மயூர் யூனிகோட்டர்ஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.35 கோடி
Mayur Uniquoters reported a net profit of Rs.35 Crore – Q3FY21
கடந்த 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் மயூர் யூனிகோட்டர்ஸ். செயற்கை தோல்(Artificial Leather) மற்றும் பி.வி.சி. வினைல்(PVC Vinyl) உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தோல் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் குறிப்பாக காலணி, அலங்கார பொருட்கள், வாகனத்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையை கொண்டிருக்கிறது.
நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக டாட்டா, போர்டு(Ford), மாருதி சுசூகி, ஹோண்டா, பாட்டா(BATA), வி.கே.சி.(VKC), ரிலாக்சோ, பாராகான், ஸ்வராஜ்(Swaraj), இந்திய ரயில்வே, லான்சர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்திய செயற்கை தோல் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை மயூர் யூனிகோட்டர்ஸ் கொண்டுள்ளது.
மயூர் யூனிகோட்டர்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1700 கோடி. புத்தக மதிப்பு 134 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.09 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 45 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 62 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.
நேற்று(12-02-2021) நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 170 கோடி ரூபாயாகவும், செலவினம் 124 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ.6 கோடி சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.35 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய 10 காலாண்டுகளில் இல்லாத வருவாயும், நிகர லாபமும் தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 528 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 80 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் பங்குகளை திரும்ப பெறும் முறை(Buyback of Shares) அறிவிக்கப்பட்டிருந்தது. பங்கு ஒன்றுக்கு ரூ.400 என்ற விலையில் பங்குதாரர்களிடம் இருந்து, நிறுவனம் பங்குகளை வாங்கியிருந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தை விலை பங்கு ஒன்றுக்கு ரூ.275 க்கு கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.
நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.571 கோடி(செப்டம்பர் 2020). நிறுவனத்தின் கடந்த மூன்று வருட பணவரத்து(Free Cash Flow) சராசரியாக 37 கோடி ரூபாயாக உள்ளது. தற்போதைய சந்தை விலை, விற்பனை மதிப்பில்(Price to sales) 4 மடங்குகளில் உள்ளது.
முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை