கொரோனா வைரஸ் உலக சந்தையை நெருக்குகிறதா ?
Is Coronavirus hitting the Global Stock Market Indices ?
கடந்த இரண்டு வருடமாக இந்திய பங்குச்சந்தையில் பெருவாரியான பங்குகளின் ஏற்றம் என பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட சில பெருநிறுவன பங்குகளின் விலை ஏற்றதால், ஒட்டுமொத்த சந்தை குறியீடு (Nifty50, BSE Sensex 30) உயர்ந்துள்ளது. மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை எனலாம். இது போன்ற பங்குகளில் முதலீட்டு வாய்ப்பு உள்ளதா என கேட்டால், முழுமையான அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) தான் தீர்வாக அமையும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஏனெனில், பொருளாதார தேக்கம் மற்றும் வீழ்ச்சி போன்ற சமயங்களில் பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்து தான் காணப்படும். ஆனால் அனைத்து பங்குகளும் அதன் உண்மையான விலையில் வர்த்தகமாகாது. எனவே, சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையெனில், நம் முதலீடு நமது கையை சுட்டு கொள்ளும்.
கடந்த இரு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் பல உயிர்கள் மடிந்து விட்டன. இதன் தாக்கம் மற்ற நாடுகளிலும் வெகு வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிற்கும், பங்குச்சந்தைக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பலாம். கொரோனா வைரஸ் பரவி வருவது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், அடுத்த வல்லரசாக அமையும் சீனாவில் பரவி வருவது தான் சந்தைக்கு பாதகமாக உள்ளது.
சீன பொருளாதாரம் விழுந்தால், அது இந்திய சந்தைக்கு லாபம் என பலர் சொல்லிக்கொள்கின்றனர். உண்மையில், உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்காவில் ஒன்று நடந்தால் அது இந்தியாவையும் பாதிக்கும். நமது நாட்டின் அரசு கொள்கை மாறும் போது, எங்கோ இருக்கும் ஒரு குட்டி நாட்டையும் பாதிப்படைய செய்யும். சீனாவில் வைரஸ் தாக்குதல் இருந்து வருவது இந்தியாவிற்கு ஏற்றுமதி சாதகம் என நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. நாம் பல பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து வந்தாலும், அதற்கான மூலப்பொருட்களை சீனா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து பெற்று வருகிறோம். அமெரிக்கா – ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டால், அது நமக்கும் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்.
நமது நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில்(Total Imports) (2018ம் ஆண்டு முடிவு) சீனாவின் பங்களிப்பு 15 சதவீதமும், அமெரிக்கா 6.5 சதவீதம், சவுதி அரேபியா 5.7 சதவீதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5.4 சதவீதம் மற்றும் ஈராக் 4.6 சதவீத அளவிலும் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே வர்த்தகம் உள்ளதை நினைவில் கொள்ளவும். ஏற்றுமதியில்(Exports) நாம் அமெரிக்க நாட்டிற்கு தான் அதிகமாக அனுப்புகிறோம்.
கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கு செல்கின்ற நிலையில், வர்த்தகம் சம்மந்தமாக பல தொழில்புரிபவர்கள் பயணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இது போல பல நாடுகளில் தற்சமயம் மிகுந்த கட்டுப்பாடுகளும் உள்ளது. நம் நாட்டிற்கு தேவையான உலோகங்கள் மற்றும் மருத்துவ துறைக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து தான் வந்து கொண்டிருக்கிறது. இதன் தேவை அதிகமாக இருந்தும், இறக்குமதி அளவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல பொருட்களின் மீது விலையர்வு ஏற்படும்.
இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனத்தின் நிதி அறிக்கையை அலசினால் தெரிய வரும். வைரஸ் தாக்குதல் பதற்றத்தினால் பங்குச்சந்தை விழுந்தாலும், உண்மையில் நிறுவன காலாண்டு முடிவுகள் வரும் போது தான், அந்த பங்குகளின் விலை மாற்றம் தெரிய கூடும்.
கொரோனா வைரஸ் வெடிப்பு ஒரு தொற்று நோயாக(Pandemic) மாற வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால், அது மிகப்பெரிய விளைவை உலகளவில் நிகழ்த்தும். இதன் காரணமாக நடப்பாண்டில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, உலக பொருளாதாரமும் பலவீனமடைய கூடும் என மூடிஸ் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலகளவில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்க வங்கி வாடிக்கையாளர்கள், ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டு சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கலாம் என அமெரிக்காவின் பி.என்.ஒய். மெலன் கூறியுள்ளது.
நேற்றைய( இரவு – 28-02-20) சந்தை முடிவில் அமெரிக்காவின் நாஷ்டாக் குறியீடு 4.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த குறியீடு 13 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. லண்டன் புட்சி குறியீடு 3.5 சதவீதமும், பிரான்சின் சி.ஏ.சி. 3.32 சதவீதமும் மற்றும் ஜெர்மனி நாட்டின் டாக்ஸ் குறியீடு 3.20 சதவீத அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினத்தில் தற்போது ஜப்பான் நிக்கி 3.5 சதவீதம், ஹாங்காங் ஹேங் செங் 2.5 சதவீதம், தென்கொரியா கோஸ்பி 2.70 சதவீதம், சிங்கப்பூர் ஸ்ட்ரைட் டைம்ஸ் 2.19 சதவீதம் என இறக்கம் கண்டுள்ளது.
நல்ல நிறுவன பங்குகளை பட்டியலிடுங்கள். உபரி பணத்தை ஒதுக்குங்கள். பங்கு விலை குறைகிறதே என எல்லா பங்குகளையும் வாங்காதீர்கள். அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் பங்குகளை கவனியுங்கள். பணபலமும், நேர்த்தியான நிர்வாகமும் தான் சந்தையில் நிலைத்து நிற்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை