நாட்டின் பொருளாதாரத்தில் அடுத்தகட்ட நிலை என்ன ? மத்திய ரிசர்வ் வங்கி
REPO Rate unchanged, the next step on Nation’s Growth – RBI Monetary Policy
கடந்த திங்கட்கிழமை(05-04-2021) மத்திய நிதிக்கொள்கை குழு சார்பில் நடைபெற்ற கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் சார்ந்த தகவலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த அறிக்கைகளும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்டது.
தொடர்ச்சியாக ஐந்தாவது முறை வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நடப்பில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. இது போல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும்(Reverse REPO) எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதமாக தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.
நீடித்த அடிப்படையில் வளர்ச்சியை தக்கவைக்க தேவையான அளவிற்கு நிலைப்பாட்டை தொடரவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நாட்டின் பணவீக்கம் ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம் எனவும், அதனை சார்ந்து தான் தற்போதைய வங்கி வட்டி விகித முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாரத ரிசர்வ் வங்கி(RBI) கூறியுள்ளது.
நடப்பில் காணப்படும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகமாகி வரும் நிலையில், தடுப்பூசி திட்டம் சற்று சாதகமாக உள்ளது. எனினும் வரும் காலங்களை எச்சரிக்கை தன்மையாக கொண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் சார்ந்த அறிக்கைகள் மதிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம்(CPI Retail Inflation) 5.03 சதவீதமாக சொல்லப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) 5.2 சதவீதமாக இருக்கும் எனவும், ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் இதே அளவு தொடரும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
2021-22ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சற்று குறைந்து 4.4 சதவீதமாகவும், நான்காம் காலாண்டில் இது 5.1 சதவீதமாக அதிகரிக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2025-26ம் நிதி ஆண்டின் மார்ச் மாதம் வரை பணவீக்க இலக்கு 2-6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என நிதிக்கொள்கை குழு கூட்ட முடிவில் சொல்லப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் பணவீக்க விகிதம், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட சற்று அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் காணப்படும் சந்தை பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியதும் இதற்கு காரணமாக உள்ளது. கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது, நடப்பில் உலக பங்குச்சந்தைகளும், அரசு பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. உலகளவில் காணப்படும் ஒருவித நிலையற்ற தன்மையும், சந்தை மதிப்பு ஏற்றமும் தற்போது விற்பனை அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான பொருளாதார ஊக்குவிப்பு காரணமாக, வரக்கூடிய காலத்தில் நாட்டின் வளர்ச்சி சாதகமான தன்மையை கொண்டிருக்கும் என மத்திய வங்கி கூறியுள்ளது. இரண்டாவது அலை காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் நுகர்வோர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth) 26.2 சதவீதமாகவும், இது இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகள் முறையே 8.3 சதவீதம் மற்றும் 5.4 சதவீதமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(ஜனவரி-மார்ச் 2022) 6.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை