மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் – மத்திய ரிசர்வ் வங்கியின் நிதித்துளிகள்
RBI’s Monetary Policy Committee – Highlights – August 2020
நடப்பு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(MPC) சில முடிவுகள் சொல்லப்பட்டது. ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த குழு கூட்டம் நாட்டின் நிதி சார்ந்த விஷயங்களை விவாதிக்கும். பின்பு அதன் மூலம் எட்டப்பட்ட முடிவுகளை பொதுவெளியில் வெளியிடும்.
நேற்று முடிவுக்கு வந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில்(REPO Rate) எந்த மாற்றமுமில்லை எனவும், முன்னர் சொல்லப்பட்ட 4 சதவீத வட்டி விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இது போல ரிவர்ஸ் ரெப்போ விகிதத்திலும்(Reverse REPO) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வங்கிகளின் வட்டி விகிதமும் 4.25 சதவீதத்தில் தொடரும் என பாரத ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நாட்டின் பணவீக்கம் 4 சதவீதம் என்ற இலக்கை (+/- 2) ஒட்டி இருக்கும் எனவும், இதனை சார்ந்தே பொருளாதார வளர்ச்சியும் இருப்பதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
நடப்பாண்டின் முதல் காலாண்டை காட்டிலும், இரண்டாவது காலாண்டில் தான் உலக பொருளாதாரம் சுணக்கம் அடைந்துள்ளதாகவும் சொல்லியுள்ளது. இரண்டாம் காலாண்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்றுள்ளது.
உள்நாட்டில் மே மாதத்திற்கு பிறகு தொழில்கள் ஓரளவு நடைபெற்று வந்தாலும், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முழுமையான தொழில் இன்னும் நடைபெறவில்லை. தொழிற்துறை உற்பத்தி குறியீடும் கடந்த சில மாதங்களாக தொய்வு நிலையில் உள்ளது.
இருப்பினும், இந்த நிலை 2020ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மை துறை நல்ல வளர்ச்சி பாதையில் உள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் தேவை அதிகரிப்பதன் மூலம் இதற்கான விலை அதிகரிக்க கூடும். டிராக்டர்கள், உரங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் நல்ல விற்பனை வளர்ச்சியை சமீபத்தில் பெற்றுள்ளது.
நிதி சந்தைகளில் காணப்படும் ஏற்ற-இறக்கங்கள் மற்றும் உயரும் சொத்து மதிப்புகள்(Asset Prices) எதிர்பாராத அபாயங்களை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, இதுவரை 2.5 சதவீதம் அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக முக்கிய விஷயங்களை பாரத ரிசர்வ் வங்கி நேற்றைய கூட்டத்தின் முடிவில் கூறியுள்ளது. அடுத்த கூட்டம் வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை