பேங்கோ புரொடக்ட்ஸ்(Banco Products) – காலாண்டு நிகர லாபம் ரூ. 17 கோடி
Banco Product’s Net profit of Rs.17 Crore as Consolidated – Q4FY20
குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் பேங்கோ புரொடக்ட்ஸ்(Banco Products). கடந்த 1961ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ரயில் இன்ஜின்களுக்கான இயந்திர குளிரூட்டும் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.
நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு தேவையான இயந்திர குளிரூட்டும் சாதனங்களையும்(Engine Cooling & Sealing Systems, Radiators) தயாரித்து வந்தது. இதன் முக்கிய வாடிக்கையாளர்களாக இந்திய ரயில்வே, டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மாருதி, ஹீரோ, ஹோண்டா, டி.வி.எஸ். குழுமம், டாப்பே(Tafe) மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் உள்ளது.
ரேடியட்டர் மற்றும் கேஸ்கெட் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் பேங்கோ புரொடக்ட்ஸ் திகழ்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. கடந்த 1987ம் ஆண்டு பங்குச்சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்பட்டது.
2010ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டை சேர்ந்த முன்னணி நிறுவனமான என்.ஆர்.எப்.(NRF B.V) ஐ 100 சதவீத பங்குகளுடன் கையகப்படுத்தியது. மின்னணு வாகனங்கள் சார்ந்த தொழிலிலும் இந்நிறுவனம் அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.500 கோடி. புத்தக மதிப்பு 120 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.10 ஆகவும் உள்ளது.
வட்டி பாதுகாப்பு விகிதம் 37 மடங்கிலும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 68 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் அடமான பங்குகள் எதுவுமில்லை. நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ. 855 கோடி. இருப்புநிலை கையிருப்பு 696 கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.
2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 332 கோடி ரூபாயாகவும், செலவினம் 298 கோடி ரூபாயாக உள்ளது. இதர வருமானமாக 7 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.17 கோடி. கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய லாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதே வேளையில் நிதியாண்டு முழுவதையும் ஒப்பிடும் போது, 2019-20ம் நிதியாண்டில் லாபம் 43 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாபம் 11 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 47 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருடங்களில் 18 சதவீதமாகவும், 10 வருடங்களில் 19 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்திற்கான பணவரத்து(Positive Cash Flow) நேர்மறையாக உள்ளது. சென்ற நிதியாண்டில் பங்கு ஒன்றுக்கு 23 ரூபாய் டிவிடெண்ட் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை