இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம்
India’s GDP of 8.4 Percent in September Quarter – Q2FY22
கடந்த 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பெருத்த சரிவை கண்டிருந்தது. 2021ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-24.4) சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த காலாண்டிலும் (-7.4) சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
பெரும்பாலான வளர்ச்சியடைந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் இது போன்ற தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு குறைய குறைய பொருளாதாரமும் மீண்டெழுந்தது. கடந்தாண்டின் டிசம்பர் காலாண்டில் 0.5 சதவீதமும், மார்ச் காலாண்டில் 1.6 சதவீதமுமாக வளர்ச்சி இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல்-ஜூன் காலத்தில் 20.1 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது ஜூலை-செப்டம்பர் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 8.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 8.4 சதவீத வளர்ச்சி என்பது கடந்தாண்டு செப்டம்பர் 2020 காலத்துடன் ஒப்பிடப்பட்ட வளர்ச்சியாகும்.
சேவைத்துறை, நிதி மற்றும் வீட்டுமனை, அரசு நிர்வாகம், உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியால் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
1950ம் ஆண்டு காலகட்டங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பங்களிப்பில் விவசாய துறை 52 சதவீதத்தை கொண்டிருந்த நிலையில், இன்றைக்கு 12 சதவீதமாக உள்ளது. 2021ம் ஆண்டின் பொருளாதார பங்களிப்பில் சேவைத்துறை 60 சதவீதமும், உற்பத்தி 15 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீதம், குடிநீர் மற்றும் எரிசக்தி 5 சதவீதமுமாக உள்ளது.
விவசாயத்தின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், தற்போது நாட்டின் 50 சதவீத வேலைவாய்ப்பை விவசாயத்துறை உருவாக்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையின் கீழ் விவசாயம், வனவியல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவை உள்ளன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை