மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல்

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல் 

Layman’s Personal Financial Planning – Invest & Breathe

“மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியே அடிப்படை” என மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. 

“A Deep breathing exercise to clear the mind and relieve stress”

மூச்சுப்பயிற்சியினால் மனித உடலின் இரத்த அழுத்தம் குறைவதும், மற்ற உடலுறுப்புக்கள் சீராக இயங்குவது மட்டுமில்லாமல், அமைதி மற்றும் நல்வாழ்வு வாழ்வதற்கான புது தெம்பும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது.    

நவீன உலகத்தில் உடல்நலனும், செல்வமும் இரு நண்பர்களாக தான் வலம் வருகிறது. பொருள் ஆதாரமற்ற மனித வாழ்க்கையை இன்று நாம் இவ்வுலகில் காண இயலாது. அதே போல சுவர் இருந்தால் தான் சித்திரமும். 

அதற்காக நாம் கடினமாக உழைப்பதோ, உடல்நலத்தை பேணுகிறேன், உடல் எடையை இத்தனை நாட்களில் குறைக்கிறேன் என நாள்தோறும் ‘ஜிம்(Gym)’ பேர்வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நடைப்பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் மற்றும் உணவில் கவனம் – அவரவர் வயது சார்ந்து மற்றும் தொழிலுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி மற்றும் அதனை மேம்படுத்துதல் மூலம் நாம் செல்வத்தை எளிமையாக ஈட்டலாம். ஈட்டிய செல்வத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பெருஞ்செல்வமாக மாற்றலாம். 

நமது உடல்நலனை நாம் எப்படி பொறுமையாக கருத்தில் கொண்டு பேணுகிறோமோ, அதனை போல செல்வம் சேர்ப்பதிலும் கற்றல் மற்றும் பொறுமையும் அவசியம். ‘அதிகரித்த உடல் எடையை, சில நாட்களில் மிக விரைவாக குறைக்கிறேன்’ என நாம் எடுக்கும் ரிஸ்க் தன்மையும், ‘குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அள்ளி விட வேண்டும்’ என முதலீட்டில் நாம் விளையாடும் ஊக வணிகமும்(Speculation) – இரண்டும் பக்கவிளைவை தரக்கூடியவையே !

பல வருடங்களாக நமது உடலில் இருக்கும் நோய்த்தன்மையை ஓரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டால், பின்னாளில் நமது உடல் இயக்கங்கள் அடுத்து வரும் நாட்களில் தடுமாறும். இதன் காரணமாக மீண்டுமொரு கவனத்தை நாம் நம் உடல் நலன் மீது செலுத்த நேரிடும். இதற்கான காலமும், பணச்செலவும் அதிகமே. இதனை போல பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு பங்குச்சந்தையில் ஒரே நாளில் பல லட்சங்களையும், கோடிகளையும் ஈட்ட வேண்டுமென்ற ஆசை(பேராசை) எல்லோருக்கும் தான். ஆனால் அது அனைவருக்கும், எல்லா நேரங்களிலும் சாத்தியமா !    

கடந்த 2022-23ம் நிதியாண்டில் செபி|(SEBI) வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, இந்திய பங்குச்சந்தையில் ஈடுபடும் 10 நபர்களில் ஒன்பது பேர் (Futures & Options Traders) தங்களது முதலீட்டு பணத்தை இழக்கின்றனர் என கூறுகிறது. சந்தையில் பணத்தை இழக்கும் நபர்களின் சராசரி இழப்பு ரூ.50,000 வரை உள்ளதாகவும், 28 சதவீதம் பேர் தங்களது முதலீட்டு இழப்பை, வெறும் பரிவர்த்தனை கட்டணங்கள் செலுத்துவதில் சந்திக்கின்றனர் எனவும் இந்த தரவு அறிக்கை கூறுகிறது. 

அப்படியிருக்க நாம் எதனை நோக்கி நாம் உழைத்த பணத்தை கொண்டு சென்றிருக்கிறோம் ? பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பலன் தரும் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கமே இதனை வெளிப்படையாய் சொன்னாலும்(சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதும்) நாம் என்னவோ குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்படுவதே. உண்மையில் பங்குச்சந்தையில் எளிமையாகவும், மிக விரைவாகவும் லாபமீட்ட முடிந்தால், ஏற்கனவே சந்தையில் லட்சம் கோடி ரூபாய்களில் மூலதன மதிப்பை கொண்ட டாட்டா, அம்பானி, பஜாஜ், கோத்ரேஜ், இன்னபிற குழுமங்கள் எங்கே ? அவர்களிடம் இல்லாத பணமா, நிர்வாகமா அல்லது அவர்களுக்கு தெரியாத பங்குச்சந்தை ரகசியமா. சொல்லப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை தங்களது தொழில்களை தான் நம்பியுள்ளன. அவர்களது தொழிற் திறனும், வாடிக்கையாளர்களும் தான் பின்னாளில் முதலீட்டாளர்களால் பங்கு விலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

சாமானியனின் நிதித்திட்டமிடலில் முதல் படி:

தனது குடும்பத்திற்கு தேவையான நிதிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் –  வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு போதுமான டேர்ம் காப்பீடு(Term Insurance), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற் போல மருத்துவ காப்பீடு(Mediclaim), அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்யும் நபராக இருக்கும் நிலையில், அவருக்கு தேவையான விபத்துக் காப்பீடு(Accidental Coverage).

இது போக அவசர கால நிதியை(Emergency Fund) உருவாக்குதல், குடும்ப நபர்களுக்கான நிதித்தேவையை இலக்குகளாக மாற்றுதல்(Creating Financial Goals). மேலே சொன்ன ஐந்து நிலைகளுக்கும் தனிநபர் ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடலாம். இந்த ஐந்தும் தவிர்க்க இயலாத நிலைகளாக மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதித்திட்டமிடலின் இரண்டாவது படியில்,

உங்களது நிதி இலக்குகளுக்கான சரியான சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது(Identifying Suitable Investment schemes). பொதுவாக சேமிப்பு எனும் போது அரசு சார்ந்த அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பி.எப். பிடித்தம், சிறியளவில் நகை சேமிப்பு, சீட்டு(அரசு பதிவு பெற்ற மற்றும் நம்பகமான) ஆகியவை நமக்கு நினைவில் வரும். 

இவை பெரும்பாலும் குறைந்த வட்டி வருவாயை(பணவீக்கத்தை விட குறைவு) கொண்டிருந்தாலும், குறுகிய கால இலக்குகளுக்கு சிறந்தது. இதனை விடுத்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொன்சி(Ponzi Scam) மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அல்லது அரசு நிர்வாகம் செய்யும் சேமிப்பு திட்டங்களை மட்டுமே நாடுவது நல்லது.

நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்த திட்டங்களில் ஏற்ற-இறக்க ரிஸ்க் தன்மை இருப்பதால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தலாம. இதன் காரணமாக நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை சரியான காலத்தில் பெற முடியும். பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்திற்கு என முதலீட்டு செய்து விட்டு, இலக்குகளை அடையும் முன்னர் அல்லது இடைவெளி காலத்தில் முடிந்தளவு பணத்தை வெளியில் எடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு எடுக்கும் நிலையில், நாம் கூட்டு வட்டியின் முழுமையான பலனை(Power of Compounding) அடைய முடியாமல் போகலாம்.

பரஸ்பர நிதி முதலீட்டின் வாயிலாக நாம் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான திட்டங்களில்(Asset Allocation) நமது முதலீட்டை பரவலாக்க முடியும். 

மூன்றாவது மற்றும் இறுதிப்படியாக,

பெருஞ்செல்வத்தை ஈட்டுவது இன்றைய காலத்தில் தேவையான ஒன்றாகி விட்டது. முன்னொரு காலத்தில் மனித உடற்சக்தியை மட்டுமே நம்பியிருந்த குடும்பச் சமூகம், இன்று நிதிச் சொத்துக்களை தான் குடும்பத்திற்கான ஆதாரமாக வைத்துள்ளது. எனவே நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்றும் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை சேர்ப்பதிலும், அவற்றினை கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலையுள்ளது. செல்வம் சேர்ப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதல்ல.

பெருஞ்செல்வம் ஈட்ட நாம் தொழில் திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான தொழில் ஏதுமில்லை அல்லது அவற்றை செய்ய நமது மனம் விரும்பாத போது, மற்றவர்களின் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்(அதற்காக மீண்டும் பொன்சி மோசடியிடம் மாட்டி கொள்ளாதீர்கள் !). முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனம் அரசு அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும், நிர்வாகத்திறன் படைத்ததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கா விட்டாலும், நமது முதலீட்டு பணம் நமக்காக திறம்பட வேலை செய்யும்.  

மற்றவர்களது தொழிலில் ஒரு சாமானியனும் முதலீடு செய்யலாம் என்பதே, இன்றைய பங்குச்சந்தை வாய்ப்பு(Public & Private Equity – Listed & Unlisted). பங்குச்சந்தை முதலீடு பற்றிய அடிப்படை கற்றலை கற்றுக் கொண்ட பின்னர் தான், சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தால் சிறப்பு. இல்லையென்றால்,பதிவு பெற்ற மற்றும் நம்பகத்தனமான நிறுவனங்களின் மூலம் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச்சந்தையிலும் பேராசை காட்டி மோசடி செய்யும் பேர்வழிகள் ஏராளம் ! 

உங்களால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை எனில், முதலிரண்டு படிநிலைகளோடு இருந்து விடுவது நல்லது. 

மூச்சுப்பயிற்சியை மெதுவாக கவனித்தால் தான் மெருகும், நிதி முதலீடும் சாமானியனுக்கு அப்படித்தான் 🙂

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை பாதிக்கும் இரண்டு காரணிகள்

பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை பாதிக்கும் இரண்டு காரணிகள்

Two factors that affecting the Stock Prices in the Equity Market

பொதுவாக பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவன பங்கின் விலை பல்வேறு காரணிகளால் ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும். இதன் காரணமாகவே பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என சொல்லப்படுகிறது. பங்கு விலையின் மாற்றத்திற்கு முதற்காரணமாக அமைவது தேவைக்கும்-உற்பத்திக்குமான(Demand-Supply) இடைவெளி தான். 

எனினும் இந்த தேவைக்கும், உற்பத்திக்குமான வாய்ப்பை ஏற்படுத்துவது சந்தையில் ஈடுபடும் வணிகர்(வர்த்தகர்) மற்றும் முதலீட்டாளரின் மனநிலையை(Trading Psychology & Behavioural Finance) பொறுத்தது. அதாவது இன்று இந்த பங்கினை இந்த விலையில் வாங்கலாமா வேண்டாமா; இன்று ரிஸ்க் எடுத்து லாபம் பார்க்கலாமா, இல்லையெனில் நீண்டகாலத்திற்கு பங்குகளை தக்கவைத்து கொள்ளலாமா, கிடைத்த லாபத்தை இப்போதே எடுத்து விடுவது, பெருத்த நட்டத்துடன் இத்தோடு சந்தையிலிருந்து வெளியேறி விடுவோமா என ஒவ்வொருக்கும் ஒரு மனப்போக்கு உண்டு.

இங்கே நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர் பெரு முதலீட்டாளர்கள் போன்றோர் நாம் மேலே சொன்ன மனப்போக்கை கொண்டிருந்தாலும் அவர்களின் முதலீட்டு முடிவெடுத்தலுக்கான காரணிகள், சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து சற்று மாறுபடும். இந்த காரணிகள் இரு வகைப்படும். இவை உலகளாவிய மற்றும் பொருளாதார வல்லுநர்களால் நிருபிக்கப்பட்ட சந்தை காரணிகளாகவும் உள்ளது.

நுண்பொருளியலும், பருப்பொருளியலும்:

பொருளாதாரத்தின் இரு பெரும்பிரிவுகளாக நுண்பொருளியலும்(Micro Economics), பருப்பொருளியலும்(Macro Economics) உள்ளது. நுண்பொருளியலை தான் நாம் பெரும்பாலும் சமூக அறிவியலாக காண்கிறோம். பருப்பொருளியல் என்பது ஒரு நாடு சார்ந்தோ அல்லது மண்டலம் சார்ந்த பொருளாதார செயல்பாடுகளை கொண்டிருக்கும். இதற்கும் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைக்கும் என்ன சம்மந்தம் என கேட்கிறீர்களா ?

இந்த இரண்டு காரணிகள் தான் பங்குச்சந்தையின் குறியீடுக்கும்(Index), குறிப்பிட்ட நிறுவன பங்கின் விலை மாறுபாட்டுக்கும் காரணம். நாம் என்னவோ பங்குகளை ஒரு ஊகத்தில்(Speculation) வாங்கி விற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கான பணம் நமக்கு எங்கிருந்து வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்க வேண்டிய பங்குகளின் பண முதலீட்டை எங்கிருந்து பெறுகின்றனர், ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்ட தனது பங்குகளின் மூலம் எவ்வாறு தனது மதிப்பீட்டை பிற்காலத்தில் உயர்த்துகிறது(பங்கு விலையும் ஏறும்) – இது போன்ற கேள்விகளுக்கான விடை தான் நாம் மேலே சொன்ன இரண்டு காரணிகளும்.

மைக்ரோ எகானமி(Micro Economy) என சொல்லப்படும் நுண்பொருளியல் பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் மீது கவனம் செலுத்துகிறது. நிறுவனத்தின் வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது, நிதிநிலை(P&L, Balance Sheet and Cash Flow) எப்படி மற்றும் நிர்வாகத்திறன்(Corporate Governance) ஆகியவற்றை பற்றி அலசுகிறது. தனிநபர் வருவாய், உற்பத்தி மற்றும் தேவை, நுகர்வுத்தன்மை, வரி செலுத்துதல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

மேக்ரோ எகானமி(பருப்பொருளியல்) ஒரு நாட்டின் பணவீக்கம், வட்டி விகித மாற்றம், வேலைவாய்ப்பின்மை விகிதம், உட்கட்டமைப்பு, அரசு சார்ந்த பொருளாதார கொள்கைகள் மற்றும் நிறுவனத்தின் அல்லது ஒரு துறையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இன்னபிற காரணிகளை கொண்டிருக்கும். 

இவற்றை நாம் பொதுவாக பங்குச்சந்தையின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis – கடந்த கால பங்கு விலையை அலசுவதற்கு மட்டும்) ஆகிய இரு படிப்பினைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பங்குச்சந்தையில் பங்குகளின் விலை இறங்குவதற்கு அல்லது ஏறுவதற்கு பெரும்பாலும் இந்த இரண்டு பொருளியல் தான் காரணமாக உள்ளது. மைக்ரோ எகானமியை பொறுத்தவரை, மேக்ரோ எகானமியில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை(Uncertainty) இதனை வெகுவாக பாதித்து விடும். இதன் காரணமாக தான் உலக பொருளாதார மந்தம் அல்லது வீழ்ச்சியில் ஏற்றம் பெற்று வரும் சந்தையும் விழும். ஊரே அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும் சந்தை ஏறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Panama Petrochem Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1982ம் ஆண்டு தனியார் நிறுவனமாக துவக்கப்பட்ட பனாமா பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட், பல்வேறு வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பில் திரவ பாரஃபின் எண்ணெய்கள், பெட்ரோலியம் ஜெல்லி, மை எண்ணெய்கள், ஆன்டிஸ்டேடிக் கோனிங் எண்ணெய், ரப்பர் செயல்முறை எண்ணெய்கள், மின்மாற்றி எண்ணெய்கள், கேபிள் நிரப்புதல் கலவைகள் மற்றும் பாரஃபின் மெழுகு ஆகியவை அடங்கும்.

பெட்ரோலிய சிறப்பு தயாரிப்பு(Petroleum Specialty Products) பிரிவில் 80க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் தொழில் புரிந்து வருகிறது. இவை மைகள் மற்றும் பிசின்கள், ஜவுளி, ரப்பர், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், வாகனம், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு இன்றியமையாதவை. 

1993ம் ஆண்டில் நிறுவனம் பொது நிறுவனமாக(Public Limited) பதிவு செய்யப்பட்டு 1994ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது உள்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகள் உள்ளது. 

வருவாயை பொறுத்தவரை நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அழகுசாதனம் மற்றும் மருந்துத்துறை பிரிவுகளில் 24 சதவீதமும், மைகள் / பூச்சுகள் பிரிவில் 21 சதவீதமும், ரப்பர் செயல்முறை பிரிவில் 19 சதவீதமும், ஜவுளித்துறையில் 19 சதவீத வருவாய் பங்களிப்பையும் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் 51 சதவீதம் ஏற்றுமதியில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களுக்கு நிறுவனம் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாபர் இந்தியா, ஹூபர் குழுமம், ஏடிசி(ATC) டயர் ஆகியவை உள்ளன. 

நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய தயாரிப்பு பொருட்களாக: மை மற்றும் பூச்சு தொழிலுக்கான அரோமா ஃப்ரீ டிஸ்டில்லேட்ஸ்(Aroma Free Distillates), பெயிண்ட் தொழிலுக்கான நறுமண இலவச கரைப்பான்கள், துளையிடுதல் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கான மக்கும் எண்ணெய்கள் மற்றும் ரப்பர் தொழில்துறைக்கான நறுமணமற்ற புதிய எண்ணெய்கள் ஆகியவற்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. 

வருங்காலத்தில் பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களது இலக்கு என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் முயற்சியாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் 30,000 டன் திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியுள்ளது. இவற்றில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

பனாமா பெட்ரோகெம் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 1,953 கோடி ரூபாய். நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.157 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 21 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்திற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் என பெரிதாக எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,249 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,940 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) விகிதம் கடந்த பல வருடங்களாக சற்று ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம்(PBT) ரூ. 295 கோடியாகவும், நிகர லாபம் 233 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.940 கோடி(மார்ச் 2023). கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி சராசரியாக 13 சதவீதமும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமுமாக இருந்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமும், இதுவே பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 

நிறுவனத்தை பொறுத்தவரை பாதகமான நிலையாக மூலப்பொருட்களின் விலை மாற்றம்(கச்சா எண்ணெய்), சுற்றுச்சூழல் அபாயங்கள், டாலர் விலை மாற்றம், துறையில் ஈடுபடும் போட்டி மற்றும் பெரு நிறுவனங்கள், அரசு கொள்கைகள் ஆகியவை. சாதகமான நிலை என காணுகையில் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு பொருட்கள், வலுவான வாடிக்கையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு(R&D) ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுதல், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் வாய்ப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான உலகளாவிய தேவை.

2022-23ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனம் ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 222 கோடி ரூபாயை வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) தொகையும் மேம்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு

தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு 

 

Difference between Audited and Unaudited Company Financial Reports – Fundamental Analysis

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திறன் ஆகிய செயல்பாடுகளை அறிய அந்நிறுவனத்தின் மூன்று முக்கியமான நிதி அறிக்கைகளை அலச வேண்டும். இந்த மூன்று அறிக்கைகளும் ஒரு முதலீட்டாளர் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான அடிப்படை அறிக்கைகளாகும்.

 

  • லாப-நட்ட அறிக்கை (Profit & Loss Statement or Net Income Statement)

  • இருப்புநிலை அறிக்கை (Balance Sheet)

  • பணப்பாய்வு அறிக்கை (Cash Flow Statement)

 

இந்த அறிக்கைகளின் மூலம் ஒரு நிறுவனத்தின் விற்பனை வருவாய், செலவுகள், கடன் தன்மை, லாபம் மற்றும் லாப வளர்ச்சி, வருமான வரி, ரொக்க கையிருப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், குறுகிய மற்றும் நீண்ட கால கடன், தொழிலுக்கான மூலதனம் மற்றும் பங்குதாரர்கள் பங்களிப்பு என பல்வேறு தகவல்களை பெறலாம்.

 

ஒரு நிறுவனம் உண்மையில் வளர்ச்சியை நோக்கி தான் செல்கிறதா, நிறுவனம் சார்பாக ஏற்கனவே சொல்லப்பட்ட இலக்கு சரியானதா, சந்தையில் நிறுவனத்தின் நிதித்திறன் அதன் பங்கு விலையில் தெரிகிறதா, நிறுவனம் திவால் நிலைக்கு செல்லுமா, தொழிலுக்கான எதிர்கால வாய்ப்பு என ஆராய்வதற்கு இந்த அறிக்கைகள் உதவும்.  

 

உண்மையில் ஒரு நிறுவனம் நாளை திவால் நிலைக்கு செல்லும் என அந்நிறுவனத்தின் குடும்பத்தினருக்கு கூட தெரியுமா என நாம் யூகித்தும் பார்க்க முடியாது. ஆனால் இந்த மூன்று முக்கிய அறிக்கைகளை கொண்டு ஒரு நிறுவனம் தொழிலில் சிறந்து விளங்குமா, எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்குமா, நிறுவனமே கைமாறினாலும் தொழில் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்புள்ளதா என்பதனை முதலீட்டாளரான நாம் அறியலாம். இதற்கு உதாரணமாக சத்யம் கம்ப்யூட்டர், யெஸ் வங்கி, ஜெய்ப்ரகாஷ் அசோஸியேட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிகழ்வுகளை சொல்லலாம்.

 

மேற்சொன்ன நிதி அறிக்கைகளை ஒரு நிறுவனம் காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ பொதுவெளியில் முதலீட்டாளர்கள் அணுகும் படி வெளியிடுவது சட்டமாகும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்திலும், இன்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் நிறுவனம் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த நிதி அறிக்கைகள் மட்டுமே எளிதாக கிடைக்கப்பெறுகிறது. 

 

பொதுவெளியில், நமக்கு கிடைத்த தகவல்களை கொண்டே நாம் ஆராய முடியும். பங்குச்சந்தையில் மற்றவையெல்லாம் வெறும் யூகமே !  

 

நிறுவனம் பொதுவெளியில் வெளியிடும் இந்த நிதி அறிக்கைகள் பெரும்பாலும் தணிக்கை செய்யப்பட்ட(Audited Financial Statements) அல்லது தணிக்கை செய்யப்படாத(Unaudited Financial Statements) அறிக்கைகளாக இருக்கும். பொதுவாக தணிக்கை அல்லது தணிக்கை செய்யப்படாத அறிக்கைகள் வணிகப்பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் கணக்கியல் செயல்முறையாகும்.

 

ஒரு தொழில் அல்லது வணிகத்தின் நிதி பரிவர்த்தனைகளை சரியாக ஒழுங்குபடுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில், அதனை ஒரு அறிக்கையாக நிறுவனம் தயார் செய்யும். அந்த அறிக்கையின் துல்லியத்தன்மை (உண்மைத்தன்மை) எந்தளவில் உள்ளது என்பதனை நாம் மேற்சொன்ன கணக்கியல் பயன்பாடு மூலம் அறியலாம்.

 

தணிக்கை செய்யப்படாத(unaudited) அறிக்கைகள் என்பது ஒரு நிறுவனத்தால் நிதி அறிக்கையாக தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுவே தணிக்கை செய்யப்பட்ட(Audited) அறிக்கைகள் என்பது ஒரு நிறுவனத்தால் நிதி அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிய, அந்நிறுவனம் சாராத வேறொருவர் ஆராய்ந்து மதிப்பிடுவதுண்டு. இந்த மதிப்பீட்டிற்கு பின்பு வெளியிடப்படும் அறிக்கை தான் பொதுவெளியில் வரும். இதனை தான் நாம் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையாக காண்கிறோம்.

 

இந்த இரு அறிக்கைகளிலும் கிடைக்கப்பெறும் தகவல்கள் பெரும்பாலும் தொடர்புடையதாக மற்றும் சரியாக இருந்தாலும், தணிக்கை செய்யப்படாத அறிக்கையை காட்டிலும் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கும், அதன் பங்குதாரர்களுக்கும்  நம்பிக்கையை ஏற்படுத்தலாம். 

 

பொதுவாக பட்டியிலப்பட்ட ஒரு நிறுவனத்தின் வருடாந்திர நிதி அறிக்கைகள் மட்டுமே தணிக்கை(Audited) செய்யப்படுகின்றன. மற்ற கால நிதி அறிக்கைகள் பெரும்பாலும் தணிக்கை செய்யப்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை அதன் ஆண்டு அறிக்கையில்(Annual Report) மட்டுமே உள்ளடக்கியுள்ளது. எனவே முழு ஆண்டு நிதி அறிக்கைகள் ஒரு முதலீட்டாளருக்கு பெரிதும் உதவும்.

 

தணிக்கை செய்யப்படாத(unaudited) அறிக்கைகள் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கு ஒரு முறை பொதுவெளியில் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. ஒரு முதலீட்டாளருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிக்காகவும்(Regulations) இது போன்ற கால அறிக்கைகள் வெளியிடப்படுகிறது. சுருக்கமாக நிறுவனம் நடப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதனை தணிக்கை செய்யப்படாத அறிக்கையின் மூலம் நிறுவனம் நமக்கு சொல்கிறது.

 

தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை காட்டிலும், தணிக்கை செய்யப்படாத அறிக்கைகளை(unaudited) தயார் செய்வதற்கு நிறுவனத்திற்கு பெரிதாக செலவினம் இல்லை. நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களை கொண்டு, அதன் விருப்பத்தின் பெயரில் இதனை தயார் செய்து கொள்ளலாம். அதே வேளையில் தணிக்கை எனும் போது நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வர வேண்டும், அதற்கான ஆதாரமும் இருக்க வேண்டும் மற்றும் தணிக்கையாளருக்கான கட்டணம் சற்று அதிகமே !

 

ஒரு நிறுவனத்திற்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை தயார் செய்ய மற்றும் வெளியிட அதிகக் கட்டணம் மற்றும் நேரம் அதிகம் எடுத்து கொண்டாலும், நிறுவனம் சாராத வேறொருவர் மூலம் மதிப்பிடப்படும் போது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு, நிறுவனத்தின் மீது உண்மைத்தன்மையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of September 2023 – 5.02 Percent

நாட்டின் சில்லறை விலை(நுகர்வோர்) பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 6.83 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாத முடிவில் 5.02 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், கடந்த மூன்று மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் சற்று குறைந்து 6.56 சதவீதமாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 4.61 சதவீதமாக குறைந்துள்ளது.

வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், புகையிலை பொருட்களின் விலையும் செப்டம்பர் மாதத்தில் குறைந்து காணப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலிருந்து காணுகையில், இரு மாதங்களுக்கு இடையிலான நுகர்வோர் விலை வீழ்ச்சி தற்போதைய ஆகஸ்ட் – செப்டம்பர் 2023 காலத்தில் தான் காணப்படுகிறது.

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer Price Index – CPI) கணக்கீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் சுமார் 46 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், சந்தை மதிப்பீட்டை(5.5 சதவீதம்) காட்டிலும் குறைவாக காணப்படுகிறது. 

இந்தியாவில் பணவீக்க விலைக் குறியீடு இரு வகைகளில் கணக்கிடப்படுகிறது – சில்லரை(நுகர்வோர்) விலை மற்றும் மொத்த விலை பணவீக்க விகிதம். நாட்டின் நுகர்வோர் விலை அதிக ஏற்ற – இறக்கமாக இருப்பதற்கு காரணமாக பெரும்பாலும் நாம் எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருப்பது தான். 

இது போக பருவமழையின் நிச்சயமற்ற தாக்கம், மேம்படுத்தப்படாத சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், அதிக நிதிப் பற்றாக்குறையும் பணவீக்க விகித மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

What means a Debt Free Listed Company in the Stock Market ?

கடனில்லா நிறுவனங்கள் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதன் இருப்புநிலை அறிக்கையில்(Balance Sheet) கடன் எதுவும் இருக்க கூடாது. பொதுவாக ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அல்லது தொடர்ந்து தொழில் புரிய கடன் வாங்கலாம். இந்த கடன் பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ(Debt Securities) இருக்கலாம். 

பங்குகளாக கடன் பெறப்பட்டிருந்தால், பின்னாளில் நிறுவனத்தின் லாபத்தில் பங்குதாரர்களுக்கும் பங்குண்டு. அதே வேளையில் கடன் பத்திரங்களின் மூலம்  பெறப்படும் கடன் தொகைக்கு, பின்னாளில் வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் கடன் பொதுவாக குறுகிய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ இருக்கலாம். நிகர கடன்(Net Debt) எனும் போது, ஒரு நிறுவனத்திற்கு கடன் இருக்கலாம். அவை குறுகிய கால அல்லது நீண்ட கால கடனாக இருக்கக்கூடும். அந்த கடனை நிறுவனம் இன்றே செலுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், நிறுவனத்திடம் அதனை செலுத்துவதற்கான ரொக்க தொகை(Cash & Cash Equivalents) உள்ளதா என்பதை ஆராய்வது, நிகர கடனாகும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் முடிவில் அதன் இருப்புநிலை அறிக்கையின் படி, ரூ.50 கோடி கடன் உள்ளதாக எடுத்து கொள்வோம். இப்போது, சொல்லப்பட்ட ஆண்டின் முடிவில் அந்த நிறுவனத்திடம் ரூ.25 கோடி ரொக்கமாக இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் தனது கடனை குறைக்கும் பட்சத்தில், மீதமிருக்கும் கடன் ரூ.25 கோடி மட்டுமே.

Net Debt = Borrowings(Short Term Debt + Long Term Debt) – Cash & Cash Equivalents

இதுவே நிறுவனத்திடம் ரொக்க தொகை ரூ.50 கோடியாக இருந்து கடனை அடைக்கும் நிலையில், நிறுவனத்திடம் தற்போது கடன் எதுவும் இருக்காது. இதனை தான் நாம், ‘நிகர கடனில்லா தன்மை(Net Debt Free)’ என்கிறோம். இங்கே நிறுவனம் அந்த கடனை உடனடியாக உண்மையில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. கடனை திரும்ப செலுத்த கூடிய நிலை ஏற்பட்டால் என்ற தன்மையை மட்டுமே இந்த விதிமுறை கூறுகிறது.

நிறுவனத்தின் கடன் தன்மையை புரிந்து கொள்ள மற்றொரு முறையை நாம் காணலாம். அதாவது நிறுவனத்தின் மொத்த கடனை, அதன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை கொண்டு ஒப்பிடுவது. இதனை கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் என்கிறோம்.

Debt to Equity Ratio = Total Liabilities / Shareholder’s Equity

(Simple Way to Calculate from the Balance Sheet: Borrowings / (Equity Share Capital + Reserves))

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை ஒன்று(1.0) என வந்தால், நிறுவனத்தின் கடனும், பங்கு மதிப்பும் சரிசமமாக உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் பின்னாளில் தனது கடனை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படலாம். இது நிறுவனத்திற்கும், பங்குதாரர்களுக்கு நல்லதல்ல. இதுவே 0.5 என விகிதம் இருந்தால், நிறுவனத்தின் கடன் தன்மை, பங்குகளின் மதிப்பில் பாதியாக உள்ளது என பொருளுண்டு. 

சுருக்கமாக சொன்னால், ஒருவருடைய வருவாய் ரூ.1 என கொள்ளும் போது, அதற்குள்ளாகவே அதன் செலவுகளும் இருக்க வேண்டும். மீறினால், கடன் தன்மை அதிகரித்து நிர்வாகம் சீர்கெடும், தொழிலும் பாதிப்படையலாம். இதுவே ஒரு ரூபாய் வருவாய் இருக்கையில், செலவு 50 பைசா அல்லது அதற்கு கீழாக இருக்கும் போது, அவர் பின்னாளில் கடன் வாங்கினாலும் அதனை திரும்ப செலுத்துவதற்கான திறன் உள்ளது. வருவாயை காட்டிலும் செலவு குறைவாக இருக்கும் நிலையில், தொழிலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏதுமிருக்காது.

மேலே சொல்லப்பட்ட இரு நிலைகளையும் அறிந்து வைத்திருப்பது, பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அவசியம். ஒரு நிறுவனத்திற்கு நிகர கடன் நன்றாக இருந்தாலும் சரி, கடன்-பங்கு தன்மை 0.5 விகிதத்துக்கு குறைவாக இருந்தாலும் சரி – அவை கடனில்லா நிறுவனங்களாக கருதப்படும்.

ஒரு நிறுவனம் கடனில்லா தன்மையாக இருப்பதில் சாதகமும், பாதகமும் உள்ளது. கடனில்லாமல் இருக்கும் போது, நிறுவனத்தின் லாபத்திலிருந்து கடனுக்கான வட்டி தொகைக்கு ஒதுக்க தேவையில்லை. தொழிலை விரிவாக்கம் செய்ய போதுமான தொகை கையிருப்பில் இருக்கும். லாபத்தில் பங்குதாரர்களுக்கு பங்களிப்பை(Dividend, Buyback) அளிக்கலாம். 

பொதுவாக பொருளாதார மந்தநிலை மற்றும் துறை சார்ந்த நிதிச்சிக்கல் ஏற்படும் போது, கடனில்லா நிறுவனங்கள் தப்பி பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திவால் நிலையை தவிர்ப்பது கடனில்லா நிறுவனங்களுக்கு எளிது. 

பாதகமான நிலையென்றால், ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் தனது முதலீட்டை அதிகம் ஈர்க்கையில், அது அந்த நிறுவனத்திற்கு நீண்ட காலத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், பொதுவாக கடன் பத்திரங்களின் மூலம் பெறப்படும் கடனுக்கு, பங்குகளை காட்டிலும் செலவு விகிதம் மிக குறைவே. பங்குகள் எனில், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். கடன் பத்திரங்கள்(Debt Funds) எனில், நிலையான வட்டியுடன் அசலை செலுத்தினால் போதுமானது. இதன் காரணமாக தான் பெரும்பாலான நிறுவனங்கள், வங்கிக்கடனை குறைந்த வட்டி விகிதத்தில் வாங்கி கொள்கிறது.  

இந்திய பங்குச்சந்தையில் கடனில்லா நிறுவனங்கள்:

  • கடன்-பங்கு(Debt to Equity Ratio) விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,166
  •  கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,550
  • பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 366
  •  பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 50 சதவீதத்திற்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 257
  • பங்கு மூலதன மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், ரொக்க கையிருப்பு(Cash Equivalents) நிறுவனத்தின் கடனை காட்டிலும் அதிகமாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேலாக மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 147.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

International Coffee Day – October 1, 2023 – Industry Insights

காபி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் நாளில் சர்வதேச காபி தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. தேசிய காபி தினம் என ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 1963ம் ஆண்டில் லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச காபி அமைப்பு(International Coffee Organization) ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பில் இந்தியா உள்பட 42 நாடுகள் காபி உற்பத்தி உறுப்பினர்களாகவும், 7 நாடுகள் காபி இறக்குமதி செய்யும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இறக்குமதி செய்யும் உறுப்பினர் நாடுகளாக ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராச்சியம் மற்றும் துனிசியா ஆகியவை உள்ளன. 

சர்வதேச காபி தினத்தில் சில காபி உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள், அன்றைய நாளில் காபியை இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ‘காபி’, ஒரு பிரபலமான பானமாகவும், பொருட்சந்தையில் முக்கிய பொருளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் காபியை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள். 

உலகில் நாள்தோறும் சுமார் 225 கோடி கப் அளவிலான காபி, 100 கோடி நபர்களால் உட்கொள்ளப்படுகிறது. உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான காபி உற்பத்தி பெரும்பாலும் வளரும் நாடுகளில் தான் உற்பத்தியாகிறது. உலகம் முழுவதும் காபியை உற்பத்தி செய்யும் சிறு வணிகர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2.50 கோடி. தென் அமெரிக்காவில் தான் காபியை உட்கொள்ளும் அல்லது நுகரும் தன்மை அதிகமாக உள்ளது.

சர்வதேச காபி சந்தையின் மதிப்பு சுமார் 127 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய காபி சந்தையின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக காபி விற்பனையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 முதல் 5 சதவீதமாக(CAGR 2023-2028) மதிப்பிடப்படுகிறது. உலகின் காபி விற்பனை மூலமான பெரும்பாலான வருவாய் அமெரிக்காவிலிருந்து தான் கிடைக்கப்பெறுகிறது. உலக காபி சந்தையில் ஒரு தனிநபரின் சராசரி நுகரும் அளவு நாளொன்றுக்கு 700 முதல் 800 கிராம்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

காபி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில். வியட்நாம், கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏழாவது மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகளாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக காபி விற்பனை சந்தையின் நாயகனாக மற்றும் பிராண்டாக, ‘ஸ்டார் பக்ஸ்(Starbucks)’ உள்ளது. இந்நிறுவனம் காபி விற்பனை மூலம் சுமார் 32.25 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த காபி விற்பனை வருவாயில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம். ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல Panera Bread, McCafe, Lavazza, Tim Hortons, Dunkin’s Brands ஆகிய நிறுவனங்கள்(பிராண்டுகள்) உள்ளன.      

2022-2023ம் ஆண்டின் முடிவில் உலக காபி தொழிற்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 495 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் காபி உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை கர்நாடக மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. இதற்கடுத்தாற் போல கேரளா 23 சதவீதத்தையும், தமிழ்நாடு 6 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆண்டுக்கு சுமார் 2.33 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான காபியை உற்பத்தி செய்கிறது. 

இந்திய உள்ளூர் சந்தையில் காபி நுகரும் தன்மை 73 சதவீதம் நகரங்களிலிருந்து தான் வருகிறது. இந்திய காபியை அதிகம் நுகரும்(இறக்குமதி) நாடுகளாக இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, லிபியா, போலந்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவின் காபி ஏற்றுமதியில் இத்தாலியின் பங்களிப்பு மட்டும் சுமார் 45 சதவீதம். அடுத்த ஐந்து வருடங்களில்(2023-2028) இந்திய காபி சந்தையின் விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

இந்திய பங்குச்சந்தையில் தோட்டத்துறை பிரிவில்(Plantation) சுமார் 44 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் உட்பிரிவான தேநீர் மற்றும் காபி(Tea & Coffee) துறையில் 26 நிறுவனங்கள் உள்ளன. இச்சந்தையின் முதன்மை இடத்தை, ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ்’ தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.81,400 கோடி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை நிறுவனமாகவும் ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல்

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல் 

Captain Pipes Limited – Fundamental Analysis – Stocks

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேப்டன் குழுமத்தின் துணை நிறுவனம் தான் கேப்டன் பைப்ஸ் லிமிடெட். பிளாஸ்டிக் செய்யப்படாத பி.வி.சி(UPVC) குழாய்கள் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது கேப்டன் பைப்ஸ் நிறுவனம். 

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் UPVC குழாய்கள் பொதுவாக வெப்ப செயல்திறன் மற்றும் நீடித்த ஆயுள் காலத்தை கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் UPVC தொழில்நுட்பம், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. UPVC சாளரங்கள் பெரும்பாலும் பல்நோக்கு செயல்பாடுகளை கொண்டவை. 

கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட கேப்டன் பைப்ஸ் நிறுவனம் UPVC குழாய்கள் பிரிவில் உறை குழாய்கள், பிளம்பிங் குழாய்கள், உறிஞ்சும் குழாய்கள், தோட்ட குழாய்கள், HDPE குழாய்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்கள், SWR குழாய்கள், கரைப்பான் சிமெண்ட் மற்றும் பி.வி.சி. அழுத்த குழாய்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த குழாய்கள் பெரும்பாலும் நீர் வழங்கல் பகுதிகள்(Water Supply Lines), வடிகால் அமைப்பு, கழிவு நீர் பாதை, நீர்ப்பாசன அமைப்புகள், மின் வழித்தடம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சுமார் 62,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை(German extrusion lines and Japanese injection molding machine) கொண்டு குழாய்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தனது குழாய் விற்பனை கிளையை நிறுவியுள்ள கேப்டன் பைப்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பெரு நில பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

அகமதாபாத் அருகே புதிதாக ஒரு ஆலையை(Greenfield Plant) அமைப்பதற்கான திட்டத்திற்கு, சமீபத்தில் நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அமையவுள்ள ஆலை 20,000 மெட்ரிக் டன் திறன் கொண்டதாகவும், இதற்கான மொத்த முதலீடு 25 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையிலிருக்கும் உற்பத்தி திறனை இரட்டிப்பாக முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையின் SME பிரிவில் கேப்டன் பைப்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் தனது பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பின்னர் நடப்பு 2023ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் பிரதான பலகைக்கு(Migration) மாற்றப்பட்டுள்ளது. ஒன்பது வருடத்திற்கு முன்பு, SME பிரிவில் பங்கு வெளியிடுகையில் இதன் சந்தை மதிப்பு சுமார் நான்கரை கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை 0.13 மடங்கிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1.44 என்ற அளவிலும் உள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் நிறுவனம் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. அதே காலத்தில் நிறுவனத்தின் முக மதிப்பும்(Face value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 85 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.81 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருடங்களில் சராசரியாக ஐந்து சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1.81 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 46 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதே வேளையில் இதன் பங்கு விலை கடந்த மூன்று வருட காலத்தில் 200 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 6.10 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் தலைவராக திரு. ரமேஷ் கிச்சாடியா மற்றும் நிர்வாக இயக்குனராக திரு. கோபால் கிச்சாடியா ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். 

கேப்டன் குழுமத்தின் மற்ற துணை நிறுவனங்களாக கேப்டன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், கேப்டன் பாலிபிளாஸ்ட் லிமிடெட், கேப்டன் டெக்னோகாஸ்ட் மற்றும் கேப்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.83 சதவீதம்

நாட்டின் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.83 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of August 2023 – 6.83 Percent

நாட்டின் நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் காணப்படும் ஒழுங்கற்ற மற்றும் தாமதமான பருவ மழை காரணமாக வரக்கூடிய மாதங்களில் உணவுப்பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதமாக இருக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்த நிலையில், இது 6.83 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 11.51 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 9.94 சதவீதமாக குறைந்துள்ளது.

இருப்பினும் கடந்த ஜனவரி 2020 காலத்தை ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் அதிகரித்து தான் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் காய்கறிகளின் பணவீக்க விகிதம் 26.14 சதவீதமாகவும், பால் பொருட்களின் விலை 7.73 சதவீதமாகவும் மற்றும் தானியங்களின் விலை 11.85 சதவீதமாகவும் உள்ளது.

பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் பெரியளவில் மாற்றம் பெறவில்லை. அதே வேளையில் மசாலா பொருட்களின் விலை 23.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டுமனை 4.38 சதவீதமாகவும், ஒளி மற்றும் எரிபொருட்களின் பணவீக்க விகிதம் 4.31 சதவீதமாகவும் அதிகரித்து காணப்படுகிறது.

எல் நினோ(El Nino) காரணமாக பருவமழை இயல்பு நிலையை காட்டிலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, உணவுப்பொருட்களின் விலை வரக்கூடிய காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக உணவுப்பொருட்களின் விலை உயரக்கூடும் என கருதி அரசும் சர்க்கரை மற்றும் அரிசி உள்ளிட்ட தானியங்களின் ஏற்றுமதியை தடை செய்து வருவது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார) வளர்ச்சி – 7.8 சதவீதம்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார) வளர்ச்சி – 7.8 சதவீதம்

India’s Gross Domestic Product(GDP) growth in the April-June Quarter – 7.8%

2022ம் ஆண்டின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.385 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட வருட கணக்கின் படி, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 1.51 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பங்களிப்பு 11.20 சதவீதமாகவும் (25.46 டிரில்லியன் டாலர்கள்), சீனாவின் பங்களிப்பு 7.97 சதவீதமாகவும் (17.96 டிரில்லியன் டாலர்கள்) இருக்கிறது. 

ஜூலை 2023 மாத முடிவில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 20.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகளாக அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி மற்றும் ரசியா ஆகிய நாடுகள் உள்ளன. 2022ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 80.23 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதியையும், சீனாவிலிருந்து சுமார் 102.25 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதியையும் மேற்கொண்டிருக்கிறோம். 

உலக வர்த்தகத்தில் நாம் பெரும்பாலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யக்கூடிய பிரிவுகளாக கனிம எரிபொருள்கள், எண்ணெய்கள், முத்துக்கள் மற்றும் விலையுர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், இயந்திரங்கள், அணு உலைகள் மற்றும் கொதிகலன்கள், மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் ஆகியவை உள்ளன.

கடந்த ஜூலை மாத முடிவில் நாட்டின் ஏற்றுமதி 32.25 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 52.92 பில்லியன் டாலர்களாவும் இருந்துள்ளது. தங்கத்தின் கையிருப்பு(Gold Reserves) 797.44 டன்களாக உள்ளது. 2022-23ம் நிதியாண்டின் முடிவில் வெளிநாட்டு கடன் 624.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. சந்தை எதிர்பார்த்த வளர்ச்சி மதிப்பீட்டை காட்டிலும், தற்போது சொல்லப்பட்ட வளர்ச்சி சற்று கூடுதலாகும். இதற்கு முந்தைய காலண்டான ஜனவரி – மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகவும், கடந்தாண்டின்(2022-23) ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இது 13.1 சதவீதமாகவும் இருந்துள்ளது.

சேவைத்துறையில் ஏற்பட்ட வலுவான செயல்திறன், நுகர்வோர் தேவை அதிகரிப்பு, அரசு மற்றும் தனியார் ஆகியவற்றின் மூலதன செலவு ஆகியவற்றால், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் வளர்ச்சி சாத்தியமானது. அதே வேளையில் உற்பத்தி துறை எதிர்பார்த்த வளர்ச்சியை கண்டிருக்கவில்லை. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil