உங்கள் வாழ்வை வளமாக்கும் 10 அற்புதமான சிந்தனைகள்
10 Commandments not to inspire you, but to Practice
2018ம் ஆண்டை நாம் கடந்து விட்டோம், 2018-19ம் நிதியாண்டையும் நாம் கடந்து வந்தாகி விட்டது. சிந்தனைகளுக்கும், அதனை சார்ந்த பழக்கத்திற்கும் துவக்க நாட்கள் என்று ஏதுமில்லை எனலாம். நாம் ஒரு புதிய சிந்தனையை அல்லது பழக்கத்தினை ஏற்படுத்தி கொள்ள வருடத்தின் ஆரம்பம் அல்லது பிறந்த நாட்கள், இல்லையெனில் நமக்கு பிடித்த முக்கியமான நாட்களில் முடிவெடுக்க பழகுகிறோம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதிய சிந்தனைகள் மற்றும் பழக்கங்களை துவக்க நாம் எந்த முக்கிய நாட்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நிதி சார்ந்த விஷயத்திலும் நமது முடிவுகள் பெரும்பாலும் அவசரமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுபடுத்தி கொள்ளலாம். உண்மையில் முதலீடு செய்வதற்கு நாம் எந்த நாட்களையும் எதிர்பார்க்க தேவையில்லை, கடன் வாங்கும் நேரம் மட்டும் தான், நாம் அதனை பரிசீலனை செய்ய வேண்டும்.
‘நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால், அதனை உங்களிடம் இருந்து துவங்குங்கள்’ என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். நாம் ஒன்றும் உலகத்தை மாற்றவோ, புதிய உலகத்தை படைக்கவோ வேண்டாம். மாறாக, நமது அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தாலே, அது நமக்கு ஊக்கமளிக்க கூடியதாக அமையும்.
பின்வரும் பத்து கட்டளைகள் ஒவ்வொருவரின் வாழ்வையும் வளமாக்கும் அற்புதமான சிந்தனைகளாகும். எனது சமூக வலைதள நண்பர் திரு. யாக்னேஸ்வரன் கணேஷ்(Yagneshwaran Ganesh) அவர்கள் இந்த பத்து கட்டளைகளுக்கு சொந்தக்காரர், எளிமையாக வடிவமைத்ததற்கு நன்றி. பத்து கட்டளைகளும் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்க கூடிய விஷயமாக இல்லாமல், அனைவரும் பயிற்சி செய்யும்படி அமைந்துள்ளது. ஆதலால், இதனை யாரும் வெறும் சிந்தனைகளாக மட்டும் கொண்டிருக்காமல், தங்கள் வாழ்வில் புகுத்தி பயன் பெறுங்கள்.
- எதிர்மறைக்கு பதிலளிக்காதே (Do not respond to Negativity)
உங்களுடைய எதிர்மறை சிந்தனைகள், மற்றவர்கள் உங்களிடம் காட்டும் எதிர்மறை செயல்கள் மற்றும் வார்த்தைகளுக்கு எப்போதும் செவி சாய்க்காதீர்கள். நீங்கள் உங்கள் சிந்தனைகள் மற்றும் செயல்களை சுய பரிசோதனை(Introspect) செய்து கொள்ளலாமே தவிர, எதிர்மறை சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.
வெற்றியாளர்களின் மற்றும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர்களின் முதன்மையான பண்பே, இது தான்.
- எதையும் எதிர்பாராமல் கொடுக்க பழகுங்கள் (Give without expecting to get)
நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவெடுத்து விட்டால், உடனே அதனை செயல்படுத்துங்கள். அந்த உதவியில் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கலாம் என எண்ணாதீர்கள். இந்த உலகம் ஏமாற்றுபவர்களுடைய இடம் என நீங்கள் கருதினால், அப்புறம் நீங்கள் யார் ? உங்களுக்கு இந்த இடத்தில் என்ன வேலை ?
உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு அளிக்க தயாராகுங்கள். அதற்காக நீங்களும், உங்களது குடும்பமும் நிதி சார்ந்து கஷ்டப்பட தேவையில்லை. உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு, நீங்கள் மற்றவர்களுக்கு உதவ துணைபுரிந்தாலே அதுவும் ஆரோக்கியமான விஷயமே. நீங்கள் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி தான், பின்னாளில் உங்களுக்கு மாபெரும் வளத்தை கொடுக்க முன்வரும். நம்புங்கள், இது உங்கள் உலகம் – உங்களை யாரும் ஏமாற்றி விட்டு செல்ல முடியாது 🙂
- குறை சொல்லும் செயலை பழக்கமாக்கி கொள்ளாதீர்கள் (Do not Nitpick as a hobby)
எப்போதும் குறை சொல்வதையே சிலர் வழக்கமாக கொண்டிருப்பதை நாம் கண்டிருப்போம். குறை சொல்வதை மட்டுமே நாம் கொண்டிருந்தால், எதனையும் நம்மால் சரிப்படுத்தி விட முடியாது. மாறாக, நமது சிந்தனையில் அது சரி என தெரிந்தால் அதனை மற்றவர்களிடம் விளக்கி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்.
பெரும்பாலான குடும்ப மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்னைகளில் ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்தாலே, சிக்கல்கள் குறையும். நாம் எடுத்த விஷயத்திற்கு எல்லாம் குறை சொல்ல பழகினால், பின்பு அதுவே நமது பழக்கமாகி விடும். நம்மை மற்றவர்கள் வெறுப்பதற்கும் இந்த பழக்க செயலே காரணமாகவும் அமைந்து விடும். ஒரு பிரச்னைக்கு குறை சொல்ல முயல்வதை காட்டிலும், அதற்கான தீர்வு பற்றி யோசியுங்கள்.
- ஆற்றல் மிக்க நண்பர்கள் குழுவை உருவாக்குங்கள் (Create personal learning network of Friends)
‘ உங்களது நண்பர்களை காண்பியுங்கள், நீங்கள் யாரென்று சொல்கிறேன்’ என்ற வாசகம் சுய முன்னேற்ற கல்வியில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். உங்களது நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் எப்போதும் கவனம் செலுத்துதல் வேண்டும். உங்களது தினசரி பழக்க வழக்கத்திற்கு அதுவே காரணியாக இருக்கும் என்பதால், சக்தி வாய்ந்த அல்லது ஆற்றல் மிக்க சிந்தனை கொண்டவர்களை நண்பர்களாக்கி கொள்வது, உங்களை எப்போதும் நேர்மறை சிந்தனையில் வைத்திருக்கும்.
பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாகவே இருந்து வந்துள்ளார்கள், ஏழைகள் ஏன் மேலும் ஏழைகளாகவே வாழ்கின்றனர் என்பதற்கு இதுவே சிறந்த சான்று எனலாம்.
- மற்றவர்களின் வேலையை பாராட்டுங்கள் (Promote others good work)
மற்றவர்கள் செய்யும் வேலையை அல்லது முயற்சியை பாராட்ட முயலுங்கள். அவர்கள் செய்யும் வேலை, உங்களுக்கானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை நம் சமுதாயத்திற்கு பயன்படும் படி அமையலாம். முன்னேற துடிப்பவர்களுக்கான உதவியை நீங்களே செய்யுங்கள். அவர்களது முயற்சியை பாராட்டி ஊக்கமளிக்க துவங்குங்கள், இதுவே ஒரு அமைதியான பண்பாட்டை ஏற்படுத்தும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
யாருடைய செயலுக்காகவும் நீங்கள் பொறாமை கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, தனிப்பட்ட செயல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், உங்களுக்கு இங்கே யாரும் போட்டியாக இருக்க போவதில்லை. 60 வயதுள்ள ஒரு தொழிலதிபருக்கு, 30 வயது கொண்ட ஒரு இளைய தொழில்முனைவோர் எவ்வாறு போட்டியாளராக அமைந்து விட முடியும். இருவரின் தொழில்புரியும் காலங்கள், வாழ்க்கை மற்றும் கற்றல் முறை வெவ்வேறு. அப்படியிருக்க வெறும் எண்களை மட்டுமே கொண்டு, நாம் போட்டா போட்டிக்கு வந்து விட கூடாது.
- எப்போதும் கற்றலை முன்னிறுத்துங்கள் (Do not try to sell, instead Educate)
நம்மில் பெரும்பாலோர் செய்யும் தவறு இது தான் – பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் மட்டுமே கற்றலுக்கான நாட்கள் என்று நாம் எண்ணி கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் வாழ்நாள் முழுவதும் கற்று கொள்ள கடலளவு விஷயங்கள் இங்கே உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம். ‘கல்லூரி காலத்துடன் கற்றலை நிறுத்தியவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான நேரத்தை ஒதுக்குபவர்கள் தான் பின்னாளில் பணக்காரர்களாக இருந்துள்ளனர் ‘ என்று ராபர்ட் கியோசாகி(Robert Kiyosaki – Rich Dad Poor Dad) சொல்வதுண்டு.
ஒருவரிடம் உங்கள் கருத்து அல்லது ஏதேனும் பொருட்களை விற்க வேண்டுமானால், முதலில் அதனை பற்றிய கல்வியை அவர்களுக்கு அளியுங்கள். உங்கள் கருத்து அல்லது பொருட்களை தேர்ந்தெடுப்பது அவர்களுடைய கடமை ஆகும். பொருட்களை விற்பதை காட்டிலும், கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
- உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை (Remember, your tone of Voice matters)
உங்கள் எண்ணம் செயலாக மாறுவதன் அதிசயம் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம். ஆனால் உங்கள் எண்ணம் வார்த்தைகளாக வெளிவரும் போது, நீங்கள் கவனத்துடன் அணுக வேண்டும். உங்கள் வார்த்தை தான் நீங்கள் யார் என்பதை இந்த சமுதாயத்தில் பிரதிபலிக்கும். நீங்கள் எதையும் உடனடியாக பேச வேண்டும் என்ற அவசியமில்லை, நிதானமாக யோசித்து பின்பு உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். வாளை(Sword) விட உங்கள் வார்த்தை(Words) சக்தி வாய்ந்தது, கவனமாக பயன்படுத்துங்கள்.
- நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் (Connect with people honestly)
இன்று நேர்மை எங்கே இருக்கிறது என்று நாம் கேட்கலாம். நாம் நினைப்பது போல லஞ்சம் தவிர்ப்பதும், ஊழல் செய்யாமல் இருப்பது மட்டும் நேர்மை அல்ல. நேர்மை என்பது நம் ஒவ்வொருவரின் மனதில் இருந்து வெளிப்படுவது. நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால் மட்டுமே, உங்களால் வெளி உலகில் நேர்மைத்துவத்தை வெளிப்படுத்த முடியும்.
பெரும்பாலான நேரங்களில் நாம் செய்யும் தவறுக்கு, காரணங்களை தேட முயற்சிக்கிறோம். வெற்றி பெற்றவர்கள் பொறுப்புகளை ஏற்று கொள்வார்கள், அது தான் அவர்களை தலை நிமிர்ந்து நடக்க செய்கிறது. உங்களது தவறு அல்லது தாமதத்திற்கு நீங்கள் வருந்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, உங்களுக்குள் தன்னம்பிக்கை வெளிப்படும். மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பதை போல, நீங்களும் அதனையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.
- புத்திசாலியாக இருப்பதை விட அன்பாக இருக்க முயலுங்கள் ( Choose to be kind over clever)
எப்போதும் நீங்களே முதலிடத்தில் இருப்பதும், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் மட்டுமே கேட்டு கொண்டிருப்பதிலும் என்ன மகிழ்ச்சி உள்ளது. நீங்கள் புத்திசாலியாக இருந்ததால், மற்றவர்கள் அனைவரும் சந்தோசமாக இருந்துள்ளனர் என நீங்கள் எண்ணுகிறீர்களா ?
நீங்கள் உங்கள் தொழிலில் அல்லது பணிபுரியும் இடத்தில் வேண்டுமானால் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தலாம். உங்கள் குடும்பத்தில், உறவுகளில் உங்கள் புத்திசாலித்தனம் எதனை கொடுத்து விடும் என நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய நாட்களில், நாம் குடும்பம் மற்றும் உறவினர்கள் என்ற நிலையிலிருந்து வெளிவந்து விட்டோம். அப்புறம் எதற்கு நாம் புதிய நண்பர்களை தேடுகிறோம், நண்பர்களை உறவினர்களாக மாற்றி கொள்கிறோம். நாம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம் என நமது உள்ளுணர்வு மூலம் இது வெளிப்படுகிறது.
- எளிமையான விஷயங்களை தேர்வு செய்யுங்கள் (Keep things simple)
நமக்கான லட்சியம் பெரிதாக இருக்கலாம், நமக்கான கடமையும் பிரமாண்டமாக இருந்திருக்கலாம். நாம் கையாளும் எந்தவொரு செயலையும் எளிமையாக வடிவமைத்து கொள்ளுங்கள். சிக்கல் நிறைந்ததாக நம் வாழ்க்கையை கொண்டிருக்காமல், எளிமையான சிந்தனைகளை கொண்டிருங்கள். முதலில் நம்மால் முடிந்த மற்றும் நமக்கு தெரிந்த விஷயங்களை செய்ய பழகுங்கள். பின்பு கற்றலின் மூலம் அடுத்தகட்ட செயலை செய்ய ஆரம்பியுங்கள்.
மிகவும் எளிமையான கணக்கு சூத்திரம்(Simple Formula), எளிமையான வாழ்க்கை முறை(Be Frugal) எப்போதும் நமக்கு மறந்து போகாது.
நீங்கள் தொழில் முனைவோராகவோ, நிறுவனத்தில் பணிபுரிபவர் அல்லது உங்களது குடும்பத்தின் ஒரு நபராக இருக்கலாம். மேலே சொன்ன பத்து சிந்தனைகளை கடைபிடிக்க முயற்சியுங்கள், உங்களது வாழ்க்கை உங்கள் வசமாகும். இது ஊக்கமளிக்கும் சிந்தனைகள் அல்ல, பயிற்சி பெற வேண்டிய சிந்தனைகள்..
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை