உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019
World’s Top 10 Countries – Global Wealth Report 2019
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கிரெடிட் சூசி(Credit Suisse) நிறுவனம் நிதி சேவை மற்றும் முதலீட்டு தொழிலை செய்து வருகிறது. உலகளாவிய செல்வ வளத்தை நிர்வகிக்கும் இந்நிறுவனம் 2019ம் ஆண்டுக்கான உலகின் செல்வ வளமுள்ள நாடுகளின் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி உலகில் உள்ள மொத்த செல்வம்(World Wealth) பணத்தின் அடிப்படையில் 360.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது.
உலகின் செல்வ வளம் படைத்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டின் படி, அமெரிக்காவின் வளம் 105.99 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட உலகின் 29.93 சதவீத வளத்தை அமெரிக்கா கொண்டிருக்கிறது கவனிக்கப்படவேண்டியது.
இரண்டாம் இடத்தில் சீனா 63.80 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உள்ளது. உலகின் மொத்த சொத்து மதிப்பில், சீனாவின் பங்கு 18 சதவீதமாகும். கடந்தாண்டு சீனாவிற்கு கடினமான காலமாக இருந்தாலும், தனது வளத்தை அதிகப்படுத்தி கொண்டது. மூன்றாம் இடத்தில் ஜப்பான் 25 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உள்ளது. இதன் பங்களிப்பு 6.93 சதவீதமாகும்.
நான்காம் இடத்தில் உள்ள ஜெர்மனி 14.66 டிரில்லியன் டாலர்களுடனும், ஐந்தாம் இடத்தில் ஐக்கிய ராஜ்ஜியம்(UK) 14.34 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளது. ஆறாவது இடத்தில் பிரான்ஸ் 13.73 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளது. இந்த நாட்டின் பங்களிப்பு மொத்த செல்வ வளத்தில் 3.80 சதவீதமாக உள்ளது.
உலகின் மொத்த மதிப்பு கடந்த 2018ம் ஆண்டை காட்டிலும் 2019ம் வருடத்தில் 9.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது. அதாவது 2.6 சதவீதம் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டில் வீட்டுக்கடன் மொத்தமாக 4 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது. அடுத்த ஐந்து வருடங்களில் உலகின் மொத்த செல்வ மதிப்பு 459 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இதன் மதிப்பு 12.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். மொத்த செல்வத்தில் நம் நாட்டின் பங்களிப்பு 3.5 சதவீதமாகும். இந்தியாவின் சொத்து மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிக வேகமாக வளரக்கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
2000 மற்றும் 2019க்கு இடையேயான காலங்களில் இந்தியாவின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவை விட மொத்த மக்கள் தொகையில் நம் நாடு நான்கு மடங்குகளை கொண்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட இந்திய நாட்டின் செல்வ மதிப்பு, கடந்த 70 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா இருந்த அளவாகும். வரும் 2024ம் ஆண்டின் முடிவில் நாட்டின் சொத்து மதிப்பு சுமார் 16 டிரில்லியன் டாலர்களாக செல்லலாம். அந்த அளவு, அமெரிக்கா கடந்த 1960ம் ஆண்டில் இருந்த அளவாக சொல்லப்படுகிறது.
எட்டாம் இடத்தில் இத்தாலி 11.35 டிரில்லியன் டாலர்கள், ஒன்பதாவது மற்றும் பத்தாம் இடம் முறையே கனடா, ஸ்பெயின் நாடுகள் உள்ளன. கனடா 8.57 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும், ஸ்பெயின் 7.77 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளது.
இந்தியாவில் தனிநபர் சொத்து மதிப்பு(Personal Wealth) பெரும்பாலும் வீட்டுமனை மற்றும் கட்டிடங்கள் சார்ந்தவையாக உள்ளது. தனிநபர் கடனும், அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 8 சதவீதமாக உள்ளது. பொதுவாக வளர்ந்த நாடுகளில் சொத்து மதிப்பை காட்டிலும் கடன் மிகக்குறைவாக தான் உள்ளன. அதே வேளையில் சொல்லப்பட்ட சொத்துக்கள் வளர்ந்த நாடுகளில் பரவலாக்கப்படவில்லை.
நம் நாட்டில் செல்வத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் வறுமையின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்தியாவை போன்ற வளர்ந்த நாடுகளில் வறுமையின் அளவு அதிகரிப்பது, 78 சதவீத மக்களின் செல்வ மதிப்பு சராசரி அளவை கூட தாண்டவில்லை என அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி(Wealth inequality) நம் நாட்டில் 83 சதவீதம் உள்ளதாக கினி குறியீடு குறிப்பிட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை