யெஸ் வங்கியில் என்ன ஆனது ? – இந்திய பொருளாதாரத்தை அசைக்கும் குட்டி (உண்மை) கதை
What happened to YES Bank ? – Banks that shook the Indian Economy
நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை அசைக்க வைத்த விஷயங்களில் கொரோனா வைரஸ் அல்ல, இம்முறை யெஸ் வங்கி. ஆம், யெஸ் வங்கியின் நிறுவனர் மற்றும் முன்னாள் இயக்குனர் திரு. ராணா கபூரின் மீது அமலாக்க இயக்குனரகம் பணமோசடி வழக்கு ஒன்றினை பதிந்துள்ளது நேற்றைய இரவின் செய்தி.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஏற்கனவே ஓரிரு வருடங்களுக்கு முன்பு, யெஸ் வங்கியின் பிரமிப்பான வளர்ச்சி பற்றியும், நிறுவனர் ராணா கபூரை பற்றியும் எழுதியிருந்தோம். யெஸ் வங்கியில் குடும்ப சண்டை ஆரம்பித்து நிர்வாக சீர்கேட்டில் முடிந்துள்ளது. பொதுவாக பங்குச்சந்தையை பொறுத்தவரை நூறு சதவீதத்திற்கு மேல் ரிஸ்க் தன்மை கொண்ட ஒரு முதலீட்டு சாதனமாக கருதப்படுகிறது. அதனால் தான் உங்களின் உபரித்தொகையை மட்டும் முதலீடு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
அடுத்த மாதம் வீட்டில் விசேஷம், ஆறு மாதத்திற்கு பிறகு நான் வாகனம் வாங்க சேமித்து வைத்துள்ளேன், வீட்டுக்கடன் வாங்கிய தொகையில் சிறு தொகை கையில் உள்ளது என இருக்கும் பணத்தை எல்லாம் பங்குச்சந்தையில் போட்டு விட்டு, பின்பு நஷ்டமடைந்தவுடன் பங்குச்சந்தை சரியில்லை, நிறுவனம் ஏமாற்று பேர்வழிகள் என புலம்ப கூடாது. உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் உங்களிடம் அவசரமாக ஒரு தொகையை கடனாக கேட்டாலே, நாம் யோசிக்க துவங்குவோம். ஆனால், பங்குச்சந்தையில் நமது பேராசை தான் பெரும்நஷ்டமாக செல்கிறது.
பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்களை சொல்லியிருந்தோம் – அவை நிறுவனர்கள், நிர்வாகம் மற்றும் நிதி அறிக்கைகள். இவற்றை புரிந்து கொள்ளாமல் சந்தைக்கு வருவதில் எந்த பலனும் இல்லை. சார்ட்(Charts), 52 வார ஏற்றம், இறக்கம் – இவற்றை எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம். சந்தையில் உள்ள நிறுவனத்திற்கு உண்மையான தொழில் தன்மை இருக்க வேண்டும். முதலாளி எப்படியானவர், அவர்களின் நிறுவனத்திற்கு சென்றால் நமக்கு காபி, டீ ஏதும் தருவார்களா, நீங்கள் வாங்கிய பங்கு நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(AGM) இதுவரை சென்றுள்ளீர்களா, நிறுவனத்திற்கு கடன் தன்மை(Debt to Equity) எப்படி உள்ளது, கல்லாவில்(Cash Flow) பணம் தேறுமா என்பதனை எல்லாம் அலசி ஆராய வேண்டும்.
புரியவில்லை என்றால், உங்கள் நிதி இலக்குகளை சார்ந்து மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யுங்கள். அங்கேயும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் – வங்கியிலும், அஞ்சலகத்திலும் தான். இல்லையெனில் தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு முதலீட்டு முடிவை எடுங்கள். முடிவின் பலன் சரியில்லை என்றால், அவரை ஒரு வழி பண்ணுங்கள். நல்ல ஆலோசகர் என்றால், உங்கள் கையை பிடித்து எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு கூட்டி செல்வார். என்ன யெஸ் வங்கி என ஆரம்பித்து, அப்புறம் வேறு எங்கோ சென்று விட்டீர்கள் என்கிறீர்களா ? பிரச்சனை யெஸ் வங்கியில் மட்டுமல்ல. பங்கு வர்த்தகத்திலும் தான். சத்யம், யூனிடெக், ஜே.பி. அசோஸியேட்ஸ், கிங் பிஷர் ஏர்லைன்ஸ், ஆர்.காம், ஜெட் ஏர்வேஸ் இவை எல்லாம் அதன் துறையில் பிரபலமான மற்றும் கொடி கட்ட பறந்த நிறுவனங்கள் – இன்று என்ன ஆயிற்று. நிறுவனர்களும், பெரும் பண முதலைகளும் பங்குகளை விட்டு வெளியேறினாலும், சிறு முதலீட்டாளர்கள் ஈக்கள் மொய்ப்பது போன்று அந்த பங்குகளை ஆயிரக்கணக்கில், லட்சத்தில் வாங்குகின்றனர். சில காலத்திற்கு பின்னர் அந்த பங்கு, சந்தையில் வர்த்தகமாவதில்லை அல்லது நிறுவனம் காணாமல் போய்விடும். பொதுவாக திவாலாக போகும் நிறுவனங்களின் ஜாதகம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே தெரிய வரும். அப்போதே நாம் எச்சரிக்கையாக இருக்க பழக வேண்டும். 50 பைசா பங்கு 10 ரூபாய்க்கு செல்லும், நான் கோடீஸ்வரனாகி விடுவேன் என கற்பனை செய்து கொண்டிருக்க கூடாது.
நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராணா கபூர்(Rana Kapoor) வலுக்கட்டாயமாக நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ‘ என்னுடைய பங்குகள் அனைத்தும் வைரங்கள், நான் அதனை ஒரு போதும் விற்க மாட்டேன் ‘ என கூறியவர், பங்குகளை அடமானமும் வைத்தார், பின்பு விற்றும் விட்டார். பெரும் முதலைகளுக்கு தெரிந்திருக்கும், அரசுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவரது மனைவிக்கு தெரிய வாய்ப்பில்லை. புதிய தலைவராக திரு. ரவ்நீத் கில்(Ravneet Gill) வந்தார், யெஸ் வங்கி இனி மீண்டு விடும் என பலர் கூறினர்.
யெஸ் வங்கி தனது செயல்பாட்டில் பிரமிப்பான வளர்ச்சியை நோக்கி செல்கிறது என காட்ட பட்டாலும், வங்கியை செயல்படுத்த முதலீடு தேவைப்பட்டது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தனர், பேசினர் மற்றும் சென்று விட்டனர். என்ன காரணமென்று வங்கி தலைமைக்கும், செபி மற்றும் ரிசர்வ் வங்கிக்கும் தெரிந்திருக்கலாம். நடப்பு வாரத்தில், வங்கி ஒழுங்குமுறை சட்டம் 45வது பிரிவின் கீழ் யெஸ் வங்கி அதன் அதிகாரங்களை பயன்படுத்த பாரத ரிசர்வ் வங்கி தடை விதித்தது. மேலும், வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது ரிசர்வ் வங்கி – மத்திய அரசின் துணையுடன்.
யெஸ் வங்கி(Yes Bank) அதிகமான கடன்களை கொண்டிருப்பதாகவும், ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட கடன் நிலுவைகள் உள்ளதாகவும், எனவே இந்த வங்கியை சீரமைக்க வங்கிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. யெஸ் வங்கியின் பங்குகள் ஒரே நாளில் 85 சதவீதம் வரை சரிவை கண்டது. பங்கு ஒன்றுக்கு ரூ. 36.80 விலையிலிருந்த நிலையில், அது ஒரே நாளில் ரூ. 5.65 வரை சென்றது. நேற்று தேசிய பங்குச்சந்தையில் மட்டும் யெஸ் வங்கியில் வர்த்தகமான பங்குகளின் எண்ணிக்கை 126.50 கோடி பங்குகள் !
டெலிவரி பங்குகளின் அளவு 19 %. நேற்றைய வர்த்தகத்தில் யெஸ் வங்கியின் விற்றுமுதல்(Turnover) ரூ. 1866 கோடி. கடந்த வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில், தலைவர் திரு. ரவ்நீத் கில், தங்களது வங்கியில் முதலீடு செய்ய ஒரு அந்நிய முதலீட்டு நிறுவனத்தை அழைத்துள்ளார். நீண்ட பேச்சுக்கு பின் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை பாரத ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ரிசர்வ் வங்கியும் சில ஆலோசனைக்கு பின், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தை முதலீடுகளை வரவு வைக்கும் படி கேட்டு கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கியை(SBI), யெஸ் வங்கியில் முதலீடு செய்ய ஒப்புதலை அளித்துள்ளது. அதே நாளின் மாலை நேரத்தில் எஸ்.பி.ஐ. மற்றும் எல்.ஐ.சி. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும், இயக்குனர் பதவியில் முன்னாள் எஸ்.பி.ஐ. அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் வெளியானது.
கடந்த ஆறு மாதங்களாக பாரத ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி துறையும் யெஸ் வங்கியின் செயல்பாடுகளை கண்காணித்து வந்ததாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இப்போது யெஸ் வங்கி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், மறுசீரமைப்பு(Reconstruction) நடவடிக்கையில் உள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களும் யெஸ் வங்கியில் முதலீடு செய்வதை கடந்த 2018-19ம் நிதியாண்டு முதலே குறைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள், அடுத்த ஏப்ரல் 3ம் தேதி வரை தங்கள் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு, டெபாசிட் தொகையில் அதிகபட்சம் ரூ. 50,000 வரை மட்டும் பெற முடியும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அவசர தேவைகளுக்கு ரூ. 50,000க்கு மேல் பணத்தை பெற விரும்புவோர் அதன் ஒப்புதலை பெற வேண்டும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த வங்கி பங்குகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக இலக்கு விலைகளை(Target Price) நிர்ணயித்த தரகு நிறுவனங்களை என்னவென்று சொல்வது. ‘ இதற்கு தான் நான் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதே கிடையாது, பங்குச்சந்தை ஒரு சூதாட்டம். நல்ல வேளை, நான் தப்பித்து விட்டேன் ‘ என கூறும் நபர்களா நீங்கள் ? நீங்களும் இந்த வலையில் மாட்டிக்கொண்ட ஒருவர் தான். பொதுவாக உலகமயமாக்கலுக்கு பிறகு, உலகின் எந்த மூலையில் பிரச்சனை ஏற்பட்டாலும், அது பொருளாதார ரீதியாக பெருவாரியான மக்களை பாதிக்கும். சொல்லப்பட்ட வங்கியின் பிரச்சனை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அரசுக்கு தேவை வரி வருவாய் தான். வரி ஏய்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அது நடுத்தர மக்களை தான் மேலும் பாதிக்கும். 20 சதவீத மக்கள் சரியாக இருந்தால், 80 சதவீத மக்கள் சுபிட்சமாக வாழ முடியும். நிறுவனங்கள் நேர்மையாக செயல்பட அரசும் தனது பங்களிப்பை அளிப்பது நன்று. அரசு தனது பங்காக சேவையை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்பட வேண்டும். பணம் பண்ணுவது அரசின் முக்கிய கொள்கையாக இருக்க கூடாது – அது தனியார் நிறுவனங்களின் வேலை. அவர்களை நேர்மையாக செயல்பட வைப்பதே அரசின் கொள்கை. வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்கள் தான் அதிகப்படியாக உருவாக்க வேண்டும். பங்குச்சந்தையில் என்ன நடந்தால் என்ன, யெஸ் வங்கியில் பிரச்சனை நடந்தால் நமக்கென்ன என ஒருவர் நினைத்து கொண்டிருந்தாலும், இது தொடர் சங்கிலி தான். நிர்வாக சீர்கேட்டில் யெஸ் வங்கியாக இருந்தால் என்ன, டாட்டா நிறுவனமாக இருந்தால் என்ன – இங்கே பிராண்டுகளுக்கு வேலையில்லை, நல்ல நிர்வாகம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பங்கை நீண்ட நாட்களுக்கு பங்குதாரர்களிடம் வைத்திருக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
நிறைய தகவல்கள்..அருமை..
LikeLike