இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவாரா நிர்மலா சீதாராமன் ?
Will the Finance Minister strengthen the Indian Economy ?
சரக்கு மற்றும் சேவை வரி(Goods & Service Tax) என சொல்லப்படும் ஜி.எஸ்.டி. வரிக்கான 37வது கூட்டம் இன்று கோவாவில் நடைபெற உள்ளது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை, நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் போன்ற காரணங்களால் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இந்திய பொருளாதாரமும் சுணக்கத்தில் காணப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கடந்த சில வாரங்களாக பல மாற்றங்களை அறிவித்து வந்தார். இருப்பினும், அதற்கான முன்னேற்றம் இன்னும் சந்தையில் பிரதிபலிக்கவில்லை. கடந்த ஜூலை மாத பட்ஜெட் தாக்கலுக்கு பின்பு, அன்னிய முதலீட்டாளர்கள் வரி விதிப்பு சார்ந்து(FPI Tax) வெளியேற தொடங்கினர்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடும் பட்ஜெட் தாக்கலுக்கு பின், 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு வருடத்தின் ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை முதலீட்டாளர்கள் சுமார் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் ஜி.எஸ்.டி. (GST) வரி விகித மாற்றங்கள் இருப்பினும், இது அதிகப்படியான சலுகைகளை தர வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சிறு தொழில்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் அதனை சார்ந்த வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் பணப்புழக்க அதிகரிப்பு போன்ற நடவடிக்கைககள் இருக்கலாம் என தெரிகிறது.
நடப்பில் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக பணவீக்க விகிதம், வங்கி வட்டி விகிதம் மற்றும் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) கடந்த சில வருடங்களை காட்டிலும் குறைந்துள்ளது. அதே வேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) குறைவு, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, பணமதிப்பிழப்பு(Demonetization) மற்றும் வரி விகித மாற்றங்கள் பாதகமாக உள்ளன. அதே போல ஏற்றுமதியும் ஆகஸ்ட் மாதத்தில் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையும் மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வட்டி விகித குறைப்பு நடப்பு வாரத்தில் ஏற்பட்டிருந்தாலும், வரவிருக்கும் மாதங்களில் மற்றொரு வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படுவது குறைவே. ஆனால் நம் நாட்டில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க ஏதுவான அம்சங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. நடப்பு காலாண்டின் கடைசி ஊக்குவிப்பு செய்தியாக இன்று அமையலாம். இதன் தாக்கம் இன்றும், அடுத்த வார வர்த்தக நாட்களிலும் சந்தையில் தெரிய வரும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை