ஆகஸ்ட் மாத மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதம்
India’s WPI Inflation for August 2019 was 1.08 Percent
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், நேற்று ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க(WPI) விகிதம் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலை மாதத்திலும் 1.08 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வருட காலத்தில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 5.54 சதவீதமாக இருந்துள்ளது. தற்போது சொல்லப்பட்ட 1.08 சதவீத பணவீக்கம்(Wholesale Price Index) கடந்த இரண்டு வருடங்களில் காணப்பட்ட குறைந்தபட்ச அளவாகும்.
எரிபொருட்களின் விலை(Fuel Prices) சரிவால் தான் தற்போதைய மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது. அதே வேளையில் உணவுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஜவுளி விலையில் எந்த மாற்றமும் இல்லையெனவும், ரசாயனம், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் அடிப்படை உலோகங்களின்(Basic Metals) விலை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மர சாமான்களின் விலையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை கடந்த மாதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் உருளைக்கிழங்கின் விலை குறைந்து காணப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மாற்றம் எரிவாயு ஆகியவற்றின் விலை ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 3.64 சதவீதம் என்ற அளவில் சரிந்திருந்தது. மொத்த விலை பணவீக்கம் கடந்த 50 வருட காலங்களில் சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில் இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக கடந்த 1974ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 35 சதவீதமாகவும், குறைந்தபட்சமாகவும் 1976ம் வருட மே மாதத்தில் (-11.31) பணவாட்டமாகவும் இருந்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை