வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைப்பு
Bank’s Repo rate cuts to 5.75 percent by 25 bps – Monetary Policy Committee
நேற்று(06-06-2019) நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee – MPC) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னர் இருந்த 6 சதவீதத்திலிருந்து தற்போது 5.75 சதவீதமாக மாற்றமடைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு குறுகிய கால கடனாக அளிக்கும் தொகைக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதமாகும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரிவர்ஸ் ரெப்போ வட்டி(Reverse Repo) விகிதம் 5.50 சதவீதமாகவும், வங்கி வட்டி விகிதம் 6 சதவீதமாகவும் மற்றும் ரொக்க இருப்பு விகிதம்(CRR) 4 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கிகள் தங்களிடம் உள்ள உபரித்தொகையை, மத்திய ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்வார்கள். இந்த உபரி தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்றழைக்கப்படுகிறது.
நடப்பு வருடத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித குறைப்பு கடந்த ஒன்பது வருடங்களில் காணப்பட்ட குறைவான ரெப்போ விகிதமாகும்.
நுகர்வோர் பணவீக்கம்(CPI Inflation) நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3.1 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் 3.7 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மத்திய நிதிக்கொள்கை குழு மதிப்பிட்டுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம் நிதியாண்டின் முடிவில் 7 சதவீதமாக இருக்கும் என கூறியுள்ளது. இதற்கு முந்தைய மதிப்பீட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்(GDP) 7.2 சதவீதமாக இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
மத்திய நிதிக்கொள்கை குழுவில் இம்முறை பங்கேற்ற ஆறு உறுப்பினர்களும் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைப்பதை ஆதரித்துள்ளனர். ரெப்போ வட்டி விகித குறைப்பு(RBI Policy) சாதகமான அம்சமாக அமைந்திருந்தும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டதால் நேற்று இந்திய பங்குச்சந்தை ஒரு சதவீதத்திற்கு மேல் இறக்கத்தை கண்டிருந்தது.
ஏற்கனவே வங்கிகளின் வாராக்கடன் அளவு மற்றும் நிதி நெருக்கடி(Liquidity crunch) அதிகமாகியுள்ள நேரத்தில், தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித சலுகை வங்கிகளுக்கும், நிறுவனங்களுக்கும் எவ்வாறு சாதகமாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும். அடுத்த மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை