Tag Archives: Vedanta

நஷ்டமடைந்த வேதாந்தா நிறுவனம் – ரூ. 12,521 கோடி நிகர நஷ்டம்

நஷ்டமடைந்த வேதாந்தா நிறுவனம் – ரூ. 12,521 கோடி நிகர நஷ்டம் 

Vedanta’s Net loss of Rs. 12,521 Crore in Q4FY20 – Quarterly Results

1979ம் ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் வேதாந்தா. சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் தங்கம், அலுமினியம் மற்றும் இரும்பு தாதுக்களை எடுத்து விற்பனை செய்து வருகிறது. முன்னர் சேஷா கோவா(Sesa Goa) என்றிருந்த நிறுவனமே பின்னாளில் வேதாந்தா நிறுவனமாக மாறியது.

வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனங்களாக பாரத் அலுமினியம், ஸ்டெர்லைட் காப்பர், எலெக்ட்ரோ ஸ்டீல் மற்றும் இந்துஸ்தான் ஜிங்க் ஆகியவை உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனராக தற்போது அனில் அகர்வால் உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக சீனிவாசன் வெங்கட்ராமன் உள்ளார்.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 39,140 கோடி. புத்தக மதிப்பு 147 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.91 ஆகவும் இருக்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 3 மடங்கில் உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 49,800 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 19,755 கோடியாகவும், செலவினம் ரூ.15,203 கோடியாகவும் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக சொல்லப்பட்ட காலாண்டில் ரூ. 12,521 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய ஒரு முறை குறைபாட்டு செலவாக ரூ. 17,132 கோடியை வருவாயில் ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக தான் தற்போது நிகர நஷ்டத்தை கூறியுள்ளது. துத்தநாகம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் வருவாய் நான்காம் காலாண்டில் குறைந்துள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் இந்திய பங்குச்சந்தையிலிருந்து தன்னார்வமாக நீக்கி விட்டு(Delist), தனியார் நிறுவனமாக செயல்பட விண்ணப்பித்திருந்தது. இது சார்ந்து பங்குதாரர்களின் ஒப்புதலை பெற வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நிறுவனத்தின் வருவாய் கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 15 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த பத்து வருட கால அளவில், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 33 சதவீதமாகவும், லாபம் 13 சதவீதமாகவும் உள்ளது. ஒரு வருட காலத்தில் இந்த பங்கின் விலை 36 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 54,263 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. பணவரத்து(Cash flow) நிறுவனத்திற்கு குறிப்பிடும்படியாக வந்து கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement