திற்கு 6.80 சதவீத வட்டி விகிதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.90 சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வருவாய் பெறுவோருக்கான(5 Years Monthly Income Scheme) திட்டத்தின் வட்டி விகிதம் 6.60 சதவீதமாக உள்ளது.

பொது வருங்கால வைப்பு(PPF) நிதி திட்டத்தில் 7.10 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டிருக்கிறது. செல்வமகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் முழுமையான வரி சேமிப்பு(Tax Exempted – EEE) திட்டங்களாகும். இந்த இரண்டும் நீண்டகால சேமிப்பு திட்டமாக அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் ஒரு ‘கிரேட் டிப்ரஷன்’ – என்ன சொல்கிறது மாற்றத்திற்கான நிதி ஆயோக்

மீண்டும் ஒரு ‘கிரேட் டிப்ரஷன்’ – என்ன சொல்கிறது மாற்றத்திற்கான நிதி ஆயோக்  

Like a Great Depression – National Institution for Transforming India(NITI) Aayog

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தை யாரும் மறந்திருக்க முடியாது. சீனாவில் தானே, அமெரிக்காவில் தான் கொரோனா வந்துள்ளது என்ற நிலை மாறி, உள்நாட்டிலும் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்பே ஊரடங்கு உத்தரவு அமலானது. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட வேலையிழந்து பொருளாதாரம் சார்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.

பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் மிகுந்த வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என சர்வேதச அமைப்புகள் சொல்லியிருந்தது. ஊரடங்கு காலத்தில் இந்திய வரலாற்றிலேயே காணப்படாத வேலைவாய்ப்பின்மை விகிதம் நிலவியது. அமைப்பு சாரா வேலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை இங்கே கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பங்குச்சந்தை குறியீடுகள் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், பின்னர் விரைவாக மீண்ட உலக சந்தைகள்  அந்த வருடத்தை தனக்கு சாதகமாக முடித்து கொண்டது. அமெரிக்க சந்தை குறியீடு மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 45 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆண்டின் முடிவில் 15 சதவீத ஏற்றத்துடன் முடிவு பெற்றது.

இதுவே 2019ம் ஆண்டு அமெரிக்க சந்தை 30 சதவீதமும், இந்திய பங்குச்சந்தை 13 சதவீத ஏற்றமும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார மந்த நிலை என்ற பாதகத்தை தாண்டி, அதிக முதலீடுகளை பெற்றதால் சந்தை குறியீடுகள் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறன. இது ஒரு ‘குமிழி (Bubble)’ நிலை போல ஒப்பிடப்படுகிறது. பெரும்பாலான வல்லுநர்கள் பங்கு சந்தையில் அடைந்த லாபத்தை மற்ற முதலீட்டு சாதனங்களில் பரவலாக்குமாறு அறிவுறுத்துகின்றனர். 

பொதுவாக முதலீட்டை பிரித்து முதலீடு செய்வதும்(Asset Allocation), பல்வகைப்படுத்துதலும்(Diversification) அவசியம். ஒரே முதலீட்டு சாதனத்தை காலம் முழுவதும் கொண்டிருப்பது சிறந்த போர்ட்ஃபோலியோ(Portfolio) சாதனமாக அமையாது. நாட்டின் டிசம்பர் 2020 மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் எதிர்பாராத நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. வரக்கூடிய நாட்களில் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளும்(Quarterly results), மத்திய பட்ஜெட் தாக்கலும்(Budget India 2021) வெளிவர உள்ளது.

இந்நிலையில் நிதி ஆயோக் என சொல்லப்படும் கொள்கை ஆணையம், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தை கூறியுள்ளது. நிதி ஆயோக், நாட்டின் திட்டமிடல் அமைச்சகத்தின்(Ministry of Planning) கீழ் செயல்படுகிறது. இதன் தலைவராக பிரதமர் திரு. நரேந்திர மோடி உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும்,  துணை தலைவராக ஒரு பொருளாதார வல்லுனரும் உள்ளனர்.

கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில், உலக பொருளாதாரம் இரண்டு தீவிர நிலைகளில் சுழலக்கூடும் எனவும், பெரும் மந்தநிலையை(Great Depression) ஒத்திருக்கும் சூழ்நிலை ஒன்றாகவும், முதலாம் உலகப்போருக்கு பிறகான காலமாக மற்றொன்றும் இருக்கும் எனவும் நிதி ஆயோக் கூறியுள்ளது. அதாவது 1920-30 காலங்களில் காணப்பட்ட நிலையை ஒப்பிட்டு சொல்லியுள்ளது.

உலகம் முழுவதும் காணப்படும் எதிர்ப்பு வாதம், வர்த்தகம் மீதான அதிக உணர்திறன், வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, உலக நாடுகளின் அதிகப்படியான கடன் தன்மை, வறுமை நிலை, உணவுப்பொருட்களில் காணப்படும் ஏற்ற-தாழ்வு, நிதி சந்தைகளில் காணக்கூடிய அதிக ஏற்ற-இறக்கங்கள் ஆகியவை வரக்கூடிய காலங்களில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தலாம் என இந்த ஆணையம் தனது உலக பார்வையை முன் வைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட நிதி இழப்பு, ஊரடங்கின் போது ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நிலையை சரிசெய்ய அதிக பொருளாதார ஊக்குவிப்பு செலவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக காணப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான பெருமளவிலான செலவுகளை அரசு ஏற்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தனிநபர் சேமிப்பும், பொறுப்பும் மிகவும் அவசியமான ஒன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்கள் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வரி எவ்வளவு ?

உங்கள் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வரி எவ்வளவு ?

Tax… Taxi… Taxman – Know about your Tax !

நவீன காலத்தில் சம்பாதிப்பது மட்டுமே ஒரு வேலையாக இருக்க முடியாது. சம்பாதித்த வருவாயில் சரியான சேமிப்பை ஏற்படுத்தவில்லை எனில், பின்னாளில் பொருளாதாரம் சார்ந்த சிக்கலை சந்திக்க நேரிடும். ‘கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு’, ‘கூழ் ஆனாலும் குளித்துக் குடி’ என நம் மூதாதையர்கள் சொன்னது சுகாதாரத்தையும், சிக்கனத்தையும் பேணி காப்பதை தான்.

சேமிப்பும், முதலீடும் நம் பண்பாட்டு வாழ்க்கையில் கலந்த ஒன்று. அவசர காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை(கோயில் கலசத்திலும்)  அப்போதைய காலத்தில் நாம் சேமிக்க பழகி விட்டோம். வெள்ளமும், பஞ்சமும் வந்த போது, அது நமக்கு உதவியது.  இன்று நீங்கள் சேமித்தால், உங்கள் சேமிப்பு முதுமை காலத்தில் உங்களை பாதுகாக்கும். ஆனால் புறவுலகில் இன்று காணப்படும் பொருட்களின் மீது நம் ஈடுபாடு அதிகமாக காணப்பட்டு, நமக்கு தேவையில்லாத பொருட்களையும் வீட்டில் வாங்கி குவித்து வருகிறோம். இதன் காரணமாக செலவுகள் மட்டுமில்லாமல் வரியாக விரயம் செய்வதும் அதிகமாக உள்ளது.

ஆம், தனிநபர் வருவாய் பெறுவோர் நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக தனது ஒட்டுமொத்த வருவாயில் 60 சதவீதத்தை வரியாக மட்டுமே செலுத்தி வருகிறார்கள். இதுவே குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்லும் நிலையில் அதனை எண்ணி பாருங்கள். இது நேரடி வரி மற்றும் முறைமுக வரியாக (Inclusive of GST) அமைந்துள்ளது. வருவாய் அதிகமாக பெறுபவர்களை காட்டிலும் வரி ஏய்ப்பு செய்பவர்களையும், வருமான வரி தாக்கல் செய்யாதவர்களையும் தான் அரசு கவனித்து வருகிறது.

வரியை நாம் முழுவதுமாக தவிர்க்க முடியாது. அதே வேளையில் வருமான வரி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச்சலுகைகளை திறமையாக பயன்படுத்தி, நேர்மையான முறையில் வரி சேமிப்பு செய்வது மட்டுமில்லாமல் சரியான நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்வதும் தனிநபர் ஒருவரின் கடமையாகும். அதற்காக வரி சேமிக்கிறேன் என தேவைப்படாத நிலையில் வீட்டுக்கடனை(Housing loan) வாங்கி விட்டு நிதி சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடாது. உங்களுக்கான தேவை இருத்தல் வேண்டும்.அதனை வாய்ப்பாக கொண்டு வரி சேமிப்பும் இருக்க வேண்டும்.

  • சேமிப்பு, முதலீடு – இரண்டும் ஒன்றா ?
  • வரி பிடித்தம் இல்லையென்றாலும், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா ?
  • பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்கிறீர்களா – அது தொழில் வருவாயாக கணக்கிடப்படுவது உங்களுக்கு தெரியுமா ?
  • அஞ்சலக சேமிப்பு மற்றும் வங்கி டெபாசிட் – வரி எவ்வளவு ?
  • நீங்கள் பங்கு வர்த்தகம் செய்யக்கூடாது – யார், யாருக்கு ?
  • பங்கு முதலீட்டில் அரசு பணியாளர்களுக்கான எச்சரிக்கை
  • சிறு சேமிப்புத்திட்டம்(Postal and Bank Savings) உங்களுக்கு நீண்டகாலத்திற்கு உதவாது – ஏன் ?
  • 2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி எப்படி ?
  •  வருமான வரியை எப்படி கணக்கிட வேண்டும் ?

வாருங்கள், வரும் சனிக்கிழமை(09-01-2021) மாலை 05:30 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…

பதிவுக்கு:

Taxman Webinar – Registration

கட்டணம்: ரூ. 100 மட்டும்

நாள் மற்றும் நேரம்: 09-01-2021 & மாலை 05:30 – 06:30

பதிவுக்கு பின்னர் உங்களுக்கான இணைப்பு (Webinar Link) மின்னஞ்சல் மற்றும்  குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் – பங்குச்சந்தை அலசல்

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

SBI Life Insurance – Fundamental Analysis – Stock Market

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.(State Bank of India) நிறுவனமும், பிரெஞ்சு நாட்டு வங்கி குழுமமான பி.என்.பி. பரிபாஸ்(BNP Paribas) நிறுவனமும் கூட்டாக சேர்ந்து துவக்கிய தனியார் நிறுவனம் தான் எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ். உலகின் 43வது மிகப்பெரிய வங்கியாக நம் நாட்டின் எஸ்.பி.ஐ. உள்ளது. பி.என்.பி. பரிபாஸ் நிறுவனம் சொத்துக்கள் அடிப்படையில் உலகின் எட்டாவது மிகப்பெரிய வங்கியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001ம் ஆண்டு துவங்கப்பட்ட எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி 55 சதவீத பங்குகளையும், பி.என்.பி. நிறுவனம் 5 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. பி.என்.பி. நிறுவனம் முன்னர் 22 சதவீத பங்குகளை கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது. அன்னிய முதலீட்டாளர்களிடம் சுமார் 26 சதவீத எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உள்ளது.

காப்பீட்டு துறையில்(Insurance Sector) இயங்கும் இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 947 நேரடி அலுவலகங்களும், 28,000 பங்களிப்பு கிளைகளும் உள்ளன. நிறுவனத்தில் சுமார் 17,000 பணியாளர்களும், 1,50,000 காப்பீட்டு ஏஜெண்டுகளும் சேவை செய்து வருகின்றனர். பல கார்ப்பரேட் நிறுவனங்களிலும், வங்கிகளிலும் இதன் காப்பீடு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

2017-18ம் ஆண்டு அறிக்கையின் படி, இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் கோடிக்கு  மேற்பட்ட சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தின்(Gross written Premium) மதிப்பு 30,000 கோடி ரூபாய். தனியார் காப்பீட்டு துறையில் கடந்த ஆண்டின் சிறந்த நிறுவனமாகவும் எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் சொல்லப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.90,000 கோடி. காப்பீட்டு துறையில் சேவை புரிந்து வருவதால், நிறுவனத்திற்கான கடன் எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதமாகவும், லாபம் 12 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 43,798 கோடி ரூபாயாகவும், செலவினம் 42,438 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,422 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.8,663 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மொத்த மூலதனத்தின் மீதான வருவாயும் இந்த நிறுவனத்திற்கு நன்றாக உள்ளது. பொதுவாக காப்பீட்டு துறையில் பொதுத்துறை நிறுவனங்களை விட, தனியார் நிறுவனங்களின் செயல்பாடு பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. துரிதமான சேவை, காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வருவது மற்றும் தொடர் வளர்ச்சி ஆகியவை எஸ்.பி.ஐ. லைப் நிறுவனத்திற்கு உள்ளது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை பங்கு ஒன்றுக்கு 900 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) இந்த பங்கு ஒன்றின் விலை ரூ.1000 என்ற மதிப்பை பெறுகிறது. பங்கு முதலீட்டை பரவலாக்கம்(Sector Diversification) செய்ய விரும்புவோர் இது போன்ற காப்பீட்டு துறையில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதை ஒரு உத்தியாக கையாளலாம். எதிர்காலத்தில் இந்த துறைக்கான தேவையும் அதிகமாக உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021

Income Tax Returns Filing for Individuals extended to 10, January 2021

2019-20ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு (AY 2020-21) வருடத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமத்தால் வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு சில மாதங்களுக்கு முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதன் படி தனிநபர் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான காலக்கெடு இன்றுடன் (31-12-2020) முடிவடையும் நிலையில், மீண்டும் ஒரு முறை இதனை நீட்டித்துள்ளது நிதி அமைச்சகம்.

தனிநபர் வருமான வரி தாக்கலில் ஆண்டு வருவாய் (ஒட்டுமொத்த வருவாய்) ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்தை கடந்தால், ஒருவருக்கு வரிப்பிடித்தம் இல்லையென்றாலும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.

நேற்று (30-12-2020) மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மதிப்பீட்டு ஆண்டு 2020-21க்கு வருமான வரி தாக்கல் செய்பவர்களில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குதாரர்களுக்கு(Accounts audited) முன்னர் இருந்த 31, ஜனவரி 2021 என்ற காலக்கெடு தற்போது 15, பிப்ரவரி 2021 என சொல்லப்பட்டுள்ளது.

இது போல சர்வேதச மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களுக்கு முன்னர் இருந்த 31,ஜனவரி 2021 என்ற கடைசி தேதி, இப்போது 2021ம் ஆண்டின் பிப்ரவரி 15ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வரிதாரர்களுக்கு (தனிநபர் உட்பட) ஏற்கனவே சொல்லப்பட்ட டிசம்பர் 31, 2020 என்ற காலக்கெடு, தற்போது 2021 ஜனவரி மாதம் 10ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவாத்(Vivad Se Vishwas Scheme) திட்டத்திற்கு 31, ஜனவரி 2021 மற்றும் நேரடி வரி மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் செல்லும் அறிவிப்பிற்கு 31, மார்ச் 2021 எனவும் காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி(CGST) 2017 சட்டம், பிரிவு 44ன் கீழ் ஆண்டு வருவாயை சமர்பிப்பதற்கான தேதி 28, பிப்ரவரி 2021 ஆக சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு(Margin of Safety) என்ன ?

உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு(Margin of Safety) என்ன ?

What is your Margin of Safety ?

Margin of Safety’ என சொல்லப்படும் பாதுகாப்பு விளிம்பு, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளுக்கு மட்டுமல்ல. நாம் நித்தமும் சந்திக்கும் நிகழ்வுகளிலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சார்ந்த விஷயங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. உடல்நலம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை நாம் அணுகும் போது, இந்த விஷயத்தை நாம் முன்னரே செய்திருக்கலாமோ என்ற கேள்வியும் எழுவதுண்டு.

‘சிறு துளி பெரு வெள்ளம்’, ‘வரும் முன் காப்போம்’ போன்ற வரிகளை நாம் பல காலங்களாக கேட்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் நடைமுறையில் அதனை செயல்படுத்த தவறி விட்டு, பின்பு சிக்கலில் மாட்டி கொள்கிறோம். பின்வரும் விஷயங்களில் உங்களது நடப்பு நிலை என்ன என்பதனை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கோ அல்லது உங்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ எதிர்பாராத விதமாக உடல்நலம் அல்லது நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை களைய உங்களிடம் உள்ள உடனடி தீர்வு என்ன ?
  • நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை அல்லது உங்களது தொழில் உங்களை விட்டு போய் விட்டால், நீங்கள் வைத்திருக்கும் அடுத்த திட்டம் என்ன ? 
  • வேலையிழப்பு நாட்களை பற்றி யோசித்தது உண்டா, அப்படியெனில் உங்களிடம் அவசர தேவைக்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளதா ?
  • உங்களது அனைத்து காலத்திற்கான(All time prevention mode), ‘வரும் முன் காப்போம்’ உத்தி என்ன ?
  • பாதுகாப்பான முதலீடு என நாம் பல காலமாக ஒரே இடத்தில் சேமித்து வைத்துள்ளோம். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. நீங்கள் எதிர்பார்த்த மற்றும் உங்கள் இலக்குகளை அடைவதற்கான தொகை கிடைக்காமல் போகலாம். மாற்று திட்டம் எதுவும் வைத்துள்ளீர்களா ?

பொதுவாக நமக்கு முன் உள்ள பாதுகாப்பு கவசமாக காப்பீட்டு திட்டங்கள் (Insurance – ஆயுள், மருத்துவம் மற்றும் விபத்து) உள்ளன. நமது அசையா சொத்துக்களுக்கும் காப்பீட்டை எடுத்து கொள்ளலாம். நிதி இலக்குகளுக்கும், நமது வயதுக்கு தகுந்தாற் போல் ஏற்படும் கட்டாய தேவைகளுக்கும் நாம் சேமித்து வைக்கலாம். பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெற முதலீட்டை மேற்கொள்ளலாம்.

நமக்கு முன் உள்ள முதலீட்டு வாய்ப்பாக நிலம், தொழில், பங்குகள், கடன் பத்திரங்கள், வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கப்பெறும் சிறு சேமிப்பு திட்டங்கள், பணப்பயிர்கள், ரொக்கம் ஆகியவை. (கவனிக்க: நாள் வணிகம் மற்றும் மெய்நிகர் நாணயம் போன்ற ஊக செயல்பாடுகள் முதலீடு அல்ல. அவற்றில் எச்சரிக்கை தேவை)

பணவீக்கத்தையும், முதலீட்டில் உள்ள ரிஸ்க் தன்மையையும் குறைத்து (தவிர்க்க இயலாது) நீண்டகாலத்தில் அதனை நல்ல வருவாயாக மாற்ற, அஸெட் அலோகேஷன்(Asset Allocation) மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification) அவசியம்.

இப்போது சொல்லுங்கள், உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு என்ன ?

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை – இன்று தொடக்கம்

நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை – இன்று தொடக்கம்

India’s First Driverless Metro Rail Service – Starts Today

தானியங்கி ரயில் சேவையில், உலகின் முதல் இயக்கம் கடந்த 1967ம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்டது. தொழில்நுட்ப புரட்சி குறைவாக எண்ணப்பட்ட அக்காலத்தில் முதல் தானியங்கி ரயில் சேவை இருந்திருந்தாலும், அவசர தேவைக்காக ஒரு ஓட்டுநர் ரயில் கேபினில் அமர்ந்திருந்தார். முழுமையான ஓட்டுநர் இல்லா ரயில் சேவை முதன்முதலில் 1981ம் ஆண்டு ஜப்பானில் தான் நடைபெற்றது.

ஓட்டுநர் இல்லாத ரயில் சேவையில் பல தொழில்நுட்ப அமைப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண பயணிகள் ரயில் சேவையிலிருந்து, மெட்ரோ பயணிகள் ரயில் சேவை தனித்துவம் மிக்கது. உலகின் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் சேவையில் 7 சதவீதம் ஓட்டுநர் இல்லாத ரயில்(Driverless Metro Rail) சேவையை தான் கொண்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையில் நீண்ட தூரம் கொண்ட ரயிலை துபாய் இயக்கி வருகிறது. இதன் தூரம் 75 கி.மீ. உலகின் அதிவேக மெட்ரோ ரயில் சீனாவின் ஷாங்காய் மக்லேவ் சேவையாகும். இதன் வழித்தடம் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தை ,கொண்டிருந்தாலும், தற்போது மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.

இந்த பங்களிப்பில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இன்று(28-12-2020) பிரதமர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். இந்த சேவை டெல்லி மெட்ரோ ரயில் சேவையின் 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா தடத்தில் நடைபெற உள்ளது.

டெல்லி மெட்ரோ தற்போது 390 கிலோமீட்டர் தூர சேவையையும், 285 ரயில் நிலையங்களையும் நிர்வகித்து வருகிறது. நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை இன்று துவங்கப்பட்டாலும், நடப்பில் உள்ள மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலும் ஓட்டுநர்களை சாராத கட்டுப்பாட்டு அமைப்புகளால் தான் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் இச்சேவை பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான ரயில் சேவையை அளிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com