விப்ரோ & டி.சி.எஸ். நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் – மார்ச் 2020
Quarterly Results of Wipro and TCS – Q4FY20
2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு மற்றும் முழு ஆண்டுக்கான நிறுவனங்களின் நிதி அறிக்கை முடிவுகள் நடப்பு மாதம் முதல் வெளியிடப்படும். ஆரம்ப நிலையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் காலாண்டு முடிவுகளை வெளியிடும். விப்ரோ மற்றும் டி.சி.எஸ். நிறுவனங்கள் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வருவாயாக ரூ. 15,750 கோடியை கொண்டுள்ளது விப்ரோ நிறுவனம். செலவினம் ரூ. 12,631 கோடியாகவும், இதர வருமானமாக 591 கோடி ரூபாயாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 2,966 கோடி மற்றும் நிகர லாபம்(Net Profit) ரூ. 2,326 கோடி என சொல்லப்பட்டுள்ளது.
2018-19ம் நிதியாண்டின் மார்ச் காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் அதிகமாகும். அதே வேளையில் நிகர லாபம் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 6.50 சதவீதமும், பத்து வருட கால அளவில் 9 சதவீதமாகவும் உள்ளது.
இது போல லாப வளர்ச்சி(Profit Growth) ஐந்து வருடங்களில் 3 சதவீதமும், பத்து வருடங்களில் 9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது கவனிக்கத்தக்கது. பங்கு மீதான வருவாய்(ROE) 5 வருடங்களில் 18.75 சதவீதமும், 10 வருட கால அளவில் 21 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும், இதன் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 34 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது.
2019-20ம் நிதியாண்டின் முடிவில் விப்ரோ நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 54,179 கோடியாக உள்ளது. பணவரத்தும், புதிய சொத்துக்களை வாங்குவதும் நடைபெற்று வந்துள்ளது. இந்த பங்கில் நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி.சி.எஸ். (TCS) Q4FY20:
டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான டி.சி.எஸ். நிறுவனம் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. மார்ச் 2020ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 39,946 கோடியாகவும், செலவினம் ரூ. 28,970 கோடியாகவும் உள்ளது. இதர வருமானமாக 738 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.
வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,512 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 8,049 கோடியாகும். காலாண்டின் முடிவில் ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) ரூ. 21.45 ஆக உள்ளது. விற்பனை வளர்ச்சி(Compounded Sales Growth) கடந்த ஐந்து வருடங்களில் 12.35 சதவீதமும், 10 வருட காலத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி ஐந்து வருட காலத்தில் 10.55 சதவீதம் மற்றும் 10 வருடங்களில் 20 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த 5 வருடங்களில் 35 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 37 சதவீதமாகவும் உள்ளது.
நிறுவனத்தின் கையிருப்பு மார்ச் 2020ம் நிதியாண்டின் முடிவில் ரூ. 83,751 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட இரு நிறுவனங்கள் அடுத்த காலாண்டுக்கான வருவாய் திட்டமிடலை(Guidance) பெரிதாக சொல்லவில்லை.
2019-20ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் ஓரளவு வருவாயை பெற்று தந்தாலும், வரவிருக்கும் காலாண்டுகள் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கக்கூடும். நடப்பு ஏப்ரல் மாத ஊரடங்கு அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சியை பாதிக்கும். பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் காலமாகவும் ஏப்ரல் – ஜூன் (FY21) காலாண்டு பார்க்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை