மீண்டும் எச்சரிக்கை மணி – உலக பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை சந்திக்கும்
Warning – The Global economy will suffer the worst – World Bank
இன்றைய தின தரவுகளின் படி, உலக மக்கள் தொகை 779 கோடி. உலக பொருளாதார உற்பத்தியில்(World GDP) சுகாதாரத்திற்கு செலவிடப்படக்கூடிய தொகை 9 சதவீதம். கல்விக்காக உலக பொருளாதாரத்தில் சுமார் 5 சதவீதம் செலவிடப்படுகிறது. உலக பொருளாதாரத்தின் மதிப்பு 85.93 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (2018ம் ஆண்டு கணக்கின் படி).
வல்லரசு நாடான அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.50 டிரில்லியன் டாலர்கள். உலக பொருளாதாரத்தில் 24 சதவீத பங்களிப்பை அமெரிக்கா கொண்டுள்ளது. இரண்டாவதாக சீனாவின் பங்களிப்பு 15.86 சதவீதமாக உள்ளது – 13.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். நம் நாட்டின் பொருளாதாரம் 2.73 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது உலக பொருளாதாரத்தில் 3.2 சதவீதம்.
சர்வதேச நாணய நிதியம்(IMF) உலகின் முக்கிய பொருளாதாரமாக 20 நாடுகளை கொண்டிருக்கிறது. மிகவும் மேம்பட்ட பொருளாதார நாடுகளாக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom), ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து உள்ளன. இந்த பிரிவில் சுமார் 30 நாடுகள் உள்ளது.
ஜி-7 நாடுகளை தவிர்த்து இதர மேம்பட்ட பொருளாதாரமாக தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற நாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் உலக பொருளாதார வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சோவியத் யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் இருந்து வந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தை சீனா தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக பொருளாதார தரவரிசையில் கடந்த 10 வருடங்களாக முதல் 10 தர பட்டியலில் ஒரு நாடாக இந்தியா இருப்பது கவனிக்கத்தக்கது. 1980களில் நாம் 13வது இடத்தில் இருந்து வந்துள்ளோம். கொரோனா தாக்கத்தின் போது ஏற்பட்ட ஊரடங்குக்கு பிறகான பொருளாதார கணிப்பில் பல மதிப்பீடு நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தையும், வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் மந்தநிலை பற்றியும் பேசி வருகின்றன.
இது சார்ந்த தகவல்கள் உலக வங்கி சார்பிலும் தற்போது சொல்லப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் அதிக நாட்களை ஊரடங்காக அறிவித்த நாடுகள் தற்போது தான் எனவும், இவற்றில் பெரும்பாலான நாடுகள் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் எனவும் கூறியுள்ளது. இதன் விளைவாக நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதம் எதிர்மறையாக(Contract – Negative GDP) செல்லும் என உலக வங்கி கணித்துள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21ம் நிதியாண்டில் 3.2 சதவீதம் வரை எதிர்மறையாக செல்லும் என கூறியுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்பான மோசமான பொருளாதார வீழ்ச்சியாக இது இருக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை அதிகமாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனினும் 2021க்கு பிறகான உலக பொருளாதார வளர்ச்சி மீண்டெழும் எனவும், இவற்றில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் வளர்ச்சி, வளர்ந்த நாடுகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தற்போது சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை, கடந்த 60 வருடங்களில் காணப்பட்ட முதல் முறை வீழ்ச்சி என சொல்லப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு தேவை, வர்த்தகம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி கூறியுள்ளது.
சமீபத்திய வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, புலம் பெயர்ந்தோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை, எதிர்பாராத பங்குச்சந்தை ஏற்றம், பலவீனமான தேவை நுகர்வு ஆகியவை வரும் நாட்களில் இதனை உணர்த்தும். வரக்கூடிய காலங்களில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிப்பது அவசியமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை