மிகப்பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய வீழ்ச்சி – இந்திய பங்குச்சந்தை வரலாறு

மிகப்பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய வீழ்ச்சி – இந்திய பங்குச்சந்தை வரலாறு

Top Stocks and Big Crash in a Single day – Indian Stock Market

கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் வெள்ளிக்கிழமை அன்று (21-09-2018) இந்திய பங்குச்சந்தையை ஒரு ஆட்டம் காண வைத்தது திவான் ஹவுசிங் (DHFL -Dewan Housing Finance Corporation Ltd) பங்கின் வீழ்ச்சி. ஐ.எல்.எப்.எஸ் (IL & FS) குழுமத்தின் கடன் பிரச்சனை மற்றும் DHFL நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் திடீர் விற்பனை பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தன.

 

அதன் தொடர்ச்சியாக திவான் ஹவுசிங் பங்குகள் ஒரே நாளில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து வர்த்தகத்தின் முடிவில் (-42.5 %) நிலை பெற்றது. இதன் தாக்கம் எஸ் வங்கியிலும் (Yes Bank) தெரிந்தது. திவான் ஹவுசிங் நிறுவன பங்கின் ஒரு நாள் வீழ்ச்சி மும்பை பங்குச்சந்தையை 1000 புள்ளிகளுக்கும் மேலாக இறக்கம் காண வைத்தது.

 

நாட்டில் வங்கிகளின் வாராக்கடன் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) செயல்பாடும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பங்கினுடைய வீழ்ச்சி (DHFL) என்பது இந்திய பங்குச்சந்தையில் ஒன்றும் புதிதல்ல, எனினும் வரும் நாளில் சந்தை மீட்கப்பட்டாலும், வீழ்ச்சியடைந்த நிறுவனத்தின் பங்கு பெரும்பாலும் எழுச்சி காண்பதில்லை.

 

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் வீழ்ச்சியடைந்த பங்குகளின் பட்டியலில் திவான் ஹவுசிங் இடம் பெற்றிருந்தாலும், மிகப்பெரிய வீழ்ச்சியடைந்த நிறுவனம் என காணும் போது, சத்யம் நிறுவனம் (Satyam Computers) தான் முதலிடத்தில் உள்ளது. இது ஒரு மிகப்பெரிய நிறுவனமாகவும் இருந்தது கூட. அதன் நிறுவனர் திரு. ராமலிங்க ராஜு செய்த குற்றத்தால், சத்யம் நிறுவன பங்கு ஒரே நாளில் 77 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அதாவது சந்தை விலை ரூ. 143 /- கொண்ட சத்யம் பங்கு, ஒரே நாளில் 77 % வீழ்ச்சி அடைந்து வர்த்தகத்தின் முடிவில் 32 ரூபாயில் முடிவடைந்தது (ஜனவரி 2009).

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சத்யம் நிறுவனத்தை தொடர்ந்து 2013 ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில், பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் (Financial Technologies) பங்கு ஒரே நாளில் 64 சதவீதம் வீழ்ந்தது. 388 ரூபாய் விலை இருந்த பங்கு, வர்த்தக முடிவில் 153 ரூபாயாக நிலை கொண்டது. ஸ்பாட் மார்க்கெட்டில் நிகழ்ந்த முறைகேட்டால் பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் 80 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டது. இதன் மூலம் தனது சந்தை மூலதனத்தில் சுமார் 3500 கோடி ரூபாயை இழந்தது.

 

இதனை அடுத்து மூன்றாவது மிகப்பெரிய வீழ்ச்சி கண்ட நிறுவனம் கோர் எஜுகேஷன் (Core Education). நிறுவனர்கள் தங்களது பங்குகளை அடமானம் வைத்ததை விற்று விட்டதாக வந்த செய்தி (பிப்ரவரி 2013), இந்த பங்கின் விலையை ஒரே நாளில் 62 சதவீதம் வீழ்ச்சி அடைய வைத்தது. 286 ரூபாய் இருந்த பங்கு, வர்த்தகத்தின் முடிவில் 110 ரூபாயாக முடிவடைந்தது.

 

தொடர்ச்சியாக மூன்று நாள் இறக்கத்திற்கு பின் அந்த பங்கின் விலை 81 % வீழ்ச்சி அடைந்து 56 ரூபாயில் நிலை கண்டது. இதனை போல யூனிடெக் (Unitech), ஜி.டி.எல் (GTL), பூர்வா (Purva), அக்ருதி (Akruti), இன்.பி.பீம். அவென்யூ (Infibeam – Updated on 28th September,2018) போன்ற நிறுவனங்களின் பங்குகளும் வெவ்வேறு காலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது. தற்போது திவான் ஹவுசிங் நிறுவன பங்கின் வீழ்ச்சி, அதன் சந்தை மூலதனத்தில் சுமார் 8000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் சந்தையில் பெரிய வீழ்ச்சி கண்ட நிறுவனங்களில் சில இன்னும் அந்த பங்கின் விலையில் மீளவில்லை. மற்ற சில நிறுவனங்களோ பங்குச்சந்தையிலே அடையாளம் காணப்படவில்லை.

 

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வெறும் பங்குகள் என பார்க்காமல், அந்த நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகள் (Fundamental Analysis) மற்றும் தொழில் முறையையும் கவனித்து பின்பு வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

 

பங்குச்சந்தை கடலில் யாரும் நீந்தலாம், ஆனால் எதிர்நீச்சல் போட முயற்சிக்க வேண்டாம்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

Interest Rate hikes for Small Savings Schemes – 2018

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு வரும் அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கு உரியதாகும். இதன் மூலம் வங்கி டெபாசிட்களுக்கான  வட்டிவிகிதமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே சில வங்கிகள் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை (20-09-18) வெளியிட்ட அறிக்கையின் படி, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund -PPF) மற்றும் தேசிய சேமிப்பு பத்திர (National Savings Certificate -NSC) திட்டத்திற்கு 8 சதவீத வட்டியும், செல்வமகள் (Sukanya Samriddhhi Account) திட்டத்திற்கு 8.5 சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

 

இதற்கு முன்னர் PPF மற்றும் NSC திட்டங்களுக்கு 7.6 சதவீத வட்டியும், செல்வமகள் திட்டத்திற்கு 8.1 சதவீதமும் இருந்தன. அதே போல கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.3 சதவீதத்திலிருந்து 7.7 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 118 மாத முதிர்வை கொண்ட இந்த பத்திரம் தற்போது 112 மாத கால அளவில் முதிர்வடையும்.

 

Small Savings Schemes Interest Rate

 

ஒரு வருடத்திற்கான டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்திலிருந்து 6.9 % ஆகவும், இரண்டு வருடத்திற்கு 6.7 % இலிருந்து 7 சதவீதமாகவும், ஐந்து வருடத்திற்கு 7.4 % லிருந்து 7.8 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen Savings Scheme)  5 வருட திட்டத்திற்கு 8.3 சதவீதத்திலிருந்து 8.7 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

5 வருட ஆர்.டி. (Recurring Deposit -RD) கணக்குக்கு வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வரும் மாதாந்திர வருமானம் தரும் (Monthly Income) கணக்கிற்கு 7.7 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகத்தின் இந்த வட்டி விகித மாற்றம் வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

முதலீட்டாளருக்கான பரஸ்பர நிதி செலவு விகிதம் அதிரடியாக குறைப்பு – செபி

முதலீட்டாளருக்கான பரஸ்பர நிதி செலவு விகிதம் அதிரடியாக குறைப்பு  – செபி

SEBI reduces total expense ratio for Mutual Fund Investors

 

முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் எனும் பரஸ்பர நிதி சேவையை பயன்படுத்துவதற்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வாக கட்டணமாக ஒரு தொகையை வசூலிப்பதுண்டு. இதனை மொத்த செலவின விகிதம்(Total Expense Ratio)  என்பர். இந்த செலவின விகிதத்தில் நிதி மேலாண்மை கட்டணம், பதிவாளர் கட்டணம், விற்பனை செலவு மற்றும் ஏஜென்ட் கமிஷன் ஆகியவை அடங்கும்.

 

பரஸ்பர நிதி செலவை அதன் சொத்துக்களில் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம் தான் மொத்த செலவின விகிதமாகும்(TER). பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்புக்கு ஏற்றார் போல் செலவின விகிதங்களை செபி (SEBI) வரையறுத்துள்ளது. அதிகபட்ச விகிதமாக இதுவரை 2.50 சதவீதம் மொத்த செலவின விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி அதிகபட்சமாக 2.25 % செலவின விகிதமாக இருக்கும். 50,000 கோடி ரூபாய்க்கு மேலான நிதி சொத்தினை நிர்வகிக்கும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிக்கு முன்னர் 1.75 சதவீதமாக இருந்தது. தற்போது செபி இதனை 1.05 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது.

 

பங்கு சார்ந்த நிதி திட்டங்களுக்கு இனி அதிகபட்சமாக 1.25 சதவீதமும் (முதிர்வு பெறும் – Closed Ended), மற்ற நிதி திட்டங்களுக்கு 1 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என செபி அறிவித்துள்ளது. அடிச்சுவடு கமிஷன் (Trail Commission) எனப்படும் முதலீட்டிற்கான வருடாந்திர செலவினை இனி அடிச்சுவடு மாதிரியாக (Trail Model) பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டுமெனவும் செபி கூறியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதி நிறுவனங்கள் வசூலித்து வரும் அதிகபட்ச மொத்த செலவின தொகை முதலீட்டாளருக்கு ஒரு பாதகமாக இருந்து வந்த நிலையில், தற்போது செபியின் இந்த நடவடிக்கை சிறு முதலீட்டாளருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. செபியின் இந்த விதிமுறை அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உதாரணத்திற்கு ரூ. 1 லட்சம் தொகையை மொத்தமாக ஒரு முறை பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவருக்கு பத்து வருட காலத்திற்கு பிறகு 15 சதவீதத்தில் முதிர்வு தொகையாக நான்கு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும். அதே சமயத்தில் மொத்த செலவின தொகை 1.5 % ஆக இருக்கும் பட்சத்தில் அவருடைய வருமானம் 15 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறையும். அதிகபட்ச செலவின தொகை மற்றும் முன்கூட்டிய கமிஷன் (Upfront Commission) என்ற நிலையில் மட்டுமே பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்படக்கூடாது எனவும், முதலீட்டாளரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டுமென செபி அறிவுறுத்தியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மீண்டும் ஒரு வங்கிகள் இணைப்பு: பரோடா வங்கி, விஜயா மற்றும் தேனா வங்கி

மீண்டும் ஒரு வங்கிகள் இணைப்பு: பரோடா வங்கி, விஜயா மற்றும் தேனா வங்கி

Bank of Baroda, Vijaya Bank and Dena Bank – Yet again merger of PSU Banks

வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரிப்பு ஒரு புறம் எனில், பொதுத்துறை வங்கிகளின் இணைப்பும் மற்றொரு நிலையில் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. முன்னர் பாரத ஸ்டேட் வங்கியுடன் சில பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. தற்போது பரோடா வங்கி (Bank of Baroda), விஜயா வங்கி (Vijaya Bank) மற்றும் தேனா வங்கி (Dena Bank) மூன்றும் இணைக்கப்பட உள்ளன.

 

மூன்று பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு பரோடா வங்கிக்கு பாதகமாக அமையும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருந்தாலும், தேனா வங்கிக்கு (Dena Bank) இது ஜாக்பாட் (Jackpot) தான். தேனா வங்கி ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ளன.

 

PCA (Prompt Corrective Action)  பட்டியலில் உள்ள  வங்கிகளில்  தேனா வங்கியும் ஒன்று. இதன் காரணமாக தேனா வங்கி கடன் அளிக்க முடியாத வங்கியாக அமைந்தது. தற்போதைய வங்கி இணைப்பு செய்தி இந்த வங்கிக்கு சாதமாக உள்ளது. ஏற்கனவே பொதுத்துறை வங்கித்துறையின் வாராக்கடன் 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

 

தேனா வங்கியின் மொத்த கடன் ரூ. 1,09,690 கோடியாகவும், மொத்த வாராக்கடன் 16,360 கோடி ரூபாயாகவும் (Non Performing Asset -NPA) உள்ளது. மொத்த வாராக்கடன் சதவீதம் 22 ஆகவும், நிகர வாராக்கடன் விகிதம் 11 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் தேனா வங்கி ரூ. 722 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேனா வங்கியின் வட்டி வருமானம் ஜூன் மாத காலாண்டில் ரூ. 2248 கோடியாகும். விஜயா வங்கியின் நிகர வாராக்கடன் விகித 4.1 % அளவில் உள்ளது. அதே நேரத்தில் பரோடா வங்கியின் நிகர வாராக்கடன் 5.5 சதவீதமாகவும், அதன் கடந்த காலாண்டு நிகர லாபம் ரூ. 528 கோடியாக உள்ளது.

 

மூன்று வங்கிகளின் இணைப்பு சில விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தாலும், அரசின் இந்த முடிவால் வங்கிகளின் நிர்வாக திறன் மேம்படும் என சில பொருளாதார வல்லுனர்களும் எடுத்துரைக்கின்றனர். இணைப்புக்கு உள்ளாகும் இந்த மூன்று வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும், அவர்களின் பணிச்சேவை இனி மேம்படும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) 3.69 சதவீதமாக குறைந்தது

நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) 3.69 சதவீதமாக குறைந்தது

Consumer Price Index Inflation down to 3.69 percent in August 2018

 

காய்கறிகளும், பருப்பு வகைகளும் கடந்த சில மாதங்களாக விலை குறைந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான நுகர்வோர் விலை (அ) சில்லரை பணவீக்கம் 3.69 சதவீதமாக குறைந்தது. இந்த வருடத்தின் குறைவான சதவீதமாக ஆகஸ்ட் மாத பணவீக்கம் எடுத்து கொள்ளப்படுகிறது.

 

சில்லரை பணவீக்கம் (Retail Inflation) கடந்த ஜூலை மாதத்தில் 4.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 1.37 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் (Food) ஆகஸ்ட் மாதத்தில் 0.29 சதவீதமாக இருந்தது.

 

காய்கறிகளின் (Vegetables) பணவீக்கம் (-7) ஆக அமைந்தது. இது கடந்த ஜூலையில் (-2.20) ஆக இருந்தது. எரிபொருள் ஆகியவற்றின் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 8.47 சதவீதமாக உயர்ந்தது. எரிபொருள் பணவீக்க சதவீதம் கடந்த ஜூலையில் 7.96 % ஆகும்.

 

எரிபொருளின் (Fuel and Light) பணவீக்கம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இது அதிகமாகும். இதற்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் ஒரு காரணமாக அமைகிறது. ஆகஸ்ட் மாத எரிபொருள் விலைவாசி கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவாகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பழங்கள் மற்றும் காய்கறிகளின் பணவீக்க குறைவு (0.29) கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவாக கொள்ளப்படுகிறது. துணிமணிகள் மற்றும் காலணிகள் பணவீக்க அளவு ஆகஸ்ட் மாதத்தில் 4.88 சதவீதமாகும். இது கடந்த ஜூலை மாதத்தில் 5.67 % ஆக இருந்தது.

 

வீட்டு சம்மந்தமான மளிகை பொருட்கள் மற்றும் சேவைகளின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 5.18 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முடிவில் 4.89 % ஆகும். ஆகஸ்ட் மாத பணவீக்க குறைவு, கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமடையும் நிலையில், வரும் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை (அக்டோபர் மாதம்) கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி,  வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2

Budget Planning for Middle Class Family – Part 2

 

பட்ஜெட் திட்டமிடல் குறுந்தொடருக்கு வரவேற்கிறோம்…

 

திரு. ராஜாக்கண்ணன் மதுரை – ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாதச்சம்பளமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது விவசாய நிலத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இரு மகன்கள் மற்றும் வயதான தன் பெற்றோர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பை, ராஜாக்கண்ணனின் மனைவி பார்த்து வருகிறார்.

 

மூத்த மகன் ஆறாவது வகுப்பும், இளைய மகன் மூன்றாவதும் படித்து கொண்டிருக்கிறார்கள். அழகான விவசாய தோட்டம், சொந்தமாக வீடு என்றிருக்கும் போது வேறென்ன வேண்டும் நமக்கு. இனி இவரது மாதாந்திர பட்ஜெட் திட்டமிடலை (Budget – Financial Planning) பார்ப்போம்.

 

Budget Financial Planning Part2

 

மாதம் ரூ. 22,000 சம்பளமாக பெறும் ராஜாக்கண்ணன் தனது ஓய்வு கால நிதியாக, சம்பளத்தில் பிடிக்கப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தை (National Pension System -NPS) மட்டுமே கொண்டுள்ளார். வீட்டு வாடகை செலவு ஏதும் இல்லாததால் அவரின் பட்ஜெட்டில் துண்டு விழவில்லை. மாநகருக்கு வெளியே வீடு அமைந்திருப்பதால் காற்றோட்டமான சூழ்நிலையும், விவசாய வாய்ப்பும் தனக்கு கிடைத்துள்ளதாக கூறுகிறார். வயதான தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட்ட இவரது குடும்பத்திற்கான மாத உணவுச்செலவு ரூ. 10,000 /- ஆகும்.

 

மருத்துவம் மற்றும் காப்பீட்டிற்காக இவர் மாதாமாதம் ரூ. 3500 ஒதுக்குகிறார். உடை, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து செலவுகளை மேலே உள்ள அட்டவணையில் காணலாம். பிற செலவுகளுக்காக ரூ. 1500 வரை மாதத்திற்கு வைத்துள்ளார். இரு மகன்களின் கல்விச்செலவுகளுக்கு மாதம் ரூ. 11,000 வரை செலவிடுகிறார். இவரது செலவு பட்டியலில் கல்விச்செலவே முக்கிய பங்கு வகிக்கிறது 🙂

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, ராஜாவின் மனதுக்கு பிடித்த விவசாய தொழில் மூலம் மாதம் ரூ. 5000 ஐ பிற வருமானமாக ஈட்டி வருகிறார். பருவ நிலை மாற்றங்களால் தான் எதிர்பார்த்த வருமானத்தை விவசாயத்தில் ஈட்ட முடியவில்லை என்றாலும், தனது நம்பிக்கையை கைவிடாமல் தோட்டத்தில் புதுமையான முறைகளை புகுத்தி வருகிறார். விரைவில் அவர் தனது விவசாயம் மூலம் நல்ல வருமானத்தை பெறுவார் என நம்பலாம். இவரின் வரவு-செலவை ஒப்பிடும் போது, மீதம் உபரித்தொகையாக ரூ. 1500 உள்ளது. இன்றைய நாட்களில், ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினை நிர்வகிப்பதில் இவரை போன்றவரை நாம் பாராட்டலாம்.

 

பரிந்துரைகள் / நினைவில் கொள்க:

 

  • ராஜாக்கண்ணன் தனது மாத உபரித்தொகையை இரு மகன்களின் எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்த உள்ள தொகையை ஆர்.டி. யாகவோ (Bank / Post office RD) அல்லது பரஸ்பர நிதியின் எஸ்.ஐ.பி. முறையை (Mutual Fund -SIP) தேர்ந்தெடுப்பது நலம்.

 

  • குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறு நபர்கள் எனும் போது, அவரின் உணவில் பெரும்பாலும் இல்லை எனலாம். பிள்ளைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கான ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் பெரிய குடும்பங்களுக்கு உணவு சார்ந்த மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கும் போதே உணவுச்செலவினை ஓரளவு குறைக்க முடியும். இதனை கொண்டும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் இலக்குகளை நிர்ணயம் செய்யலாம்.

 

  • மருத்துவம் மற்றும் காப்பீடு என பார்க்கும் போது, அவர் பொதுவான எண்டோவ்மென்ட் (Endowment) பாலிசியை தான் எடுத்துள்ளார். மேலும் வயதான பெற்றோர்களுக்கான எதிர்பாராத மருத்துவ செலவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 

  • தான் ஒதுக்கும் ரூ. 3500 /- ல் (மருத்துவம் மற்றும் காப்பீடு) தனக்கான டேர்ம் இன்சூரன்ஸை எடுத்து கொள்வது நல்லது. இவருக்கான டேர்ம் பாலிசி கவரேஜ் ரூ. 45 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை இருந்தால் போதும் (ஆண்டு வருமானத்தை போல 15-20 மடங்கு). இந்த கவரேஜிற்கு ஆண்டு பிரீமியம் ரூ. 7000 – 7500 வரை இருக்கும்.

 

  • எதிர்பாரா மருத்துவ செலவுகளை தவிர்க்க இவருடன் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என ஒரு மருத்துவ பாலிசி, வயதான பெற்றோர்களுக்கென மற்றொரு பாலிசியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மூத்த குடிமக்கள் அல்லாமல் நான்கு பேருக்கான குடும்ப மருத்துவ காப்பீட்டு பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 15000-18000 /- ஆகும் ( 5 லட்சம் வரையிலான கவரேஜ்). மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பிரீமியம் அதிகமாக இருக்கும் ( 2 Senior Citizens – Rs. 35,000 /- yearly for Upto 5 Lakh Sum Insured).

 

  • ஓய்வு கால நிதிக்கு தேசிய பென்ஷன் திட்டத்தை மட்டும் நம்பியிருக்காமல் அவ்வப்போது தனது சேமிப்பிலும் ஒரு தொகையை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால கல்விச்செலவுகளை கருத்தில் கொண்டு, முன்கூட்டிய சேமிக்க பழகினால் சிரமப்பட தேவையில்லை. வெறும் சேமிப்பு என்று மட்டும் பாராமல், பிற வருமானத்தை ஏற்படுத்துவதும் ஒரு குடும்பத்திற்கு நிதி சார்ந்த அக்கறை உதவும்.

 

வருவாயில் துண்டு விழாமல் பார்த்து கொள்வதே சாலச்சிறந்தது.

வந்த பின் வருந்துவது அர்த்தமில்லையே 🙂

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மதுரையில் பிரான்சைஸ் இந்தியாவின் தொழில் வாய்ப்பு

மதுரையில் பிரான்சைஸ் இந்தியாவின் தொழில் வாய்ப்பு

Franchise India Event for Business Opportunities in Madurai

 

அரசு கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்பட்டாலும், இன்று நாட்டில் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரான்சைஸ் வியாபாரம் என்று சொல்லப்படும் உரிமையாளர் வணிகம் இன்று பிரபலமான ஒன்று.

 

பிரான்சைஸ் தொழிலை பற்றி நாம் ஏற்கனவே கடந்த அத்தியாயங்களில் சொன்னோம். முதல்தலைமுறை  மற்றும் ஒரு வேலையில் இருந்து கொண்டே தொழிலை புரிவதில் பிரான்சைஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்சைஸ் வியாபாரத்தில் கால் பதிக்க மதுரையில் ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது.

 

அந்த முறையில், பிரான்சைஸ் இந்தியா (Franchise India Events) நிறுவனத்தின் சார்பில் வரும் செப்டம்பர் 15 ம் தேதி மேல மாசி வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் பிரான்சைஸீக்கான (Franchisee) வாய்ப்புகளை தருகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

 

பிரான்சைஸ் 101 நிகழ்வு (Franchise101 Event) என்று சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பிராண்டுகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பும், பிரான்சைஸீ உரிமையும் தரப்படுகிறது. ஒரு வியாபாரத்தின் உரிமையாளராக நீங்கள் வெறும் 45 நிமிடங்களில் ஆகலாம் என சொல்லும் பிரான்சைஸ் இந்தியா 850 க்கு மேற்பட்ட தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் சம்மந்தமான ஆலோசனைகளையும் தருகிறது.

 

தொழில்முறை வேலை பார்ப்பவருக்கும், பெண் தொழில்முனைவோருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்த நிகழ்வில் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. தொழிலுக்கு தேவையான முதலீடு மற்றும் தொழிலை விரிவுப்படுத்த தேவையான விஷயங்களையும் பிரான்சைஸ் இந்தியா சார்பில் அளிக்கப்படும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

உணவு மற்றும் குளிர்பானங்கள், கல்வி, ஆடை மற்றும் அழகு, சில்லரை விற்பனை மற்றும் உடல் நலம் சார்ந்த ஆரோக்கிய துறையில் வாய்ப்புகள் (Business Opportunities) தங்களது சொந்த ஊரில் ஏற்படுத்தி தரப்படும் என பிரான்சைஸ் இந்தியா நிகழ்வு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

மதுரையில் நடைபெறும் இந்த வர்த்தக வாய்ப்புகளை (Business in Madurai) பயன்படுத்தி கொள்ள…

 

Date: 15th September 2018

Time: 10:00am to 6:00pm

Venue: Franchise India Office, #18, West Masi Street, Madurai-625001

http://www.franchiseindiaevents.com/franchise101-start-your-own-business/

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வெற்றிகரமான தொழிலுக்கான 6 அடிப்படை கொள்கைகள்

வெற்றிகரமான தொழிலுக்கான 6 அடிப்படை கொள்கைகள்

Six basic principles for a Successful Business

 

ஒரு தொழில் புரிவதற்கு, அந்த  தொழில் சார்ந்த அறிவு மற்றும் முதலீடு அவசியமானது என்றாலும் எந்த தொழிலுக்குமான சில அடிப்படை கொள்கைகள் இருப்பதை காணலாம். அது போன்ற அடிப்படை விஷயங்கள் தான் ஒருவரின் தொழில் வெற்றியை உறுதி செய்கின்றன.

 

வெறுமனே பணத்தை மட்டும் முதலீடு செய்து விட்டு, நாம் எந்த தொழிலிலும் வெற்றி பெற்று விட முடியாது. தனித்துவமான வெற்றிக்கு குணாதிசயம் என்னும் கொள்கைகள் தான் நீண்ட கால தொழில் திறமைக்கு வித்திடுகின்றன.

 

இதனை பற்றி வெற்றிகரமான தொழிலதிபர் திரு. ஹார்வ் எக்கர் (Harv Eker) ஆறு அடிப்படை கொள்கைகளை வகுத்துள்ளார். இந்த ஆறு கொள்கைகளும் எந்த ஒரு தொழிலுக்கும் துணைபுரிவதாக அமைந்துள்ளன. ஹார்வ் எக்கரின், ‘கோடீஸ்வரரின் ரகசியங்கள் ‘ (Secrets of the Millionaire Mind) மிகவும் பிரபலமான புத்தகமாகும். 2005 ல் வெளிவந்த இந்த புத்தகம் சுய உதவி மற்றும் தன்னம்பிக்கை பிரிவில் பெரும் இடத்தை கொண்டது.

 

  • Do your own business:  உங்கள் தொழிலை நீங்களே தொடங்குங்கள்; கூட்டு வணிகத்தை காட்டிலும் தனிநபர் தொழில் முக்கியமானது. நீங்கள் புரியும் தொழில் உங்கள் சொந்த தொழிலாக இருக்கட்டும். ஏனெனில் நீங்கள் உங்கள் தொழிலுக்கு ஏற்றார் போல், மாற்றங்களை உருவாகும் சுதந்திரம் இங்கு உண்டு.

 

  • Focus on your Only business: பல்வேறு தொழில் புரிவதை விட, ஒரே ஒரு தொழிலை தேர்ந்தெடுங்கள்; அவற்றில் உங்கள் முழு முயற்சியை கொடுங்கள். உங்கள் ஒருமித்த கவனம் தொழிலில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். இன்று நாம் பார்க்கும் வெற்றிகரமான தொழிலதிபர்கள் கார்லோஸ், பில்கேட்ஸ், வாரன் போன்றோர் ஒரே ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெற்றவர்கள். வெற்றிக்கு பின் தான் அவர்கள் பல்வேறு தொழிலில் முதலீடு செய்து வருகின்றனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

  • Choose the business on what you love: உங்களுக்கு பிடித்த விஷயத்தை மற்றும் உங்கள் தினசரி பொழுதுபோக்கை ஒரு தொழிலாக மாற்ற முயற்சி செய்யுங்கள். பின்பு அதனையே முழுநேர தொழிலாக மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயம் மட்டுமே, உங்களை சலிப்படையாமல் உற்சாகமாக இருக்க துணைபுரியும். நீங்கள் ஏதேனும் காரணத்தால் உங்கள் தொழிலில் தோல்வியடைய நேர்ந்தாலும், உங்கள் உற்சாகத்திற்கு பஞ்சமிருக்காது. அதுவே பின்னாளில் உங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுக்கும்.

 

  • Take Responsibility: உங்கள் வெற்றி-தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணம். தொழிலில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு நீங்களே பொறுப்பு எடுக்கும் போது உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். வெற்றி பெற்றவர்கள் தங்கள் தவறுகளுக்கு யாரையும் குறை கூறுவதில்லை. உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள், அதனை செயல்படுத்துங்கள். உங்கள் எண்ணமே உங்களின் உண்மையான தொழில் வளர்ச்சி (Character is your business). பிரச்சனைகளை எதிர்கொள்ள பழுகுங்கள். இதன் மூலம் உங்களுக்கான வாய்ப்புகள் கிட்டும்.

 

  • Best of the one: வெற்றிகரமான தொழில் புரிவதற்கு நீங்கள் மேம்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தொழில் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு, அதற்கான உரங்களை நீங்கள் போட்டிருக்க வேண்டும். அது பணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, உங்கள் அர்பணிப்பாக இருக்கலாம். விளையாட்டு அரங்கில் முதல் இடம் பெறுபவர்களை பார்த்தால் உங்களுக்கு புரியும், அது அவர்களது அயராத ஊக்கம்.

 

  • Learn-able Skill: உங்கள் தொழிலுக்கான அடிப்படை அறிவை எப்போதும் கற்று கொள்ள தயாராகுங்கள். துறைக்கு உரித்தான தகவல்கள், சட்ட செயல்கள், மார்க்கெட்டிங் மற்றும் தொழில்நுட்ப அறிவை நீங்கள் பெற்றிருப்பது உங்களை மேம்படுத்தும். உங்கள் கற்றல் திறனை தினசரி பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

15000 கோடி ரூபாய் மதிப்பாகும் பைஜூ (BYJU’S) நிறுவனம்

15000 கோடி ரூபாய் மதிப்பாகும் பைஜூ (BYJU’S) நிறுவனம்

Byju’s is going to be worth 15000 Crore rupees

 

கல்வி தொழில்நுட்பத்தில் கற்றல் பயன்பாடு செயலிகள் இன்று பெரும்பங்கு வகிக்கின்றன. அவ்வாறாக 2008 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த பைஜூ நிறுவனம் (Byju’s – The Learning App). இதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், நிறுவனம் தொடங்கப்பட்டது பெங்களூரு நகரத்தில் தான் (Think and Learn Pvt Ltd).

 

பைஜூ செயலி மழலையர் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடங்களுக்கு எளிய கற்றல் பயன்பாட்டினை கொடுத்து வருகிறது. இது போக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் இலவசமாக வந்த இந்த செயலி, பின்பு டிஜிட்டல் அனிமேஷன் மற்றும் காணொளிகள் (Digital Animation and Short Videos) மூலம் மெருகூட்டப்பட்டு பிரீமியம் சந்தாவுடன் வந்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு லாபம் மட்டுமில்லாமல் புதிய முதலீட்டாளர்களும் வந்தனர்.

 

பெல்ஜியம் நாட்டின் வெர்லின்வெஸ்ட் (Verlinvest) நிறுவனம் பைஜூ நிறுவனத்தில் 30 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்தது. இதனை அடுத்து சீனாவின் டென்சென்ட் (Tencent Holdings) நிறுவனம்  40 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக கொடுத்தது. இதற்கு மேலும் சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பைஜூ நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டன.

 

பைஜூ நிறுவனத்தின் லாபமும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து சென்றன. கடந்த ஆண்டு இந்த நிறுவனம், பிரிட்டிஷின் மிகப்பெரிய வெளியீட்டு நிறுவனமான பியர்சன் (Pearson) குழுமத்தின் இரு துணை நிறுவனங்களை கையகப்படுத்தியது. பைஜூவின் மாத வருவாய் 100 கோடி ரூபாய்க்கு மேலாகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பைஜூ நிறுவன தகவல் படி, இதுவரை 1.6 கோடி பேர் பைஜூ செயலியை பதிவிறக்கியதாகவும், இதன் சேவை சுமார் 1700 நகரங்களில் இருப்பதாகவும், மூன்றரை லட்சம் சந்தாதாரர்கள் கொண்டதாகவும் இருக்கிறது.

 

இதனிடையே அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் (General Atlantic) மற்றும் சிங்கப்பூர் அரசின் நிறுவனமான டெமாசெக்கும் (Temasek Holdings) பைஜூ நிறுவனத்தில் முதலீடு செய்ய போவதாக பைஜூ சார்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் நிறைவேற இருப்பதால், பைஜூ நிறுவனத்தின் அப்போதைய மதிப்பு சுமார் 220 கோடி அமெரிக்க டாலர் (15000 கோடி ரூபாய்) – Billion Dollar Company ஆகும்.

 

பைஜூ செயலியின் முக்கிய கவனம், கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாணவர்-ஆசிரியர் தொடர்பை எளிமையாக்குவதே இந்த செயலியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கால தாமதமான வருமான வரி தாக்கல் – என்ன செய்ய வேண்டும் ?

கால தாமதமான வருமான வரி தாக்கல் – என்ன செய்ய வேண்டும் ?

Belated Income Tax Returns – What to do ?

 

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்ட்  31ம் தேதியுடன் முடிவடைந்தது. அண்டை மாநிலமான கேரளாவிற்கு மட்டும் செப்டம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை – பான் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதியாக மார்ச் 31, 2019 என மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes -CBDT) அறிவித்துள்ளது.

 

கடந்த வெள்ளிக்கிழமை (31, August 2018) உடன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான(Income Tax Returns) காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் தங்களது வரி தாக்கலை செய்யலாம். அதே நேரத்தில் மத்திய வரிகள் வாரியம் கூறியபடி, ஆகஸ்ட் 31 க்கு பிறகான வரி தாக்கலுக்கு அபராதம் உண்டு.

 

வருமான வரி சட்டம் – பிரிவு 139(4) ன் கீழ் வரி செலுத்துபவர் (அ) வருமான வரி வரம்பில் உள்ளவர் ( வரி விலக்கு இல்லாமல் ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்) வரி தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்த பின்னரும், தாக்கல் செய்வதற்கான முறையை அனுமதிக்கிறது. இத்தகைய வரி தாக்கலை, ‘ தாமதமான அல்லது காலங்கடந்த வரி தாக்கல் (Belated Returns) ‘ என்பர்.

 

இது போன்ற வரி தாக்கலை, அதன் குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டிலோ (அ) நிதி ஆண்டிற்குள் நிறைவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சென்ற நிதி ஆண்டின் (FY 2017-18) வருமானத்திற்கு நாம் இந்த வருடம் டிசம்பர் 31 (மதிப்பீட்டு வருடம்) அல்லது அடுத்த வருடம் மார்ச் 31, 2019 க்குள் (நிதி ஆண்டு) நிறைவு செய்யப்பட வேண்டும். இந்த இரு தேதியில் எது முன்னர் வருகிறதோ அந்த தேதியே வரி தாக்கல் செய்பவரின் காலக்கெடுவாக (தாமதமான தாக்கல்) எடுத்து கொள்ளப்படும்.

 

வருமான வரிச்சட்டம் – பிரிவு 234 F ன் படி, தாமதமாக வரி தாக்கல் செய்பவரிடம் இருந்து, தாமத தாக்கல் கட்டணம் (Late Filing fee) பெறப்படும். தாமதமாக வரி தாக்கல் செய்யும் ஒருவரின் ஆண்டு வருமானம் (வரி விலக்கு இல்லாமல்) ரூ. 2,50,000 லிருந்து ரூ. 5 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் அவரின் வருமானத்தை சார்ந்து தாமத தாக்கல் கட்டணம் ரூ. 1000 (குறைந்தபட்சம்) அல்லது ரூ. 5000 மாகவோ அல்லது ரூ. 10,000 (அதிகபட்சம்) என பெறப்படும். ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருப்பின், தாமத தாக்கல் கட்டணம் ரூ. 5000 /- மாகவோ (ஆகஸ்ட் 31 க்கு பிறகு, ஆனால் டிசம்பர் 31, 2018 க்குள்) அல்லது ரூ. 10,000 /- ( டிசம்பர் 31 க்கு பிறகு) என பிடிக்கப்படும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இது போக வருமான வரிச்சட்டம் – பிரிவு 234A ன் கீழ், தாமதமான வரி தாக்கலுக்கு, வரி தொகையின் மீதான வட்டியினை செலுத்த வேண்டும். அதாவது ஆகஸ்ட் 31 க்கு பிறகான தாக்கலில் ஒருவரின் வரி தொகையில் மாதம் 1 சதவீதம் என வட்டி பெறப்படும். அதே நேரத்தில் ஒருவர் ரூ. 2.50 லட்ச வரம்பிற்கு மேல் இருந்து, அவருக்கு வரி செலுத்தும் தொகை ஏதும் இல்லை எனும் போது, அவர் வட்டி செலுத்த  வேண்டிய அவசியம் இருக்காது.

 

மேலே சொன்ன விவரங்களை தவிர, மற்றபடி தாமதமான வரி தாக்கல் செய்பவர்கள் எப்போதும் போல வருமான  வரி தாக்கல் இணையதளத்தில் (E-filing) வரி தாக்கலை நிறைவு செய்யலாம். தாமத தாக்கல் கட்டணம் மற்றும் வரி மீதான வட்டி ஆகியவை தளத்திலேயே தானியங்கியாக (Deducted or Added) பிடித்தம் செய்யப்படும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

Financial Blog in Tamil