Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

டாட்டா மோட்டார்ஸ் – நான்காம் காலாண்டில் ரூ.9,894 கோடி நிகர நஷ்டம்

டாட்டா மோட்டார்ஸ் – நான்காம் காலாண்டில் ரூ.9,894 கோடி நிகர நஷ்டம் 

Net Loss of Rs.9,894 Crore in Q4FY20 – Tata Motors

வாகனத்துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம். டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமாக விளங்கும் இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 3.07 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 82,800.

1945ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் உலகின் முக்கிய 500 நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ரயில் இன்ஜின்கள், பயணிகளுக்கான பிரிவில் பெரு வாகனங்கள், லாரிகள், வேன்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், கட்டுமான துறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இங்கிலாந்தின் ஜாக்குவார் லேண்ட் ரோவர்(Jaguar Land Rover) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, டாட்டா நிறுவனத்திற்கு உலகளவில் பல சவால்கள் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட அரசு கொள்கைகளில் மாற்றம் ஜாக்குவார் விற்பனையை பதம் பார்த்தது. உள்நாட்டில் டாட்டா மோட்டார்ஸ் நல்ல விற்பனை வளர்ச்சியை கொண்டிருந்தாலும், ஜாக்குவார்(JLR) இழப்பை மட்டுமே சந்தித்து வருகிறது.

மின்னணு வாகன பிரிவில் டாட்டா மோட்டார்ஸ் முக்கிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் துறைக்கான ஆராய்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் வெளிப்பாடு வரவிருக்கும் காலங்களில் தெரிய வரும். அதே வேளையில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி கடந்த நான்கு வருடங்களாக பெரிதும் பாதித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் வருவாய் ரூ. 62,493 கோடியாகவும், செலவினம் 61,806 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ.9,894 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நான்காம் காலாண்டில் விற்பனையும் 30 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த நிதியாண்டிலும் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 12 சதவீதம் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் சென்ற நிதியாண்டில் நிகர நஷ்டம் குறைந்துள்ளது. ஆனால் லாப பாதைக்கு நிறுவனம் எப்போது திரும்பும் என்பது தான் முதலீட்டாளர்களின் கேள்வி.

கடந்த ஐந்து வருட காலத்தில் விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும், லாப வளர்ச்சி எதிர்மறையாகவும் உள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் 40 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) மூன்று வருட காலத்தில் 6 சதவீதமாகவும், 5 வருடங்களில் 11 சதவீதமாகவும் உள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.33,300 கோடி. கடன்-பங்கு விகிதம் 1.83 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் ஒரு மடங்கு அளவிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் மட்டும் ரூ. 95,465 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், 4 சதவீத பங்குகள் அடமானமாகவும் உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களின்(FII Holding) பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

திருச்சி பெல் நிறுவனம் – நான்காம் காலாண்டில் ரூ.1,533 கோடி நஷ்டம்

திருச்சி பெல் நிறுவனம் – நான்காம் காலாண்டில் ரூ.1,533 கோடி நஷ்டம் 

BHEL’s Net loss of Rs.1533 Crore in Q4FY20 – Quarterly Results

1964ம் ஆண்டு புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட அரசு பொதுத்துறை நிறுவனம் பெல் (Bharat Heavy Electricals Ltd – BHEL). நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமாக பெல் உள்ளது. உபகரணங்கள் வடிவமைப்பு, பொறியியல், கட்டுமானம், மின் பரிமாற்றம், போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எரிவாயு மற்றும் பாதுகாப்பு சார்ந்த சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பெல் நிறுவனத்தின் முக்கிய பொருட்களாக கொதிகலன்கள்(Boilers), மின்னணு மோட்டார்கள், நீராவி விசையாழிகள்(Turbines), ஜெனரேட்டர்கள், சுவிட்ச் கியர் மற்றும் சென்சார்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பரிமாற்றிகள்(Heat Exchangers) என பலவகைகளில் உள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்திய ரயில்வே ஆயிரத்துக்கும் மேலான எலக்ட்ரிக் இன்ஜின்களை பெல் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய ராணுவத்திற்கு தேவையான முக்கிய சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கி வந்துள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,000 கோடி. புத்தக மதிப்பு 82 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.18 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் எதிர்மறையாக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், நிகர சொத்து மதிப்பு ரூ.28,660 கோடியாக உள்ளது.

விற்பனை மற்றும் லாப வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி வளரவில்லை. கடந்த பத்து வருடங்களில் விற்பனை வளர்ச்சி ஒரு சதவீதமாகவும், லாப வளர்ச்சி (-11 %) எதுவுமில்லாமல் உள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 55 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) பத்து வருடங்களில் 11 சதவீதமாக உள்ளது.

2018-19ம் நிதியாண்டில் வருவாய் 30,368 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ. 1,012 கோடி. ஆனால் 2019-20ம் நிதியாண்டில் நிறுவனம் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,050 கோடியாகவும், செலவினம் ரூ.5,609 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. எனவே இயக்க லாபமே(Operating Loss) நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ.1,533 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ.27,964 கோடியாக உள்ளது. நிறுவனத்திற்கு தேவையான பணவரத்து சரிவர இல்லை. மின்சார வாகனங்கள் மற்றும் அதற்கு தேவையான பேட்டரி ஆய்வில் இந்த நிறுவனம் ஈடுபட போவதாக உள்ள செய்திகள் மட்டுமே சாதகமாக உள்ளது. எனினும் அதற்கான ஊக்குவிப்பு தற்போதைய நிலையில் தாமதமாகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஏப்ரல் மாத தொழில்துறை உற்பத்தி 55 சதவீத வீழ்ச்சி – முழு தகவலும் வெளியிடப்படவில்லை

ஏப்ரல் மாத தொழில்துறை உற்பத்தி 55 சதவீத வீழ்ச்சி – முழு தகவலும் வெளியிடப்படவில்லை  

India’s IIP number falls 55.5 Percent in the month of April 2020

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவர். மொத்த உள்நாட்டு உற்பத்தியை(GDP) பெற பல்வேறு துறைகளில் உள்ள தொழில்களின் உற்பத்தி அளவை எடுத்து கொள்வது அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொழில்துறை உற்பத்தியின் அளவு எவ்வளவு நடந்துள்ளது என்ற தரவுகளை சேகரிக்க வேண்டும். இதனை ஒரு குறியீட்டின் மூலம் சந்தைக்கு தெரியப்படுத்துவது ஐ.ஐ.பி. என்று சொல்லக்கூடிய தொழில்துறை உற்பத்தி குறியீடாகும்(Index of Industrial Production).

தொழிற்துறை குறியீட்டில் கச்சா எண்ணெய், மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், எஃகு, சுத்திகரிப்பு, எரிவாயு பொருட்கள் மற்றும் உரங்கள் ஆகிய தொழில்களின் உற்பத்தி அளவு சொல்லப்பட்டிருக்கும். நாம் மேலே சொன்ன எட்டு தொழில்களும், நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டில் நாற்பது சதவீத இடத்தை பிடித்துள்ளன.

இது போன்ற தரவுகளை சேகரித்து நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டை வெளியிடுவது மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமாகும். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட முதல் ஊரடங்கின் போது(Covid-19 Lock down), பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லை.

வாகனத்துறையை சார்ந்த நிறுவனங்களும் எந்தவித தயாரிப்பு மற்றும் விற்பனையை செய்ய முடியவில்லை. நுகர்வோர் நீடித்த பொருட்கள்(Consumer Durables), உட்கட்டமைப்பு, கட்டுமான பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்தி மிகவும் சரிந்துள்ளது.

ஏப்ரல் மாத நாட்டின் தொழிற்துறை உற்பத்தி சார்ந்த தகவல் மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 55.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஓரளவு எதிர்பார்த்த தகவல்கள் தான் எனினும் முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உற்பத்தி துறை குறியீடு 64 சதவீதமும், சுரங்க தொழிலில் 27 சதவீதமும், மின்சார உற்பத்தியில் 22.5 சதவீதமும் ஏப்ரல் மாத காலத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தொழிலை சொல்லப்பட்ட காலத்தில் செய்யவில்லை என்பதனையும் அரசு தரவுகள் தெரிவித்துள்ளது. முழுமையான தகவல்கள் வெளிவராததால், இதற்கு முந்தைய காலத்துடன் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை ஒப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வரக்கூடிய காலங்களில் இது சார்ந்த தகவல்கள் முழுமையாக தெரியக்கூடும் எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட தரவுகள் மூலம் உண்மையில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டி காட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 10 சதவீதம் வீழ்ச்சியை கண்டிருந்தது. முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 126.5 புள்ளிகளாக இருந்த தொழிற்துறை உற்பத்தி குறியீட்டு அளவு தற்போது 56.3 புள்ளிகளாக உள்ளது. முழுமை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பேங்கோ புரொடக்ட்ஸ்(Banco Products) – காலாண்டு நிகர லாபம் ரூ. 17 கோடி

பேங்கோ புரொடக்ட்ஸ்(Banco Products) – காலாண்டு நிகர லாபம் ரூ. 17 கோடி 

Banco Product’s Net profit of Rs.17 Crore as Consolidated – Q4FY20

குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் பேங்கோ புரொடக்ட்ஸ்(Banco Products). கடந்த 1961ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ரயில் இன்ஜின்களுக்கான இயந்திர குளிரூட்டும் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.

நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு தேவையான இயந்திர குளிரூட்டும் சாதனங்களையும்(Engine Cooling & Sealing Systems, Radiators) தயாரித்து வந்தது. இதன் முக்கிய வாடிக்கையாளர்களாக இந்திய ரயில்வே, டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மாருதி, ஹீரோ, ஹோண்டா, டி.வி.எஸ். குழுமம், டாப்பே(Tafe) மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் உள்ளது.

ரேடியட்டர் மற்றும் கேஸ்கெட் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் பேங்கோ புரொடக்ட்ஸ் திகழ்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. கடந்த 1987ம் ஆண்டு பங்குச்சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்பட்டது.

2010ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டை சேர்ந்த முன்னணி நிறுவனமான என்.ஆர்.எப்.(NRF B.V) ஐ 100 சதவீத பங்குகளுடன் கையகப்படுத்தியது. மின்னணு வாகனங்கள் சார்ந்த தொழிலிலும் இந்நிறுவனம் அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.500 கோடி. புத்தக மதிப்பு 120 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.10 ஆகவும் உள்ளது.

வட்டி பாதுகாப்பு விகிதம் 37 மடங்கிலும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 68 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் அடமான பங்குகள் எதுவுமில்லை. நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ. 855 கோடி. இருப்புநிலை கையிருப்பு 696 கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 332 கோடி ரூபாயாகவும், செலவினம் 298 கோடி ரூபாயாக உள்ளது. இதர வருமானமாக 7 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.17 கோடி. கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய லாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே வேளையில் நிதியாண்டு முழுவதையும் ஒப்பிடும் போது, 2019-20ம் நிதியாண்டில் லாபம் 43 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாபம் 11 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 47 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருடங்களில் 18 சதவீதமாகவும், 10 வருடங்களில் 19 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்திற்கான பணவரத்து(Positive Cash Flow) நேர்மறையாக உள்ளது. சென்ற நிதியாண்டில் பங்கு ஒன்றுக்கு 23 ரூபாய் டிவிடெண்ட் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டு வரை வட்டி விகிதத்தை உயர்த்த போவதில்லை – அமெரிக்க மத்திய வங்கி

2022ம் ஆண்டு வரை வட்டி விகிதத்தை உயர்த்த போவதில்லை – அமெரிக்க மத்திய வங்கி 

US Fed Rate Policy – No interest hike till 2022 – Recession

வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் சுமார் 21.2 லட்சம் கோடி டாலர்கள். அதாவது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் 8 மடங்கில் அமெரிக்காவின் பொருளாதாரம் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்தது அமெரிக்கா தான் – தொற்று எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அங்கு தான் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த நாட்டில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அதனை சார்ந்த பொருளாதார சரிவும் அதிகமாக உள்ளது.

நடப்பில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை உறுதி செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் நாட்டில் நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் முதல் பொருளாதார மந்தநிலை(Official Recession) இருப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் முன்னெடுப்பாக சுமார் 2 டிரில்லியன் டாலர்களை  கொண்ட பொருளாதார ஊக்குவிப்பை ஏற்படுத்தின. குடும்பத்தில் உள்ள தனிநபர் ஒருவருக்கு மாதாமாதம் 1000 டாலர்கள் என்ற அளவில் நேரிடையாக பணத்தை வழங்கவும் செய்தன.

அடுத்து வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கை இருக்கும் எனவும், கூடுதலான தொகை மக்களிடம் அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இவற்றில் அமெரிக்காவின் பெடரல்(US Fed) என சொல்லப்படும் மத்திய வங்கியின் செயல்பாடு முக்கியமானது. தன்னிச்சையாக செயல்படும் பெடரல் அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய வட்டி விகிதத்தையும் அதிரடியாக குறைத்தது.

நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்வதை சற்று சரிசெய்ய வட்டி விகித குறைப்பு பலனளிக்கும். நடப்பில் அமெரிக்காவின் வட்டி விகிதம்(Interest rate) 0-0.25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நேற்று நடந்த நிகழ்வில் வட்டி விகிதத்தை 2022ம் ஆண்டு வரை உயர்த்தும் எண்ணம் இல்லை எனவும், தற்போது நிலவும் பூஜ்யத்துக்கு அருகில் உள்ள வட்டி விகிதம் தான் தொடரும் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

இப்போது ஏற்படுத்தியிருக்கும் அவசரகால கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும், அடுத்த சில மாதங்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் எனவும் சொல்லியுள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்காவை கவலையடைய செய்வது வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவதும் தான்.

அடுத்து வரும் நாட்களில் தனிநபர் ஒருவருக்கு 1200 டாலர்கள் வீதம் பணம் வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. அதே நேரம் இது போன்ற சூழல் வெகு நாட்கள் தொடரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகால மந்தநிலைக்கு கொண்டு செல்லும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

2020-21ம் நிதியாண்டில் வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகள் விரைவாக பொருளாதாரத்தில் மீண்டெழும் என பல மதிப்பீட்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. எது எப்படியோ இருக்க, அமெரிக்காவின் இயல்பு பொருளாதாரத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவது தான். அதே வேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் கடன் விகிதமும் முக்கியத்துவம் பெறுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஊரடங்கு காலத்தில் குறைந்த சரக்கு வருவாய் – இந்திய ரயில்வே

ஊரடங்கு காலத்தில் குறைந்த சரக்கு வருவாய் – இந்திய ரயில்வே 

Revenue declined during the Nationwide Lock down – Indian Railways

நாட்டின் மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனமாகவும், உலகின் 4வது மிகப்பெரிய ரயில் தடங்களை கொண்ட நிறுவனமாகவும் இந்திய ரயில்வே வலம் வருகிறது. சுமார் 96,000 கிலோமீட்டர் பாதை நீளத்தை கொண்ட இந்நிறுவனம் நாளொன்றுக்கு 20,000 பயணிகள் ரயில் போக்குவரத்தை இயக்கி வருகிறது.

இந்திய ரயில்வேயின் வருவாய் 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 12.3 லட்சம். மத்திய ரயில்வே அமைச்சராக தற்போது திரு. பியூஸ் கோயல் பதவி வகிக்கிறார். 175 வருடங்கள் பழமையான நிறுவனமாக இருக்கும் இந்திய ரயில்வே முதன்முறையாக தனது ரயில் சேவையை கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தியது.

மார்ச் 24ம் தேதி துவங்கிய ஊரடங்கு காலத்தில், சுமார் 48 நாட்கள் தனது பயணிகள் ரயில் போக்குவரத்தை நிறுத்தியது. நிறுத்தப்பட்ட பயணிகள் சேவை ரயில்களின் எண்ணிக்கை மட்டும் 13,523. இந்த ஊரடங்கு காலத்தின் போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்கான சிறப்பு பயணிகள் ரயில்களையும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான சரக்கு ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்கியது.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்த 2019ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த பங்கின் விலை ஆரம்பநிலையில் சுமார் 112 மடங்கு அளவில் பங்குதாரர்களிடம் கேட்கப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி. 2019-20ம் நிதியாண்டில் ரூ.1506 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு, உணவு விநியோகித்தல் மற்றும் சுற்றுலா சார்ந்த சேவைகளை ஐ.ஆர்.சி.டி.சி. வழங்குகிறது. 2019ம் ஆண்டு கணக்கின் படி, சுமார் 2 கோடி பயனாளர்கள் இதன் இணையதளத்தை பயன்படுத்தி ரயில் பயண முன்பதிவை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே நிறுவனத்தை பொறுத்தவரை மூன்று விதங்களில் வருவாய் ஈட்ட பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில், சரக்கு ரயில் மூலமான வருவாய் மற்றும் இதர வருவாயாக மூன்று வருவாய்களை கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ரயில்வே வருவாய் வளர்ச்சி சீராக வந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலத்தில், பயணிகள் ரயில் சேவை பெரிதாக எதுவுமில்லை. நாடு முழுவதும் இயங்கிய சில சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போதைய கணக்கில் உள்ளன.

சரக்கு ரயில்களை(Frieght Earnings) பொறுத்தவரையில் உணவு தானியங்கள், உரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் இம்முறை சொல்லப்பட்ட காலத்தின் சரக்கு வருவாய் சுமார் 38 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சரக்கு கையாளப்படும் அளவிலும் 28 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.

ஏப்ரல்-மே காலத்தில் நிலக்கரி போக்குவரத்து ரூ. 5,778 கோடிக்கு நடந்துள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலத்தில் ரூ.11,030 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக நிலக்கரி மூலமான வருவாய் 90 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இது போல சிமெண்ட் வருவாயும் 100 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. கடந்த வருடம் ரூ.1,630 கோடியாக இருந்த சிமெண்ட் மூலமான வருவாய் இம்முறை 730 கோடி ரூபாயாக உள்ளது.

அதே வேளையில் உணவு தேவை அதிகரித்ததால், உணவு தானியங்களின் வருவாய் 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. வடக்கு ரயில்வேயின் அம்பாலா பிரிவில்(Ambala Division) சரக்கு வருவாய் ஏப்ரல்-மே காலத்தில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் ரூ.130 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருவாய் இம்முறை 235 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட உணவு தானியங்கள் மூலமான வருவாய் தான்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் எச்சரிக்கை மணி – உலக பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை சந்திக்கும்

மீண்டும் எச்சரிக்கை மணி – உலக பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை சந்திக்கும் 

Warning – The Global economy will suffer the worst – World Bank

இன்றைய தின தரவுகளின் படி, உலக மக்கள் தொகை 779 கோடி. உலக பொருளாதார உற்பத்தியில்(World GDP) சுகாதாரத்திற்கு செலவிடப்படக்கூடிய தொகை 9 சதவீதம். கல்விக்காக உலக பொருளாதாரத்தில் சுமார் 5 சதவீதம் செலவிடப்படுகிறது. உலக பொருளாதாரத்தின் மதிப்பு 85.93 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (2018ம் ஆண்டு கணக்கின் படி).

வல்லரசு நாடான அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.50 டிரில்லியன் டாலர்கள். உலக பொருளாதாரத்தில் 24 சதவீத பங்களிப்பை அமெரிக்கா கொண்டுள்ளது. இரண்டாவதாக சீனாவின் பங்களிப்பு 15.86 சதவீதமாக உள்ளது – 13.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். நம் நாட்டின் பொருளாதாரம் 2.73 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது உலக பொருளாதாரத்தில் 3.2 சதவீதம்.

சர்வதேச நாணய நிதியம்(IMF) உலகின் முக்கிய பொருளாதாரமாக 20 நாடுகளை கொண்டிருக்கிறது. மிகவும் மேம்பட்ட பொருளாதார நாடுகளாக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom), ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து உள்ளன. இந்த பிரிவில் சுமார் 30 நாடுகள் உள்ளது.

ஜி-7 நாடுகளை தவிர்த்து இதர மேம்பட்ட பொருளாதாரமாக தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற நாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் உலக பொருளாதார வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சோவியத் யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் இருந்து வந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தை சீனா தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக பொருளாதார தரவரிசையில் கடந்த 10 வருடங்களாக முதல் 10 தர பட்டியலில் ஒரு நாடாக இந்தியா இருப்பது கவனிக்கத்தக்கது. 1980களில் நாம் 13வது இடத்தில் இருந்து வந்துள்ளோம். கொரோனா தாக்கத்தின் போது ஏற்பட்ட ஊரடங்குக்கு பிறகான பொருளாதார கணிப்பில் பல மதிப்பீடு நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தையும், வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் மந்தநிலை பற்றியும் பேசி வருகின்றன.

இது சார்ந்த தகவல்கள் உலக வங்கி சார்பிலும் தற்போது சொல்லப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் அதிக நாட்களை ஊரடங்காக அறிவித்த நாடுகள் தற்போது தான் எனவும், இவற்றில் பெரும்பாலான நாடுகள் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் எனவும் கூறியுள்ளது. இதன் விளைவாக நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதம் எதிர்மறையாக(Contract – Negative GDP) செல்லும் என உலக வங்கி கணித்துள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21ம் நிதியாண்டில் 3.2 சதவீதம் வரை எதிர்மறையாக செல்லும் என கூறியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்பான மோசமான பொருளாதார வீழ்ச்சியாக இது இருக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை அதிகமாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனினும் 2021க்கு பிறகான உலக பொருளாதார வளர்ச்சி மீண்டெழும் எனவும், இவற்றில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் வளர்ச்சி, வளர்ந்த நாடுகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தற்போது சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை, கடந்த 60 வருடங்களில் காணப்பட்ட முதல் முறை வீழ்ச்சி என சொல்லப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு தேவை, வர்த்தகம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி கூறியுள்ளது.

சமீபத்திய வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, புலம் பெயர்ந்தோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை, எதிர்பாராத பங்குச்சந்தை ஏற்றம், பலவீனமான தேவை நுகர்வு ஆகியவை வரும் நாட்களில் இதனை உணர்த்தும். வரக்கூடிய காலங்களில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிப்பது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நஷ்டமடைந்த வேதாந்தா நிறுவனம் – ரூ. 12,521 கோடி நிகர நஷ்டம்

நஷ்டமடைந்த வேதாந்தா நிறுவனம் – ரூ. 12,521 கோடி நிகர நஷ்டம் 

Vedanta’s Net loss of Rs. 12,521 Crore in Q4FY20 – Quarterly Results

1979ம் ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் வேதாந்தா. சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் தங்கம், அலுமினியம் மற்றும் இரும்பு தாதுக்களை எடுத்து விற்பனை செய்து வருகிறது. முன்னர் சேஷா கோவா(Sesa Goa) என்றிருந்த நிறுவனமே பின்னாளில் வேதாந்தா நிறுவனமாக மாறியது.

வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனங்களாக பாரத் அலுமினியம், ஸ்டெர்லைட் காப்பர், எலெக்ட்ரோ ஸ்டீல் மற்றும் இந்துஸ்தான் ஜிங்க் ஆகியவை உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனராக தற்போது அனில் அகர்வால் உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக சீனிவாசன் வெங்கட்ராமன் உள்ளார்.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 39,140 கோடி. புத்தக மதிப்பு 147 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.91 ஆகவும் இருக்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 3 மடங்கில் உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 49,800 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 19,755 கோடியாகவும், செலவினம் ரூ.15,203 கோடியாகவும் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக சொல்லப்பட்ட காலாண்டில் ரூ. 12,521 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய ஒரு முறை குறைபாட்டு செலவாக ரூ. 17,132 கோடியை வருவாயில் ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக தான் தற்போது நிகர நஷ்டத்தை கூறியுள்ளது. துத்தநாகம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் வருவாய் நான்காம் காலாண்டில் குறைந்துள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் இந்திய பங்குச்சந்தையிலிருந்து தன்னார்வமாக நீக்கி விட்டு(Delist), தனியார் நிறுவனமாக செயல்பட விண்ணப்பித்திருந்தது. இது சார்ந்து பங்குதாரர்களின் ஒப்புதலை பெற வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நிறுவனத்தின் வருவாய் கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 15 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த பத்து வருட கால அளவில், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 33 சதவீதமாகவும், லாபம் 13 சதவீதமாகவும் உள்ளது. ஒரு வருட காலத்தில் இந்த பங்கின் விலை 36 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 54,263 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. பணவரத்து(Cash flow) நிறுவனத்திற்கு குறிப்பிடும்படியாக வந்து கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த வார நாணயம் விகடனில் – சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி ?

இந்த வார நாணயம் விகடனில் – சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது  எப்படி ?

Article Published in Nanayam Vikatan – About creating the best investment portfolio

நீண்டகாலத்தில் முதலீடு செய்யும் ஒருவர், ஒரு முதலீட்டு சாதனத்தை மட்டும் தேர்ந்தெடுப்பது சாதகமாக இருக்காது.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டுவிட்டு அக்கடா என்று கிடப்பதோ, பங்குச் சந்தையில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு பிறகு `குய்யோ… முய்யோ…’ என்று கூப்பாடு போடுவதோ ஒரு நல்ல முதலீட்டாளருக்கு அழகல்ல. அப்படிச் செய்வது ஒரு நல்ல முதலீட்டாளரின் நலனைப் பாதுகாக்காது.

சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோ(Investment Portfolio) உருவாக்குவதற்கான முக்கிய ஆறு படி நிலைகளை பற்றி இந்த வார நாணயம் விகடன் இதழில் வெளிவந்துள்ளது. நமது பதிவை வெளியிட்ட நாணயம் விகடன் பொறுப்பாசிரியருக்கு வர்த்தக மதுரை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

முதலீட்டு கலையை சுவாசிக்க ஒவ்வொரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய படிநிலைகளாக சொல்லப்பட்ட ஆறு முத்துக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் முதலீட்டின் மூலம் ஏற்படக்கூடிய அதிகமான நஷ்டத்தையும் இந்த நிலைகள் மூலம் தவிர்க்கலாம்.

பொதுவாக, பங்குகள் விலை சரியும்போது, தங்கம் ஏற்றம் பெறும். இதனால் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் சற்று அதிகமாக இருக்கும். வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்போது, கடன் பத்திரங்கள் / கடன் ஃபண்டுகளின் வருவாய் சற்று அதிகமாகக் கிடைக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள, நாணயம் விகடன் இதழை வாங்கி படியுங்கள்.

இணைய வழி தொடர்பின் மூலம் படிக்க…

சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோ – உருவாக்குவதற்கான படிநிலைகள்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

நாட்டின் மே மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் – 23.50 சதவீதம்

நாட்டின் மே மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் – 23.50 சதவீதம் 

India’s Unemployment rate to 23.50 Percent in May 2020 – CMIE

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(CMIE) சார்பில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். கோவிட்-19 தாக்கத்தால் கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிவர கணக்கிடப்படாதது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். மேலே சொல்லப்பட்ட கண்காணிக்கும் மையம் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளும். கடந்த மார்ச் மாத முடிவில் 8.75 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) ஏப்ரல் மாதத்தில் 23.52 சதவீதம் என்ற உச்சகட்ட விகிதத்தை அடைந்தது.

புலம் பெயர்ந்தோர் தங்களது வாழ்வாதாரத்திற்காக சொந்த மாநிலத்தை தேடி சென்ற நிலையில், சிறு மற்றும் குறு தொழில்களில் பெரும்பான்மையான வேலையாட்கள் இல்லாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. மே மாத முடிவிலும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.48 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் காணப்படும் விகிதம் 25.80 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 22.50 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில் தான் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மாநிலங்களின் வாரியாக காணும் போது, மே மாதத்தில் தமிழகம் 33 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்தை கொண்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 சதவீதத்திற்கு அருகாமையில் இருந்தது கவனிக்கத்தக்கது. நாட்டில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 59 சதவீதமும், புதுச்சேரியில் 58.2 சதவீதமாகவும் மற்றும் பீகாரில் 46.2 சதவீதமாகவும் உள்ளது.

குறைந்த அளவாக ஜம்மு & காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5 சதவீதமாகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 சதவீதம் மற்றும் ஒடிசாவில் 9.6 சதவீதமாக உள்ளது. வார அடிப்படையில்(Weekly jobless) காணும் போது, கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 20.19 சதவீதமாக உள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது 4 சதவீத குறைவாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com