வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

Income Tax Returns (Filing) – Plan & Benefits – Lesson 1

 

2018-19ம் நிதி வருடத்தை முடித்து விட்டு, 2019-20ம் நிதியாண்டில் நாம் காலெடுத்து வைத்துள்ளோம். முன்னர் வருமான வரி செலுத்துபவர்கள் மட்டுமே வரி தாக்கலை செய்து வந்த நிலையில் இன்று மாத சம்பளம் வாங்கும் (பெரும்பாலும் அமைப்பு சார்ந்த) அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

‘ நான் தான் வருமான வரி கட்ட தேவையில்லையே, அப்புறம் எதற்கு நான் வரி தாக்கல் செய்ய வேண்டும் ? ‘ என கேட்பதற்கு பதிலாக வருமான வரி தாக்கல் சார்ந்த சில எளிமையான விஷயங்களை நாம் கற்று கொண்டாலே, பின்னாளில் அது பயன் தரும். ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், தனி நபர் ஒருவர் தனது வரி தாக்கலை செய்வதற்கு, ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த பகுதியில் நாம் வருமான வரி சார்ந்த சில எளிமையான வழிமுறைகளை தெரிந்து வைத்து கொண்டு(Basics Education), நமக்கான வரி சலுகைகள் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் பயன் பெறலாம். வரி தாக்கல் செய்யும் முன், நாம் முன்னேற்பாடாக சில தகவல்களையும் சேகரித்து வைத்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.

 

வாருங்கள், முதல் பாடத்திற்குள் செல்லலாம்.

 

நாம் இப்போது 2018-19ம் நிதியாண்டின், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்திற்கு வரி தாக்கல் செய்யக்கூடிய காலத்தில் இருக்கிறோம். மேலே சொன்ன காலத்தில் நாம் ஈட்டிய வருவாய்க்கு ஏற்ப நமது வருமான வரி அமையலாம் அல்லது வரி தாக்கல் செய்யக்கூடியவராக இருக்கலாம்.

 

நிதியாண்டு(Financial Year or Fiscal Year) என்றால் என்ன ?

 

ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கத்தை பொறுத்தவரை அதன் கணக்கீட்டு காலம் 52 வாரங்கள் அல்லது 12 மாதங்கள் ஆகும். நிறுவனத்தின் வரவு-செலவு மற்றும் லாப-நட்ட நிதி அறிக்கைகள்(Financial Statements) இந்த 12 மாத அளவில் கணக்கீடு செய்யப்படும். பொதுவாக ஆங்கிலேய காலத்திலிருந்து 12 மாத காலம் என்பது ஒரு வருடத்தின் ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த வருடத்தின் மார்ச் மாதம் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தான் நாம் நிதியாண்டு(Financial Year) என்கிறோம்.

 

சொல்லப்பட்ட ஏப்ரல்-மார்ச் காலத்தில் நாம் ஏதேனும் வருவாய் பெற்றிருந்தால் (இழப்பு இருந்தாலும்) அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 2018-19ம் நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்தில் உள்ள வருவாயை நாம் மார்ச் 2019க்கு பின்னர் தான் மதிப்பீடு செய்ய முடியும். நடந்து முடிந்த ஒரு நிதி வருடத்திற்கான கணக்கை நாம் அடுத்த நிதி வருடத்தில் தான் மதிப்பீடு(Assessing) செய்கிறோம் மற்றும் வரியை தாக்கல் (Income Tax Return Filing) செய்கிறோம். இந்த காலத்தை மதிப்பீட்டு காலம்(Assessment Year) எனலாம்.

 

கவனிக்க:

 

  • நீங்கள் வருவாய் ஈட்டிய காலம் (ஏப்ரல் – மார்ச்) ஒரு நிதியாண்டு எனப்படும். 2010 ஏப்ரல் முதல் 2011 மார்ச் வரை என்பது ஒரு நிதியாண்டு. இதனை 2010-11 நிதி வருடம் அல்லது 2011ம் நிதியாண்டு என்பர் – FY 2010-11 OR Fiscal year 2011.

 

  • நாம் வருவாய் பெற்ற காலத்தை நிதியாண்டு ஆண்டு எனவும், அதனை மதிப்பீடு செய்த காலத்தை மதிப்பீட்டு ஆண்டு(Assessment year) எனவும் அழைக்கிறோம்.

 

  • 2018-19ம் நிதியாண்டிற்கான மதிப்பீட்டு காலம் 2019-20ம் வருடமாகும். நீங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த வருடத்தின் மார்ச் மாத காலம் வரையிலான வருமானத்திற்கு, நடப்பு ஏப்ரல் மாதம் முதல் வரி தாக்கல் செய்யலாம். பொதுவாக வரி தாக்கல் செய்வதற்கு மதிப்பீட்டு காலத்தின் ஜூலை மாதம் வரை அனுமதிக்கப்படும் – ஜூலை 31, 2019 (AY 2019-20)

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்

நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்

Foreign Portfolio Investors have so far invested Rs. 12,000 Crore in the Current Month – April 2019

 

நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களது முதலீட்டை வெளியே எடுத்து கொண்டிருந்த நிலை மாறி, கடந்த மூன்று மாதங்களாக அவர்களின் முதலீட்டு தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

நம் நாட்டில் உள்ள கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்குச்சந்தை(Stock Market) இரண்டிலும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 11,180 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். இது போன்று மார்ச் மாதத்தில் 45,980 கோடி ரூபாயும், நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 12,000 கோடி ரூபாயையும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த மூன்று மாதங்களாக உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors -DII) பெரும்பாலும் நிகர விற்பனையையே மேற்கொண்டுள்ளனர். சந்தை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் உள்ளூர் முதலீட்டாளர்களான பரஸ்பர நிதிகள், சந்தையில் கண்ட லாபத்தை வெளியே எடுத்து வருவதாலும் இவர்களது விற்பனை அதிகமாகியுள்ளது.

 

பிப்ரவரி மாதத்தின் முடிவில் அந்நிய முதலீட்டாளர்களின்(Foreign Portfolio Investors) பங்கு முதலீடு ரூ. 13,564 கோடியாகவும், உள்ளூர் முதலீட்டாளரின் நிகர விற்பனை (-565) கோடி ரூபாயாகவும் இருந்து வந்துள்ளது. மார்ச் மாத காலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்(FII /FPI) சுமார் 32,370 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், உள்ளூர் முதலீட்டாளர்கள் 13,930 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

 

தற்போது நாட்டில் தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்கனவே தனது புதிய உச்சத்தை கடந்தாகி விட்டது. தேர்தல் முடிவுக்கு பின் சந்தையில் முதலீடு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பலரிடம் இருந்தாலும், தற்சமயம் சந்தையின் சிறிய இறக்கத்திலாவது முதலீடு(Equity) செய்வதே சிறந்தது.

 

மே மாதத்தில் தேர்தல் முடிவுக்கு பின், வலுவான ஒரு ஆட்சி அமையும் நிலையில் நமது பங்குச்சந்தை மேலும் புதிய உச்சத்தை காணலாம் என கருதப்படுகிறது. சந்தையை பாதிக்கும் காரணிகளில் உலகளாவிய நிகழ்வுகள் இருந்து வந்தாலும், இப்போது அரசியல் நகர்வுகளும், அதனை அடுத்த புதிய அரசாங்கத்தின் கொள்கைகளும் தான் சந்தையின் குறியீடுகளை தீர்மானிக்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அரவணைக்கும் ஆறு அடிப்படை காரணிகள் – பங்குச்சந்தை ரகசியங்கள்

அரவணைக்கும் ஆறு அடிப்படை காரணிகள் – பங்குச்சந்தை ரகசியங்கள்

Six Fundamental Factors as a Defensive Investor – Secrets of Stock Market

 

பொதுவாக பங்குச்சந்தையை பற்றிய செய்தி என்று நாம் கேட்டிருந்தால், பெரும்பாலும் இந்த இரண்டு விஷயங்களை தான் கேட்டிருப்போம். ‘ பங்குச்சந்தையில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் ‘ என்பது, மற்றொன்று ‘ பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் ‘. பங்குச்சந்தை சூதாட்டம் என்பவர்கள் இனி எப்போதும் பங்குச்சந்தைக்கு வருவதில்லை, ஆனால் அவர்களது சேமிப்பு அனைத்து காலங்களிலும் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்கிற வார்த்தையே பங்குச்சந்தையில் பெரும்பாலானவர்களை நஷ்டப்படுத்த செய்கிறது. உண்மையில் பங்குச்சந்தை என்பது வங்கிகள், நிதி நிறுவனங்கள், அஞ்சலகம் போன்று இதுவும் நிதி சார்ந்த தொழிலே. தொழில் செய்பவர் வங்கிகளில் தனது தொழிலுக்கு தேவையான முதலீட்டை எவ்வாறு பெறுகிறாரோ அது போல தான் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களிடையே கடன் பெறுகிறது. வங்கிக்கும், சந்தைக்கும் உள்ள வேறுபாடு அதன் சட்டங்களும், அதனை சார்ந்த வரைமுறைகளும் மட்டுமே.

 

நமது பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஒரு நண்பர் நம்மிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டால் நாம் என்ன செய்வோம் ? மனமும், பணமும் இல்லையென்றால் அவரிடம் எதுவும் இல்லை என்று சொல்வோம். கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தால், உடனே அவரிடம் ஒரு லட்சம் பணத்தை கொடுத்து விடுவோமா, என்ன ? நண்பரது தொழில், அவரது குடும்ப நிதி நிலை(Financial Background), ஏதேனும் காரணத்தால் அவரிடம் இருந்து நாம் பணம் பெற முடியவில்லை என்றால், அதற்கான மாற்று வழி என பலவற்றை நாம் சிந்தித்த பிறகே பணம் கொடுக்க முயல்வோம். ஆனால் பங்குகளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?

 

பங்குச்சந்தையில் இப்போது உங்களது நண்பர் கடன் வாங்கவில்லை. ஒரு பெரு நிறுவனம் – டாட்டா, பிர்லா மற்றும் அம்பானி போன்றவர்கள். உங்களது முதலீடு அவர்களின் நீண்டகால நம்பிக்கையை பெறலாம். இல்லையனில் மல்லையா போன்று போனியும் ஆகலாம். பங்குச்சந்தையில் நீங்கள் வெறும் முதலீட்டாளர் மட்டுமல்ல. நீங்கள் கடன் கொடுத்தவர், ஒரு வங்கியை போன்று. உங்களுக்கென்று சில விதிமுறைகள் உண்டு, நீங்கள் கறாராக இருக்க வேண்டியது அவசியம்.

 

பங்குச்சந்தையில் நீங்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால முதலீட்டாளராகவோ இருந்து விட்டு போங்கள். அது உங்களுடைய விருப்பம். ஆனால் இனி சொல்லக்கூடிய ஆறு விஷயங்களை மட்டும் எப்போதும் உங்கள் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். இது தான் உங்களை பெரும்பாலும் நஷ்டத்திலிருந்து தள்ளி வைக்கும்.

 

  • நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Adequate size of the Company):

 

பங்குச்சந்தையில் கடலளவு நிறுவனங்கள் உள்ளன, இனி வரும் காலத்தில் இதனை விட அதிகமான நிறுவனங்கள் வரக்கூடும். ஐந்து பைசாவுக்கும், ஐந்து ரூபாய்க்கும் பங்குகளை வாங்குவது(Penny stocks) உங்கள் நோக்கமல்ல. நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு கடன் கொடுக்க இங்கே வந்து இருக்கிறீர்கள். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap), ஆண்டு வருவாய்(Revenue) மற்றும் நிகர லாபம்(Net Profit) கோடிகளில் உள்ளவற்றை காணுங்கள்.

 

உதாரணத்திற்கு சந்தை மதிப்பு 1000 கோடி ரூபாய்க்கு மேலான நிறுவனங்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ. 100 கோடிக்கு மேலான வருவாய் அல்லது லாபத்தை கொண்ட நிறுவனங்கள் என பங்குகளை தேர்வு செய்யுங்கள்.

 

  • வலுவான நிதி ஆதாரம் (Strong Financial Trend):

 

           ஒரு தற்காப்பு முதலீட்டாளராக நீங்கள் செய்ய வேண்டியவை – கடனில்லா

நிறுவனங்கள்(Debt Free), தற்போதைய வேலைக்கு மூலதனம்(Working

Capital) மற்றும் அதிக சொத்துக்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் என

தேர்வுகளை துவக்குங்கள். சுருக்கமாக கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.5

க்கு கீழ் உள்ளவாறு பார்த்து கொள்ளுங்கள்.

 

  • வருவாய் நிலைப்புத்தன்மை (Earnings Stability):

 

ஒரு நிறுவனம் காலாண்டு வருவாய் மற்றும் நிகர லாபத்தில்(Sales & Profit) தொடர்ச்சியான வளர்ச்சியை பெற்று வருகிறதா என ஆராயுங்கள். ஏதாவது ஒரு காலாண்டில் வருவாய் அல்லது லாபத்தின் அளவு குறைந்தால், அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள். வருவாய் அளவு குறையும் சமயத்தில் சந்தையின் பங்கு விலைகளில் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை கண்டு தீர்வு காணுங்கள்.

 

  • தொடர்ச்சியான ஈவுத்தொகை செலுத்துதல் (Dividend Track Record):

 

          பங்குச்சந்தையில் உள்ள ஒரு நிறுவனம் தான் பெற்ற லாபத்தை பல்வேறு வழிகளில் முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கலாம். சில நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்காக லாபத்தை பயன்படுத்தும். இதன் விளைவு பங்குகளில் விலை மாற்றத்தை ஏற்படுத்தும். மற்ற சில நிறுவனங்கள் போனஸ் பங்குகள், நிறுவனமே பங்குகளை திரும்ப பெறுதல்(Buyback) அல்லது டிவிடெண்ட் என சொல்லப்படும் ஈவுத்தொகையை முதலீட்டாளருக்கு வழங்கும்.

 

வங்கிகளின் வட்டி வருமானத்தை போல, நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட்(Dividend) வருமானத்தை நாம் அவ்வப்போது பெற்று வரலாம். தொடர்ச்சியான ஈவுத்தொகையை கொடுத்து வரும் நிறுவனங்களை உங்கள் முதலீட்டுக்கு பரிசீலனை செய்யுங்கள். பங்குகளின் விலை அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான டிவிடெண்ட் வருமானம்(Dividend yield) முதலீட்டை பாதுகாக்கும்.

 

  • பங்கு – சொத்து மதிப்பு விகிதம் (Price to Assets Ratio):

 

         தற்போது வர்த்தகமாகி கொண்டிருக்கும் பங்கின் விலை அதன் புத்தக மதிப்பை காட்டிலும் அதிகமில்லாமல் பார்த்து கொள்வது நன்று. இருப்பினும், பிரபலமான மற்றும் தேவைப்பாடு அதிகமுள்ள நிறுவனங்களின் பங்குகள் எப்போதும் அதிகமான விலையில் தான் வர்த்தகமாகும். இதனால் அதன் புத்தக மதிப்பும்(Price to Book Value) பல மடங்கு இருப்பது இயல்பு.

 

நிறுவன பங்கின் விலை அதன் புத்தக மதிப்பை போன்று இரண்டு மடங்குக்கு அதிகமில்லாமல்(Not more than 2.0 X times) இருக்குமாறு கண்டறியுங்கள், பின் அந்த பங்கினை தேர்வு செய்யுங்கள்.

 

  • ஒரு பங்குக்கான வருவாயின் வரலாறு (Earnings Growth and Price to Earnings):

 

         பொதுவாக ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மற்றும் அதனை சார்ந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனை போல நிறுவனத்தின் வருவாய் மாற்றத்தை நாம் அந்த பங்கின் ஈ.பி.எஸ்.(Earning Per Share -EPS) மூலம் காணலாம். ஒரு முதலீட்டாளராக நாம் காண வேண்டியது, நிறுவனத்தின் வருவாயை காட்டிலும் ஒரு பங்கின் மீதான வருமானத்தை தான்.

 

பங்கின் மீதான வருமானம் என்பது மிகவும் எளிமையான கண்டுபிடிக்க கூடிய விஷயம் தான். கடந்த பத்து வருட காலத்தில் ஒரு நிறுவனத்தின் பங்கு விலையும், அதன் வருவாயும் எவ்வாறு உள்ளது என்பதை சந்தை குறியீட்டுடன்(Benchmark) ஒப்பிட்டு பாருங்கள். பின்பு துறையை சார்ந்த மற்ற நிறுவனங்களின்(Peer Companies) பங்கு விலை மற்றும் வருமானத்துடன் ஒப்பிட்டு பார்த்து பங்குகளை தேர்வு செய்யுங்கள்.

 

நீங்கள் கடன் அளிப்பவர் என்பதை எப்போதும் மறவாதீர்கள். பங்குச்சந்தையில் நிறைய சம்பாதிக்கலாமே ?  ஆம், யாரிடமும் ரகசியத்தை சொல்லாதீர்கள் 🙂

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ (இண்டஸ்ட்ரீஸ்) – நான்காம் காலாண்டு முடிவுகள்

தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ (இண்டஸ்ட்ரீஸ்) – நான்காம் காலாண்டு முடிவுகள்

Q4 Results of Reliance Industries Limited(RIL) – Financial year 2018-19

 

ஜியோவின்(JIO) வருகைக்கு பின் இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள முடியாமை, ஐடியா-வோடபோன் இணைப்பு, ஏர்செல் மற்றும் டொகோமோ என்ற நிறுவனங்கள் காணாமல் போனது ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா புரட்சியில் தான். சந்தையில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று தனது 2018-19ம் நிதியாண்டுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,38,659 கோடியாகவும், செலவினங்கள் 1,17,827 கோடி ரூபாயாகவும் இருந்தது. இயக்க லாபம் 20,832 கோடி ரூபாயாகவும் மற்றும் நிகர லாபம் ரூ. 10,362 கோடியாகவும் உள்ளது.

 

இதர வருமானம் என எடுத்து கொண்டால் நான்காம் காலாண்டில் சுமார் 3,215 கோடி ரூபாய் வந்துள்ளது. இது கடந்த மூன்று வருடங்களில் இருந்த அதிகபட்ச அளவாகும். வரிக்கு முந்தைய வருமானமாக 13,858 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது.

 

கடந்த மார்ச் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,16,915 கோடி ரூபாயும், இதர வருமானம் 2,203 கோடி ரூபாயாகும். வரிக்கு முந்தைய வருமானம் ரூ. 13,254 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 9,438 கோடி. தற்போதைய காலாண்டு முடிவுகளை இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் 18.60 சதவீத வளர்ச்சியும், நிகர லாபம் 9.80 சதவீதமும் உயர்ந்துள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Capitalization) சுமார் 8,78,519 கோடி ரூபாய். ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் 65 சதவீதம் உயர்ந்து நான்காம் காலாண்டில்(Fourth Quarterly results) 840 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய வருடத்தின் சொல்லப்பட்ட காலாண்டில் ஜியோவின் நிகர லாபம்(Net Profit) 510 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.

 

சில்லறை வணிகத்தில் இதன் ஆண்டு வருவாய் 88 சதவீதம் அதிகரித்து ரூ. 1,30,566 கோடியாக இருந்தது. உலகளவில் மிகவும் குறுகிய காலத்தில் 30 கோடிக்கும்(300 Million Subscribers) மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது. இதன் வாடிக்கையாளர்களின் சராசரி மாத தரவு பயன்பாடு(Data usage) 10 ஜி.பி. க்கு மேலாக உள்ளது. இருப்பினும் ஒரு பயனருக்கான சராசரி வருவாய்(ARPU) கடந்த காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறிது சரிந்துள்ளது.

 

கடந்த சில காலங்களாக முக்கிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் சாதகமாக இல்லை. சில்லறை வணிகம்(Retail), தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாயை ஈட்டிய போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பில் இதன் வருவாய் குறைந்துள்ளது.

நிறுவனத்தின் கடன் நிலுவை(Debt) ரூ. 2.80 லட்சம் கோடிக்கும் மேலாக இருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடன் தொகை 2.17 லட்சம் கோடியாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தகத்தின் முதல் நாளில் 22 சதவீத ஏற்றம் – பாலிகேப் இந்தியா நிறுவனம்

வர்த்தகத்தின் முதல் நாளில் 22 சதவீத ஏற்றம் – பாலிகேப் இந்தியா நிறுவனம்

22 % rise in the first day after the listing – Polycab India

 

கடந்த சில வருடங்களாக இந்திய பங்குச்சந்தையில் மூலதனத்தை திரட்டுவதற்கு பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ.(Initial Public Offer -IPO) க்கு விண்ணப்பிக்கின்றன. பின்பு அவை முதன்மை சந்தை மூலம் தங்களுக்கான மூலதனத்தை முதலீட்டாளர்களிடம் பெறுகின்றன. முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கிய சந்தாதாரர்கள் அல்லது முதலீட்டாளர்கள் வெளியேறும் வண்ணம், இரண்டாம் சந்தையில்(Secondary Market)  அவர்களுக்கான வாய்ப்பு உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மும்பையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் பாலிகேப்(Polycab India), மின்கம்பிகள் மற்றும் கேபிள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. எப்.எம்.இ.ஜி.(FMEG -Electrical Goods) துறையில் மின் விளக்குகள் மற்றும் விசிறிகள், சுவிட்சுகள், சோலார் பொருட்களையும் தயாரிப்பு மற்றும் விற்பனையும் செய்து வருகின்றன.

 

மின் கம்பிகள்(Wires & Cables) தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வரும் பாலிகேப், சந்தையில் ரூ.1,345 கோடியை மூலதனமாக பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தது. இந்த மூலதனம் நிறுவனத்தின் கடன் மற்றும் செயல்பாட்டு மூலதன செலவினங்களுக்கு என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை சந்தையில் 533 – 538 ரூபாய் என்ற அளவில் 2.5 கோடி பங்குகளை வெளியிட்ட இந்நிறுவனத்திற்கு விண்ணப்பித்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 52 மடங்காகும்.

 

பாலிகேப் நிறுவனத்திற்கு 24 நகரங்களில் உற்பத்தி ஆலைகளும், இதன் தயாரிப்பு பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இதன் மொத்த வருவாயில் ஏற்றுமதியின் பங்களிப்பு 3.5 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

 

முதன்மை சந்தையில் வெற்றிகரமாக தனது மூலதனத்தை பெற்ற இந்நிறுவனம் நேற்று(16-04-2019) மும்பை(BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்டது. முதன்மை சந்தையில் ரூ. 538 என்ற விலையில் முடிந்திருந்த இந்நிறுவன பங்கு, நேற்று இரண்டாம் சந்தையின் துவக்கத்திலேயே 633 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகியது. ஒரே நாளில்  அதிகபட்சமாக 677 ரூபாய் வரை சென்ற இந்த பங்கு, சந்தையின் முடிவில் பங்கு ஒன்றுக்கு ரூ. 655 என்ற விலையில் இரு சந்தைகளிலும் முடிவடைந்தது. இது 22 சதவீத ஏற்றமாகும்.

 

தேசிய சந்தையில் பாலிகேப் நிறுவனத்தில் நேற்று வர்த்தகமாகிய மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 2.30 கோடி பங்குகளாகும். பாலிகேப் நிறுவனத்திற்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகவும், அதனை சார்ந்து சில பங்குச்சந்தை நிபுணர்கள் இந்நிறுவன பங்கிற்கு குறுகிய கால இலக்கு விலைகளை கூறியுள்ளனர். சந்தையில் இந்த நிறுவனத்திற்கு போட்டியாளர்களாக கேவல்ஸ் இந்தியா(Havells India), பினோலெக்ஸ் கேபிள்ஸ்(Finolex), கெய்(KEI Industries) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

 

ஐ.பி.ஓ. விண்ணப்பம் முடிந்து இரண்டாம் சந்தைக்கு வந்தவுடன் ஒரு நிறுவனத்தில் உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவு வெளியீடு மற்றும் அதனை சார்ந்து சந்தை செயல்படும் தன்மையை உன்னிப்பாக ஆராய்ந்தவுடன் இது போன்ற பங்குகளில் முதலீட்டை மேற்கொள்வது நீண்ட கால முதலீட்டாளரின் சாராம்சமாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான்காம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra Day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?

 

விடை:   இல்லை.

 

விளக்கம்:  பொதுவாக பங்குச்சந்தை மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் ரிஸ்க் நிறைந்தவை. சந்தையில் வர்த்தகத்தின் போது ஏற்ற-இறக்கம்(Volatility) எப்போதும் காணப்படும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஒருவர் நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை நிச்சயம் பெறலாம்.

 

பங்குச்சந்தையில் நாம் பங்குகளை தினமும் வாங்கி விற்கலாம்(Intra day), குறுகிய காலத்தில்(Short term) வர்த்தகம் செய்யலாம் மற்றும் நீண்ட கால முதலீடாகவும் கொள்ளலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவே ஆகும். சந்தையில் தினசரி வர்த்தகத்தில் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தாலும், எப்போதும் இது சாத்தியமில்லை. உதாரணத்திற்கு நாம் தினமும் பங்குச்சந்தையில் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்பது நமது ரிஸ்க் திறனை பொறுத்தது. ஐயாயிரம் ரூபாய் லாபம் என்பது போல, அதற்கு நேரெதிரான நஷ்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் தினசரி வர்த்தகத்தின் மூலம் நாம் விரைவாக செல்வம் சேர்ப்பதற்கு வாய்ப்பு குறைவே. குறுகிய காலத்தில் பங்குச்சந்தையின் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று யாரவது உங்களிடம் சொன்னால், எச்சரிக்கை தேவை – இது ஏமாற்று பேர்வழிகளின் போன்சி திட்டங்களாக(Ponzi Schemes) இருக்கலாம்.

 

  • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை ?

 

விடை: இல்லை (தவறு).

 

விளக்கம்: வங்கியில் கிடைக்கும் வட்டி வருமானம் வரி செலுத்துதலுக்கு

உட்பட்டது. சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு(Fixed Deposit) வழங்கப்படும் வட்டி, தனி நபர் ஒருவரின் வருமான வரம்பிற்கு உட்பட்டு வரி விதிக்கப்படும். வருமான வரிச்சட்டம் பிரிவு 80TTA ன் கீழ் ஒருவரின் சேமிப்பு கணக்கில் உள்ள வட்டி தொகை வருடத்திற்கு ரூ.10,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேலாக கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி உண்டு.

 

வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வங்கிகள் பொதுவாக டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்த தொகையை திரும்ப பெற சிறப்பு படிவத்தை(Form 15G & 15H) பூர்த்தி செய்யலாம். நடப்பு வருட பட்ஜெட் தாக்கலின் படி, உங்களின் வைப்பு நிதியில் உள்ள வட்டி தொகை(Interest Income) ரூ. 40,000 மற்றும் அதற்கு குறைவாக இருக்கும் நிலையில், வங்கிகள் உங்களிடம் பிடித்தம் செய்யாது. அதே வேளையில் நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், வரி தாக்கல் செய்யும் போது உங்களது வட்டி வருமானம் மற்றும் டி.டி.எஸ். பிடித்தம் பதிவு செய்யப்படும்.

 

  • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?

 

நாம் கற்கும் எந்தவொரு கல்வியும் நமக்கும், நமது சமுதாயத்திற்கும் பயன்படுமாறு இருத்தல் வேண்டும். அது பண்பாடு அல்லது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி. நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கோ அல்லது தொழிலை தொடங்குவதற்கோ நம்மிடம் தேவையான அடிப்படை திறன்(Basic Skills) இருத்தல் வேண்டும். இதனை நாம் கற்ற கல்வி அல்லது வேலைப்பயிற்சி மூலமாகவோ நாம் பெற்றிருக்கலாம்.

 

நமக்கான வேலை அல்லது தொழிலை செய்வதற்கு முன், நாம் பல வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி கற்றலில் அனுபவம் பெறுகிறோம். பின்னர் ஒரு நிறுவனத்தில் ஆரம்பகட்ட நிலையில் வேலை செய்கிறோம். ஐந்து முதல் பத்து வருட தொழில் அனுபவத்திற்கு பிறகே, நாம் அந்த தொழிலை 50 சதவீதம் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வருகிறது.

 

பெரும்பாலோருக்கு ஒரே நிறுவனத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாம் சம்பாதிப்பதற்காகவே நம் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்யும் போது, பொருளாதாரம் அல்லது நிதி சார்ந்த அறிவை(Financial Education) கற்பதற்கு நாம் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் ?

 

நமது குடும்பத்திற்கான மாத வரவு-செலவு, குழந்தைகளுக்கான எதிர்கால நிதி திட்டமிடல், நமக்கான ஓய்வு கால திட்டமிடல், அவசர காலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கிறோமா என்பதனை நாம் சிறிது நேரத்தை ஒதுக்கி தான் திட்டமிட வேண்டும்.

.

உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட், பில் கேட்ஸ் போன்றோர் புத்தக வாசிப்புக்கு மட்டும் தினமும் ஆறு மணிநேரம் செலவிடுகின்றனர். நமக்கு நேரமில்லாமலா போகும் !

 

அட, நம்ம பேஸ்புக் நிறுவனர் மார்க்(Mark Zuckerberg) இரண்டு வாரத்துக்குள் ஒரு புத்தகத்தை படித்து முடித்து விடுகிறாராமே 🙂

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

 

விளக்கம்: அவசர கால நிதி (Emergency Fund) என்றால் என்ன மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் ஏற்கனவே கீழ்காணும் கட்டுரையில் பதிவிட்டுள்ளோம்.

 

அவசர கால நிதிக்கான திட்டமிடல்

 

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ?

 

  • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

விளக்கம்: அவசரத்திற்கு தவணை திட்டம்(Equated Monthly Installment -EMI) உதவலாம். வருமுன் காப்பது நல்லதா, வந்த பின் வருந்துவதா ? மூளையை யோசிக்க விடுங்கள். கீழே உள்ள சிறு பதிவை படியுங்கள். பின்னர் நீங்களே சாமர்த்தியமாக முடிவெடுப்பீர்கள்.

 

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

நிறைவு பெறுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்

நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்

Infosys gains profit of Rs. 4,074 Crore in the Fourth Quarter – FY19

 

2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 4,074 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் இதன் வருவாய் 21,539 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம்(Operating Profit) ரூ. 5,149 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானம் நான்காம் காலாண்டில் 665 கோடி ரூபாயாக இருக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வரிக்கு முந்தைய லாபம்(PBT) 5,283 கோடி ரூபாய் ஆகும். கடந்த மார்ச் 2017-18ம் காலத்தில்(Quarterly Results) நிறுவனத்தின் வருவாய் 18,083 கோடி ரூபாயும், நிகர லாபம் ரூ. 3,690 கோடியாகும். இதனை ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 19 சதவீத வளர்ச்சியை (YoY) பெற்றுள்ளது.

 

2018-19ம் நிதியாண்டின் முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் கையிருப்பு 62,778 கோடி ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நிறுவனத்தின் கையிருப்பு தொகை எவ்வளவு என்பதை, ஆண்டு இருப்பு நிலை அறிக்கையை(Balance Sheet) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 21,400 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,609 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை ஒப்பிடுகையிலும், தற்போது வெளியிடப்பட்ட நிகர லாபம் 13 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கிறது.

 

நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் செலவின விகிதம் ரூ. 16,390 கோடியாகவும், இது மூன்றாம் காலாண்டு செலவினத்தை காட்டிலும் சற்று குறைவாக இருக்கிறது. பணத்திற்கு சமமாக(Cash Equivalents) நிறுவனத்திற்கு 2018-19ம் நிதி ஆண்டில் 19,568 கோடி ரூபாய் உள்ளது.

 

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஆராயும் போது, இன்போசிஸ்(Infosys) நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதங்கள் பத்து சதவீதத்திற்கு மேலான வளர்ச்சியை பெற்றுள்ளன. அதே வேளையில், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நிறுவனத்தின் விற்பனை (வருவாய்) அளவு வளர்ச்சி குறைந்து வருகிறது.

 

பங்கு மூலதனத்தின் மூலமான வருவாய்(ROCE & ROE) ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்துள்ளதை காட்டுகிறது.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

 

டி.சி.எஸ். நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 8126 கோடி

டி.சி.எஸ். நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 8126 கோடி

Net profit rose to Rs. 8126 Crore in the Q4FY19 – TCS

 

சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வந்து கொண்டிருக்கும் மாதமிது. கடந்த 2018-19ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களின் லாப வளர்ச்சி சராசரியை ஒட்டியே அமைந்தது. ஆனால் இம்முறை நான்காம் காலாண்டு முடிவுகள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேர்தல் களம் மற்றும் அடுத்த மாதம் மத்தியில் புதிய அரசு பதவியேற்கும் என்ற நிலையில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சந்தையில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தும். நேற்று (12-04-2019) இந்திய ஐ.டி. துறையில் மாபெரும் நிறுவனமாக விளங்கும் டாட்டா கன்சல்டன்சி(Tata Consultancy Services) மற்றும் இன்போசிஸ்(Infosys) நிறுவனங்கள் தங்கள் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

 

2018-19ம் நிதி வருடத்தில் டி.சி.எஸ்.(TCS) நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம்(Net Profit) ரூ. 8126 கோடியாகவும், இந்த காலத்தில் வருவாய் 38,010 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 6,904 கோடி ரூபாயாகவும், வருவாய் ரூ. 32,075 கோடியாகவும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

இயக்க லாப வரம்பு(Operating Profit Margin- OPM) கடந்த பத்து காலாண்டுகளில் 25 முதல் 28 சதவீதம் என்ற தொடர் வளர்ச்சியில் இருக்கிறது. கடந்த இரு நிதி ஆண்டுகளின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் 17.70 சதவீத வளர்ச்சியையும், வருவாய் 18.50 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளது. நடந்து முடிந்த நான்காம் காலாண்டில் நிறுவனம் 6,356 புதிய பணியாளர்களை சேர்த்துள்ளது.

 

இரட்டை இலக்க வளர்ச்சி, வர்த்தகத்தில் உயர்தரம் மற்றும் சிறந்த நிர்வாக திறன் ஆகியவற்றால் தற்போதைய வளர்ச்சி சாத்தியம் அடைந்ததாகவும், கடந்த 15 காலாண்டுகளில் சென்ற நான்காம் காலாண்டு வளர்ச்சி தான் சிறந்ததாக இருந்ததாகவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு ஒன்றுக்கு ஈவுத்தொகை(Dividend per Share) 18 ரூபாய் அளிப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

 

இது போல இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவில்(Quarterly Results), நிறுவன வருவாய்(Revenue) 21,539 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் 4,078 கோடி ரூபாய் என வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து வரும் பதிவில் நாம் அலசலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

உங்கள் வாழ்வை வளமாக்கும் 10 அற்புதமான சிந்தனைகள்

உங்கள் வாழ்வை வளமாக்கும் 10 அற்புதமான சிந்தனைகள்

10 Commandments not to inspire you, but to Practice

 

2018ம் ஆண்டை நாம் கடந்து விட்டோம், 2018-19ம் நிதியாண்டையும் நாம் கடந்து வந்தாகி விட்டது. சிந்தனைகளுக்கும், அதனை சார்ந்த பழக்கத்திற்கும் துவக்க நாட்கள் என்று ஏதுமில்லை எனலாம். நாம் ஒரு புதிய சிந்தனையை அல்லது பழக்கத்தினை ஏற்படுத்தி கொள்ள வருடத்தின் ஆரம்பம் அல்லது பிறந்த நாட்கள், இல்லையெனில் நமக்கு பிடித்த முக்கியமான நாட்களில் முடிவெடுக்க பழகுகிறோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புதிய சிந்தனைகள் மற்றும் பழக்கங்களை துவக்க நாம் எந்த முக்கிய நாட்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நிதி சார்ந்த  விஷயத்திலும் நமது முடிவுகள் பெரும்பாலும் அவசரமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுபடுத்தி கொள்ளலாம். உண்மையில் முதலீடு செய்வதற்கு நாம் எந்த நாட்களையும் எதிர்பார்க்க தேவையில்லை, கடன் வாங்கும் நேரம் மட்டும் தான், நாம் அதனை பரிசீலனை செய்ய வேண்டும்.

 

நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால், அதனை உங்களிடம் இருந்து துவங்குங்கள்’ என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். நாம் ஒன்றும் உலகத்தை மாற்றவோ, புதிய உலகத்தை படைக்கவோ வேண்டாம். மாறாக, நமது அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தாலே, அது நமக்கு ஊக்கமளிக்க கூடியதாக அமையும்.

 

பின்வரும் பத்து கட்டளைகள் ஒவ்வொருவரின் வாழ்வையும் வளமாக்கும் அற்புதமான சிந்தனைகளாகும். எனது சமூக வலைதள நண்பர் திரு. யாக்னேஸ்வரன் கணேஷ்(Yagneshwaran Ganesh) அவர்கள் இந்த பத்து கட்டளைகளுக்கு சொந்தக்காரர், எளிமையாக வடிவமைத்ததற்கு நன்றி. பத்து கட்டளைகளும் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்க கூடிய விஷயமாக இல்லாமல், அனைவரும் பயிற்சி செய்யும்படி அமைந்துள்ளது. ஆதலால், இதனை யாரும் வெறும் சிந்தனைகளாக மட்டும் கொண்டிருக்காமல், தங்கள் வாழ்வில் புகுத்தி பயன் பெறுங்கள்.

 

  • எதிர்மறைக்கு பதிலளிக்காதே (Do not respond to Negativity)

 

உங்களுடைய எதிர்மறை சிந்தனைகள், மற்றவர்கள் உங்களிடம் காட்டும் எதிர்மறை செயல்கள் மற்றும் வார்த்தைகளுக்கு எப்போதும் செவி சாய்க்காதீர்கள். நீங்கள் உங்கள் சிந்தனைகள் மற்றும் செயல்களை சுய பரிசோதனை(Introspect) செய்து கொள்ளலாமே தவிர, எதிர்மறை சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

 

வெற்றியாளர்களின் மற்றும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர்களின் முதன்மையான பண்பே, இது தான்.

 

  • எதையும் எதிர்பாராமல் கொடுக்க பழகுங்கள் (Give without expecting to get)

 

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவெடுத்து விட்டால், உடனே அதனை செயல்படுத்துங்கள். அந்த உதவியில் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கலாம் என எண்ணாதீர்கள். இந்த உலகம் ஏமாற்றுபவர்களுடைய இடம் என நீங்கள் கருதினால், அப்புறம் நீங்கள் யார் ? உங்களுக்கு இந்த இடத்தில் என்ன வேலை ?

 

உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு அளிக்க தயாராகுங்கள். அதற்காக நீங்களும், உங்களது குடும்பமும் நிதி சார்ந்து கஷ்டப்பட தேவையில்லை. உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு, நீங்கள் மற்றவர்களுக்கு உதவ துணைபுரிந்தாலே அதுவும் ஆரோக்கியமான விஷயமே. நீங்கள் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி தான், பின்னாளில் உங்களுக்கு மாபெரும் வளத்தை கொடுக்க முன்வரும். நம்புங்கள், இது உங்கள் உலகம் – உங்களை யாரும் ஏமாற்றி விட்டு செல்ல முடியாது 🙂

 

  • குறை சொல்லும் செயலை பழக்கமாக்கி கொள்ளாதீர்கள் (Do not Nitpick as a hobby)

 

எப்போதும் குறை சொல்வதையே சிலர் வழக்கமாக கொண்டிருப்பதை நாம் கண்டிருப்போம். குறை சொல்வதை மட்டுமே நாம் கொண்டிருந்தால், எதனையும் நம்மால் சரிப்படுத்தி விட முடியாது. மாறாக, நமது சிந்தனையில் அது சரி என தெரிந்தால் அதனை மற்றவர்களிடம் விளக்கி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்.

 

பெரும்பாலான குடும்ப மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்னைகளில் ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்தாலே, சிக்கல்கள் குறையும். நாம் எடுத்த விஷயத்திற்கு எல்லாம் குறை சொல்ல பழகினால், பின்பு அதுவே நமது பழக்கமாகி விடும். நம்மை மற்றவர்கள் வெறுப்பதற்கும் இந்த பழக்க செயலே காரணமாகவும் அமைந்து விடும். ஒரு பிரச்னைக்கு குறை சொல்ல முயல்வதை காட்டிலும், அதற்கான தீர்வு பற்றி யோசியுங்கள்.

 

  • ஆற்றல் மிக்க நண்பர்கள் குழுவை உருவாக்குங்கள் (Create personal learning network of Friends)

 

‘ உங்களது நண்பர்களை காண்பியுங்கள், நீங்கள் யாரென்று சொல்கிறேன்’ என்ற வாசகம் சுய முன்னேற்ற கல்வியில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். உங்களது நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் எப்போதும் கவனம் செலுத்துதல் வேண்டும். உங்களது தினசரி பழக்க வழக்கத்திற்கு அதுவே காரணியாக இருக்கும் என்பதால், சக்தி வாய்ந்த அல்லது ஆற்றல் மிக்க சிந்தனை கொண்டவர்களை நண்பர்களாக்கி கொள்வது, உங்களை எப்போதும் நேர்மறை சிந்தனையில் வைத்திருக்கும்.

 

பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாகவே இருந்து வந்துள்ளார்கள், ஏழைகள் ஏன் மேலும் ஏழைகளாகவே வாழ்கின்றனர் என்பதற்கு இதுவே சிறந்த சான்று எனலாம்.

 

  • மற்றவர்களின் வேலையை பாராட்டுங்கள் (Promote others good work)

 

மற்றவர்கள் செய்யும் வேலையை அல்லது முயற்சியை பாராட்ட முயலுங்கள். அவர்கள் செய்யும் வேலை, உங்களுக்கானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை நம் சமுதாயத்திற்கு பயன்படும் படி அமையலாம். முன்னேற துடிப்பவர்களுக்கான உதவியை நீங்களே செய்யுங்கள். அவர்களது முயற்சியை பாராட்டி ஊக்கமளிக்க துவங்குங்கள், இதுவே ஒரு அமைதியான பண்பாட்டை ஏற்படுத்தும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

யாருடைய செயலுக்காகவும் நீங்கள் பொறாமை கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, தனிப்பட்ட செயல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், உங்களுக்கு இங்கே யாரும் போட்டியாக இருக்க போவதில்லை. 60 வயதுள்ள ஒரு தொழிலதிபருக்கு, 30 வயது கொண்ட ஒரு இளைய தொழில்முனைவோர் எவ்வாறு போட்டியாளராக அமைந்து விட முடியும். இருவரின் தொழில்புரியும் காலங்கள், வாழ்க்கை மற்றும் கற்றல் முறை வெவ்வேறு. அப்படியிருக்க வெறும் எண்களை மட்டுமே கொண்டு, நாம் போட்டா போட்டிக்கு வந்து விட கூடாது.

 

  • எப்போதும் கற்றலை முன்னிறுத்துங்கள் (Do not try to sell, instead Educate)

 

நம்மில் பெரும்பாலோர் செய்யும் தவறு இது தான் – பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் மட்டுமே கற்றலுக்கான நாட்கள் என்று நாம் எண்ணி கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் வாழ்நாள் முழுவதும் கற்று கொள்ள கடலளவு விஷயங்கள் இங்கே உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம். ‘கல்லூரி காலத்துடன் கற்றலை நிறுத்தியவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான நேரத்தை ஒதுக்குபவர்கள் தான் பின்னாளில் பணக்காரர்களாக இருந்துள்ளனர் ‘ என்று ராபர்ட் கியோசாகி(Robert Kiyosaki – Rich Dad Poor Dad) சொல்வதுண்டு.

 

ஒருவரிடம் உங்கள் கருத்து அல்லது ஏதேனும் பொருட்களை விற்க வேண்டுமானால், முதலில் அதனை பற்றிய கல்வியை அவர்களுக்கு அளியுங்கள். உங்கள் கருத்து அல்லது பொருட்களை தேர்ந்தெடுப்பது அவர்களுடைய கடமை ஆகும். பொருட்களை விற்பதை காட்டிலும், கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

 

  • உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை (Remember, your tone of Voice matters)

 

உங்கள் எண்ணம் செயலாக மாறுவதன் அதிசயம் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம். ஆனால் உங்கள் எண்ணம் வார்த்தைகளாக வெளிவரும் போது, நீங்கள் கவனத்துடன் அணுக வேண்டும். உங்கள் வார்த்தை தான் நீங்கள் யார் என்பதை இந்த சமுதாயத்தில் பிரதிபலிக்கும். நீங்கள் எதையும் உடனடியாக பேச வேண்டும் என்ற அவசியமில்லை, நிதானமாக யோசித்து பின்பு உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். வாளை(Sword) விட உங்கள் வார்த்தை(Words) சக்தி வாய்ந்தது, கவனமாக பயன்படுத்துங்கள்.

 

  • நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் (Connect with people honestly)

 

இன்று நேர்மை எங்கே இருக்கிறது என்று நாம் கேட்கலாம். நாம் நினைப்பது போல லஞ்சம் தவிர்ப்பதும், ஊழல் செய்யாமல் இருப்பது மட்டும் நேர்மை அல்ல. நேர்மை என்பது நம் ஒவ்வொருவரின் மனதில் இருந்து வெளிப்படுவது. நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால் மட்டுமே, உங்களால் வெளி உலகில் நேர்மைத்துவத்தை வெளிப்படுத்த முடியும்.

 

பெரும்பாலான நேரங்களில் நாம் செய்யும் தவறுக்கு, காரணங்களை தேட முயற்சிக்கிறோம். வெற்றி பெற்றவர்கள் பொறுப்புகளை ஏற்று கொள்வார்கள், அது தான் அவர்களை தலை நிமிர்ந்து நடக்க செய்கிறது. உங்களது தவறு அல்லது தாமதத்திற்கு நீங்கள் வருந்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, உங்களுக்குள் தன்னம்பிக்கை வெளிப்படும். மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பதை போல, நீங்களும் அதனையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.

 

  • புத்திசாலியாக இருப்பதை விட அன்பாக இருக்க முயலுங்கள் ( Choose to be kind over clever)

 

எப்போதும் நீங்களே முதலிடத்தில் இருப்பதும், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் மட்டுமே கேட்டு கொண்டிருப்பதிலும் என்ன மகிழ்ச்சி உள்ளது. நீங்கள் புத்திசாலியாக இருந்ததால், மற்றவர்கள் அனைவரும் சந்தோசமாக இருந்துள்ளனர் என நீங்கள் எண்ணுகிறீர்களா ?

 

நீங்கள் உங்கள் தொழிலில் அல்லது பணிபுரியும் இடத்தில் வேண்டுமானால் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தலாம். உங்கள் குடும்பத்தில், உறவுகளில் உங்கள் புத்திசாலித்தனம் எதனை கொடுத்து விடும் என நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய நாட்களில், நாம் குடும்பம் மற்றும் உறவினர்கள் என்ற நிலையிலிருந்து வெளிவந்து விட்டோம். அப்புறம் எதற்கு நாம் புதிய நண்பர்களை தேடுகிறோம், நண்பர்களை உறவினர்களாக மாற்றி கொள்கிறோம். நாம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம் என நமது உள்ளுணர்வு மூலம் இது வெளிப்படுகிறது.

 

  • எளிமையான விஷயங்களை தேர்வு செய்யுங்கள் (Keep things simple)

 

நமக்கான லட்சியம் பெரிதாக இருக்கலாம், நமக்கான கடமையும் பிரமாண்டமாக இருந்திருக்கலாம். நாம் கையாளும் எந்தவொரு செயலையும் எளிமையாக வடிவமைத்து கொள்ளுங்கள். சிக்கல் நிறைந்ததாக நம் வாழ்க்கையை கொண்டிருக்காமல், எளிமையான சிந்தனைகளை கொண்டிருங்கள். முதலில் நம்மால் முடிந்த மற்றும் நமக்கு தெரிந்த விஷயங்களை செய்ய பழகுங்கள். பின்பு கற்றலின் மூலம் அடுத்தகட்ட செயலை செய்ய ஆரம்பியுங்கள்.

 

மிகவும் எளிமையான கணக்கு சூத்திரம்(Simple Formula), எளிமையான வாழ்க்கை முறை(Be Frugal) எப்போதும் நமக்கு மறந்து போகாது.

 

நீங்கள் தொழில் முனைவோராகவோ, நிறுவனத்தில் பணிபுரிபவர் அல்லது உங்களது குடும்பத்தின் ஒரு நபராக இருக்கலாம். மேலே சொன்ன பத்து சிந்தனைகளை கடைபிடிக்க முயற்சியுங்கள், உங்களது வாழ்க்கை உங்கள் வசமாகும். இது ஊக்கமளிக்கும் சிந்தனைகள் அல்ல, பயிற்சி பெற வேண்டிய சிந்தனைகள்..

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மழைக்காலத்திற்கு தயாராக உள்ளீர்களா ? அவசர கால நிதிக்கான திட்டமிடல்

மழைக்காலத்திற்கு தயாராக உள்ளீர்களா ? அவசர கால நிதிக்கான திட்டமிடல்

Ready for the Rainy season ? – Plan for the Emergency Funding

இன்னும் பங்குனி-சித்திரை மாதங்களை தாண்டவில்லை, அதற்குள் மழைக்காலம் என்கிறீர்களா ? மழைக்காலமோ, அது வெயில் காலமோ அதற்கான பாதுகாப்பு அம்சங்களை நாம் முன்னரே திட்டமிடுவது சிறந்தது. ‘வருமுன் காப்போம்’ என்ற வாசகமே நாம் எந்த பிரச்சனைக்குள்ளும் சிக்காமல் நம் தினசரி வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்து கொடுக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போதுள்ள வெயில் காலத்தில் நாம் நம்மை பாதுகாக்க என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரிந்திருக்கும். அது போல மழைக்காலத்தில் மிகவும் அடிப்படை விஷயமாக, வெளியில் செல்லும் போது குடை கொண்டு செல்வது நம் அனைவரது அவசியமாகும். காலத்திற்கு தகுந்தாற் போல், நாம் மாறிக்கொண்டு வந்தாலும், நமது நீண்டகால நிதி வாழ்க்கைக்கு பாதுகாப்பு கவசங்களை அணிகிறோமா என்பது தான் நமக்கான இன்றைய கேள்வி.

 

வளரும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி கொண்டு தான் இருக்கின்றன. படித்த படிப்புக்கு வேலையில்லை என்று சொன்னாலும், இன்று சேவை துறையில் அதிக வேலைவாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன என்றே சொல்லலாம். பத்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த வேலை தான், இன்று அது போல இல்லை எனலாம். பொதுவாக நுகர்வோர்(Consumer) சார்ந்த தொழில்கள் வளர்ந்து வரும் தருணத்தில், அதனை தொடர்ந்து வேலைவாய்ப்புகளும் பெருகும். நினைவிருக்கட்டும், இந்த வேலைவாய்ப்புகள் அரசாங்கம் ஏற்படுத்தியவை அல்ல, நாம் தான் – நமது நுகர்வு கலாச்சாரம் தான் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 

வேலைவாய்ப்புகள் அதிகரித்து வந்தாலும் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பணி மாறுபவர்களின் எண்ணிக்கையும், சில காரணங்களால் வேலையினை இழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்து வருகிறது. நிறுவன பணி மாறுதலோ அல்லது வேலை இழப்போ, இது போன்ற இடைக்கால நிகழ்வுகளை சமாளிப்பது தான் நமக்கான மழைக்கால குடை எனலாம். இது ஒரு தற்காலிக நிகழ்வு தான் எனினும், அதனை சமயத்தில் நாம் தீர்வு கண்டால் மட்டுமே, நமக்கான அடுத்தகட்ட வாழ்க்கை சரியாக அமையப்பெறும்.

 

இன்றைய சூழ்நிலையில் நாம் தற்காலிகமாக வேலைக்கு செல்ல முடியாமல் போவதற்கான காரணங்கள் பல உண்டு. இருப்பினும், அந்த சமயத்தில் நமக்கான பொருளாதார வாழ்க்கையும் பாதிக்கப்படும். இதனை களைய தான் அவசர கால நிதி திட்டமிடல் அவசியம்(Emergency Fund). எதிர்பாராத பொருளாதார இழப்பு அல்லது தற்காலிக நிதி நெருக்கடியின் போது, அவசர கால சேமிப்பு உங்களுக்கு உதவக்கூடும்.

அவசர கால நிதியை திட்டமிடுவது எப்படி ?

 

  • உங்கள் மாதாந்திர வரவு மற்றும் செலவை கணக்கிட்டு கொள்ளுங்கள் (Monthly Income and Expenses).
  • உங்களுக்கு தற்சமயம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்களை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (Asset and Liabilities). உங்களால் சொத்து மற்றும் கடன் விவரங்களை கணக்கிட கடினமாக இருந்தால், கவலையடைய வேண்டாம். விட்டு விடுங்கள், நமக்கான இலக்கு அவசரகால நிதியை செயல்படுத்துவது தான்.
  • உங்களது அவசரகால இலக்கை திட்டமிடுங்கள் மற்றும் இலக்கிற்கு எவ்வளவு தொகை வேண்டுமென்று குறித்து கொள்ளுங்கள். (Emergency – Due to Job Loss, Unexpected Incident, Medical Emergencies, Family Commitments, Desired Goals)
  • பொதுவாக அவசர கால தேவைக்கு 6 முதல் 12 மாத வருமானம் உள்ள தொகையை இலக்காக எடுத்து கொள்வது நன்று.
  • உங்களது இலக்கிற்கான சேமிப்பு / முதலீட்டு தொகையை ஒரு வங்கி சேமிப்பு கணக்கின் மூலம் தொடங்குங்கள். வட்டி வருமானம் குறைவாக  இருந்தாலும் பரவாயில்லை; நீங்கள் சேமிப்பு கணக்கில், எப்போதும், எங்கு வேண்டுமானாலும் பணத்தை எளிதாக எடுத்து கொள்ளலாம். (Save Only in Savings Accounts/Recurring Deposits. It will give only around 4-7 % Interest, but, you can take money anytime, anywhere. Don’t look out for the Equity, Gold or Real Estate for Emergency !)
  • உங்களது அவசரகால நிதியை எக்காரணத்திற்காகவும் வெளியே எடுக்காதீர்கள் (அவசரகாலம் தவிர !)

அவசர கால நிதியை திட்டமிடுவது எவ்வாறு என்பதை நாம் பார்த்து விட்டோம். அடுத்து அதனை செயல்படுத்துவது எவ்வாறு என்பதை கீழ்க்காணும் இணையப்பக்கத்தில் நாம் ஏற்கனவே கொடுத்துள்ளோம்.

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ? How to Start an Emergency Fund

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil