கால தாமதமான வருமான வரி தாக்கல் – என்ன செய்ய வேண்டும் ?
Belated Income Tax Returns – What to do ?
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. அண்டை மாநிலமான கேரளாவிற்கு மட்டும் செப்டம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை – பான் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதியாக மார்ச் 31, 2019 என மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes -CBDT) அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (31, August 2018) உடன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான(Income Tax Returns) காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் தங்களது வரி தாக்கலை செய்யலாம். அதே நேரத்தில் மத்திய வரிகள் வாரியம் கூறியபடி, ஆகஸ்ட் 31 க்கு பிறகான வரி தாக்கலுக்கு அபராதம் உண்டு.
வருமான வரி சட்டம் – பிரிவு 139(4) ன் கீழ் வரி செலுத்துபவர் (அ) வருமான வரி வரம்பில் உள்ளவர் ( வரி விலக்கு இல்லாமல் ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்) வரி தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்த பின்னரும், தாக்கல் செய்வதற்கான முறையை அனுமதிக்கிறது. இத்தகைய வரி தாக்கலை, ‘ தாமதமான அல்லது காலங்கடந்த வரி தாக்கல் (Belated Returns) ‘ என்பர்.
இது போன்ற வரி தாக்கலை, அதன் குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டிலோ (அ) நிதி ஆண்டிற்குள் நிறைவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சென்ற நிதி ஆண்டின் (FY 2017-18) வருமானத்திற்கு நாம் இந்த வருடம் டிசம்பர் 31 (மதிப்பீட்டு வருடம்) அல்லது அடுத்த வருடம் மார்ச் 31, 2019 க்குள் (நிதி ஆண்டு) நிறைவு செய்யப்பட வேண்டும். இந்த இரு தேதியில் எது முன்னர் வருகிறதோ அந்த தேதியே வரி தாக்கல் செய்பவரின் காலக்கெடுவாக (தாமதமான தாக்கல்) எடுத்து கொள்ளப்படும்.
வருமான வரிச்சட்டம் – பிரிவு 234 F ன் படி, தாமதமாக வரி தாக்கல் செய்பவரிடம் இருந்து, தாமத தாக்கல் கட்டணம் (Late Filing fee) பெறப்படும். தாமதமாக வரி தாக்கல் செய்யும் ஒருவரின் ஆண்டு வருமானம் (வரி விலக்கு இல்லாமல்) ரூ. 2,50,000 லிருந்து ரூ. 5 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் அவரின் வருமானத்தை சார்ந்து தாமத தாக்கல் கட்டணம் ரூ. 1000 (குறைந்தபட்சம்) அல்லது ரூ. 5000 மாகவோ அல்லது ரூ. 10,000 (அதிகபட்சம்) என பெறப்படும். ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருப்பின், தாமத தாக்கல் கட்டணம் ரூ. 5000 /- மாகவோ (ஆகஸ்ட் 31 க்கு பிறகு, ஆனால் டிசம்பர் 31, 2018 க்குள்) அல்லது ரூ. 10,000 /- ( டிசம்பர் 31 க்கு பிறகு) என பிடிக்கப்படும்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இது போக வருமான வரிச்சட்டம் – பிரிவு 234A ன் கீழ், தாமதமான வரி தாக்கலுக்கு, வரி தொகையின் மீதான வட்டியினை செலுத்த வேண்டும். அதாவது ஆகஸ்ட் 31 க்கு பிறகான தாக்கலில் ஒருவரின் வரி தொகையில் மாதம் 1 சதவீதம் என வட்டி பெறப்படும். அதே நேரத்தில் ஒருவர் ரூ. 2.50 லட்ச வரம்பிற்கு மேல் இருந்து, அவருக்கு வரி செலுத்தும் தொகை ஏதும் இல்லை எனும் போது, அவர் வட்டி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
மேலே சொன்ன விவரங்களை தவிர, மற்றபடி தாமதமான வரி தாக்கல் செய்பவர்கள் எப்போதும் போல வருமான வரி தாக்கல் இணையதளத்தில் (E-filing) வரி தாக்கலை நிறைவு செய்யலாம். தாமத தாக்கல் கட்டணம் மற்றும் வரி மீதான வட்டி ஆகியவை தளத்திலேயே தானியங்கியாக (Deducted or Added) பிடித்தம் செய்யப்படும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை