2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 4.4 சதவீதம்
India’s GDP growth of 4.4 Percent in Q4 (December Quarter) 2022
2022ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில்(Q3FY23) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் முதலீடு 8.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றில் தனியார் முதலீட்டு செலவினம் 61.6 சதவீதமாக இருக்கிறது. இது 2021-22ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டினை காட்டிலும் குறைவே. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தால், வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தனியார் பங்களிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில் அரசு தரப்பில் இம்முறையும் முதலீட்டு செலவினம் பெரிதாக இல்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருந்தததை அடுத்து, கடந்த சில காலாண்டுகளாக அதனை குறைத்து வந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி 11.3 சதவீதமும், இறக்குமதி 10.9 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய காலாண்டில் ஏற்றுமதி 12.3 சதவீதமாகவும், இறக்குமதி 25.9 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தது.
உற்பத்தி துறை இரண்டாவது முறையாக இறக்கத்திலும், நிதி மற்றும் வீட்டுமனை துறை ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்த போதிலும், சற்று சுணக்கமாகவே காணப்பட்டுள்ளது. இது போன்ற மந்தநிலை போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறையிலும் ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகள் ஏற்றம் பெற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
நாட்டின் நுகர்வோர் செலவினம்(Consumer spending) டிசம்பர் 2022 காலாண்டில் ரூ. 24.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) நடப்பு ஜனவரி மாத முடிவில் 11.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பில் 68 சதவீதமாகும். 2022-23ம் நிதியாண்டுக்கான நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கு 17.55 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை