நாட்டின் மே மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் – 23.50 சதவீதம்
India’s Unemployment rate to 23.50 Percent in May 2020 – CMIE
இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(CMIE) சார்பில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். கோவிட்-19 தாக்கத்தால் கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிவர கணக்கிடப்படாதது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். மேலே சொல்லப்பட்ட கண்காணிக்கும் மையம் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளும். கடந்த மார்ச் மாத முடிவில் 8.75 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) ஏப்ரல் மாதத்தில் 23.52 சதவீதம் என்ற உச்சகட்ட விகிதத்தை அடைந்தது.
புலம் பெயர்ந்தோர் தங்களது வாழ்வாதாரத்திற்காக சொந்த மாநிலத்தை தேடி சென்ற நிலையில், சிறு மற்றும் குறு தொழில்களில் பெரும்பான்மையான வேலையாட்கள் இல்லாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. மே மாத முடிவிலும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.48 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் காணப்படும் விகிதம் 25.80 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 22.50 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில் தான் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மாநிலங்களின் வாரியாக காணும் போது, மே மாதத்தில் தமிழகம் 33 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்தை கொண்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 சதவீதத்திற்கு அருகாமையில் இருந்தது கவனிக்கத்தக்கது. நாட்டில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 59 சதவீதமும், புதுச்சேரியில் 58.2 சதவீதமாகவும் மற்றும் பீகாரில் 46.2 சதவீதமாகவும் உள்ளது.
குறைந்த அளவாக ஜம்மு & காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5 சதவீதமாகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 சதவீதம் மற்றும் ஒடிசாவில் 9.6 சதவீதமாக உள்ளது. வார அடிப்படையில்(Weekly jobless) காணும் போது, கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 20.19 சதவீதமாக உள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது 4 சதவீத குறைவாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை