2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ?
India’s GDP in the Financial year 2021-22 – 8.7 Percent
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் (-6.6) சதவீத வீழ்ச்சியை சந்தித்திருந்தது. 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 20.1 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 8.4 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 5.4 சதவீதம் மற்றும் நான்காம் காலாண்டில் 4.1 சதவீதமுமாக இருந்தது.
2020-21ம் நிதியாண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காணும் போது, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்துள்ளது. இருப்பினும் இந்த வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து மீட்கப்பட்ட வளர்ச்சியாகவே பொருளாதார வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.
அதாவது கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை ஒப்பிடுகையில் இது மிகக்குறைந்த வளர்ச்சியாக அமைந்துள்ளது. 2020ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு சுமார் 2.62 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் இது 2.32 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதார மதிப்பில்(GVA) சேவை துறை 54 சதவீதமும், விவசாயம் 20 சதவீதமும் மற்றும் தொழிற்துறை 26 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில், விவசாயத்துறை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
2021-22ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக சொல்லப்பட்ட நிலையில், இது சந்தை எதிர்பார்த்த அளவினை எட்டியுள்ளது. நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை