Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் வரும் நாட்களில் அதிகரிக்குமா ?

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் வரும் நாட்களில் அதிகரிக்குமா ?

Will the Unemployment Rate in India increase in the coming days ?

 

நாம் முன்னொரு முறை, ‘ வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? ‘ என்ற தலைப்பில் வர்த்தக மதுரை இணைய பக்கத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சார்ந்த பதிவை எழுதியிருந்தோம். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 30 வருடங்களில் தற்போது தான் அதிகளவாக காணப்படுகிறது. இதற்கு முன்பு, கடந்த 1983ம் ஆண்டில் காணப்பட்ட 8.30 சதவீதம் தான் நாட்டின் அதிகபட்ச அளவாக சொல்லப்படுகிறது. குறைந்த விகிதமாக கடந்த 2011ம் ஆண்டில் 3.53 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதம் நிலவியுள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.19 சதவீதமாக உள்ளது. நகர்புறத்தில் 9.71 சதவீதம் எனவும், கிராமப்புறங்களில் 7.48 சதவீதம் எனவும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு(CMIE) சொல்கிறது. 1983ம் ஆண்டு முதல் கணக்கிடும் போது, இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சராசரியாக 4.32 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

 

தற்போது நடைமுறையில் வேகமாக வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டின் அளவு சற்று அதிகமே. வெறும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை மட்டுமே நாம் கருத்தில் எடுத்து கொள்ள முடியாது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP), நிதி மற்றும் வர்த்தக பற்றாக்குறை ஆகியவற்றையும் நாம் கவனிப்பது அவசியமாகும். 

 //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment Rate) ஒருபுறம் சொல்லப்பட்டாலும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை மற்றும் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் சரியான அளவில் தென்படவில்லை. இந்த தகவல்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அவை நாட்டின் பொருளாதாரத்திற்கு துணைபுரிகிறதா அல்லது உண்மையில் வேலைவாய்ப்பின்மை ஐயம் ஏற்பட்டுள்ளதாக என்பதனை அறியலாம். 

 

உள்நாட்டில் வட மாநிலங்களை காட்டிலும், தென் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவாகவே காணப்படுகிறது. குறைந்தபட்ச அளவாக கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 0.7 சதவீதம் உள்ளது. இது தான் இந்தியாவின் குறைந்தபட்ச மாநில அளவாகும். ஆந்திராவில் 3.7 சதவீதமும், தமிழகத்தில் 5.8 சதவீதமும் மற்றும் கேரளாவில் 9.1 சதவீதமும் உள்ளது. தெலுங்கானாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

 

அதே போல தென் மாநிலங்கள் தவிர்த்து, குஜராத்தில் 3.9 சதவீதமும், கோவாவில் 3.7 சதவீதமும், ஒடிசாவில் 3.6 சதவீதமும், மேற்கு வங்காளம் 6.1 சதவீதம் மற்றும் சிக்கிமில் 2.1 சதவீதம் என்ற அளவிலும் வேலைவாய்ப்பின்மை குறைந்த விகிதமாக அமைந்துள்ளது.

 

உ.பி.(U.P) யில் 12.3 சதவீதமும், ராஜஸ்தானில் 13.1 சதவீதம், பீகார் 11.8 சதவீதம், ஜார்கண்ட் 14.3 சதவீதம், ஹரியானாவில் 28.7 சதவீதம், டெல்லியில் 13.6 சதவீதம் மற்றும் திரிபுராவில் 27.9 சதவீதம் என்பது அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டுள்ளது. 

 

வரும் நாட்களிலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்கலாம் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் பெறும் நிலையில், இது சிறிதளவு மாறுபடலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

இனி ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது – பி.எம்.சி. வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை

இனி ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது – பி.எம்.சி. வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை 

No more than Rs.1000 on withdrawal amount for the next Six Months – RBI’s restriction for PMC Bank

வங்கியில் முறைகேடு நடைபெற்றதாகவும், வங்கி ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் நாட்டில் உள்ள ஒரு வங்கிக்கு பாரத ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமீப வருடங்களாக வங்கியின் நிதிநிலைமை மோசமடைந்து வருவதும், அதனை மீட்டெடுக்க மத்திய அரசு பணத்தை வாரி இறைப்பதும் நடந்த வண்ணம் உள்ளது.

பொதுவாக வங்கிகளில் ஏற்பட்ட பிழைக்கு, வங்கி வாடிக்கையாளர்களே பொறுப்பெடுக்கும் நிலை உள்ளது. நாட்டின் முக்கியமான கூட்டுறவு வங்கியாக பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி( PMC) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியுள்ளதாக சில தடைகளை சந்திக்க உள்ளது.

அதன் படி, இனி இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய்க்கு மேல் தங்கள் பணத்தை எடுக்க முடியாது. இந்த நடவடிக்கை அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் எனவும், பி.எம்.சி. வங்கி இனி மேல் புதிய கடன்களை அளிக்க கூடாது எனவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெறக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு விதிக்கப்பட்ட கெடுபிடியால் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிகழ்வு. இதனை சார்ந்து பல கிளைகளில் போராட்டமும் ஏற்பட்டுள்ளது.

1984ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட சிறு நிதி நிறுவனம் தான் பி.எம்.சி. வங்கி (Punjab & Maharashtra Co-operative Bank). பின்பு இந்த வங்கி படிப்படியாக வளர்ந்து இன்று 137 கிளைகளுடன் பல மாநிலங்களில் இயங்கி வருகிறது. நாட்டின் சிறந்த கூட்டுறவு வங்கிகளில் முதல் பத்து இடங்களில் பி.எம்.சி. வங்கியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ம் ஆண்டு ரூ.2000 கோடிக்கும் மேலான டெபாசிட் பெறும் பிரிவில் நாட்டின் சிறந்த கூட்டுறவு வங்கியாக விருதும் பெற்றது. தற்போது இந்த கூட்டுறவு வங்கியில் மொத்த வைப்பு தொகை ரூ. 9,938 கோடியாகவும், கொடுக்கப்பட்ட கடன்கள் 7,457 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

வங்கிக்கு மொத்த வாராக்கடன் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் 3.76 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.19 சதவீதமாகவும் இருக்கிறது. வங்கிக்கு பாரத ரிசர்வ் வங்கி விதித்த கெடுபிடிக்கு வாராக்கடனும் ஒரு காரணமாக இருக்கலாம் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். 

தற்போது வங்கிகள் சட்ட பிரிவு 35ஏ ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இந்த கூட்டுறவு வங்கி, மற்றொரு வங்கியுடன் இணைக்கப்படலாம் என தெரிகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரி குறைப்பு நடவடிக்கை, நாட்டின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்குமா ?

வரி குறைப்பு நடவடிக்கை, நாட்டின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்குமா ?

Will the Tax Rate Cut increase the India’s Fiscal Deficit ?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று (20-09-2019) நிதி அமைச்சகத்தின் சார்பில் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை சொல்லப்பட்டது. மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில்(GST Council) சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சில பொருட்களுக்கு வரி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய தினம் இந்திய பங்குச்சந்தையும் பெரிய ஏற்றத்துடன் முடிந்தது.

நடப்பில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும், இது நாட்டின் நிதி பற்றாக்குறையில்(Fiscal Deficit) அதிகளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அடுத்த 2-3 காலாண்டுகளில் அறியலாம். கடந்த வாரம் நிதி அமைச்சகமும், எந்தவொரு செலவினங்களையும் குறைக்க போவதில்லை என்று கூறியுள்ளது. நிறுவன வரி குறைப்பு, ஜி.எஸ். டி.வரி குறைப்பு ஆகியவை சொல்லப்பட்ட நிலையில், பொதுவாக அரசுக்கான செலவினங்களும் அதிகரிக்கும்.

இந்த செலவினங்களை குறைத்து கொள்ள வேண்டும். ஆனால் அரசின் சார்பில் செலவினங்களை குறைக்கவில்லை என கூறும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) வளர்ச்சி கண்டால் மட்டுமே, நிதி பற்றாக்குறையை சிறப்பாக கையாள முடியும். மேலும் சமீபத்தில் சொல்லப்பட்ட வரி குறைப்பு அறிவிப்புகள் உடனடியாக பொருளாதார வளர்ச்சியில் தென்படாது. அதற்கு சில காலங்கள் ஏற்படலாம்.

செலவினங்களை குறைக்க முடியாமல், அதே வேளையில் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி எட்டப்படவில்லை எனில், அரசு தனது செலவினங்களுக்காக மேலும் கடன் வாங்க நேரிடலாம். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 7.04 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எதிர்பார்த்த அளவு வந்தால் மட்டுமே, அது செலவினங்களை சரிப்படுத்த உதவக்கூடும். அப்படியிருக்கும் போது ஜி.எஸ்.டி. போன்ற வரிக்குறைப்பு தற்போது சொல்லப்பட்டுள்ளதால், எதிர்பார்த்த வரி வருவாய் குறையக்கூடும். அதே சமயத்தில், சொல்லப்பட்ட வரி குறைப்பு தொழில் நிறுவனங்களுக்கு முழுமையாக சென்று, அது நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கடந்த ஏப்ரல்-ஜூலை 2019 காலத்தில் மத்திய அரசின் மொத்த செலவினம் 6.5 சதவீதம் அதிகரித்து 9.47 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டில் சொல்லப்பட்ட காலத்தில் 8.90 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இமாலய சிக்ஸர்களை அடித்த இந்திய பங்குச்சந்தை – பொருளாதார ஊக்குவிப்பு மாற்றங்கள்

இமாலய சிக்ஸர்களை அடித்த இந்திய பங்குச்சந்தை – பொருளாதார ஊக்குவிப்பு மாற்றங்கள் 

Economic Stimulus by Finance Minister – Boosted Indian Stock Market

நேற்று இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக காளையின் பக்கம் அமைந்தது. 2009ம் வருடம் முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களது அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த சமயத்தில், அதன் தாக்கம் அப்போது இந்திய பங்குச்சந்தையில் நல்ல ஒரு ஏற்றத்தை ஏற்படுத்தியது. சந்தை ஆரம்பித்த உடனே சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடு 10 சதவீத மேல் சுற்றில்(Upper Circuit) வர்த்தகம் நின்றது. இது போல தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டியும் ஆரம்பித்த மாத்திரத்தில் 14 சதவீத மேல் சுற்றில் வர்த்தகத்தை நிறுத்தியது.

பின்னர் இரண்டு மணி நேர இடைவெளிக்கு பிறகு துவங்கிய சந்தை மீண்டும் மேல் சுற்றில் அன்றைய வர்த்தகத்தை முடித்து கொண்டது. அன்றைய நாளின் முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் இரண்டும் 17 சதவீத ஏற்றம் பெற்றிருந்தன. இதனையடுத்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014ம் ஆண்டு அமையும் சமயத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 6 சதவீதமும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 5 சதவீதமும் ஏற்றம் கண்டன.

மேலே சொன்ன இரண்டு நிகழ்வுகளுக்கு பிறகு, நேற்று தான் இது போன்ற ஒரு பெரிய ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை சந்தை குறியீடு சென்செக்ஸ் 1921 புள்ளிகளும், நிப்டி குறியீடு(Nifty50) 570 புள்ளிகள் என்ற அளவிலும் அதிகரித்து வர்த்தகத்தை முடித்து கொண்டது. வெள்ளிக்கிழமை வர்த்தக ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்த சில பொருளாதார ஊக்குவிப்பு செய்திகள் சந்தை காளையின் வேகத்தை கூட்டியுள்ளன.

நிறுவனங்களுக்கான வருமான வரி (Corporate Tax) எந்தவொரு வருமான வரி விலக்கும் பெறாமல், 22 சதவீத வரியாக சொல்லப்பட்டுள்ளது. இது போல புதிய உற்பத்தி நிறுவனங்கள் 17 சதவீத வரியை மட்டுமே செலுத்தும் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாத பட்ஜெட்டில் சொல்லப்பட்ட பங்குகளை திரும்ப பெறுதலில்(Tax on Buyback of Shares) வரி என்பது தற்போது களையப்பட்டுள்ளது. ஜூலை 5,2019 காலத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பங்குகளை திரும்ப பெறுதல் நிகழ்வுக்கு வரி இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

அந்நிய முதலீட்டாளர்களுக்கான மூலதன ஆதாயத்திற்கு சொல்லப்பட்ட அதிகப்படியான சர்சார்ஜ் கட்டணம் இனி இல்லை. இது போல மூலதன சந்தையில் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி விகிதத்திலும் மாற்றங்கள் சில செய்யப்பட்டுள்ளன. வாகனத்துறைக்கான வரி குறைப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வைர தொழிலில் வேலைக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் விடுதிகளுக்கான வரி மாற்றங்களில், ரூ. 7500/- க்கும் குறைவான அறைகளுக்கு 12 சதவீத வரியும், அதற்கு மேலான அறைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் சொல்லப்பட்டுள்ளது. காபி சார்ந்த பானங்களுக்கு 18 சதவீத வரியிலிருந்து 28 சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது. வெளிப்புற கேட்டரிங் (Outdoor Catering) சேவைகளுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இலைகள் மற்றும் மறைப்புகள் மூலமான கோப்பைகள் மற்றும் தட்டுக்கள் (Cups & Plates) ஆகியவற்றுக்கு முழு வரி விலக்கு. ரயில்வே வேகன் மற்றும் பயணி பெட்டிகளுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடல் எரிபொருட்களுக்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது.

உலர்ந்த புளி மற்றும் சமையல் சார்ந்த கிரைண்டர் வகைகளுக்கும் வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட வரி விகித மாற்றங்கள் வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் எனவும் அரசு கூறியுள்ளது.

பொருளாதார மந்த நிலையில், திடீரென ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை வரவிருக்கும் வாரங்களில் நிலைத்து நின்று மேல் நோக்கி செல்லுமா என்பது அடுத்த வர்த்தக நாட்களில் தெரிய வரும். பொருளாதார ஊக்குவிப்புக்கான சலுகைகள் சொல்லப்பட்டாலும், வரும் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், கச்சா எண்ணெய் நிலவரம் மற்றும் நிதி பற்றாக்குறை ஆகிய செய்திகள் சந்தையை நகர்த்தும். 

வரவிருக்கும் நாட்களில் பங்குகளை வாங்க காத்திருக்கும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பொதுவாக பங்குகள் குறுகிய காலத்தில் வேகமான ஏற்றம் பெற்றவுடன், பங்குகள் விற்பனை அதிகமாக தென்படும். எனவே நல்ல நிறுவன பங்குகளை அதன் சரியான விலையில் முதலீடு செய்து வருவதே சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவாரா நிர்மலா சீதாராமன் ?

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவாரா நிர்மலா சீதாராமன் ?

Will the Finance Minister strengthen the Indian Economy ?

சரக்கு மற்றும் சேவை வரி(Goods & Service Tax) என சொல்லப்படும் ஜி.எஸ்.டி. வரிக்கான 37வது கூட்டம் இன்று கோவாவில் நடைபெற உள்ளது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை, நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் போன்ற காரணங்களால் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இந்திய பொருளாதாரமும் சுணக்கத்தில் காணப்படுகிறது.

இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கடந்த சில வாரங்களாக பல மாற்றங்களை அறிவித்து வந்தார். இருப்பினும், அதற்கான முன்னேற்றம் இன்னும் சந்தையில் பிரதிபலிக்கவில்லை. கடந்த ஜூலை மாத பட்ஜெட் தாக்கலுக்கு பின்பு, அன்னிய முதலீட்டாளர்கள் வரி விதிப்பு சார்ந்து(FPI Tax) வெளியேற தொடங்கினர்.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடும் பட்ஜெட் தாக்கலுக்கு பின், 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு வருடத்தின் ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை முதலீட்டாளர்கள் சுமார் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் ஜி.எஸ்.டி. (GST) வரி விகித மாற்றங்கள் இருப்பினும், இது அதிகப்படியான சலுகைகளை தர வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சிறு தொழில்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் அதனை சார்ந்த வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் பணப்புழக்க அதிகரிப்பு போன்ற நடவடிக்கைககள் இருக்கலாம் என தெரிகிறது.

நடப்பில் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக பணவீக்க விகிதம், வங்கி வட்டி விகிதம் மற்றும் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) கடந்த சில வருடங்களை காட்டிலும் குறைந்துள்ளது. அதே வேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) குறைவு, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, பணமதிப்பிழப்பு(Demonetization) மற்றும் வரி விகித மாற்றங்கள் பாதகமாக உள்ளன. அதே போல ஏற்றுமதியும் ஆகஸ்ட் மாதத்தில் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையும் மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வட்டி விகித குறைப்பு நடப்பு வாரத்தில் ஏற்பட்டிருந்தாலும், வரவிருக்கும் மாதங்களில் மற்றொரு வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படுவது குறைவே. ஆனால் நம் நாட்டில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க ஏதுவான அம்சங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. நடப்பு காலாண்டின் கடைசி ஊக்குவிப்பு  செய்தியாக இன்று அமையலாம். இதன் தாக்கம் இன்றும், அடுத்த வார வர்த்தக நாட்களிலும் சந்தையில் தெரிய வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை

ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை

Recommendation to reduce the GST rate for Hotel Rooms in Star Hotels

வரவிருக்கும் வெள்ளிக்கிழமை அன்று (20-09-2019) நாட்டின் 37வது ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நேற்று நிதி அமைச்சர் குழுவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கான உணவு விடுதிகளில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நடப்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரூ. 7500 க்கும் மேலான தங்கும் அறைகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி அமலில் உள்ளது. இதனை 18 சதவீதமாக குறைக்கும் பொருட்டு நேற்றைய பரிந்துரை அமைந்துள்ளது. இந்த அறைகள் சொகுசு ஹோட்டல் பிரிவில்(Luxury Category) காணப்படுவது கவனிக்கத்தக்கது.

இதற்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படலாம் அல்லது ரூ. 7500க்கு குறைவான தங்கும் விடுதிகளின் வரி சலுகை வரம்பு, 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மின்னணு சிகரெட்டு(E-Cigarette) விற்பனையும் இந்தியாவில் தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மின்னணு சிகரெட் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதன் பயன்பாடு மாணவர்களிடையே அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளது. இதன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனை இந்தியாவில் முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும், மீறினால் இது ஒரு குற்றச்செயலாக கருதப்பட்டு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இதனை எதிர்க்கும் வகையில் மின்னணு சிகரெட் சார்ந்த அமைப்பு, அரசு கூறும் தகவலுக்கு போதிய ஆதாரம் இல்லையெனவும், தற்போது நடைமுறையில் காணப்படும் புகையிலை மற்றும் அதனை சார்ந்த சிகரெட் போன்றவற்றால் நாட்டில் ஒவ்வொரு வருடமும் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடுகிறது. இதனை போன்ற விளைவுகள் இ-சிகரெட் பயன்பாட்டில் மிக குறைவு தான் என எதிர்தரப்பு வாதம் சொல்கிறது.

லாட்டரி(Lottery) விற்பனைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான பரிந்துரையும் நேற்று சொல்லப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கூட்டத்தில்(GST Council) முக்கிய நிகழ்வாக வாகனத்துறைக்கான வரி விகித குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர், ‘ பணப்புழக்க நெருக்கடி காணப்படுவது மற்றும் ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்து வருவதால் சில துறைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பரிந்துரைக்கப்பட மாட்டாது ‘ என ஜி.எஸ்.டி. குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பி.எப். தொகைக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக அறிவிப்பு

பி.எப். தொகைக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக அறிவிப்பு

The EPF Interest rate to 8.65 Percent for 2018-19

2018-19ம் நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(EPF) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சார்ந்து அறிவிக்கப்பட்ட தகவலில் கடந்த 2017-18ம் ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55 சதவீதம் இருந்ததாகவும், தற்போது 2018-19ம் வருடத்திற்கு 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 8.65 சதவீதமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட 8.65 சதவீத வட்டி ஒரு சில நாட்களில் பி.எப். சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என இ.பி.எப். அமைப்பு(EPFO) கூறியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள ஆறு கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதம் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின், சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும். அடுத்து வரவிருக்கும் வாரங்களில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை பாரத ரிசர்வ் வங்கி குறைக்கும் பட்சத்தில், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் ஏற்படலாம்.

அஞ்சலக மற்றும் வங்கி சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைவான நிலையில் இருப்பினும், மேலும் இதன் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சார்ந்த தகவல் நடப்பு செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிக்கப்படலாம்.

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

வங்கி வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி(Public Provident Fund) மற்றும் வரி சேமிப்பு சார்ந்த சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம். இந்த வட்டி விகித மாற்றம் அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கு உட்பட்டதாக இருக்கும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் கடந்த 2010-11ம் நிதியாண்டில் 9.50 சதவீதமாகவும், 2014-15ம் நிதியாண்டில் 8.75 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிறு சேமிப்புக்கான வட்டி விகித மாற்றங்கள் பணவீக்க விகிதத்தை(Inflation Rate) சார்ந்து இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஆகஸ்ட் மாத மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதம்

ஆகஸ்ட் மாத மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதம் 

India’s WPI Inflation for August 2019 was 1.08 Percent 

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், நேற்று ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க(WPI) விகிதம் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட்  மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலை மாதத்திலும் 1.08 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த  ஒரு வருட காலத்தில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 5.54 சதவீதமாக இருந்துள்ளது. தற்போது சொல்லப்பட்ட 1.08 சதவீத பணவீக்கம்(Wholesale Price Index) கடந்த இரண்டு வருடங்களில் காணப்பட்ட குறைந்தபட்ச அளவாகும்.

எரிபொருட்களின் விலை(Fuel Prices) சரிவால் தான் தற்போதைய மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது. அதே வேளையில் உணவுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஜவுளி விலையில் எந்த மாற்றமும் இல்லையெனவும், ரசாயனம், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் அடிப்படை உலோகங்களின்(Basic Metals) விலை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மர சாமான்களின் விலையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை கடந்த மாதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் உருளைக்கிழங்கின் விலை குறைந்து காணப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மாற்றம் எரிவாயு ஆகியவற்றின் விலை ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 3.64 சதவீதம் என்ற அளவில் சரிந்திருந்தது. மொத்த விலை பணவீக்கம் கடந்த 50 வருட காலங்களில் சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில் இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக கடந்த 1974ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 35 சதவீதமாகவும், குறைந்தபட்சமாகவும் 1976ம் வருட மே மாதத்தில் (-11.31) பணவாட்டமாகவும் இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரும் வாரத்தில் பங்குச்சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள் – செப்டம்பர் 16 – 20

வரும் வாரத்தில் பங்குச்சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள் – செப்டம்பர் 16 – 20

Key Factors that affect the Indian Stock Market in the Upcoming Week (September 16 -20)

 

இந்திய பங்குச்சந்தை கடந்த வார வர்த்தகத்தின் முடிவில் நிப்டி50(Nifty50) 11,075 புள்ளிகள் என்ற அளவிலும், மும்பை சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex) 37,385 புள்ளிகள் என்ற அளவிலும் இருந்துள்ளது. வரவிருக்கும் வாரத்தில் சந்தையை பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகளாக சில அமைய உள்ளன.

 

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க விகிதம்(WPI Inflation) நாளை அறிவிக்கப்பட உள்ளது. நேற்று (14-09-2019) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வீட்டுமனை துறைக்கும், ஏற்றுமதி துறைக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை சொல்லியுள்ளார். இருப்பினும் இவை சந்தையில் செயல்பாட்டுக்கு வந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் களம் காண சிறிது காலமாகலாம். 

 

நேற்று அதிகாலை சவுதியில் ஆரம்கோ எண்ணெய்(Aramco) நிறுவனத்தின் மீது ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமெனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பேரல் அளவிலான உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது ஆரம்கோ நிறுவனம். ஈராக் நாட்டின் சதாம் ஹுசைன் காலத்திற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது தான் என சொல்லப்படுகிறது.  

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக வருமான வரி துறை நோட்டீஸ்(Income Tax Notice) அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வு நடப்பாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டதாகவும், தற்போது தான் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது சார்பாக ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. 

 

தாங்கள் இதுவரை வருமான வரித்துறையிடம் இருந்து எந்த நோட்டீஸையும் பெறவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. சவூதி ஆரம்கோ நிறுவனத்தின் மீதான தாக்குதல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்தின் கணக்கில் காட்டப்படாத வருவாய் ஆகிய இரு நிகழ்வுகளும் சந்தைக்கு பாதகமாக அமையலாம்.

 

 எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை விட, மிக குறைவான அளவே இந்திய நாடு வளர்ச்சி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. கார்ப்பொரேட் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பலவீனமடைந்து வருவதாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.

 

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மற்றும் அமெரிக்க வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு ஆகிய காரணிகளும் வரும் வாரத்தின் சந்தை போக்கை தீர்மானிக்கலாம். பங்குச்சந்தை அதிக ஏற்ற – இறக்க காலமாக தற்போது கருதப்படுவதால், நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கான வாய்ப்புகளை கண்டறியலாம். அதே வேளையில் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கிறேன் என்று கையை சுட்டு கொள்ள வேண்டாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

அக்டோபர் மாதத்தில் வங்கி வட்டி விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் செல்ல வாய்ப்பு

அக்டோபர் மாதத்தில் வங்கி வட்டி விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் செல்ல வாய்ப்பு 

Bank Repo rates likely to go below 5 Percent in the next month October 2019

நாட்டின் பணவீக்க விகிதம் பாரத ரிசர்வ் வங்கியின் இலக்கை விட குறைவாக காணப்படுவதால், மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வருட காலமாக நுகர்வோர் விலை பணவீக்கம்(CPI Retail Inflation) கட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது, பொருளாதார மந்த நிலை சமயங்களில் சாதகமான அம்சமாகும்.

ஏற்கனவே கடந்த மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இம்முறையும் அக்டோபர் மாதத்தில் குறைக்கப்படலாம் என தெரிகிறது. தற்போது உத்தேசமாக ரெப்போ விகிதம்(Repo Rate) 50 புள்ளிகள் வரை குறைக்கப்படலாம் என எதிர்க்கபார்க்கப்படுகிறது.

நடப்பில் பாரத ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo) 5.15 சதவீதமாகவும் உள்ளது. வங்கி விகிதம்(Bank Rate) 5.65 சதவீதமாக சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த கூட்டத்தின் போது, வங்கிகளில் ரெப்போ விகிதத்தினை சார்ந்து அதற்கு இணையான வட்டி விகிதம் வாடிக்கையாளர்களுக்கு விகிதப்பட வேண்டும் என்ற பாரத ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

ஆனால் பெரும்பாலான வங்கிகள் வைப்பு நிதிக்கான(Deposits) வட்டி விகிதங்களை குறைத்ததே தவிர, கடனுக்கான வட்டி விகிதத்தில் பெருவாரியான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். இந்நிலையில் பணவீக்க விகிதம் 4 சதவீதத்திற்குள் இருப்பதால், வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலும் வட்டி விகிதம் குறையும்பட்சத்தில், அது வாடிக்கையாளர்களை உடனடியாக போய் சேருமா என்பது சந்தேகமே.

தற்போது வங்கிக்கான சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்(Savings Account) 3.25 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதம் வரை ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்டுள்ளது. இது போல ஒரு வருடத்திற்கு மேலான வைப்பு நிதிக்கு 6.25 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதம் வரை வட்டி விகிதம் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கி வட்டி விகிதம் குறையும் போது வங்கியில் முதலீடு செய்வோருக்கு அது சாதகமாக இருப்பதில்லை. குறைவான வட்டி விகிதம் நிலவுவதால் பரஸ்பர நிதிகளில் கடன் பத்திரங்கள் மற்றும் குறுகிய கால திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். அதே வேளையில், கடன் பெறுவோருக்கு வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதால், அவர்களின் தேவைக்கு குறைந்த  வட்டியில் கடன் வாங்கி கொள்ளலாம். இருப்பினும், கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்ற ஒரு காரணத்திற்காக அவசியமில்லாமல் கடன் வாங்குவது நல்லதல்ல. மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com