ரிசர்வ் வங்கியிலிருந்து வெளியேறும் துணை கவர்னர் – மீண்டும் ஒரு சர்ச்சை ?
RBI’s Deputy Governor Viral Acharya’s exit – Hot Controversies
மத்திய ரிசர்வ் வங்கிக்கும், மத்தியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு அரசுக்கும் இடையே பல காலங்களாக முரண்பாடு இருந்து கொண்டே தான் வருகிறது. சில காலங்களுக்கு முன் கவர்னராக இருந்த திரு. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேறிய பிறகு, அது பல விவாதங்களாக மாறியது. பின்பு கவர்னராக அமர்ந்த திரு. உர்ஜித் படேலுக்கும்(Urjit Patel), மத்திய அரசுக்கும் இடையே நிதி சார்ந்த முரண்பாடுகள் ஏற்பட்டன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நெருக்கடியான சூழ்நிலையில் உர்ஜித் பட்டேல் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். இது மாதிரியான நிலையில் தற்போது துணை கவர்னர்(Deputy Governor) பொறுப்பில் இருந்த திரு. விரல் ஆச்சார்யா தனது பதவியை விட்டு விலகியுள்ளார். இன்னும் அவருக்கான பதவிக்காலம் ஆறு மாதம் எஞ்சியுள்ள நிலையில், மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பாரத ரிசர்வ் வங்கி(RBI) கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான இடைவெளி, தற்போது இருக்கும் அரசில் மட்டுமல்ல. இது போன்ற நிலை நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாரத ரிசர்வ் வங்கியின் முக்கிய பொறுப்பாக பணவீக்கத்தை கட்டுக்குள்(Inflation) வைத்திருப்பதும், வங்கிகளின் நிதி நிலையை(Banking Regulations) கவனிப்பதும் தான் நடைமுறை செயலாக இருந்து வருகிறது.
சமீப காலமாக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் அளிக்கும் சேவையில் சிக்கல்கள் இருந்து வருகின்றன. வங்கிகளின் வாராக்கடனும்(Bad loans) அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், வங்கிகளின் இணைப்பும் நடந்து வருவது தவிர்க்க முடியாததாக மாறி விட்டது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee) முடிவுகளில் கவர்னருக்கும், துணை கவர்னருக்குமான தீர்மானம் வேறுபட்டு வருகிறது.
ரெப்போ வட்டி விகித(Repo rate) அறிவிப்பில் துணை கவர்னர் விரல் ஆச்சார்யாவுக்கு திருப்தி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக திரு. சக்திகாந்த தாஸ் உள்ளார். நாட்டின் 25வது கவர்னராக பதவியேற்ற சக்திகாந்த தாஸ்(Shaktikanta Das) ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
விரல் ஆச்சார்யா கடந்த 2017ம் ஆண்டு முதல் பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவியில் இருந்து வருகிறார். நடைமுறை நிதி தீர்மானத்தில் இவருக்கு திருப்தி இல்லை என்று செய்தி வந்திருப்பினும், சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக விரல் கூறியுள்ளார். மத்திய வங்கியில் இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகினறனர்.
பாரத ரிசர்வ் வங்கியில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாமை, மத்திய அரசின் ஒத்துழைப்பு ரிசர்வ் வங்கிக்கு கிடைக்க பெறாதது என பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிற சூழ்நிலையில், இவருக்கு பதிலாக புதிய துணை கவர்னர் யார் என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டு கொண்டிருக்கும் வங்கிகளின் நிதி சிக்கலை, நடப்பில் இருக்கும் மத்திய அரசு எவ்வாறு தீர்வு காணப்போகிறது என்பதில் தான் அடுத்தகட்ட பொருளாதார நகர்வு அமையும். மத்திய அரசும், மத்திய வங்கியும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, அது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை