மகளிர் தின முதலீட்டு சிந்தனைகள் – மார்ச் 8, 2020

மகளிர் தின முதலீட்டு சிந்தனைகள் – மார்ச் 8, 2020

International Women’s Day 2020 – Investment Thoughts

மார்ச் 8ம் தேதியான இன்று உலக மகளிர் தினமாக(Women’s Day T20) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது பெண்கள் உரிமைகளுக்கான மைய புள்ளியாகவும் பார்க்கப்படுகிறது. பெண்கள் இந்நாட்டின் கண்கள் – பொருளாதாரத்திலும் தான். பெண்கள் தொழில்முனைவிலும், முதலீட்டிலும் பங்கு பெறும் போது மட்டுமே, அது அவர்களின் எண்ணங்களும், அவர்களை சார்ந்த சமூகமும் மேம்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பெண் விடுதலை வேண்டும், அது நிதி சுதந்திரத்திலும் சாத்தியமே. வெறுமனே ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலைக்கு செல்வதில் பெருமை அல்ல நம் உள்ளுணர்வு, மாறாக வேலைவாய்ப்புகளை தருவதிலும் பெண்கள் நேர் காண வேண்டும்.  ‘ சிறு சேமிப்பு ‘ என்ற ஒற்றை கூற்று பெண்களை மட்டுமே சேரும் என்பதனை மறுப்பதற்கில்லை.

பெண்கள் முன்னேற்றத்திற்கான என்னால் முடிந்த சிறு முயற்சி – சில சிந்தனைகளில்… இதோ

  • நீங்கள் கற்ற கல்வி உங்கள் குடும்பத்தை மட்டுமில்லாமல், பெண் சுதந்திரம் வேண்டும் அனைவருக்குமான துணையாக இருக்கட்டும். வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், உங்கள் அருகில் உள்ளவர்களை இணைத்து தொழில்முனைவை(Entrepreneurship) உருவாக்குங்கள். வேலையை தேடுவதற்கு பதிலாக, நீங்களே பலரை வேலைக்கு நியமிக்கும் அளவுக்கு முன்னேறுங்கள். இதோ இங்கு அனைத்தும் சாத்தியமே – இணையமும் உங்கள் மருதாணியிட்ட விரல்களில்.
  • சிறு சேமிப்பிலிருந்து சில்லரை வணிகம் வரை உனக்கான வாய்ப்பு இப்போது உள்ளது. ‘Whatsapp’ உன்னை போன்ற தோழிகளை தொழில் ரீதியாக இணைப்பதற்கே. முகநூலில் உன் எண்ணமுகம் பதிந்து, மற்றவர்களுக்கும் உதவ முன் வா (Social Networking) பெண்ணே.
  • முதலீட்டு உத்தியை உன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்து. சுருக்கு பையில் சில்லரை காசுகளை போடத்தெரிந்த என் அம்மாச்சி, அப்பத்தாவுக்கு பரஸ்பர நிதிகளும், பங்குச்சந்தையும்(Mutual Funds & Stock Market) பழக்கப்பட்டவை தான். பணவீக்கத்தை சரிசெய்ய உன் சேமிப்பை சிறப்பானதாக்கு.
  • உன் கணவனின் சரி பாதி நீ – வீட்டு பட்ஜெட் கணக்கிலும்(Budget Planning) உன் திறமையை காட்டு. பிள்ளைகளுக்கு சேமிப்பதற்கும், முதலீட்டிற்கும்(Savings vs Investing) உள்ள வித்தியாசத்தை சொல்லி தா. நீ இல்லாமல் ஒரு அணுவும் அசையாது – மாத எஸ்.ஐ.பி. முதலீட்டை நீயே துவக்கி வை. காப்பீட்டின் முக்கியத்துவத்தை உன் கணவனுக்கு புரிய வை, நமக்கும் பிள்ளைகள் இருக்கிறதென்று.
  • வேலை கொடுப்பதை பெருமையாக எண்ணு, வேலைக்கு செல்வதை வீணாக எண்ணாதே. உனக்கான சேமிப்பை இப்போதே உருவாக்கு, அதே வேளையில் நீ தான் உன் குடும்பத்தின் அவசர கால நிதி(Emergency Fund) என்பதை இப்போதே உணர்த்து.
  • வாழ்நாள் முழுவதும் நீ சுதந்திரமாக வாழ வேண்டுமா ? தலைமைப்பண்பே(Leadership) உனது தாரக மந்திரமாக கொள். குடும்பமும், சமுதாயமும் உனது இரு கண்கள். நீ இருந்தால் மட்டுமே அது சுகமாகும் சாத்தியம்.

சிறு வயதில், என்னுடன் விளையாடிய அவளது(தங்கை) தருணங்கள்… இப்போது நான் என் மகளுடன் விளையாடி கொண்டிருக்கும் மழலை எண்ணங்கள். மழலையின் அழகே அன்பின் அழகு, அதுவே பெண்ணின் அழகு !

  • நா. சரவணகுமார், நிதி மருத்துவர்(ஆலோசகர்), வர்த்தக மதுரை

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

யெஸ் வங்கியில் என்ன ஆனது ? – இந்திய பொருளாதாரத்தை அசைக்கும் குட்டி (உண்மை) கதை

யெஸ் வங்கியில் என்ன ஆனது ? – இந்திய பொருளாதாரத்தை அசைக்கும் குட்டி (உண்மை) கதை 

What happened to YES Bank ? – Banks that shook the Indian Economy

நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை அசைக்க வைத்த விஷயங்களில் கொரோனா வைரஸ் அல்ல, இம்முறை யெஸ் வங்கி. ஆம், யெஸ் வங்கியின் நிறுவனர் மற்றும் முன்னாள் இயக்குனர் திரு. ராணா கபூரின் மீது அமலாக்க இயக்குனரகம் பணமோசடி வழக்கு ஒன்றினை பதிந்துள்ளது நேற்றைய இரவின் செய்தி.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏற்கனவே ஓரிரு வருடங்களுக்கு முன்பு, யெஸ் வங்கியின் பிரமிப்பான வளர்ச்சி பற்றியும், நிறுவனர் ராணா கபூரை பற்றியும் எழுதியிருந்தோம். யெஸ் வங்கியில் குடும்ப சண்டை ஆரம்பித்து நிர்வாக சீர்கேட்டில் முடிந்துள்ளது. பொதுவாக பங்குச்சந்தையை பொறுத்தவரை நூறு சதவீதத்திற்கு மேல் ரிஸ்க் தன்மை கொண்ட ஒரு முதலீட்டு சாதனமாக கருதப்படுகிறது. அதனால் தான் உங்களின் உபரித்தொகையை மட்டும் முதலீடு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

அடுத்த மாதம் வீட்டில் விசேஷம், ஆறு மாதத்திற்கு பிறகு நான் வாகனம் வாங்க சேமித்து வைத்துள்ளேன், வீட்டுக்கடன் வாங்கிய தொகையில் சிறு தொகை கையில் உள்ளது என இருக்கும் பணத்தை எல்லாம் பங்குச்சந்தையில் போட்டு விட்டு, பின்பு நஷ்டமடைந்தவுடன் பங்குச்சந்தை சரியில்லை, நிறுவனம் ஏமாற்று பேர்வழிகள் என புலம்ப கூடாது. உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் உங்களிடம் அவசரமாக ஒரு தொகையை கடனாக கேட்டாலே, நாம் யோசிக்க துவங்குவோம். ஆனால், பங்குச்சந்தையில் நமது பேராசை தான் பெரும்நஷ்டமாக செல்கிறது.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்களை சொல்லியிருந்தோம் – அவை நிறுவனர்கள், நிர்வாகம் மற்றும் நிதி அறிக்கைகள். இவற்றை  புரிந்து கொள்ளாமல் சந்தைக்கு வருவதில் எந்த பலனும் இல்லை. சார்ட்(Charts), 52 வார ஏற்றம், இறக்கம் – இவற்றை எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம். சந்தையில் உள்ள நிறுவனத்திற்கு உண்மையான தொழில் தன்மை இருக்க வேண்டும். முதலாளி எப்படியானவர், அவர்களின் நிறுவனத்திற்கு சென்றால் நமக்கு காபி, டீ ஏதும் தருவார்களா, நீங்கள் வாங்கிய பங்கு நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(AGM) இதுவரை சென்றுள்ளீர்களா, நிறுவனத்திற்கு கடன் தன்மை(Debt to Equity) எப்படி உள்ளது, கல்லாவில்(Cash Flow) பணம் தேறுமா என்பதனை எல்லாம் அலசி ஆராய வேண்டும்.

புரியவில்லை என்றால், உங்கள் நிதி இலக்குகளை சார்ந்து மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யுங்கள். அங்கேயும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் – வங்கியிலும், அஞ்சலகத்திலும் தான். இல்லையெனில் தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு முதலீட்டு முடிவை எடுங்கள். முடிவின் பலன் சரியில்லை என்றால், அவரை ஒரு வழி பண்ணுங்கள். நல்ல ஆலோசகர் என்றால், உங்கள் கையை பிடித்து எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு கூட்டி செல்வார். என்ன யெஸ் வங்கி என ஆரம்பித்து, அப்புறம் வேறு எங்கோ சென்று விட்டீர்கள் என்கிறீர்களா ? பிரச்சனை யெஸ் வங்கியில் மட்டுமல்ல. பங்கு வர்த்தகத்திலும் தான். சத்யம், யூனிடெக், ஜே.பி. அசோஸியேட்ஸ், கிங் பிஷர் ஏர்லைன்ஸ், ஆர்.காம், ஜெட் ஏர்வேஸ் இவை எல்லாம் அதன் துறையில் பிரபலமான மற்றும் கொடி கட்ட பறந்த நிறுவனங்கள் – இன்று என்ன ஆயிற்று. நிறுவனர்களும், பெரும் பண முதலைகளும் பங்குகளை விட்டு வெளியேறினாலும், சிறு முதலீட்டாளர்கள் ஈக்கள் மொய்ப்பது போன்று அந்த பங்குகளை ஆயிரக்கணக்கில், லட்சத்தில் வாங்குகின்றனர். சில காலத்திற்கு பின்னர் அந்த பங்கு, சந்தையில் வர்த்தகமாவதில்லை அல்லது நிறுவனம் காணாமல் போய்விடும். பொதுவாக திவாலாக போகும் நிறுவனங்களின் ஜாதகம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே தெரிய வரும். அப்போதே நாம் எச்சரிக்கையாக இருக்க பழக வேண்டும். 50 பைசா பங்கு 10 ரூபாய்க்கு செல்லும், நான் கோடீஸ்வரனாகி விடுவேன் என கற்பனை செய்து கொண்டிருக்க கூடாது.

நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராணா கபூர்(Rana Kapoor) வலுக்கட்டாயமாக நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ‘ என்னுடைய பங்குகள் அனைத்தும் வைரங்கள், நான் அதனை ஒரு போதும் விற்க மாட்டேன் ‘ என கூறியவர், பங்குகளை அடமானமும் வைத்தார், பின்பு விற்றும் விட்டார். பெரும் முதலைகளுக்கு தெரிந்திருக்கும், அரசுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவரது மனைவிக்கு தெரிய வாய்ப்பில்லை. புதிய தலைவராக திரு. ரவ்நீத் கில்(Ravneet Gill) வந்தார், யெஸ் வங்கி இனி மீண்டு விடும் என பலர் கூறினர்.

யெஸ் வங்கி தனது செயல்பாட்டில் பிரமிப்பான வளர்ச்சியை நோக்கி செல்கிறது என காட்ட பட்டாலும், வங்கியை செயல்படுத்த முதலீடு தேவைப்பட்டது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தனர், பேசினர் மற்றும் சென்று விட்டனர். என்ன காரணமென்று வங்கி தலைமைக்கும், செபி மற்றும் ரிசர்வ் வங்கிக்கும் தெரிந்திருக்கலாம். நடப்பு வாரத்தில், வங்கி ஒழுங்குமுறை சட்டம் 45வது பிரிவின் கீழ் யெஸ் வங்கி அதன் அதிகாரங்களை பயன்படுத்த பாரத ரிசர்வ் வங்கி தடை விதித்தது. மேலும், வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது ரிசர்வ் வங்கி – மத்திய அரசின் துணையுடன்.

யெஸ் வங்கி(Yes Bank) அதிகமான கடன்களை கொண்டிருப்பதாகவும், ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட கடன் நிலுவைகள் உள்ளதாகவும், எனவே இந்த வங்கியை சீரமைக்க வங்கிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. யெஸ் வங்கியின் பங்குகள் ஒரே நாளில் 85 சதவீதம் வரை சரிவை கண்டது. பங்கு ஒன்றுக்கு ரூ. 36.80 விலையிலிருந்த நிலையில், அது ஒரே நாளில் ரூ. 5.65 வரை சென்றது. நேற்று தேசிய பங்குச்சந்தையில் மட்டும் யெஸ் வங்கியில் வர்த்தகமான பங்குகளின் எண்ணிக்கை 126.50 கோடி பங்குகள் !

டெலிவரி பங்குகளின் அளவு 19 %. நேற்றைய வர்த்தகத்தில் யெஸ் வங்கியின் விற்றுமுதல்(Turnover) ரூ. 1866 கோடி. கடந்த வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில், தலைவர் திரு. ரவ்நீத் கில், தங்களது வங்கியில் முதலீடு செய்ய ஒரு அந்நிய முதலீட்டு நிறுவனத்தை அழைத்துள்ளார். நீண்ட பேச்சுக்கு பின் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை பாரத ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ரிசர்வ் வங்கியும் சில ஆலோசனைக்கு பின், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தை முதலீடுகளை வரவு வைக்கும் படி கேட்டு கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கியை(SBI), யெஸ் வங்கியில் முதலீடு செய்ய ஒப்புதலை அளித்துள்ளது. அதே நாளின் மாலை நேரத்தில் எஸ்.பி.ஐ. மற்றும் எல்.ஐ.சி. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும், இயக்குனர் பதவியில் முன்னாள் எஸ்.பி.ஐ. அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் வெளியானது.

கடந்த ஆறு மாதங்களாக பாரத ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி துறையும் யெஸ் வங்கியின் செயல்பாடுகளை கண்காணித்து வந்ததாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இப்போது யெஸ் வங்கி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், மறுசீரமைப்பு(Reconstruction) நடவடிக்கையில் உள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களும் யெஸ் வங்கியில் முதலீடு செய்வதை கடந்த 2018-19ம் நிதியாண்டு முதலே குறைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள், அடுத்த ஏப்ரல் 3ம் தேதி வரை தங்கள் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு, டெபாசிட் தொகையில் அதிகபட்சம் ரூ. 50,000 வரை மட்டும் பெற முடியும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அவசர தேவைகளுக்கு ரூ. 50,000க்கு மேல் பணத்தை பெற விரும்புவோர் அதன் ஒப்புதலை பெற வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த வங்கி பங்குகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக இலக்கு விலைகளை(Target Price) நிர்ணயித்த தரகு நிறுவனங்களை என்னவென்று சொல்வது. ‘ இதற்கு தான் நான் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதே கிடையாது, பங்குச்சந்தை ஒரு சூதாட்டம். நல்ல வேளை, நான் தப்பித்து விட்டேன் ‘ என கூறும் நபர்களா நீங்கள் ? நீங்களும் இந்த வலையில் மாட்டிக்கொண்ட ஒருவர் தான். பொதுவாக உலகமயமாக்கலுக்கு பிறகு, உலகின் எந்த மூலையில் பிரச்சனை ஏற்பட்டாலும், அது பொருளாதார ரீதியாக பெருவாரியான மக்களை பாதிக்கும். சொல்லப்பட்ட வங்கியின் பிரச்சனை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அரசுக்கு தேவை வரி வருவாய் தான். வரி ஏய்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அது நடுத்தர மக்களை தான் மேலும் பாதிக்கும். 20 சதவீத மக்கள் சரியாக இருந்தால், 80 சதவீத மக்கள் சுபிட்சமாக வாழ முடியும். நிறுவனங்கள் நேர்மையாக செயல்பட அரசும் தனது பங்களிப்பை அளிப்பது நன்று. அரசு தனது பங்காக சேவையை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்பட வேண்டும். பணம் பண்ணுவது அரசின் முக்கிய கொள்கையாக இருக்க கூடாது – அது தனியார் நிறுவனங்களின் வேலை. அவர்களை நேர்மையாக செயல்பட வைப்பதே அரசின் கொள்கை. வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்கள் தான் அதிகப்படியாக உருவாக்க வேண்டும். பங்குச்சந்தையில் என்ன நடந்தால் என்ன, யெஸ் வங்கியில் பிரச்சனை நடந்தால் நமக்கென்ன என ஒருவர் நினைத்து கொண்டிருந்தாலும், இது தொடர் சங்கிலி தான். நிர்வாக சீர்கேட்டில் யெஸ் வங்கியாக இருந்தால் என்ன, டாட்டா நிறுவனமாக இருந்தால் என்ன – இங்கே பிராண்டுகளுக்கு வேலையில்லை, நல்ல நிர்வாகம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பங்கை நீண்ட நாட்களுக்கு பங்குதாரர்களிடம் வைத்திருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பி.எப். வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைப்பு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம்

பி.எப். வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைப்பு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் 

EPF Rate cut  to 8.5 Percent – EPFO

கடந்த 2017-18ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்தது. பின்பு 2018-19ம் நிதியாண்டில் 8.65 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி(Provident Fund) வட்டி விகிதம் 8.5 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. ஆக, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் 15 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் கூறியுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பி.எப். வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக கடந்த 1990 முதல் 2000ம் ஆண்டு வரை 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பி.எப். வட்டி விகிதம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பஞ்சப்படி(Dearness Allowance), நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு தான் மாற்றியமைக்கப்படும்.

தற்போது நாட்டில் உள்ள பி.எப். (EPF Subscribers) சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆறு கோடி. நாட்டில் உள்ள மற்ற முதலீட்டு சாதனங்களில் ரிஸ்க் தன்மை குறைவாக இருந்தாலும்,பண உத்தரவாதம் என்ற விஷயமில்லை. ஆனால் பி.எப். பிடித்த தொகைக்கு சொல்லப்பட்ட வட்டி விகிதத்தில் மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். எனவே அரசின் வருமானத்தில் பற்றாக்குறை எதுவும் ஏற்படாமல் இருக்க வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பணவீக்க மாற்றத்தால் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பின் மூலம் கிடைக்கப்பெறும் வட்டி போதுமானதாக இருக்காது மற்றும் நீண்டகால நிதி இலக்கினை அடைவதற்கான சாத்தியமும் குறைவு. இந்நிலையில் குறைக்கப்படும் வட்டி விகிதம் அதனை சார்ந்து உள்ள மக்களை பாதிக்கும்.

சிறு சேமிப்பு திட்டத்தின்(Small Savings Scheme) கீழ் அஞ்சலக மற்றும் வங்கி வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஜனவரி – மார்ச் 2020ம் காலாண்டில் சிறு சேமிப்பு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், முன்னர் இருந்த (அக்டோபர்-டிசம்பர் 2019) வட்டி விகிதங்கள் தான் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்சமயம் அஞ்சலக ஐந்து வருட தொடர் வைப்பு(RD) திட்டத்தில் 7.2 சதவீத வட்டி உள்ளது. மூத்த குடிமக்களுக்கான ஐந்து வருட வைப்பு திட்டத்திற்கு(Senior Citizen Savings) 8.60 சதவீதமும், செல்வமகள் திட்டத்திற்கு 8.40 சதவீதமும் வட்டி விகிதங்கள் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அமெரிக்க வங்கி வட்டி விகித குறைப்பு – உலக பொருளாதார எச்சரிக்கை நடவடிக்கை

அமெரிக்க வங்கி வட்டி விகித குறைப்பு – உலக பொருளாதார எச்சரிக்கை நடவடிக்கை 

US Fed Rate Cut to 1 – 1.25 Percent – Warning of Global Slowdown

மூன்று வாரங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து ஒரு கொள்கலனில் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பூனை ஒன்று, இப்போது மறுபடியும் சீனாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த பூனை, தற்போது மிகுந்த கட்டுப்பாடுடன் துறைமுகத்தில் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இறைச்சிக்காக தான் இந்த பூனை மீண்டும் சீன நாட்டிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக விலங்குகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பூனையை விடுவிக்க வேண்டுமெனவும், கொரோனா வைரஸ் பற்றிய அறியாமையால் தான் இது போன்ற நிகழ்வு நடைபெறுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

இப்படி தான் உலகளவில் ஒரு சிறு வைரஸ் பாதிப்பின் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலை காணப்படும் நிலையில், கொரோனா வைரஸ் மூலம் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகத்தில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் வேண்டுமானால் கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவாக வெளியேறலாம்.

ஆனால், உலகின் பல நாடுகளில் இன்னும் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. இது வணிக ரீதியான பயணங்களுக்கு தடையை ஏற்படுத்தும். நேற்று(03-03-2020) அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி (US Federal Reserve) பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த உதவும் வகையில், அமெரிக்க வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை குறைத்துள்ளன. முன்னர் 1.50 – 1.75 சதவீதம் என்ற வட்டி விகிதம் இருந்த நிலையில், தற்போது 1 – 1.25 சதவீதம் என்ற அளவு சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டை பொறுத்தவரை இந்த வட்டி விகித குறைப்பு, கடந்த 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பின் குறைக்கப்பட்ட அதிகபட்ச அளவாகும். இது ஒரு அவசர நடவடிக்கை எனவும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றைய அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் 3 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது.

அமெரிக்காவின் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், உலகளவிலான பொருளாதாரம் மந்தநிலையில் தான் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக பொருளாதாரம் மற்றும் சந்தைகள் அதிக பாதிப்படையாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைவர் பாவெல் கூறியுள்ளார்.

அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கையை போல தான் தாங்களும் எடுத்து வருவதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, வங்கியில் உள்ள டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் குறையும். இதன் காரணமாக நுகர்வு தன்மை மற்றும் சந்தைக்கு சாதகமாக அமையும். அரசு பத்திரங்களின் வட்டி விகிதமும் சற்று அதிகரித்து காணப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?

India’s GDP of 4.7 Percent in December Quarter – What Next ?

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்துள்ளது என கடந்த வாரம் அரசு சார்பில் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி கடந்த ஏழு வருடங்களில் காணப்படாத குறைந்த அளவாகும். 2018ம் வருடத்தின் ஆரம்ப நிலையில் 7.7 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்பு குறைய தொடங்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொடர்ச்சியாக 7 காலாண்டுகளாக இந்த வளர்ச்சி குறைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2019 கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த வளர்ச்சி குறைவு தான் எனினும், அடுத்து வரும் காலகட்டங்களில் அதன் மாற்றம் தான் சந்தை எதிர்பார்த்து வருவது. பெரும்பாலான வல்லுநர்கள் இது தான் அடிப்பாக பொருளாதார வளர்ச்சியாக(Bottomed out) இருக்கும், அடுத்த காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டு எழும் என கூறியுள்ளனர்.

அதே வேளையில், நடப்பு ஜனவரி – மார்ச் காலத்தில் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் சாதகமாக இல்லை என்பதே உண்மை. டிசம்பர் 2019 காலாண்டை காட்டிலும், மார்ச் 2020 காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாக தான் இருக்கும். வாகனத்துறையில் உள்ள பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்கள் பிப்ரவரி மாத விற்பனையில் சுணக்கத்தை சந்தித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிலக்கல்(Disinvestment) நிகழ்வும் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக முடிந்து, அரசின் இலக்கிற்கு உதவினால் தான் சந்தையில் நுகர்வை வேகப்படுத்த முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, நிதி மற்றும் காப்பீடு, வீட்டு மனை, உணவகங்கள், சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. வேளாண்மை, காடுகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை நாட்டின் பொருளாதார உற்பத்தியில் 12 சதவீத பங்கை தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பிரிவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டதாக உள்ளது கவனிக்கத்தக்கது.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை, உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை தான் அரசுக்கு முன் இருக்கும் சவாலாக உள்ளது. தற்போதைய நிலையில் முதலீடுகளை பெற்று, சரியான முறையில் கையாண்டால் மட்டுமே அது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் வருவாய் பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நுகர்வு தன்மையும் சுமுகமாக அமையும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது முடியக்கூடும் என்பது குறித்து தற்சமயம் தெரியாது. அதே நேரத்தில், இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனங்களின் நிதி அறிக்கையில் தெரிய வரும். அமெரிக்க – சீன வர்த்தக போர் இன்னும் முடிவை எட்டவில்லை. 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு எதிர்பார்த்த அளவை பெறாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தையில் பங்குபெறும் முதலீட்டாளர்கள் சரியான நிறுவனங்களை அலசி ஆராய்ந்து, அதன் உண்மையான விலையில் பங்குகளை வாங்குவது நலம். ஆறு மாதத்திற்கு முன்னர் காணப்பட்ட விலையே பெரும்பாலான பங்குகளில் தற்போது நிலவி கொண்டிருக்கிறது. சில பங்குகளின் விலை மூன்று வருட மற்றும் ஐந்து வருட விலை குறைவில் இருந்தாலும், அவற்றின் மற்ற காரணிகளை கண்டறிவது அவசியம். வெறும் பங்கு விலை எண்களை கொண்டு பங்குகளை வாங்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வீழ்ச்சியடைந்த இந்திய கார் விற்பனை – பிப்ரவரி மாத புள்ளிவிவரங்கள்

வீழ்ச்சியடைந்த இந்திய கார் விற்பனை – பிப்ரவரி மாத புள்ளிவிவரங்கள் 

Falling Auto Sales Numbers in February 2020 – Indian Automobile Manufacturers

நம் நாடு விவசாயம் சார்ந்த நாடு என்று முகமதிப்பை கடந்து, இன்று சேவைத்துறையை மட்டுமே முக்கிய நிலையாக கொண்டிருக்கிறது. மொத்த மதிப்பு(GVA) அடிப்படையில் சேவை துறை சுமார் 54.40 சதவீதத்தையும், விவசாயம் 16 சதவீதத்தையும், தொழிற்துறை சுமார் 29.5 சதவீத்தையும் உள்ளடக்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழிற்துறையை உற்று நோக்கும் போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகனத்துறை 12 சதவீதத்தை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காணப்பட்டு வரும் பொருளாதார மந்தநிலை இந்திய வாகனத்துறையின் விற்பனையையும் பாதித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை, இரு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தக போர், உள்நாட்டில் அரசின் வாகனத்துறைக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை வாகன விற்பனையில் தொய்வு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய கொரோனா வைரஸ் பாதிப்பும் இந்திய வாகனத்துறைக்கு பாதகமாக அமைந்துள்ளது எனலாம். பிப்ரவரி மாத புள்ளிவிவரங்களின் படி, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது வாகன விற்பனையில் 42 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியிலும் 40 சதவீதத்திற்கு மேல் குறைந்து காணப்படுகிறது.

இது போல மாருதி(Maruti Suzuki) நிறுவனம் தனது பிப்ரவரி மாத மொத்த விற்பனையில் ஒரு சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனையிலும் சுமார் 4 சதவீத அளவு குறைவாக இருந்துள்ளது. இருப்பினும், தனது ஏற்றுமதியில் 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்த விற்பனையில் 32 சதவீதமும், உள்நாட்டில் 34 சதவீதமும் வீழ்ச்சியை கண்டுள்ளது. வணிக வாகன(Commercial Vehicles) விற்பனையில் இம்முறை 35 சதவீத விற்பனை குறைவை ஏற்படுத்தியுள்ளது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம். இது போல பயணிகள் வாகன விற்பனையும் 31 சதவீதம் குறைந்துள்ளது.

எய்ச்சர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை 29 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டு விற்பனை சுமார் 27 சதவீதமும், ஏற்றுமதியில் 39 சதவீதமும் வீழ்ச்சியை கண்டுள்ளது எய்ச்சர். கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமில்லாமல், பி.எஸ்.6 இடம் பெயர்வுக்கான நிகழ்வும் விற்பனையில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டின் வாகன உற்பத்தி தேவைக்கான உதிரி பாகங்கள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எதிர்பாராத நிகழ்வுகளால் சரியான நேரத்தில் வாகனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2018ம் நிதியாண்டில் மட்டும், சீனா நம் நாட்டிற்கு சுமார் 4.3 பில்லியன் டாலர்கள் அளவிலான பொருட்கள் மற்றும் சேவையினை ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மின் மற்றும் மின்னணு சார்ந்த பொருட்கள்(Electrical & Electronic) தான் பெரும்பங்கு வகிக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொரோனா வைரஸ் உலக சந்தையை நெருக்குகிறதா ?

கொரோனா வைரஸ் உலக சந்தையை நெருக்குகிறதா ?

Is Coronavirus hitting the Global Stock Market Indices ?

கடந்த இரண்டு வருடமாக இந்திய பங்குச்சந்தையில் பெருவாரியான பங்குகளின் ஏற்றம் என பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட சில பெருநிறுவன பங்குகளின் விலை ஏற்றதால், ஒட்டுமொத்த சந்தை குறியீடு (Nifty50, BSE Sensex 30) உயர்ந்துள்ளது. மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை எனலாம். இது போன்ற பங்குகளில் முதலீட்டு வாய்ப்பு உள்ளதா என கேட்டால், முழுமையான அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) தான் தீர்வாக அமையும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏனெனில், பொருளாதார தேக்கம் மற்றும் வீழ்ச்சி போன்ற சமயங்களில் பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்து தான் காணப்படும். ஆனால் அனைத்து பங்குகளும் அதன் உண்மையான விலையில் வர்த்தகமாகாது. எனவே, சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையெனில், நம் முதலீடு நமது கையை சுட்டு கொள்ளும்.

கடந்த இரு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் பல உயிர்கள் மடிந்து விட்டன. இதன் தாக்கம் மற்ற நாடுகளிலும் வெகு வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிற்கும், பங்குச்சந்தைக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பலாம். கொரோனா வைரஸ் பரவி வருவது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், அடுத்த வல்லரசாக அமையும் சீனாவில் பரவி வருவது தான் சந்தைக்கு பாதகமாக உள்ளது.

சீன பொருளாதாரம் விழுந்தால், அது இந்திய சந்தைக்கு லாபம் என பலர் சொல்லிக்கொள்கின்றனர். உண்மையில், உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்காவில் ஒன்று நடந்தால் அது இந்தியாவையும் பாதிக்கும். நமது நாட்டின் அரசு கொள்கை மாறும் போது, எங்கோ இருக்கும் ஒரு குட்டி நாட்டையும் பாதிப்படைய செய்யும். சீனாவில் வைரஸ் தாக்குதல் இருந்து வருவது இந்தியாவிற்கு ஏற்றுமதி சாதகம் என நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. நாம் பல பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து வந்தாலும், அதற்கான மூலப்பொருட்களை சீனா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து பெற்று வருகிறோம். அமெரிக்கா – ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டால், அது நமக்கும் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்.

நமது நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில்(Total Imports) (2018ம் ஆண்டு முடிவு) சீனாவின் பங்களிப்பு 15 சதவீதமும், அமெரிக்கா 6.5 சதவீதம், சவுதி அரேபியா 5.7 சதவீதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5.4 சதவீதம் மற்றும் ஈராக் 4.6 சதவீத அளவிலும் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே வர்த்தகம் உள்ளதை நினைவில் கொள்ளவும். ஏற்றுமதியில்(Exports) நாம் அமெரிக்க நாட்டிற்கு தான் அதிகமாக அனுப்புகிறோம்.

கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கு செல்கின்ற நிலையில், வர்த்தகம் சம்மந்தமாக பல தொழில்புரிபவர்கள் பயணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இது போல பல நாடுகளில் தற்சமயம் மிகுந்த கட்டுப்பாடுகளும் உள்ளது. நம் நாட்டிற்கு தேவையான உலோகங்கள் மற்றும் மருத்துவ துறைக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து தான் வந்து கொண்டிருக்கிறது. இதன் தேவை அதிகமாக இருந்தும், இறக்குமதி அளவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல பொருட்களின் மீது விலையர்வு ஏற்படும்.

இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனத்தின் நிதி அறிக்கையை அலசினால் தெரிய வரும். வைரஸ் தாக்குதல் பதற்றத்தினால் பங்குச்சந்தை விழுந்தாலும், உண்மையில் நிறுவன காலாண்டு முடிவுகள் வரும் போது தான், அந்த பங்குகளின் விலை மாற்றம் தெரிய கூடும்.

கொரோனா வைரஸ் வெடிப்பு ஒரு தொற்று நோயாக(Pandemic) மாற வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால், அது மிகப்பெரிய விளைவை உலகளவில் நிகழ்த்தும். இதன் காரணமாக நடப்பாண்டில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, உலக பொருளாதாரமும் பலவீனமடைய கூடும் என மூடிஸ் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலகளவில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்க வங்கி வாடிக்கையாளர்கள், ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டு சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கலாம் என அமெரிக்காவின் பி.என்.ஒய். மெலன் கூறியுள்ளது.

நேற்றைய( இரவு – 28-02-20) சந்தை முடிவில் அமெரிக்காவின் நாஷ்டாக் குறியீடு 4.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த குறியீடு 13 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. லண்டன் புட்சி குறியீடு 3.5 சதவீதமும், பிரான்சின் சி.ஏ.சி. 3.32 சதவீதமும் மற்றும் ஜெர்மனி நாட்டின் டாக்ஸ் குறியீடு 3.20 சதவீத அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினத்தில் தற்போது ஜப்பான் நிக்கி 3.5 சதவீதம், ஹாங்காங் ஹேங் செங் 2.5 சதவீதம், தென்கொரியா கோஸ்பி 2.70 சதவீதம், சிங்கப்பூர் ஸ்ட்ரைட் டைம்ஸ் 2.19 சதவீதம் என இறக்கம் கண்டுள்ளது.

நல்ல நிறுவன பங்குகளை பட்டியலிடுங்கள். உபரி பணத்தை ஒதுக்குங்கள். பங்கு விலை குறைகிறதே என எல்லா பங்குகளையும் வாங்காதீர்கள். அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் பங்குகளை கவனியுங்கள். பணபலமும், நேர்த்தியான நிர்வாகமும் தான் சந்தையில் நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவழிப்பவரா ? கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நீங்கள் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவழிப்பவரா ? கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

Things to note while preparing for the Budget Planning 

பொதுவாக, பட்ஜெட் திட்டமிடல் என்பது வரவுக்குள் செலவு என்பதையும் கடந்து அதற்கான தேடுதலில் சில சுவாரசியங்கள் உள்ளன. ‘ உன் பட்ஜெட் திட்டமிடலை என்னிடம் காட்டு, நான் உன் மதிப்பு என்னவென்று சொல்கிறேன் ‘ என்ற மேலைநாட்டு வாசகம் பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நிதி சார்ந்த விஷயங்களில் நாம் எப்போதும் சுதந்திரமாக செயல்பட இந்த திட்டம் உதவுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட் திட்டமிடலில் எளிதான சில கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்: வரவு – செலவை எழுதி வைக்கப்போகும் குறிப்பேட்டில்(Notebook), நிதி சார்ந்த தகவல் தவிர வேறு எந்த தகவலையும் எழுதி வைக்காதீர்கள். கைபேசி செயலி(Mobile App) மூலம் உங்கள் வரவு-செலவுகளை பதிவு செய்கிறீர்கள் எனில், முறையாக ஒவ்வொரு மாதமும் உங்கள் தரவுகளை மின்னஞ்சலில் சேமித்து வைக்க பழகுங்கள்.

நீங்கள் ஒவ்வொரு நாளில் ஏற்படும் வரவு மற்றும் செலவுகளை சரியாக எழுதுங்கள். முடிந்தவரை பொய் கணக்கு வேண்டாம். நான் செய்த செலவை மனைவி பார்த்து விடுவாள், நான் போட்ட சீட்டுத்தொகை கணவருக்கு தெரியக்கூடாது என்பதெல்லாம் பட்ஜெட் திட்டமிடலில் கூடாது. முடிந்தவரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நிதி சார்ந்த வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாத முடிவிலும் வரவு மற்றும் செலவுகளில் தனித்தனியாக பிரிவுகளை ஏற்படுத்தி கணக்கிடுங்கள். உதாரணமாக இந்த மாதத்தின் முடிவில் போக்குவரத்து பிரிவில்(Transportation) பெட்ரோல் – ரூ. 2000, பேருந்து கட்டண செலவு – ரூ. 500, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி – ரூ. 800 மற்றும் வாகன பராமரிப்பு செலவு – ரூ. 300. இதை போல பொழுதுபோக்கு செலவு(Entertainment Expenses) பிரிவுகளில் கேபிள் கட்டணம், சினிமா பார்க்க செலவு, குழந்தைகளுடன் பொருட்காட்சிக்கு சென்றது, நெட் பிளிக்ஸ் மாத சந்தா என பிரிவுகளை உருவாக்கி கொள்ளலாம். பொதுவாக ஒரு பிரிவின் கீழ் உட்பிரிவை உருவாக்கி கொள்வது சிறந்தது.

மாத முடிவில் அந்த மாதத்தின் வரவு செலவுகளை மொத்தமாக கணக்கிட்டு கொள்ளுங்கள். இதன் பிறகு காலாண்டு அடிப்படையிலும்(PQFR) மூன்று மாதத்திற்கு ஒரு முறை மொத்த கணக்கீட்டினை ஏற்படுத்துங்கள். வருடத்திற்கு நான்கு காலாண்டுகள் என பிரித்து ஒவ்வொரு காலாண்டிலும் ஏற்பட்ட வரவு-செலவுகளை ஆராயுங்கள். இதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்டகால பலன் பின்னாளில் உங்களுக்கு தெரிய வரும்.

நம்மிடம் உள்ள பிரச்சனையே, நமக்கான வேலைகளுக்கு நேரமில்லை என சொல்வது தான். உண்மையில் நாம் யாரோ ஒருவருக்கு வேலை செய்வதில் அக்கறை கொள்கிறோம், அதுவும் மாத சம்பளத்திற்கு. அதே வேளையில், நமக்கான மற்றும் நமது குடும்பத்திற்கான பட்ஜெட் திட்டமிடலை(Budget Planning) செய்ய நாம் நேரம் ஒதுக்கும் போது, சேமிப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் நம்மை தேடி வரும். புதிய வருவாய்க்கான முயற்சியும் கைகூடும்.

ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் நமது மாத செலவு எந்த காரணத்தால் அதிகரித்துள்ளது அல்லது குறைவாக இருந்துள்ளது என்பதனை அறியுங்கள். சில நேரங்களில் நமக்கு தேவைப்படாத மாத செலவுகள் ஏற்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு நண்பர் சொன்னார் என இணையத்தில் ஒரு சேவைக்கு மாத சந்தாவை செலுத்தி வந்திருப்போம். அதனை நாம் ஒரு முறை கூட பார்த்திருக்க மாட்டோம். இது போன்ற செலவுகளை குறைக்க முயற்சிக்கலாம். நகர்ப்புறங்களில் உள்ளோர் பொது போக்குவரத்து மற்றும் கால் டாக்ஸி சேவையை, தங்கள் சொந்த வாகனத்துக்கு பதில் பயன்படுத்தலாம்.

இன்றைய காலத்தில் நெரிசலான இடங்களில் நமது வாகனமாக இருந்தால் என்ன, கால் டாக்ஸி வாகனமாக இருந்தால் என்ன, மெதுவாக தான் செல்ல முடியும். நமது சொந்த வாகனம் மற்றும் டிரைவர் போல, கால் டாக்ஸி நம் வீட்டின் வாசல் வரை வந்து போகிறது. மாதத்திற்கு சில முறை சென்று, உங்கள் மாத எஸ்.ஐ.பி(SIP).க்கான தொகையை இதன் மூலம் சேமியுங்கள்.

ஒரு பாக்கெட் சிகரெட்டினை தினமும் புகைப்பவர்கள், பாக்கெட் ஒன்றுக்கு ஒரு சிகரெட்டை குறைத்து கொள்ளுங்கள். அதனை அடுத்த நாளுக்கு பயன்படுத்த முயற்சியுங்கள். முப்பது நாட்களில் 30 சிகரெட்டுகளின் செலவுகளை சேமிக்கும் பட்சத்தில், அதனை மற்ற அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். (நான் உங்களின் இன்றைய விருப்பத்தை தடுக்கவில்லை, இருப்பினும் அடுத்து வரவிருக்கும் நாட்களும் அவசியம்)

ஒவ்வொரு காலாண்டிலும் தேவை மற்றும் விருப்பத்திற்கான செலவுகளை பிரித்து பார்க்க பழகுங்கள். மாத முடிவில் உங்கள் பட்ஜெட் திட்டமிடலுக்கு நீங்களே ஒரு மதிப்பை கொடுங்கள், சபாஷ் போடுங்கள் அல்லது எச்சரிக்கை மணியை எழுப்புங்கள். பண்டிகை நாட்களுக்கு தேவையான தொகையை முன்னரே சேமித்து பின்பு செலவு செய்யுங்கள். கடைசி வேளையில் செலவுகளை ஏற்படுத்தி நெருக்கடி நிலைக்கு செல்ல வேண்டாம். இதனால் தான் சிலர் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கி நேரிடுகிறது.

குழந்தைகளின் ஆண்டு கல்விச்செலவு, பண்டிகை கால துணிமணி செலவு, குடும்ப விசேஷங்கள் மற்றும் ஆண்டு காப்பீடு செலவுகள் போன்றவற்றை முன்னரே திட்டமிட்டு அதற்கான தொகையை மாதாமாதம் சேமியுங்கள். பின்பு தேவைப்படும் வேளையில், அதனை பயன்படுத்துவது நல்லது. உதாரணமாக குழந்தையின் ஆண்டு கல்வி கட்டணம் ரூ. 60,000 எனில் மாதாமாதம் உங்கள் வருமானத்தில் ரூ. 5000 ஐ சேமியுங்கள். இதனை நீங்கள் ரிஸ்க் குறைந்த பரஸ்பர நிதி திட்டத்தில்(Liquid Mutual Funds) மாதாமாதம் எஸ்.ஐ.பி. முறையில் செய்தால் 12 மாத முடிவில் (7 சதவீத வட்டி) உங்களுக்கு கிடைப்பது ரூ. 62,300. உங்கள் குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்தியது போக உங்களுக்கு கூடுதலாக 2,300 ரூபாய் உள்ளது. இதனை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

பட்ஜெட் திட்டமிடலில் உங்கள் அத்தியாவசிய செலவுகளை, வருமானத்தில் 50 சதவீதத்திற்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அது போல உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால விருப்பங்களுக்கான செலவுகளை மாத வருமானத்தில் 30 சதவீதத்திற்கு மிகாமல் பார்த்து கொள்ளுங்கள். எஞ்சிய 20 சதவீதம் உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடாக இருக்க வேண்டும். சேமிப்பும், முதலீடும் எதிர்காலத்திற்கான செலவுகள் என்பதனை மறக்க வேண்டாம்.

இன்றைய சேமிப்பு நாளைய செலவுக்கானது. பட்ஜெட் திட்டமிடலில் உங்களுக்கு சிரமம் ஏதுமிருப்பின் என்னை போன்ற ஆலோசகரின்(Certified Advisor) உதவியை பெறுங்கள். நான் உங்களுக்கு நிதி சார்ந்த மொழியில் உதவ தயாராக உள்ளேன் (சிறு கட்டணத்துடன்).

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019

World’s Top 10 Countries – Global Wealth Report 2019

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கிரெடிட் சூசி(Credit Suisse) நிறுவனம் நிதி சேவை மற்றும் முதலீட்டு தொழிலை செய்து வருகிறது. உலகளாவிய செல்வ வளத்தை நிர்வகிக்கும் இந்நிறுவனம் 2019ம் ஆண்டுக்கான உலகின் செல்வ வளமுள்ள நாடுகளின் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி உலகில் உள்ள மொத்த செல்வம்(World Wealth) பணத்தின் அடிப்படையில் 360.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது.

உலகின் செல்வ வளம் படைத்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டின் படி, அமெரிக்காவின் வளம் 105.99 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட உலகின் 29.93 சதவீத வளத்தை அமெரிக்கா கொண்டிருக்கிறது கவனிக்கப்படவேண்டியது.

இரண்டாம் இடத்தில் சீனா 63.80 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உள்ளது. உலகின் மொத்த சொத்து மதிப்பில், சீனாவின் பங்கு 18 சதவீதமாகும். கடந்தாண்டு சீனாவிற்கு கடினமான காலமாக இருந்தாலும், தனது வளத்தை அதிகப்படுத்தி கொண்டது. மூன்றாம் இடத்தில் ஜப்பான் 25 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உள்ளது. இதன் பங்களிப்பு 6.93 சதவீதமாகும்.

நான்காம் இடத்தில் உள்ள ஜெர்மனி 14.66 டிரில்லியன் டாலர்களுடனும், ஐந்தாம் இடத்தில் ஐக்கிய ராஜ்ஜியம்(UK) 14.34 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளது. ஆறாவது இடத்தில் பிரான்ஸ் 13.73 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை  கொண்டுள்ளது. இந்த நாட்டின் பங்களிப்பு மொத்த செல்வ வளத்தில் 3.80 சதவீதமாக உள்ளது.

உலகின் மொத்த மதிப்பு கடந்த 2018ம் ஆண்டை காட்டிலும் 2019ம் வருடத்தில் 9.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது. அதாவது 2.6 சதவீதம் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டில் வீட்டுக்கடன் மொத்தமாக 4 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது. அடுத்த ஐந்து வருடங்களில் உலகின் மொத்த செல்வ மதிப்பு 459 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இதன் மதிப்பு 12.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். மொத்த செல்வத்தில் நம் நாட்டின் பங்களிப்பு 3.5 சதவீதமாகும். இந்தியாவின் சொத்து மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிக வேகமாக வளரக்கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2000 மற்றும் 2019க்கு இடையேயான காலங்களில் இந்தியாவின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவை விட மொத்த மக்கள் தொகையில் நம் நாடு நான்கு மடங்குகளை கொண்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட இந்திய நாட்டின் செல்வ மதிப்பு, கடந்த 70 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா இருந்த அளவாகும். வரும் 2024ம் ஆண்டின் முடிவில் நாட்டின் சொத்து மதிப்பு சுமார் 16 டிரில்லியன் டாலர்களாக செல்லலாம். அந்த அளவு, அமெரிக்கா கடந்த 1960ம் ஆண்டில் இருந்த அளவாக சொல்லப்படுகிறது.

எட்டாம் இடத்தில் இத்தாலி 11.35 டிரில்லியன் டாலர்கள், ஒன்பதாவது மற்றும் பத்தாம் இடம் முறையே கனடா, ஸ்பெயின் நாடுகள் உள்ளன. கனடா 8.57 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும், ஸ்பெயின் 7.77 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளது.

இந்தியாவில் தனிநபர் சொத்து மதிப்பு(Personal Wealth) பெரும்பாலும் வீட்டுமனை மற்றும் கட்டிடங்கள் சார்ந்தவையாக உள்ளது. தனிநபர் கடனும், அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 8 சதவீதமாக உள்ளது. பொதுவாக வளர்ந்த நாடுகளில் சொத்து மதிப்பை காட்டிலும் கடன் மிகக்குறைவாக தான் உள்ளன. அதே வேளையில் சொல்லப்பட்ட சொத்துக்கள் வளர்ந்த நாடுகளில் பரவலாக்கப்படவில்லை.

நம் நாட்டில் செல்வத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் வறுமையின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்தியாவை போன்ற வளர்ந்த நாடுகளில் வறுமையின் அளவு அதிகரிப்பது, 78 சதவீத மக்களின் செல்வ மதிப்பு சராசரி அளவை கூட தாண்டவில்லை என அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி(Wealth inequality)  நம் நாட்டில் 83 சதவீதம் உள்ளதாக கினி குறியீடு குறிப்பிட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்

ஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்  

IDEA & Execution connects the Secret of Entrepreneurship

சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊடக நிகழ்வில் நம் மண்ணின் தொழில் தூதுவர் என அழைக்கப்படும், நேட்டிவ் லீட்(Native Lead) முதலீடு நிறுவனத்தின் நிறுவனர் திரு. சிவராஜா ராமநாதன் அவர்கள் பேசினார். தொழிலுக்கும், தொழில்முனைவுக்கும் இடையேயான புரிதலே ஒருவரை சிறந்த வெற்றியாளராக மாற்றுகிறது. முன்னர், ஒருவர் தொழிலில் தோல்வியடைந்தால் அவர் தொழில் செய்வதற்கு தகுதியில்லை என்ற நிலை இன்று மாறி, கற்றல் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒரு நல்ல யோசனை, அதே வேளையில் அதனை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துதல் இருந்தாலே தொழில்முனைவில் வெற்றி சாத்தியம் தான். திரு. சிவராஜா அவர்கள் பேசிய சில தொழில்முனைவு சிந்தனைகள், ‘ இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட தொழில் புரட்சிகள் இந்த உலகத்தை மாற்றி யோசிக்க வைத்தன. ஆரம்ப காலத்தில் விவசாயம் சார்ந்த நிலை ஏற்பட்டாலும், பின்னாளில் இயந்திரவியல் சார்ந்த தொழில் புரட்சி உருவானது.

பின்பு, அந்த நிலை அறிவுசார் புரட்சியாக மாற்றப்பட்டது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் தகவல் பரிமாற்றம் எளிதானது. இதன் வெளிப்பாடாக புதுயுக தொழில்முனைவு(New Age Entrepreneurship) ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கும், தொழில் புரிதலுக்கும் எப்போதும் ஒரு பந்தம் இருந்து வருகிறது. இதற்கு சிறந்த சான்றாக பூம்புகாரை சொல்லலாம்.

உலகளவில் தமிழர்கள் வர்த்தகம் புரிந்து கொண்டதற்கு பல காலகட்டங்கள் சான்றுகளாக இன்றும் இருந்து வருகின்றன. அவற்றில் கீழடியும் ஒன்று தான். நூறு பேர் ஒரே தொழிலை செய்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அதே தொழிலில் புதுமையை புகுத்தி அதனை தொழில்முனைவாக மாற்றுவது தான் ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்கும்.

இன்றளவிலும் மதுரை நகரை பற்றி சினிமா துறையிலும், ஊடகங்களிலும் அதீத கற்பனைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. உண்மையில் மதுரை ஒரு தொழில் சார்ந்த நகரம். தமிழ் வரலாற்றை பிரதிபலிக்கும் பல விஷயங்கள் மதுரையில் இருந்து தான் துவங்கியுள்ளன. தொழில் புரிவது என்பது சமூக – பொருளாதார (Socio-economic) என்ற இரு நிலைகளை இணைப்பதாக இருக்க வேண்டும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளோர் இன்றும் தங்கள் தொழில் யோசனைகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், ஜெப் பெஸோஸ் போன்றோரை கொண்டாடுவது ஒன்றும் பெரிதல்ல, நம்மூரில் சிறு தொழில் செய்து வந்தாலும், புதுமையான யோசனைகளை வரவேற்று அவர்களை நாம் சிறந்த தொழில்முனைவோராக கொண்டாடுவதே நமக்கான மகிழ்வாக இருக்கும் ‘ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ‘ தொழில்முனைவில் ஒரு யோசனையை வெளிப்படுத்த ஆங்கிலம் தான் தேவை என்றில்லை. தனது தாய்மொழியிலும் அந்த கருத்தை வெளிப்படுத்தும் போது, அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகும். தொழிலுக்கான முதலீடு என இருக்காமல், தொழில்முனைவின் யோசனைகளை ஏற்று அவற்றில் இருக்கும் நேர்-எதிர்மறை தன்மைகளை கண்டறிந்து நீண்டகாலத்தில் உறவுகளை பேணுவதே எங்களின் இலக்கு ‘ என்றார்.

இன்றைய தொழில்முனைவில் மிகவும் அவசியமானது, வழிகாட்டுதல் மற்றும் அடைகாத்தல் (Mentorship & Incubation). ஒரு சதவீத யோசனையாக இருந்தாலும், அதனை சரியாக செயல்படுத்த திட்டமிடல் அவசியம். ஒரு தொழிலில் கிடைக்கப்பெறுவது வெறும் லாபமாக மட்டுமில்லாமல், சமூகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அந்த பெரு நகரத்துக்கு சென்றால் தான் தொழில் புரிய முடியும் என்ற கட்டமைப்பு உடைத்து, நாம் இருக்கும் இடத்திலும் நம்மால் தொழில்முனைவை ஏற்படுத்த முடியும். ஒரு தொழில் யோசனையை சரியாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றால், அதனை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற விவாதத்துக்கும் தயாராக வேண்டும்.

ஒரு தொழில்முனைவோர் என்பவர் சுயமரியாதை(Self Esteem), உள்ளுணர்வு(Intuition) மற்றும் தேடல்(Exploring) இந்த மூன்றையும் கலவையாக கொண்டவராகவே இருப்பார். ‘ ஆயிரம் பூக்கள் மலரட்டும் ‘ என்ற இலக்கை தனது நிறுவனத்தின் இலக்காக கொண்டு செயல்படுகிறார் இந்த மண்ணின் தொழில் தோழன்(Sivarajah Ramanathan). அதாவது அடுத்த 10 வருடங்களில் தமிழகத்தில் ஆயிரம் தொழில்முனைவோர்களை உருவாக்குவதே தங்களின் இலக்கு என கூறியுள்ளார்.

படித்து விட்டு, வேலை கிடைத்தால் நிம்மதி என்ற நிலையை தாண்டி, புது யோசனைகளை கொண்டு தொழில்முனைவில் ஈடுபடும் போது, நல்ல சமூக மதிப்பை ஏற்படுத்த முடியும். வேலைவாய்ப்புகளும் பெருகும், அது நாட்டின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil