மே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை
Declining Industrial Production growth in May 2020 – No Proper data released
கொரோனா ஊரடங்கிற்கு பிறகான பொருளாதார எண்கள் கிடைக்கப்பெறுவதும், அதனை வெளியிடுவதிலும் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறியீடு(GDP) சார்ந்த தகவல் சரிவர கிடைக்கப்பெறாமல், பின்னர் முழு நிதியாண்டுக்கும் திருத்தம் செய்யப்பட்டது.
ஜனவரி-மார்ச் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகவும், 2019-20ம் நிதியாண்டில் இது 4.2 சதவீதமாகவும் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத தொழிற்துறை உற்பத்தி(IIP) 55 சதவீத வீழ்ச்சி என சொல்லப்பட்டிருந்தாலும், அப்போதைய நிலையிலும் முழு தகவல் கிடைக்கப்பெறவில்லை.
நாட்டின் முக்கிய துறைகளாக சுரங்க தொழில்(Mining), உற்பத்தி(Manufacturing) மற்றும் மின்சாரம்(Electricity) ஆகியவை சொல்லப்படுகின்றன. 2020-21ம் ஆண்டின் மே மாத முடிவில் சுரங்க தொழிலின் குறியீடு 87 புள்ளிகளாக சொல்லப்பட்டுள்ளன. இதனை கடந்த வருட மே மாதத்துடன் ஒப்பிடும் போது 21 சதவீத குறைவாக உள்ளது. இது போல உற்பத்தி துறை 39 சதவீத வீழ்ச்சியும், மின்சார துறை 15 சதவீத வீழ்ச்சியும் அடைந்துள்ளது.
இருப்பினும் மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த தகவல் முழுமையாக இல்லை. எனவே இதனை கடந்த காலத்துடன் ஒப்பிட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் காணும் போதும் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 35 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
உட்கட்டமைப்புக்கான(Infrastructure – Use Based) நுகர்வில் மே மாத உற்பத்தி 42 சதவீதம் குறைந்துள்ளது. இது போல மூலப்பொருட்கள் 64 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 68 சதவீதமும் குறைந்து காணப்படுகிறது. நடப்பு ஜூன் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி குறியீடு சார்ந்த தகவல் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை