Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை 

The Indian Stock Market lost $ 200 Billion in 20 days – Economic Slowdown

 

தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிப்டி(Nifty50) கடந்த ஜூன் மாதத்தில் தனது வாழ்நாள் உச்சமாக 12,100 புள்ளிகளை அடைந்தது. நேற்று (01-08-2019) நிப்டி50 குறியீடு 138 புள்ளிகள் குறைந்து 10,980 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்து கொண்டது. இதே போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) குறியீடு, ஜூன் மாதத்தில் வாழ்நாள் உச்சமாக 40,310 புள்ளிகள் வரை சென்றது. நேற்று சென்செக்ஸ் குறியீடு 37,018 புள்ளிகள் என்ற அளவில் முடிந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த நான்கு வாரங்களில் நிப்டி50 சுமார் 1220 புள்ளிகளும், மும்பை சந்தையின் சென்செக்ஸ் 3,300 புள்ளிகளும் இறக்கத்தை கண்டுள்ளன. அதாவது வர்த்தகமான கடந்த 20 நாட்களில் இந்திய பங்குச்சந்தை சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிலான மதிப்பை இழந்துள்ளது எனலாம். இந்திய மதிப்பில் சுமார் 13.85 லட்சம் கோடி ரூபாய்.

 

நாட்டின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறாத நிலையில், அதனை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையும் இறக்கம் கண்டது. ஜூலை மாதத்தில் பெரும்பாலான பங்குகள் 20 சதவீதத்திற்கும் மேல் இறக்கத்தில் முடிந்தது கவனிக்கத்தக்கது.

 

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை(Economy Slowdown), நாட்டில் உள்ள தொழில், வேலை வாய்ப்பு மற்றும் வாகன துறைக்கு தேவையான மத்திய அரசின் முடிவுகள் எட்டப்படாதது ஆகியவை சந்தையை பாதித்துள்ளன. அரசு சார்பில் மின்சார வாகனத்திற்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே சந்தையில் இருக்கும் வாகனங்களுக்கு வரி சலுகை குறைப்பு ஏற்படாத நிலையில் இந்த துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

 

வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தொடர்ச்சியாக வருவாய் குறைந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணமாக மத்திய அரசு சரியான கொள்கைகளை வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. அதே வேளையில், அடுத்த ஓரிரு வருடங்களில் இந்த நிலை சரிசெய்யப்பட்டு, வாகன துறை மற்றும் நாட்டில் உள்ள மற்ற தொழில்கள் மேம்படும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பு சாதகமாக இல்லை. இதன் காரணமாக கடந்த மாதத்தில் சுமார் 16,870 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இருப்பினும் ஜூலை மாதத்தில் உள்நாட்டு முதலீடு 20,400 கோடி ரூபாய் சந்தைக்குள் வந்துள்ளது.

 

கடந்த ஒரு மாதத்தில் தேசிய பங்குச்சந்தை நிப்டி 7.5 சதவீதமும், சென்செக்ஸ் 6.7 சதவீதமும் இறக்கத்தை கண்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் சந்தை இறங்கும் பட்சத்தில், நிப்டி(Nifty) 10,600 மற்றும் 10,480 புள்ளிகளை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சந்தையில் தற்போது குறுகிய காலத்தில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து 10-20 சதவீத இறக்கத்தில் சிறுக சிறுக முதலீடு செய்து வரலாம். வாகன துறை கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதமும், ஒரு வருட காலத்தில் 38 சதவீதமும் இறக்கத்தில் உள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

யார் இந்த காபி டே நிறுவனர் – சித்தார்த்தா ?

யார் இந்த காபி டே நிறுவனர் – சித்தார்த்தா ?

The Story of Cafe Coffee Day Founder – V G Siddhartha 

 

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிறந்தவர் வி.ஜே. சித்தார்த்தா ஹெக்டே(Siddhartha Hegde). இள வயது முதலே துடிப்பாக விளங்கிய சித்தார்த்தா தனது முதுகலை பட்டப்படிப்பை பொருளாதாரத்தில் பெற்றார். தனது 24வது வயதில் ஜே.எம். மார்கன் ஸ்டான்லி (அப்போது J M Financial) நிறுவனத்தின் மேலாண்மை பிரிவில் பணியாளராக சேர்ந்தார்.

 

சித்தார்த்தாவின் குடும்பம் காபி தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தாலும், தனது தந்தையிடம் ரூ. 30,000 ஐ முதலீடாக பெற்று கொண்டு, பங்குகளை வாங்க ஆரம்பித்தார். பின்னர் 1999ம் ஆண்டு சிவன் செக்யூரிட்டீஸ் என்ற பெயரில் நிதி சேவை தொழிலில் களமிறங்கினார். இதனிடையே 1993ம் வருடம் எ.பி.சி.(Amalgamated Bean Company) என்ற காபி வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எ.பி.சி. நிறுவனம் ஆண்டுக்கு 28,000 டன்கள் காபியை ஏற்றுமதி செய்து வந்தது. அப்போதே நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 25,000 கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்தது. நிறுவன லாபத்தினை கொண்டு சுமார் 12,000 ஏக்கர் அளவை கொண்ட காபி தோட்டத்தை வாங்கினார் சித்தார்த்தா.

 

1996ம் ஆண்டு வாக்கில் சித்தார்த்தா காபி சிற்றுண்டி சாலை ஒன்றை துவக்கினார். இது தான் தற்போதைய கஃபே காபி டே(Cafe Coffee Day) நிறுவனம். காபி டே சிற்றுண்டி சாலையில் வாரத்திற்கு 50,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட காபி டே கிளைகள் உள்ளன. 

 

நிதி சேவையில் தான் ஆரம்பித்த சிவன் செக்யூரிட்டீஸ் நிறுவனம், தற்போது Way2Wealth செக்யூரிட்டீஸ் என்ற பெயராக மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. இளம் வயதில் அயராத உழைப்பு, கனிவான சேவை போன்றவற்றால் சித்தார்தாவின் தொழில் விரிவடைந்தது. ஐ.டி. துறை, மரச்சாமான்கள்(Daffco Furniture), சரக்கு போக்குவரத்து, வாழைப்பழ ஏற்றுமதி(Banana Exports) என பல தொழில்களில் கால்பதித்தார்.

 

காபி வர்த்தகத்தில் கர்நாடக மாநிலத்தின் முதல் தொழில்முனைவோராகவும், காபி ஏற்றுமதி மற்றும் உள்நாட்டில் காபி நுகர்வில் இவருடைய பங்கு முக்கியத்துவமாக இருந்தது. 2003ம் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோராகவும், 2011ம் ஆண்டின் சிறந்த அடுத்த தலைமுறை(NextGen) தொழிலதிபராகவும் சொல்லப்பட்டார்.

 

தொழிலில் வெற்றிகரமாக சித்தார்த்தா செயல்பட்டு வந்தாலும், 2017ம் வருடத்தில் இவரது நிறுவன கிளைகளில் நடந்த வருமான வரி சோதனை பல சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியது. சமீபத்தில் மைண்ட் ட்ரீ(Mind Tree) நிறுவனம் எல் & டி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் இவருக்கு பங்குகள் மற்றும் இயக்குனர் குழுவில் பொறுப்புகள் இருந்த நிலையில், நிறுவன கையகப்படுத்துதலில் சித்தார்த்தாவிற்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்பட்டது. முடிவில் காபி டே நிறுவனம், மைண்ட் ட்ரீ பங்குகளை விற்று விட்டு சென்றது.

 

சில மாதங்களுக்கு முன்பு, காபி டே நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை கோகோ கோலா(Coco Cola) நிறுவனம் வாங்குவதற்கான பேச்சு நடைபெற்றது. இவற்றிலும் சித்தார்தாவிற்கு அதிருப்தி இருந்துள்ளது. கடந்த 29ம் தேதி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட காபி டே நிறுவனர் சித்தார்த்தா நேற்று காலை (31-07-2019) மங்களூரு நேத்ராவதி ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

 

24 வயதில் துடிப்பாக செயல்பட்ட இளைஞர், தனது 60ம் வயதில் நேற்று மர்மமான முறையில் வாழ்வு முற்று பெற்றது. இறப்பிற்கு முன்பு, தனது நிறுவன அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில் தான் தொழில்முனைவோராக தோல்வியடைந்து விட்டதாகவும், சமீப காலமாக பல நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

 

இன்றும் காபி டே கடைகள், பல சிறு தொழில்முனைவோர்களின் தொழில் பேசும் மன்றமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொழிலதிபர்களில் மிகவும் கனிவான பேச்சையும், காபி டே பணியாளர்கள், வாடிக்கையாளர்களை புன்னைகையுடன் வரவேற்கும் நிகழ்வும் சித்தார்தாவின் நினைவுகளாக கூறப்படுகிறது.

 

சிறு தொழில்முனைவோர்களான விவசாயிகள் தங்கள் தொழில்களை செய்ய முடியாமல் மோசமான முடிவுகளை எடுக்கும் நிலையில், தற்போது பெரிய நிறுவன தொழிலில் ஈடுபட்டுள்ள இவரை போன்றோரின் மரணமும் தொழிலுலகிற்கு பாதகமானது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

பஜாஜ் ஆட்டோ நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 1,126 கோடி

பஜாஜ் ஆட்டோ நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 1,126 கோடி

Bajaj Auto reports a net profit of Rs. 1,126 Crore in Q1FY20

 

2019-20 ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிகர லாபமாக ரூ. 1,126 கோடியை ஈட்டியுள்ளது. ஜூன் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் விற்பனை 7,756 கோடி ரூபாயாகவும், செலவினம் 6,558 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவன இயக்க லாபம்(Operating Profit) சொல்லப்பட்ட முதலாம் காலாண்டில் ரூ. 1,198 கோடியாகும். இயக்க லாப வளர்ச்சி 15 சதவீதத்திலும், இதர வருமானமாக 441 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,579 கோடியாக இருந்துள்ளது.

 

2018-19ம் நிதியாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருவாய் 30,250 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 4,675 கோடி ரூபாயாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிகர லாபம் கடந்த பத்து வருட காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச நிதியாண்டு லாபம் ஆகும்.

 

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales growth) கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது. இது போல, நிறுவன லாப வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 6 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமாகவும் இருந்துள்ளது.

 

நிறுவன கையிருப்பு(Reserves) 2018-19ம் நிதியாண்டின் முடிவில் 21,491 கோடி ரூபாயாக இருக்கிறது. ஈவு தொகை விளைச்சல்(Dividend yield) 2.25 சதவீதமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடனும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதன் கடன்-பங்கு விகிதம் 0.01 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது.

 

வாகனத்துறையில் தற்போதுள்ள சுணக்க நிலையால், மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனத்தின் காலாண்டு லாபம் 27 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1,435 கோடி. விற்பனை குறைவால் மாருதி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வண்ணங்களின் நாயகன், ‘ஏசியன் பெயின்டஸ்’ காலாண்டு லாபம் ரூ. 655 கோடி

வண்ணங்களின் நாயகன், ‘ஏசியன் பெயின்டஸ்’ காலாண்டு லாபம் ரூ. 655 கோடி 

Asian Paints Q1Fy20 – Quarterly Net profit to Rs. 655 Crore

 

சந்தையில் சுமார் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் மதிப்பை கொண்டுள்ள ஏசியன் பெயின்டஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளிவந்தது. 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 655 கோடியாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஜூன் மாத காலாண்டில் நிறுவன வருவாய் ரூ. 5,131 கோடியாகவும், செலவினங்கள் 3,974 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம்(Operating profit) ரூ. 1,156 கோடியாகவும், சொல்லப்பட்ட ரூ. 655 கோடி நிகர லாபம், கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

 

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 4,390 கோடியாகவும், நிகர லாபம் 557 கோடி ரூபாயாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. கடந்த பத்து வருட காலங்களில் ஏசியன் பெயின்டஸ்(Asian Paints) நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 18.50 சதவீதமாகவும் இருக்கிறது.

 

அலங்கார(Decorative) பிரிவில் பெற்ற இரட்டை இலக்க வளர்ச்சி, ஜூன் மாத காலாண்டின் நிகர லாபத்திற்கு துணை புரிந்துள்ளது. இருப்பினும் வாகன(Automotive) பிரிவில் நிறுவனத்தின் வருவாய் இம்முறை குறைந்துள்ளது. உலகளவில் வாகனத்துறையில் காணப்படும் மந்த நிலையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

 

மூலப்பொருட்களின் விலைகளும் பெயிண்ட் துறைக்கான வளர்ச்சிக்கு சாதகமாக இருந்துள்ளன. பங்கின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 27 சதவீதமும், பத்து வருட காலத்தில் 30 சதவீதமும் கொடுத்துள்ளன. மார்ச் 2019ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) ரூ. 9,424 கோடியாகும்.

 

நிறுவனர்களில் பங்களிப்பில் சுமார் 12 சதவீத பங்குகள் அடமானம்(Promoters Pledging) செய்யப்பட்டுள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.07 புள்ளிகளாகவும், கடந்த மூன்று வருட விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும் உள்ளது. தற்போதைய பங்கின் விலை, நிறுவனத்தின் புத்தக மதிப்பில்(Price to Book value) 15 மடங்காகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

Deadline Extended to 31st August – IT Returns Filing for Individuals

 

நேற்று மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டதாவது, தனி நபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் ஜூலை 31ம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 31ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இது 2018-19ம் நிதியாண்டில் பெற்ற வருமானத்திற்கு வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடுவாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நேரடி வரிகளின் மத்திய வாரியம்(CBBT) தனது அறிக்கையில், ‘ 2018-19ம் நிதியாண்டுக்கான வருவாயை 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் வரி தாக்கல் செய்ய வேண்டும். தனி நபர் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31. ஆனால் இம்முறை நிறுவனத்திடம் இருந்து பணியாளர்கள் படிவம் 16(Form 16) ஐ பெறுவதில் காலதாமதமாக ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான படிவம் 16ஐ நிறுவனம் ஜூலை 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் ‘ என சொல்லப்பட்டிருந்தது.

 

இதன் காரணமாக வரி தாக்கல் செய்வதில் தனி நபர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தற்போது தனி நபர் வரி தாக்கலுக்கான காலக்கெடுவை ஜூலை 31ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ம் தேதியாக அறிவித்துள்ளது. கடந்த வருடமும் இதே போல வரி தாக்கல் காலக்கெடு மாற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.

 

தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு காலக்கெடுவில் மாற்றம் எதுவும் சொல்லப்படவில்லை. நடப்பு 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை வரி தாக்கல்(Income Tax Returns Filing) செய்தவர்களின் எண்ணிக்கை 36.14 லட்சம். சுமார் 2.6 கோடி பேர் பான் – ஆதார் அட்டையை இணைக்கவில்லை என வருமான வரி தளம் சொல்லியிருக்கிறது.

 

வருமான வரி தாக்கலில் இம்முறை ஆதார் இணைப்பை ஏற்படுத்தா விட்டால் வரி தாக்கல் செய்ய இயலாது. அதனால், வரி தாக்கல் செய்யும் முன் பான் – ஆதார் இணைப்பை(PAN – Aadhaar linking) ஏற்படுத்தி விட்டு, பின்பு வரி தாக்கல் செய்வது நல்லது. காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பான் – ஆதார் இணைப்பில் சிக்கல் இருக்கும் பட்சத்தில் அதனை தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் இடைப்பட்ட நாட்களில் சரி செய்து கொள்ளலாம்.

 

பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்து கொள்ளலாம் என நடப்பு 2019 பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பான் எண்ணுக்கு மாற்றாக தற்போது ஆதார் எண்ணும் பார்க்கப்படுகிறது. ஆதார் தகவலில் பொதுவாக பிழைகள் இருப்பின், அதனை சரி செய்து கொள்வது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தாது.

 

(Image source: @stpatsschool.org)

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்படுமா ?

வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்படுமா ?

Will the tax rates be reduced for Automotive sector in India ?

 

வாகனத்துறையின் வளர்ச்சி கடந்த சில காலங்களாக தொய்வு நிலையில் காணப்படுகிறது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர் மற்றும் எல்லை பதற்றம் வாகனத்துறையை பாதித்துள்ளது எனலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், உள்நாட்டில் வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதமும்(GST rates), காப்பீடு ப்ரீமியமும்(Insurance) சாதகமாக இல்லை. பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் வாகனத்துறையை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. அதன் விற்பனை ஒவ்வொரு காலாண்டிலும் சரிவடைந்து கொண்டு தான் செல்கிறது.

 

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான வரி விகிதம் 28 சதவீதமாக உள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு அதற்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க முனைந்தது.

 

நடப்பு வாரத்தில் இது சார்ந்த வரி விகித மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய சக்தி மூலமான மின்சாரம் மற்றும் காற்றாலை(Wind Turbine) திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

வரும் வியாழக்கிழமை (25-07-2019) ஜி.எஸ்.டி. குழு கூட்டம் நடைபெற உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் வரி விகித மாற்றம் இருக்காது எனவும், தற்போதைக்கு அரசு மின்சார வாகனத்திற்கான வரி விகிதங்களை மட்டுமே கருத்தில் கொள்ளும் எனவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

எச்.டி.எப்.சி. வங்கியின் முதலாம் காலாண்டு லாபம் ரூ. 5,568 கோடி

எச்.டி.எப்.சி. வங்கியின் முதலாம் காலாண்டு லாபம் ரூ. 5,568 கோடி 

HDFC Bank Q1FY20 Net profit to Rs. 5,568 Crore

 

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank), வங்கி சேவை மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட இந்த வங்கியின் சந்தை மதிப்பு(Market Cap) சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2019-20ம் நிதியாண்டின் முதலாம் (ஜூன்) காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் ரூ. 27,392 கோடியாகவும், நிகர லாபம் 5,568 கோடி ரூபாயாகவும் உள்ளது. நிகர வட்டி வருவாய்(NII) 13,295 கோடி ரூபாயாக இருந்தது.

 

இதர வருமானமாக ரூ. 4,970 கோடியும், மொத்த வாராக்கடன்(Gross NPA) அளவு ஜூன் காலாண்டில் 1.4 சதவீதமாக உள்ளது. கடன்களுக்கான ஏற்பாடாக(Provisions) ரூ. 2,613 கோடி இருந்துள்ளது. இருப்பினும் நிகர வாராக்கடன் அளவு கடந்த காலாண்டில் 0.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலாண்டில் 0.41 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வங்கியின் நிதி சேவையில் வைப்பு நிதி அளவு 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. வங்கியின் கடன் புத்தகமும்(Loan Book) ஜூன் மாத காலாண்டில் 17 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் நிதி விளிம்பு(Financial Margin) 13 சதவீதமாகவும், வரிக்கு முந்தைய லாபம் 8,534 கோடி ரூபாயாக உள்ளது.

 

கடந்த 10 வருட காலத்தில், எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் 20 சதவீத வளர்ச்சியையும், கூட்டு லாபம் 25 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளது. பங்குதாரர்களுக்கு கடந்த ஐந்து வருட காலத்தில் 17.72 சதவீதமும் மற்றும் 10 வருட காலத்தில் 18 சதவீத முதலீட்டின் மீதான வருவாயை(ROE) தந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் – ஜூலை 31

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் – ஜூலை 31

Deadline for Filing Income Tax Returns – July 31, 2019

 

பட்ஜெட் 2019ம் ஆண்டு தாக்கலும் நடப்பு மாதத்தில் முடிந்தாகி விட்டது. வருமான வரி சார்ந்து சொல்லப்பட்ட விஷயங்கள் அடுத்த 2020-21ம் மதிப்பீட்டு ஆண்டில் செய்ய வேண்டியது(வரி தாக்கல்) என்பதை நினைவில் கொள்ளவும். கடந்த 2018-19ம் நிதியாண்டின் வருமானத்துக்கான வரி தாக்கல் நடப்பு 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் செய்ய வேண்டியவை.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனிநபர், இந்து கூட்டு குடும்பம்(HUF), சங்கம்(Association of persons) மற்றும் தனிநபர் அடங்கிய அமைப்பு ஆகியோர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் ஜூலை 31ம் தேதியாகும். கணக்குகள் தணிக்கைக்கு உட்படாத தனிநபர்கள் மட்டுமே ஜூலை 31ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்ய வேண்டும். தணிக்கைக்கு உட்பட்ட(Audited) தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2019.

 

வருமான வரி தாக்கல் இணையதள தகவலின் படி, ஜூன் மாதம் வரை பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை 8.56 கோடி. வருமான வரி துறையின் மூலம் அளிக்கப்பட்ட சேவையால் 45 சதவீத வரி தாக்கல் நடைபெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநில வாரியாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 4.17 லட்சம் பேர் தமிழகம் சார்பாக தாக்கல்(Filing Returns) செய்துள்ளனர்.

 

Income Tax Returns (Filing) – Plan & Benefits

 

அதிகபட்சமாக வரி தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்கள் முன்னணியில் உள்ளது. வருமான வரி தாக்கல் சேவையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பிறகு, வரி தாக்கல் படிவங்கள் கடினமாக இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. இதனை வருமான வரி துறை முற்றிலும் மறுத்துள்ளது.

 

மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பின், அனைத்து வரி படிவங்களும் எளிமையாக இருப்பதாகவும், அது சார்ந்து பயனர்களின் கருத்துக்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக வருமான வரி துறை கூறியுள்ளது. நடப்பு மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய இயலாதவர்கள், காலக்கெடுவை கடந்தும் வரி தாக்கல் செய்யலாம். இதனை காலங்கடந்த அல்லது தாமதமான வரி தாக்கல்(Belated Returns – ITR) என்பர்.

 

தாமதமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31,2020. காலங்கடந்த வரி தாக்கல், அதாவது ஜூலை 31ம் தேதிக்கு பின்பு, ஆனால் மார்ச் 31, 2020க்குள் வரி தாக்கல் செய்பவருக்கு அபராத கட்டணமாக ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை விதிக்கப்படும். ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் காலங்கடந்த வரி தாக்கலை செய்யும் பட்சத்தில், அதிகபட்சமாக ரூ. 1,000 வரை அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.

 

வருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் போது, அபராத கட்டணத்தை தவிர்க்கலாம். அதே வேளையில் வருமான வரி சலுகையை பெறும் பொருட்டு, கடைசி நேர காப்பீடு மற்றும் முதலீட்டை மேற்கொள்வது நல்லதல்ல. ஒரு நிதியாண்டின் துவக்கத்திலேயே நமக்கான நிதி இலக்குகளை(Financial Goals) அறிந்து, திட்டமிட்டு முதலீட்டை மேற்கொள்வது சிறந்தது. வரி சலுகைக்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

 

வர்த்தக போர் – இந்தியாவின் ஏற்றுமதி சரிந்தது

வர்த்தக போர் – இந்தியாவின் ஏற்றுமதி சரிந்தது 

India’s Exports Plummet – Trade war Impact

 

நடப்பு 2019ம் வருடத்தில் முதல் முறையாக நாட்டின் வணிக ஏற்றுமதி(Exports) அளவு சரிவடைந்துள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கடந்த ஜூன் மாதம் வணிக ஏற்றுமதியின் மதிப்பு 25.01 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், இது கடந்த 2018ம்  வருடத்துடன் ஒப்பிடும் போது 9.71 சதவீத வீழ்ச்சி எனவும் சொல்லப்பட்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த ஒன்பது மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக ஜூன் மாதத்திற்கான ஏற்றுமதி உள்ளது. இதனை போல நாட்டின் இறக்குமதியும்(Imports) 9 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் வணிக ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 40.29 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 

ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள் 33 சதவீதமும், ரத்தினங்கள் மற்றும் அணிகலன்கள்(Gems & Jewellery) 11 சதவீதமும், அரிசி 28 சதவீதமும், பொறியியல் பொருட்கள் சுமார் 3 சதவீத அளவிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே வேளையில் இரும்பு தாது(Iron ore) ஏற்றுமதி 155 சதவீதம், மின்னணு பொருட்கள் 44 சதவீதம், மட்பாண்டம் மற்றும் கண்ணாடி பொருட்களின் ஏற்றுமதி 20 சதவீதமும் ஜூன் மாதத்தில் வளர்ச்சியை கண்டுள்ளன.

 

ஏற்றுமதி பொருட்களில் மசாலா மற்றும் மருந்து பொருட்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளன. ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.69 சதவீதம் சரிந்து 81.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஜூன் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 15.28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

 

இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பு ஜூன் மாதத்தில் 9 சதவீத சரிவை சந்தித்துள்ள நிலையில், முத்துக்கள் மற்றும் விலை மதிப்பற்ற கற்கள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எந்திரங்கள், மின்சார பொருட்கள் ஆகியவை காரணமாக அமைந்துள்ளன. ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் இறக்குமதி அளவு 0.29 சதவீதம் குறைந்து 127.04 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

 

நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரிவிற்கு பெரும்பாலும் அமெரிக்க – சீன வர்த்தக போர்(Trade war) தான் காரணமாக இருந்துள்ளது. அமெரிக்க நாட்டிற்கான இறக்குமதியை அதிகமாக கொண்டிருக்கும் நாடு சீனா. கடந்த ஜூன் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 1.3 சதவீதமும், இறக்குமதி 7.3 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்வு

ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்வு 

CPI Retail Inflation rises to 3.18 % in June 2019

 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 3.18 சதவீதமாக காணப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதம் 3.05 சதவீதமாக இருந்துள்ளது. உணவு பொருட்களின் விலை(Food Prices) அதிகரிப்பால் கடந்த சில மாதங்களாக சில்லரை விலை பணவீக்க விகிதம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இருப்பினும் சொல்லப்பட்ட பணவீக்கம் பாரத ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கை விட குறைவாகவே உள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 11 மாதங்களாக நாட்டின் சில்லரை பணவீக்க(CPI Retail Inflation) விகிதம் 4 சதவீதத்திற்கும் குறைவாக தான் உள்ளது. இதற்கு முன் ஜூலை 2018ம் காலத்தில் சில்லரை பணவீக்கம் 4.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த ஒன்பது வருட காலத்தில் சராசரியாக 6.08 சதவீதமாக அமைந்தது.

 

உணவு பொருட்களின் பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 2.17 சதவீதம் உயர்ந்துள்ளது. இது கடந்த ஒரு வருட காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். மீன் மற்றும் மாமிசம் 9 சதவீதமும், காய்கறிகள் 4.66 சதவீதமும், பருப்பு வகைகள்(Pulses) 5.68 சதவீதம் என்ற அளவிலும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

 

எண்ணெய் மற்றும் கொழுப்பு 0.74 சதவீதம் மற்றும் பால் பொருட்கள் 0.63 சதவீதமாக உள்ளது. வீட்டு மனைக்கான(Housing) பணவீக்க விகிதமும் 4.84 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஒளி மற்றும் எரிபொருளின்(Fuel & Light) விலை 2.32 சதவீதமாகவும், துணிமணிகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றின் விலை 1.52 சதவீதமாக ஜூன் மாதத்தில் உயர்வாக இருந்துள்ளது.

 

பணவீக்கம் குறைந்து காணப்படும் நிலையில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி(Industrial Production) மே மாதத்தில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது சொல்லப்பட்ட உற்பத்தி வளர்ச்சி குறைவாகும். இருப்பினும், கடந்த ஏப்ரல் மாத மறுமதிப்பீடு உற்பத்தி அளவுடன் ஒப்பிடும் போது, மே மாத வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் சுரங்க துறையில் வளர்ச்சி குறைவாக காணப்படுகிறது.

 

மத்திய நிதிக்கொள்கை குழுவின் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், பணவீக்கம் மற்றும் தொழில்துறை(IIP) உற்பத்தி குறைவின் காரணமாக,  மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்படலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com