2022ம் ஆண்டு வரை வட்டி விகிதத்தை உயர்த்த போவதில்லை – அமெரிக்க மத்திய வங்கி
US Fed Rate Policy – No interest hike till 2022 – Recession
வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் சுமார் 21.2 லட்சம் கோடி டாலர்கள். அதாவது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் 8 மடங்கில் அமெரிக்காவின் பொருளாதாரம் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்தது அமெரிக்கா தான் – தொற்று எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அங்கு தான் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த நாட்டில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அதனை சார்ந்த பொருளாதார சரிவும் அதிகமாக உள்ளது.
நடப்பில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை உறுதி செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் நாட்டில் நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் முதல் பொருளாதார மந்தநிலை(Official Recession) இருப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் முன்னெடுப்பாக சுமார் 2 டிரில்லியன் டாலர்களை கொண்ட பொருளாதார ஊக்குவிப்பை ஏற்படுத்தின. குடும்பத்தில் உள்ள தனிநபர் ஒருவருக்கு மாதாமாதம் 1000 டாலர்கள் என்ற அளவில் நேரிடையாக பணத்தை வழங்கவும் செய்தன.
அடுத்து வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கை இருக்கும் எனவும், கூடுதலான தொகை மக்களிடம் அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இவற்றில் அமெரிக்காவின் பெடரல்(US Fed) என சொல்லப்படும் மத்திய வங்கியின் செயல்பாடு முக்கியமானது. தன்னிச்சையாக செயல்படும் பெடரல் அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய வட்டி விகிதத்தையும் அதிரடியாக குறைத்தது.
நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்வதை சற்று சரிசெய்ய வட்டி விகித குறைப்பு பலனளிக்கும். நடப்பில் அமெரிக்காவின் வட்டி விகிதம்(Interest rate) 0-0.25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நேற்று நடந்த நிகழ்வில் வட்டி விகிதத்தை 2022ம் ஆண்டு வரை உயர்த்தும் எண்ணம் இல்லை எனவும், தற்போது நிலவும் பூஜ்யத்துக்கு அருகில் உள்ள வட்டி விகிதம் தான் தொடரும் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.
இப்போது ஏற்படுத்தியிருக்கும் அவசரகால கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும், அடுத்த சில மாதங்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் எனவும் சொல்லியுள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்காவை கவலையடைய செய்வது வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவதும் தான்.
அடுத்து வரும் நாட்களில் தனிநபர் ஒருவருக்கு 1200 டாலர்கள் வீதம் பணம் வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. அதே நேரம் இது போன்ற சூழல் வெகு நாட்கள் தொடரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகால மந்தநிலைக்கு கொண்டு செல்லும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
2020-21ம் நிதியாண்டில் வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகள் விரைவாக பொருளாதாரத்தில் மீண்டெழும் என பல மதிப்பீட்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. எது எப்படியோ இருக்க, அமெரிக்காவின் இயல்பு பொருளாதாரத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவது தான். அதே வேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் கடன் விகிதமும் முக்கியத்துவம் பெறுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை