நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?
India’s GDP of 4.7 Percent in December Quarter – What Next ?
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்துள்ளது என கடந்த வாரம் அரசு சார்பில் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி கடந்த ஏழு வருடங்களில் காணப்படாத குறைந்த அளவாகும். 2018ம் வருடத்தின் ஆரம்ப நிலையில் 7.7 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்பு குறைய தொடங்கியது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொடர்ச்சியாக 7 காலாண்டுகளாக இந்த வளர்ச்சி குறைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2019 கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த வளர்ச்சி குறைவு தான் எனினும், அடுத்து வரும் காலகட்டங்களில் அதன் மாற்றம் தான் சந்தை எதிர்பார்த்து வருவது. பெரும்பாலான வல்லுநர்கள் இது தான் அடிப்பாக பொருளாதார வளர்ச்சியாக(Bottomed out) இருக்கும், அடுத்த காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டு எழும் என கூறியுள்ளனர்.
அதே வேளையில், நடப்பு ஜனவரி – மார்ச் காலத்தில் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் சாதகமாக இல்லை என்பதே உண்மை. டிசம்பர் 2019 காலாண்டை காட்டிலும், மார்ச் 2020 காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாக தான் இருக்கும். வாகனத்துறையில் உள்ள பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்கள் பிப்ரவரி மாத விற்பனையில் சுணக்கத்தை சந்தித்துள்ளது.
பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிலக்கல்(Disinvestment) நிகழ்வும் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக முடிந்து, அரசின் இலக்கிற்கு உதவினால் தான் சந்தையில் நுகர்வை வேகப்படுத்த முடியும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, நிதி மற்றும் காப்பீடு, வீட்டு மனை, உணவகங்கள், சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. வேளாண்மை, காடுகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை நாட்டின் பொருளாதார உற்பத்தியில் 12 சதவீத பங்கை தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பிரிவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டதாக உள்ளது கவனிக்கத்தக்கது.
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை, உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை தான் அரசுக்கு முன் இருக்கும் சவாலாக உள்ளது. தற்போதைய நிலையில் முதலீடுகளை பெற்று, சரியான முறையில் கையாண்டால் மட்டுமே அது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் வருவாய் பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நுகர்வு தன்மையும் சுமுகமாக அமையும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது முடியக்கூடும் என்பது குறித்து தற்சமயம் தெரியாது. அதே நேரத்தில், இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனங்களின் நிதி அறிக்கையில் தெரிய வரும். அமெரிக்க – சீன வர்த்தக போர் இன்னும் முடிவை எட்டவில்லை. 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு எதிர்பார்த்த அளவை பெறாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தையில் பங்குபெறும் முதலீட்டாளர்கள் சரியான நிறுவனங்களை அலசி ஆராய்ந்து, அதன் உண்மையான விலையில் பங்குகளை வாங்குவது நலம். ஆறு மாதத்திற்கு முன்னர் காணப்பட்ட விலையே பெரும்பாலான பங்குகளில் தற்போது நிலவி கொண்டிருக்கிறது. சில பங்குகளின் விலை மூன்று வருட மற்றும் ஐந்து வருட விலை குறைவில் இருந்தாலும், அவற்றின் மற்ற காரணிகளை கண்டறிவது அவசியம். வெறும் பங்கு விலை எண்களை கொண்டு பங்குகளை வாங்காதீர்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை