Tag Archives: quarterly results

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி 

HCL Technologies reported a net profit of Rs.1,102 Crore – Q4FY21

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம், தூத்துக்குடியை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால் கடந்த 1976ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் எச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 46 நாடுகளில் தனது அலுவலகங்களையும், சுமார் 1.6 லட்சம் பணியாளர்களையும் கொண்டு நிறுவனம் தனது தொழிலை புரிந்து வருகிறது.

பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.59 லட்சம் கோடி. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 86,194 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. நிறுவனத்தின் முதல் நூறு மில்லியன் டாலர் வருவாய், வெறும் 15 வாடிக்கையாளர்களின் மூலம் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வருவாய் ஈட்டலில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் வணிக சேவை மூலம் 72 சதவீதமும், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் 17 சதவீதமும், தயாரிப்புகள் மற்றும் தளங்களின்(Production & Platforms) வாயிலாக  11 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் அமெரிக்க சந்தையிலிருந்து தான் பெறப்படுகிறது.

அமெரிக்காவில் 58 சதவீதம், ஐரோப்பிய பகுதியில் 27 சதவீதம், உள்நாட்டில் 3 சதவீதமும் மற்றும் பிற நாடுகளின் மூலம் 12 சதவீத பங்களிப்பும் வருவாயாக உள்ளது. 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் வருவாய் 19,641 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,092 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 244 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,102 கோடி. இதனை கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 65 சதவீத குறைவாகும். வரி செலுத்துதலில் சுமார் 67 சதவீதம் செலவிட்டதன் காரணமாக மார்ச் 2021 காலாண்டின் நிகர லாபம் குறைந்துள்ளது.

2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் 10 பில்லியன் டாலர் வருவாயை கடந்த நிலையில், பங்குதாரர்களுக்கு 16 ரூபாயை (பங்கு ஒன்றுக்கு) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது எச்.சி.எல். நிறுவனம்.

கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 20 சதவீதமும், லாபம் 24 சதவீதமுமாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet reserves) மார்ச் 2021 முடிவின் படி 59,370 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 32 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மயூர் யூனிகோட்டர்ஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.35 கோடி

மயூர் யூனிகோட்டர்ஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.35 கோடி  

Mayur Uniquoters reported a net profit of Rs.35 Crore – Q3FY21

கடந்த 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் மயூர் யூனிகோட்டர்ஸ். செயற்கை தோல்(Artificial Leather) மற்றும் பி.வி.சி. வினைல்(PVC Vinyl) உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தோல் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் குறிப்பாக காலணி, அலங்கார பொருட்கள், வாகனத்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையை கொண்டிருக்கிறது.

நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக டாட்டா, போர்டு(Ford), மாருதி சுசூகி, ஹோண்டா, பாட்டா(BATA), வி.கே.சி.(VKC), ரிலாக்சோ, பாராகான், ஸ்வராஜ்(Swaraj), இந்திய ரயில்வே, லான்சர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்திய செயற்கை தோல் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை மயூர் யூனிகோட்டர்ஸ் கொண்டுள்ளது.

மயூர் யூனிகோட்டர்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1700 கோடி. புத்தக மதிப்பு 134 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.09 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 45 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 62 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

நேற்று(12-02-2021) நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 170 கோடி ரூபாயாகவும், செலவினம் 124 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ.6 கோடி சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.35 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய 10 காலாண்டுகளில் இல்லாத வருவாயும், நிகர லாபமும் தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 528 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 80 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் பங்குகளை திரும்ப பெறும் முறை(Buyback of Shares) அறிவிக்கப்பட்டிருந்தது. பங்கு ஒன்றுக்கு ரூ.400 என்ற விலையில் பங்குதாரர்களிடம் இருந்து, நிறுவனம் பங்குகளை வாங்கியிருந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தை விலை பங்கு ஒன்றுக்கு ரூ.275 க்கு கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.571 கோடி(செப்டம்பர் 2020). நிறுவனத்தின் கடந்த மூன்று வருட பணவரத்து(Free Cash Flow) சராசரியாக 37 கோடி ரூபாயாக உள்ளது. தற்போதைய சந்தை விலை, விற்பனை மதிப்பில்(Price to sales) 4 மடங்குகளில் உள்ளது.

முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சன் டி.வி. மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.446 கோடி

சன் டி.வி. மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.446 கோடி 

Sun TV reported a net profit of Rs.446 Crore in Q3FY21 results

22,000 கோடி ரூபாயை சந்தை மூலதனமாக கொண்டிருக்கும் சன் டி.வி. நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் ஊடக நிறுவனமாக உள்ளது. நாளிதழ் வெளியீடு, ஒளிபரப்பு, படம், கேபிள் தொலைக்காட்சி, விளையாட்டு உரிமம் ஆகிய துறைகளில் தொழில் புரிந்து வருகிறது.

தென்னிந்திய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட சேனல்களையும், பல துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியுள்ளது சன் டி.வி. குழுமம். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்நிறுவனத்தின் நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 150 மடங்குகளில் உள்ளது கவனிக்கத்தக்கது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 994 கோடி ரூபாயாகவும், செலவினம் 387 கோடி ரூபாயாகவும் உள்ளது. இயக்க லாபம் 608 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம் 61 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதர வருமானமாக மூன்றாம் காலாண்டில் 65 கோடி ரூபாய் உள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.446 கோடியாக உள்ளது. இது கடந்த டிசம்பர் 2019-20 காலாண்டை காட்டிலும் 16 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

பங்கு ஒன்றுக்கு டிவிடெண்ட் தொகையாக ரூ.5 அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்களின் மூலமான வருவாய் டிசம்பர் காலாண்டில் மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 424 கோடி ரூபாய்.

2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 3,520 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.1,385 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் 2020 காலாண்டின் படி, இருப்புநிலை கையிருப்பு(Reserves) 6,120 கோடி ரூபாயாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சன் டி.வி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.335 கோடி

சன் டி.வி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.335 கோடி 

Sun TV Network reported a Net Profit of Rs.335 Crore – Q2FY21

தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் தான் சன் குழுமம்(Sun Group). ஊடக துறையில் உள்ள இந்நிறுவனம் நாளிதழ் வெளியீடு, ஒளிபரப்பு, வானொலி, படம், கேபிள் தொலைக்காட்சி, விளையாட்டு உரிமம் ஆகியவற்றில் தொழில் புரிந்து வருகிறது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களையும், பல துணை நிறுவனங்களையும் கொண்டிருக்கிறது.

விமான போக்குவரத்து துறையில் தனது சேவையை கொண்டிருந்த இந்நிறுவனம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் (Spicejet) உள்ள அனைத்து பங்குகளையும் விற்று வெளியேறியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.17,500 கோடி. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வந்து கொண்டிருக்கும் சன் டி.வி. பங்கின் புத்தக மதிப்பு 160 ரூபாயாகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 138 மடங்குகளிலும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் ஒரு சதவீதத்திற்கு குறைவான பங்குகள் அடமானமாக இருந்துள்ளது. இந்திய டி.வி. துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் இந்த நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 6,100 கோடி ரூபாயாக உள்ளது. பணவரத்தும், பங்கு மூலதனத்தின் மீதான வருவாயும் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது.

2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை நேற்று(12-11-2020) வெளியிட்டது இந்த நிறுவனம். நிறுவனத்தின் வருவாய் 769 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.274 கோடியாகவும்(Quarterly results) சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 54 கோடி ரூபாய் இருந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.335 கோடி.

சொல்லப்பட்ட நிகர லாபம், ஜூன் காலாண்டை காட்டிலும் 23 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே வேளையில், முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 10 சதவீத குறைவாகும். விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், இதுவே 10 வருட காலத்தில் 9 சதவீதமாகவும் உள்ளது.

லாபம், கடந்த ஐந்து மற்றும் பத்து வருட காலங்களில் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இறக்கம் கண்டிருந்தாலும், மார்ச் மாத வீழ்ச்சியில் பங்கு ஒன்றுக்கு 300 ரூபாய்க்கு குறைவாக வர்த்தகமானது. அப்போதைய நிலையில், பணப்பாய்வு முறைப்படி(Discounted Cash Flow) பங்கின் விலையும் மலிவாக காணப்பட்டது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி 

Castrol India reported a net profit of Rs.205 Crore – Q3CY21

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக(Lubricant Industry) சொல்லப்படுகிறது. நாட்டில் 70,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களை கொண்டிருக்கும் கேஸ்ட்ரால் இந்தியா கடந்த 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10,800 கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 13 ரூபாய் மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம் 237 மடங்குகளில் உள்ளது. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

இதன் கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 5 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. நேற்று வெளியிடப்பட்ட காலாண்டு முடிவில் இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 என சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 883 கோடி ரூபாயாகவும், செலவினம் 595 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதர வருமானமாக 12 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 205 கோடியாக உள்ளது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிகர லாபம் 68 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2019ம் முழு ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 3,877 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 827 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 3 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 5 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த 5 வருடங்களில் 12 சதவீதமும், 10 வருட காலத்தில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 770 கோடியாக உள்ளது. பணவரத்தும்(Cash Flow) நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய்

டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய் 

Buyback Price of Rs.3000 and Rs.12 Dividend per Share – TCS Q2FY21 Results

இந்திய தொழில்நுட்ப துறையில் முதன்மையாக விளங்கும் நிறுவனம், டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ்.(TCS) நிறுவனம். இதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. பில்லியன் டாலர் வருமானத்தை கொண்டிருக்கும் இந்நிறுவனம் சுமார் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 46 நாடுகளில் தனது சேவையை அளித்து வருகிறது.

சந்தை மதிப்பிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் மிகப்பெரிய இந்திய நிறுவனமாக டி.சி.எஸ். உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான டாட்டா சன்ஸ் 72 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) நான்கு சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 40,135 கோடி ரூபாயாகவும், செலவினம் 28,622 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,037 கோடியாகவும், இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.7,475 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டின் வருவாய் 5 சதவீதமும், நிகர லாபம் 6 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் முந்தைய செப்டம்பர் (2019-20) காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், நிகர லாப அடிப்படையில் 7 சதவீத வளர்ச்சி குறைந்துள்ளது.

நேற்றைய காலாண்டு முடிவு அறிவிப்பில் முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை திரும்பப்பெறும் முறையில்(Buyback of Shares) 16,000 கோடி ரூபாயை டி.சி.எஸ். நிறுவனம் செலவிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 5.33 கோடி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.3000 என்ற விலையில் நிறுவனம் திரும்பப்பெற உள்ளது. இதன் மதிப்பு ரூ.16,000 கோடி எனவும், மொத்த பங்குகளில் இதன் பங்களிப்பு 1.42 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

டி.சி.எஸ். நிறுவன பங்களிப்பில், 72 சதவீத பங்குகள் நிறுவனர்களிடம் உள்ளது. 16 சதவீத பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும், 8 சதவீத பங்குகள் உள்நாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமும் உள்ளது. சிறு முதலீட்டாளர்களிடம்(Resident individual and others) வெறும் 3.3 சதவீத பங்குகள் தான் கையிருப்பாக உள்ளது. அதாவது 8.98 லட்சம் சிறு முதலீட்டாளர்களிடம் 12.5 கோடி பங்குகள் உள்ளது.

மேலும் இரண்டாம் காலாண்டுக்கான டிவிடெண்ட் தொகையையும் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.12 என ஈவுத்தொகையை சொல்லியுள்ளது. அதற்கான பதிவு நாள்: அக்டோபர் 15,2020.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மோட்டார்ஸ் – நான்காம் காலாண்டில் ரூ.9,894 கோடி நிகர நஷ்டம்

டாட்டா மோட்டார்ஸ் – நான்காம் காலாண்டில் ரூ.9,894 கோடி நிகர நஷ்டம் 

Net Loss of Rs.9,894 Crore in Q4FY20 – Tata Motors

வாகனத்துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம். டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமாக விளங்கும் இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 3.07 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 82,800.

1945ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் உலகின் முக்கிய 500 நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ரயில் இன்ஜின்கள், பயணிகளுக்கான பிரிவில் பெரு வாகனங்கள், லாரிகள், வேன்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், கட்டுமான துறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இங்கிலாந்தின் ஜாக்குவார் லேண்ட் ரோவர்(Jaguar Land Rover) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, டாட்டா நிறுவனத்திற்கு உலகளவில் பல சவால்கள் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட அரசு கொள்கைகளில் மாற்றம் ஜாக்குவார் விற்பனையை பதம் பார்த்தது. உள்நாட்டில் டாட்டா மோட்டார்ஸ் நல்ல விற்பனை வளர்ச்சியை கொண்டிருந்தாலும், ஜாக்குவார்(JLR) இழப்பை மட்டுமே சந்தித்து வருகிறது.

மின்னணு வாகன பிரிவில் டாட்டா மோட்டார்ஸ் முக்கிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் துறைக்கான ஆராய்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் வெளிப்பாடு வரவிருக்கும் காலங்களில் தெரிய வரும். அதே வேளையில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி கடந்த நான்கு வருடங்களாக பெரிதும் பாதித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் வருவாய் ரூ. 62,493 கோடியாகவும், செலவினம் 61,806 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ.9,894 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நான்காம் காலாண்டில் விற்பனையும் 30 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த நிதியாண்டிலும் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 12 சதவீதம் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் சென்ற நிதியாண்டில் நிகர நஷ்டம் குறைந்துள்ளது. ஆனால் லாப பாதைக்கு நிறுவனம் எப்போது திரும்பும் என்பது தான் முதலீட்டாளர்களின் கேள்வி.

கடந்த ஐந்து வருட காலத்தில் விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும், லாப வளர்ச்சி எதிர்மறையாகவும் உள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் 40 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) மூன்று வருட காலத்தில் 6 சதவீதமாகவும், 5 வருடங்களில் 11 சதவீதமாகவும் உள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.33,300 கோடி. கடன்-பங்கு விகிதம் 1.83 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் ஒரு மடங்கு அளவிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் மட்டும் ரூ. 95,465 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், 4 சதவீத பங்குகள் அடமானமாகவும் உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களின்(FII Holding) பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நஷ்டமடைந்த வேதாந்தா நிறுவனம் – ரூ. 12,521 கோடி நிகர நஷ்டம்

நஷ்டமடைந்த வேதாந்தா நிறுவனம் – ரூ. 12,521 கோடி நிகர நஷ்டம் 

Vedanta’s Net loss of Rs. 12,521 Crore in Q4FY20 – Quarterly Results

1979ம் ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் வேதாந்தா. சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் தங்கம், அலுமினியம் மற்றும் இரும்பு தாதுக்களை எடுத்து விற்பனை செய்து வருகிறது. முன்னர் சேஷா கோவா(Sesa Goa) என்றிருந்த நிறுவனமே பின்னாளில் வேதாந்தா நிறுவனமாக மாறியது.

வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனங்களாக பாரத் அலுமினியம், ஸ்டெர்லைட் காப்பர், எலெக்ட்ரோ ஸ்டீல் மற்றும் இந்துஸ்தான் ஜிங்க் ஆகியவை உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனராக தற்போது அனில் அகர்வால் உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக சீனிவாசன் வெங்கட்ராமன் உள்ளார்.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 39,140 கோடி. புத்தக மதிப்பு 147 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.91 ஆகவும் இருக்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 3 மடங்கில் உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 49,800 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 19,755 கோடியாகவும், செலவினம் ரூ.15,203 கோடியாகவும் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக சொல்லப்பட்ட காலாண்டில் ரூ. 12,521 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய ஒரு முறை குறைபாட்டு செலவாக ரூ. 17,132 கோடியை வருவாயில் ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக தான் தற்போது நிகர நஷ்டத்தை கூறியுள்ளது. துத்தநாகம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் வருவாய் நான்காம் காலாண்டில் குறைந்துள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் இந்திய பங்குச்சந்தையிலிருந்து தன்னார்வமாக நீக்கி விட்டு(Delist), தனியார் நிறுவனமாக செயல்பட விண்ணப்பித்திருந்தது. இது சார்ந்து பங்குதாரர்களின் ஒப்புதலை பெற வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நிறுவனத்தின் வருவாய் கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 15 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த பத்து வருட கால அளவில், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 33 சதவீதமாகவும், லாபம் 13 சதவீதமாகவும் உள்ளது. ஒரு வருட காலத்தில் இந்த பங்கின் விலை 36 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 54,263 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. பணவரத்து(Cash flow) நிறுவனத்திற்கு குறிப்பிடும்படியாக வந்து கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அம்புஜா சிமெண்ட்ஸ் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 554 கோடி

அம்புஜா சிமெண்ட்ஸ் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 554 கோடி 

Net Profit of Rs. 554 Crore in Q4FY20 – Ambuja Cements

மும்பையை தலைமையிடமாக கொண்டு கடந்த 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அம்புஜா சிமெண்ட்ஸ். ஆரம்ப நிலையில், குஜராத் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனமானது.

சிமெண்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான ஹோல்சிம்(Holcim), அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 62 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 34,200 கோடி. புத்தக மதிப்பு 116 ரூபாயாகவும், தற்போதைய பங்கு முகமதிப்பு 2 ரூபாயாகவும் உள்ளது.

கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.001 ஆக உள்ளது. நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 25 மடங்கிலும், தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 1.50 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக இருக்கும் நிலையில், நிறுவனர்கள் சார்பில் அடமான பங்குகள் எதுவும் இல்லை.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை(Quarterly Results) வெளியிட்டுள்ள இந்நிறுவனம் விற்பனையாக ரூ. 6,250 கோடியும், செலவினமாக ரூ. 5,058 கோடியையும் சொல்லியுள்ளது. இதர வருமானம் 145 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,007 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 554 கோடி.

சொல்லப்பட்ட நிகர லாபத்தை, கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது 12 சதவீத வளர்ச்சியாகும். அதே வேளையில் விற்பனை வளர்ச்சி சரிந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதமும், 10 வருட காலத்தில் 15 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது.

இது போல, லாபம் ஐந்து வருடங்களில் 8 சதவீதமும், பத்து வருட கால அளவில் 6 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது. பங்கு மீதான வருமானம் கடந்த 10 வருடங்களில் 11 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

டிசம்பர் 2019ம் காலாண்டின் படி, நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 23,681 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. சிமெண்ட் துறையில், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் நடுத்தர நிறுவனமாக அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

விப்ரோ & டி.சி.எஸ். நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் – மார்ச் 2020

விப்ரோ & டி.சி.எஸ். நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் – மார்ச் 2020

Quarterly Results of Wipro and TCS – Q4FY20

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு மற்றும் முழு ஆண்டுக்கான நிறுவனங்களின் நிதி அறிக்கை முடிவுகள் நடப்பு மாதம் முதல் வெளியிடப்படும். ஆரம்ப நிலையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் காலாண்டு முடிவுகளை வெளியிடும். விப்ரோ மற்றும் டி.சி.எஸ். நிறுவனங்கள் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வருவாயாக ரூ. 15,750 கோடியை கொண்டுள்ளது விப்ரோ நிறுவனம். செலவினம் ரூ. 12,631 கோடியாகவும், இதர வருமானமாக 591 கோடி ரூபாயாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 2,966 கோடி மற்றும் நிகர லாபம்(Net Profit) ரூ. 2,326 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் மார்ச் காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் அதிகமாகும். அதே வேளையில் நிகர லாபம் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 6.50 சதவீதமும், பத்து வருட கால அளவில் 9 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி(Profit Growth) ஐந்து வருடங்களில் 3 சதவீதமும், பத்து வருடங்களில் 9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது கவனிக்கத்தக்கது. பங்கு மீதான வருவாய்(ROE) 5 வருடங்களில் 18.75 சதவீதமும், 10 வருட கால அளவில் 21 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும், இதன் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 34 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் விப்ரோ நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 54,179 கோடியாக உள்ளது. பணவரத்தும், புதிய சொத்துக்களை வாங்குவதும் நடைபெற்று வந்துள்ளது. இந்த பங்கில் நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி.சி.எஸ். (TCS) Q4FY20:

டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான டி.சி.எஸ். நிறுவனம் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. மார்ச் 2020ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 39,946 கோடியாகவும், செலவினம் ரூ. 28,970 கோடியாகவும் உள்ளது. இதர வருமானமாக 738 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,512 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 8,049 கோடியாகும். காலாண்டின் முடிவில் ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) ரூ. 21.45 ஆக உள்ளது. விற்பனை வளர்ச்சி(Compounded Sales Growth) கடந்த ஐந்து வருடங்களில் 12.35 சதவீதமும், 10 வருட காலத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி ஐந்து வருட காலத்தில் 10.55 சதவீதம் மற்றும் 10 வருடங்களில் 20 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த 5 வருடங்களில் 35 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 37 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் கையிருப்பு மார்ச் 2020ம் நிதியாண்டின் முடிவில் ரூ. 83,751 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட இரு நிறுவனங்கள் அடுத்த காலாண்டுக்கான வருவாய் திட்டமிடலை(Guidance) பெரிதாக சொல்லவில்லை.

2019-20ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் ஓரளவு வருவாயை பெற்று தந்தாலும், வரவிருக்கும் காலாண்டுகள் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கக்கூடும். நடப்பு ஏப்ரல் மாத ஊரடங்கு அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சியை பாதிக்கும். பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் காலமாகவும் ஏப்ரல் – ஜூன் (FY21) காலாண்டு பார்க்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com