தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ (இண்டஸ்ட்ரீஸ்) – நான்காம் காலாண்டு முடிவுகள்
Q4 Results of Reliance Industries Limited(RIL) – Financial year 2018-19
ஜியோவின்(JIO) வருகைக்கு பின் இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள முடியாமை, ஐடியா-வோடபோன் இணைப்பு, ஏர்செல் மற்றும் டொகோமோ என்ற நிறுவனங்கள் காணாமல் போனது ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா புரட்சியில் தான். சந்தையில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று தனது 2018-19ம் நிதியாண்டுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,38,659 கோடியாகவும், செலவினங்கள் 1,17,827 கோடி ரூபாயாகவும் இருந்தது. இயக்க லாபம் 20,832 கோடி ரூபாயாகவும் மற்றும் நிகர லாபம் ரூ. 10,362 கோடியாகவும் உள்ளது.
இதர வருமானம் என எடுத்து கொண்டால் நான்காம் காலாண்டில் சுமார் 3,215 கோடி ரூபாய் வந்துள்ளது. இது கடந்த மூன்று வருடங்களில் இருந்த அதிகபட்ச அளவாகும். வரிக்கு முந்தைய வருமானமாக 13,858 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,16,915 கோடி ரூபாயும், இதர வருமானம் 2,203 கோடி ரூபாயாகும். வரிக்கு முந்தைய வருமானம் ரூ. 13,254 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 9,438 கோடி. தற்போதைய காலாண்டு முடிவுகளை இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் 18.60 சதவீத வளர்ச்சியும், நிகர லாபம் 9.80 சதவீதமும் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Capitalization) சுமார் 8,78,519 கோடி ரூபாய். ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் 65 சதவீதம் உயர்ந்து நான்காம் காலாண்டில்(Fourth Quarterly results) 840 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய வருடத்தின் சொல்லப்பட்ட காலாண்டில் ஜியோவின் நிகர லாபம்(Net Profit) 510 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.
சில்லறை வணிகத்தில் இதன் ஆண்டு வருவாய் 88 சதவீதம் அதிகரித்து ரூ. 1,30,566 கோடியாக இருந்தது. உலகளவில் மிகவும் குறுகிய காலத்தில் 30 கோடிக்கும்(300 Million Subscribers) மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது. இதன் வாடிக்கையாளர்களின் சராசரி மாத தரவு பயன்பாடு(Data usage) 10 ஜி.பி. க்கு மேலாக உள்ளது. இருப்பினும் ஒரு பயனருக்கான சராசரி வருவாய்(ARPU) கடந்த காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறிது சரிந்துள்ளது.
கடந்த சில காலங்களாக முக்கிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் சாதகமாக இல்லை. சில்லறை வணிகம்(Retail), தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாயை ஈட்டிய போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பில் இதன் வருவாய் குறைந்துள்ளது.
நிறுவனத்தின் கடன் நிலுவை(Debt) ரூ. 2.80 லட்சம் கோடிக்கும் மேலாக இருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடன் தொகை 2.17 லட்சம் கோடியாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை