Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

பயணிகள் ரயில் சேவையில் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கவுள்ள இந்திய ரயில்வே

பயணிகள் ரயில் சேவையில் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கவுள்ள இந்திய ரயில்வே 

Indian Railways to face Rs.30,000 Crore loss in Passenger Service – Impact on Covid-19 

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக பயணிகள் ரயில் சேவை நீண்ட நாட்கள் முடக்கப்பட்ட நிலை தற்போதைய நிலையில் தான். கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகள் சேவையும் நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும் பொருட்டு, சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

இருப்பினும், சில மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் சுமார் 230 சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. அதே வேளையில் சரக்கு ரயில்கள் அதிகப்படியாக இயங்கி வருவது சற்று ஆறுதலான விஷயம்.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்த 2019ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. சொல்லப்பட்ட மாதத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ்(Tejas Express) துவங்கப்பட்டது. லக்னோ – புது டில்லி தடத்தில் இந்த தனியார் சேவை ஆரம்பிக்கப்பட்டது. உணவு விநியோகம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்(Tourism and Hospitality), இணைய வழியிலான பயணச்சீட்டு விற்பனை ஆகிய சேவையை செய்து வருகிறது ஐ.ஆர்.சி.டி.சி.

கடந்த நிதியாண்டில் இதன் வருவாய் 1500 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. பயணிகளுக்கான உள்ளூர் ரயில் சேவை மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொரோனா தாக்கத்தால் இயக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ரயில்வே நிர்வாகத்திற்கு பெருத்த வருவாய் குறைவு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

இது சார்ந்து சமீபத்தில் பேசிய மத்திய ரயில்வே சேர்மன் வினோத் குமார், ‘ பயணிகள் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களும் முழுமையான நிலையில் நிரப்பப்படவில்லை. அவை பெரும்பாலும் 75 சதவீத பயணிகளுடன் தான் செல்கின்றன. அதே வேளையில் சரக்கு ரயில் சேவை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன ‘ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நடப்பு  நிதியாண்டில் பயணிகள் ரயில் சேவையின் வாயிலாக ரூ.30,000 கோடி முதல் 35,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் சரக்கு ரயில்கள் மூலம் இம்முறை கூடுதலாக 50 சதவீத வருவாய் கிடைக்கப்பெறும் என்றார். அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காகவே சரக்கு ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் பயணிகள் ரயில் சேவையின் வாயிலாக சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 428 கோடி ரூபாய்(ஜூன் மாத முடிவில்) வருவாய் கிடைத்துள்ளது. அதே வேளையில் அவற்றுக்கு செலவு செய்யப்பட்ட தொகை ரூ.2,140 கோடி. சிறப்பு ரயில்களில் சராசரியாக பயணச்சீட்டுக்கான கட்டணம் ரூ.600 ஆக இருந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் சராசரியாக பயணி ஒருவருக்கு 3,400 ரூபாய் செலவிட்டுள்ளது. எனினும், இது போன்ற அவசர காலங்களில் வருவாயை மட்டுமே குறிப்பாக எடுத்து கொள்ள முடியாது என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஹேவல்ஸ் இந்தியா – ஜூன் காலாண்டு லாபம் ரூ. 64 கோடி

ஹேவல்ஸ் இந்தியா – ஜூன் காலாண்டு லாபம் ரூ. 64 கோடி 

Havells India reported net profit of Rs. 64 Crore in Q1FY21

1958ம் ஆண்டு துவங்கப்பட்ட ஹேவல்ஸ் இந்தியா நிறுவனம் மின்னணு உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இதன் கிளைகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், உள்நாட்டில் மட்டும் 11 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. வீடு மற்றும் சமையலுக்கு தேவையான மின் உபகரணங்கள், ஒளி, மின்விசிறி, ஹீட்டர்கள், மின் மோட்டார்கள், கேபிள் மற்றும் சுவிட்சுகள் என பல்வேறு வகையான பொருட்களை கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் முக்கிய அம்சமாக உலகின் பிரபல பிராண்டுகளான லாயிட், கிராப் ட்ரீ(Crabtree), ப்ராம்ப் டெக் மற்றும் ஸ்டாண்டர்டு எலக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது. ஹேவல்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 37,200 கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 69 ரூபாயாகவும், முக மதிப்பு ஒரு ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.02 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 24 மடங்கிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், நிறுவனர் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை. கடந்த ஐந்து வருட காலத்தில் இதன் விற்பனை வளர்ச்சி குறைந்திருந்தாலும், லாப வளர்ச்சி 14 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

பங்கு மீதான வருமானம்(Return on Equity) கடந்த ஐந்து வருட காலத்தில் 19 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 23 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 4,250 கோடியாக இருந்துள்ளது.

நிறுவனம் 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் படி ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,483 கோடியாகவும், செலவினம் ரூ. 1,352 கோடியாகவும் உள்ளது. இதர வருமானம் 32 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 64 கோடி ரூபாயாக உள்ளது. இதனை கடந்த வருட ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது 64 சதவீத குறைவாகும்.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 9,440 கோடியாகவும், நிகர லாபம் 735 கோடி ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் சார்பில் இதுவரை மூன்று முறை போனஸ் பங்குகள்(Bonus issue) வழங்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பிறகு முகமதிப்பும் 10 லிருந்து 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய வாகன காப்பீட்டு துறையில் களமிறங்கும் அமேசான் நிறுவனம்

இந்திய வாகன காப்பீட்டு துறையில் களமிறங்கும் அமேசான் நிறுவனம் 

Amazon India enters into the Auto Insurance in India

கடந்த 1994ம் ஆண்டு துவங்கப்பட்ட அமேசான் நிறுவனம் இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இணைய வர்த்தகம், மேகக் கணிமை(Cloud Computing), டிஜிட்டல் வீடியோ (Digital Streaming) மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் கால் பதித்துள்ளது.

டாட் காம்(Dot com) வீழ்ச்சி மற்றும் 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியால் அமேசான் நிறுவனம் திவால் நிலை வரை சென்றது. பின்பு துரித முதலீடு மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் மீட்டெடுக்கப்பட்டு, இன்று உலகின் பெரு நிறுவனமாக மாறியுள்ளது. நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் இன்று உலகின் பணக்காரராக முதலிடத்தில் இருக்கிறார்.

அமேசான் நிறுவனம் பல நாடுகளில் தனது காலடியை பதித்து வருகிறது. தொழில் போட்டிகளை கடந்து, தொழில்நுட்பத்துடன் புதுமையான சிந்தனைகளை புகுத்தி வீறு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. பிளிப்கார்ட்(Flipkart) நிறுவனத்தின் நிறுவனர்களும், அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் தான்.

இந்திய வாகன காப்பீட்டு துறையில் நுழைய, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனத்திற்கும், மும்பையை தலைமையிடமாக கொண்ட அக்கோ(Acko General Insurance) பொது காப்பீடு நிறுவனத்திற்குமிடையே பேச்சு வார்த்தை நடந்தது. தற்போது இவற்றில் உடன்பாடு ஏற்பட்டு, அமேசான் நிறுவனம் இந்திய வாகன காப்பீட்டு துறையில் நேரிடையாக விற்பனையில் களம் இறங்கியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அக்கோ நிறுவனம் பெரு முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 274 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றிருந்தது. இவற்றில் அமேசான் நிறுவனமும் ஒரு முதலீட்டாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கோ நிறுவனம் பொது காப்பீட்டில் வாகனங்களுக்கான பாலிசி சேவைகளை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் ஓலா(Ola) நிறுவனத்துடனான சேவையிலும் கூட்டு வைத்துள்ளது. எனவே அமேசான் இந்தியா தளத்திலும் வாகனங்களுக்கான காப்பீட்டு சேவையை இனி பெறலாம். எளிய முறையில், காகித ஆவணங்களை குறைக்கும் பொருட்டு அமேசான் பே (Amazon Pay) மூலமாக இன்சூரன்ஸ் பாலிசிகளை பெறலாம் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிகத்திலும் அமேசான் நிறுவனம் கால்பதிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முடிவு எட்டப்படும் நிலையில், ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் 10 சதவீத பங்குகளை அமேசான் வாங்கலாம் என சொல்லப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்சரிக்கை செய்யும் ஜூன் மாத பணவீக்க விகிதம் – 6.09 சதவீதம்

எச்சரிக்கை செய்யும் ஜூன் மாத பணவீக்க விகிதம் – 6.09 சதவீதம் 

India’s Retail Inflation to 6.09 Percent in the month of June 2020

நடப்பாண்டில் நாட்டின் விலைவாசி விகிதம் ஏற்ற-இறக்கத்தில் காணப்பட்டிருந்தாலும், சராசரியாக 6 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக இருந்த நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம்(CPI Retail Inflation), மார்ச் மாதத்தில் 5.84 சதவீதமாக குறைந்திருந்தது. அதே சமயத்தில் ஊரடங்கு காலத்தில் எதிர்பாராத விலை நகர்வால், சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.

ஜூன் மாத முடிவில் 6.09 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் உள்ளது. உணவுப்பொருட்களின் விலை மட்டும் உயர்ந்துள்ள நிலையில், பொருளாதாரம் மீட்கப்படும் பட்சத்தில், எதிர்பாராத விலை உயர்வு ஏற்படலாம். ஜூன் மாதத்தில் சந்தை எதிர்பார்த்த 5.3 சதவீத பணவீக்கத்தை விட, கூடுதலாக விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஜூன் மாதத்தில் புகையிலை மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் விலை 9.7 சதவீதமும், உணவுப்பொருட்களின் பணவீக்கம் 7.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பருப்பு வகைகள் 17 சதவீதமும், மீன் மற்றும் இறைச்சி 16 சதவீதமும் மசாலா பொருட்கள் 11.74 சதவீதமாகவும் விலை உயர்ந்துள்ளது. அதே வேளையில் பழங்களின் விலை 0.68 சதவீதமாகவும், காய்கறி வகைகளின் விலை 1.86 சதவீதமாகவும் உள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பொருளாதார எண்கள் சரியாக கிடைக்கப்பெறவில்லை என மத்திய புள்ளியியல் அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நாட்டின் வணிக ஏற்றுமதி 37 சதவீதம் சரிந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நாட்டின் ஏற்றுமதி அளவு 51.32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இது போல வணிக இறக்குமதி அளவும் 60.44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. காலாண்டு அடிப்படையில் இறக்குமதி 52.43 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 9.12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. சேவையுடன் சேர்த்த ஒட்டுமொத்த அளவை காணும் போது, வர்த்தக உபரியாக(Trade Surplus) 11.70 பில்லியன் டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது.

மந்தநிலை என்ற நிலையிலிருந்து, கொரோனா தாக்கத்திற்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் பெருமந்தநிலையை எட்டியுள்ளது. ஊரடங்கு காலத்திற்கு பிறகான இயல்பு வாழ்க்கை திரும்பும் பட்சத்தில், நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பாரத ரிசர்வ் வங்கியின் அடுத்தகட்ட நிதிக்கொள்கை குழு கூட்டம் முக்கியத்துவம் பெறும். மத்திய வங்கி, வட்டி விகித மாற்றத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படலாம். விலைவாசி உயர்ந்தால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கலாம். போதிய மழைப்பொழிவு, தேவை நுகர்வு அதிகரித்தால் மட்டுமே அது பொருளாதாரத்தை ஊக்குவிக்க துணைபுரியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை

மே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை 

Declining Industrial Production growth in May 2020 – No Proper data released

கொரோனா ஊரடங்கிற்கு பிறகான பொருளாதார எண்கள் கிடைக்கப்பெறுவதும், அதனை வெளியிடுவதிலும் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறியீடு(GDP) சார்ந்த தகவல் சரிவர கிடைக்கப்பெறாமல், பின்னர் முழு நிதியாண்டுக்கும் திருத்தம் செய்யப்பட்டது.

ஜனவரி-மார்ச் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகவும், 2019-20ம் நிதியாண்டில் இது 4.2 சதவீதமாகவும் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத தொழிற்துறை உற்பத்தி(IIP) 55 சதவீத வீழ்ச்சி என சொல்லப்பட்டிருந்தாலும், அப்போதைய நிலையிலும் முழு தகவல் கிடைக்கப்பெறவில்லை.

நாட்டின் முக்கிய துறைகளாக சுரங்க தொழில்(Mining), உற்பத்தி(Manufacturing) மற்றும் மின்சாரம்(Electricity) ஆகியவை சொல்லப்படுகின்றன. 2020-21ம் ஆண்டின் மே மாத முடிவில் சுரங்க தொழிலின் குறியீடு 87 புள்ளிகளாக சொல்லப்பட்டுள்ளன. இதனை கடந்த வருட மே மாதத்துடன் ஒப்பிடும் போது 21 சதவீத குறைவாக உள்ளது. இது போல உற்பத்தி துறை 39 சதவீத வீழ்ச்சியும், மின்சார துறை 15 சதவீத வீழ்ச்சியும் அடைந்துள்ளது.

இருப்பினும் மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த தகவல் முழுமையாக இல்லை. எனவே இதனை கடந்த காலத்துடன் ஒப்பிட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் காணும் போதும் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 35 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

உட்கட்டமைப்புக்கான(Infrastructure – Use Based) நுகர்வில் மே மாத உற்பத்தி 42 சதவீதம் குறைந்துள்ளது. இது போல மூலப்பொருட்கள் 64 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 68 சதவீதமும் குறைந்து காணப்படுகிறது. நடப்பு ஜூன் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி குறியீடு சார்ந்த தகவல் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

Mutual Funds Investment declined in the month of June 2020

மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை விறு விறுவென ஏற்றம் பெற்று வருகிறது. பெரும்பாலான பங்குகள் மார்ச் கடைசி வாரம் அதலபாதாளத்திற்கு சென்ற நிலையில், தற்போது விலையேற்றத்தில் சுமார் 30-80 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளன.

பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் எதிர்பாராத விதமாக ஏற்றமடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற நிகழ்வு பங்குச்சந்தையில் இயல்பான ஒன்று தான். பின்னொரு நாளில் வேறொரு காரணத்திற்காக இறங்குவதும் நடக்கும். அதே வேளையில் நீண்டகாலத்தில் முதலீடு செய்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பெரும் செல்வத்தை அளிக்கும் வாய்ப்பாக அமையும்.

இந்திய பரஸ்பர நிதி துறையில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்(Asset Management Companies) முதலீட்டு சேவையை செய்து வருகின்றன. செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பரஸ்பர நிதி துறையை ஆம்பய்(AMFI) அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகள் சார்ந்த தகவல்களை ஆம்பய் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாத முடிவின் படி, இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு(AUM) 25.5 லட்சம் கோடி ரூபாயாகும். ஜூன் மாதத்தில் பரஸ்பர முதலீடுகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதலீடு ரூ.195 கோடி. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு ரூ. 240 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 95 சதவீத குறைவாகும்.

ரிஸ்க் குறைந்த லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) இருந்து பெரும்பாலான முதலீடுகள் கடந்த மாதத்தில் வெளியேறியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 44,220 கோடி ரூபாய். கடன் பத்திரம் மற்றும் வருவாய் சார்ந்த பண்டுகளில் ஈர்க்கப்பட்ட ஜூன் மாத முதலீடு ரூ. 2,862 கோடி. கலவை திட்டம் என அழைக்கப்படும் ஹைபிரிட்(Hybrid) திட்டத்தில் 356 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.

ஓய்வு கால நிதி மற்றும் குழுந்தைகளுக்கான திட்டங்களில் பெறப்பட்ட தொகை ரூ. 108 கோடி ஆகும். வரி சலுகை சார்ந்த திட்டங்கள் வாயிலாக கடந்த மாதத்தில் முதலீடுகள்  ஈர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து 15 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.(Gold ETF) திட்டத்தின் மூலம் 494 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் இரண்டிலும் முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வேலையிழப்பு, குறைவான நாட்களுக்கு மட்டுமே பெறப்பட்ட ஊதியம், மந்தநிலையை காரணம் காட்டி முதலீடு செய்யாமல் இருந்ததாகும். மேலும் பங்குச்சந்தை மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் உச்சத்தில் இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்.

சந்தை இறக்கத்தில் அதிகமாக பெறப்பட்ட முதலீடு, தற்போது எச்சரிக்கை உணர்வாக பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை எனலாம். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், நீண்டகால வருவாய் வளர்ச்சியை பெறலாம். சந்தை ஏற்ற-இறக்கத்தை கணிப்பதை விட, நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை திரட்டுவது அவசியமாகும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

5 Precautions to do in the Market Crash – Recession 2020

நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு உலக பங்குச்சந்தை குறியீடுகள் மிக வேகமாக எழுந்து வந்துள்ளது. உள்நாட்டில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த மூன்று மாதங்களில் 20 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. அதே வேளையில் 2020ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து காணும் போது இன்னும் 13 சதவீத இறக்கத்தில் உள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அடைந்தது. கடந்த இரண்டு வருடங்களாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை என்ற செய்தி வலுவடைந்து தற்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விரைவாக மீட்டெடுக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நடப்பு வருடத்தில் முக்கியமாக கருதப்படும் நிகழ்வாக கொரோனா வைரஸ் தாக்கம்(Covid-19), வர்த்தக போர்(Trade war), எண்ணெய் நாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் விலை மாற்றம், அமெரிக்க தேர்தல், நாடுகளிடையே காணப்படும் போர் பதற்ற சூழ்நிலை(War Panic) தான் உள்ளது. பொருளாதார மந்தநிலையால் அடுத்து வரவிருக்கும் காலாண்டுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டிருக்காது.

ஆனால், உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்தில் மட்டும் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது சந்தையில் நிலவுவது காளையா அல்லது கரடியா என்ற ஐயத்தில் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் அணுகுகின்றனர். மார்ச் மாத வீழ்ச்சி போன்று மறுபடியும் நடப்பு வருடத்தில் ஏற்பட வாய்ப்புண்டா என கேள்வி எழுப்பினால், நடப்பதற்கான சாத்திய கூறு அதிகம் தான்.

கடந்த இரண்டு வருடத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதும், அதற்கு மாறாக பங்குச்சந்தை குறியீடுகள் மேலே சென்றதும் தான் மார்ச் மாத வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின்னால் உள்ள பொருளாதார எண்கள் தான் உண்மை நிலவரத்தை விவரிக்கும். அமெரிக்க சந்தைகள் போல, இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றமடைவதற்கான கூறுகள் உள்ளன.

இருப்பினும், இது சந்தை நிலவரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதனையே காட்டுகிறது. கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலையால் ஊரடங்கு ஏற்படாவிட்டாலும், இயல்பு வாழ்க்கை என்பது சாதாரண நிகழ்வாக இருக்காது. இது சந்தை சங்கிலியை(Supply Chain) பாதிக்க கூடும். எனவே மற்றொரு சந்தை வீழ்ச்சி நாம் மேலே சொன்ன சில காரணிகளால் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இங்கே யூகிப்பதற்கு எதுவுமில்லை. அதே வேளையில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். எனவே பங்குச்சந்தை வீழ்ச்சியை கணிப்பதை தவிர்த்து, அதற்கான முன்னெச்சரிக்கை விஷயங்களை நாம் பின்பற்றினால், சந்தையில் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஈட்டலாம்.

  • சரியான நிதி திட்டமிடல் எப்போதும் அவசியம்:

தற்போது உள்ள சூழ்நிலை அடிக்கடி நிகழும் நிகழ்வாக வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன்னர், உங்களையும், உங்கள் குடும்ப நிதி பாதுகாப்பை உறுதி செய்ய டேர்ம் பாலிசி, மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை ஏற்படுத்துவது அவசியம்.

அதற்கு பின்னர் தான் உங்கள் உபரி தொகையை சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற காலங்களில் சந்தையில் குறுகிய காலத்தில் விரைவாக பணம் பண்ணுகிறேன் என மொத்த பணத்தையும் இழக்க வேண்டாம். நீண்ட காலத்திற்கு நல்ல நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து முதலீடு செய்க.

  • உங்கள் நிதி இலக்குகளுக்கு நேரிடையாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்:

நிதி இலக்குகளுக்காக சந்தையில் முதலீடு செய்ய உள்ளவர்கள், நீண்டகால இலக்கை மட்டும் கொண்டிருத்தல் நலம். குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்கிற்கு தற்போதைய நிலையில் நேரடி பங்குகளை அணுக வேண்டாம். அதற்கு மாறாக பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds Schemes) பயன்படுத்தி கொள்ளலாம்.

நல்லதொரு செல்வத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் பங்குச்சந்தை முதலீட்டை நீண்டகால நோக்கில் அணுகலாம். நடப்பில் உள்ள சந்தை வீழ்ச்சிகளில் முதலீடு செய்யும் பட்சத்தில், அடுத்த சில வருடங்களில் நல்ல வருவாயினை சந்தையில் ஈட்டலாம்.

  • ஒரு  முறை  முதலீடாக மொத்த பணத்தையும் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்(Don’t invest as Lumpsum):

உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டு தொகையை தற்போதைய சந்தையில் ஒரே பங்கில் போட்டு விட்டு, அடுத்த சில வருடங்களில் கோடிகளை அள்ளலாம் என உங்கள் நிதி ஆதாரத்தை மீறி ரிஸ்க் எடுக்க வேண்டாம். குறுகிய காலத்தில் சந்தை மிகவும் ஆபத்தானது. பொருளாதார வீழ்ச்சி காலங்களில் உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டில் 10-20 சதவீதம் என்ற அளவில் ஒவ்வொரு பெரிய இறக்கத்திலும் முதலீடு செய்வது நன்று.

ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்து விட்டு, பின்பு இறக்கத்தில் உங்களால் பங்குகளை வாங்க முடியாவிட்டால், அதற்கான வாய்ப்பு பின்னாளில் கிட்டாது.

  • பரஸ்பர நிதிகளில் பரிமாற்ற திட்டத்தை(STP) பயன்படுத்துங்கள்:

பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், மொத்த முதலீட்டை பங்குகளில் மேற்கொள்ளாமல், அதனை லிக்விட்(Liquid Fund) அல்லது ரிஸ்க் குறைந்த கடன் பத்திர(Debt Funds) திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, தொடர் பரிமாற்ற திட்டத்தை(Systematic Transfer Plan) தேர்ந்தெடுத்து பங்குகளில் முதலீடு செய்யலாம்.

வார எஸ்.டி.பி. அல்லது மாத எஸ்.டி.பி. திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் சந்தை இறக்கத்தில் அமையும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்வோர் தங்கள் மாதாந்திர அல்லது வார முதலீட்டு தொகையை அடுத்த ஓரிரு வருடங்களுக்கு அதிகரித்து கொள்ளலாம். வேலையை இழந்தவர்கள் தாங்கள் ஏற்கனவே செய்த மாத முதலீட்டை தொடர முடியவில்லை எனில், கணக்கை முடித்து கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக தற்காலிகமாக மாத முதலீட்டை நிறுத்தி வைக்கலாம்.

  • ரொக்கமாக பணத்தை வைத்திருங்கள், மதிப்பீடுகள் மிக முக்கியம்:

சந்தை எப்போது வீழ்ச்சியடையும் என யாராலும் கணிக்க முடியாது. அதே வேளையில் பொருளாதாரம் சரியில்லாத போது , அதற்கான நகர்வுகள் சந்தையில் நிச்சயமாக நிகழும். குறுகிய காலத்தில் சந்தை வாக்கு இயந்திரமாகவும், நீண்டகாலத்தில் அது எடைபோடும் இயந்திரமாகவும் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சந்தை வீழ்ச்சியின் போது முதலீடு செய்ய ரொக்கமாக பணத்தை(Sitting with a Cash) கொண்டிருக்க வேண்டும். அவற்றுக்காக காத்திருக்காமல் முன்னரே திட்டமிடுங்கள். உலக பொருளாதார வீழ்ச்சியில் நல்ல நிறுவனங்களும் (கடனில்லா, பணவரத்து கொண்டிருக்கும் நிறுவனங்கள்), அதன் மதிப்பீடுகளும் தான் நிலைத்து நிற்கும். மற்றவை திவாலாகி விடும். எனவே பங்குகளை கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம்

ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம் 

Declining Auto Sales for the month of June 2020 – Automobile India

2020ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்திய வாகனத்துறைக்கு ஆறுதலான  இரண்டு விஷயங்கள் – கிராமப்புறங்களுக்கு தேவையான டிராக்டர் விற்பனை வளர்ச்சி  மற்றும் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் 4.5 லட்ச வாகன விற்பனை சாதனை ஆகியவற்றை தவிர்த்து வேறு எதுவுமில்லை.

கடந்த ஏப்ரல் மாத முழு ஊரடங்கின் போது, வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் எந்த விற்பனையையும் செய்ய முடியாமல் இருந்தன. மே மாதத்தில் வாகன விற்பனை ஓரளவு இருந்தாலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது சுமார் 60-80 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்தன.

இந்த விற்பனை மந்தம் ஜூன் மாதத்திலும் நடந்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட வாகனத்துறை விற்பனை சார்ந்த புள்ளிவிவரத்தில் மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவன உள்நாட்டு விற்பனையில் 54 சதவீத விற்பனை வீழ்ச்சியை கொண்டிருந்தன. 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.14 லட்சம் வாகனங்கள் விற்ற நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இது 53,139 ஆக இருந்துள்ளது.

Automobile sales june 2020

ஏற்றுமதியில் கடந்த வருட ஜூன் மாதத்தின் போது 9,847 வாகனங்கள் விற்றிருந்த நிலையில், தற்போது 4,289 வாகனங்களாக சொல்லப்பட்டுள்ளன. ஆக மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும்(Exports) 56 சதவீத விற்பனை வீழ்ச்சியை கொண்டுள்ளது. இது போல ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தை காணும் போது உள்நாட்டு விற்பனையில் 75 சதவீத வீழ்ச்சியையும், ஏற்றுமதியில் 17 சதவீத விற்பனை குறைவையும் அடைந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம்(Mahindra & Mahindra) விவசாய துறை சார்ந்த டிராக்டர் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும் மற்ற பிரிவுகளில் 50 சதவீதத்திற்கு மேலாக விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஏப்ரல் – ஜூன் காலாண்டு விற்பனை புள்ளிவிவரங்களை கூறியிருந்தது. 2019ம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 1,31,879 வாகனங்களை விற்றிருந்த நிலையில், நடப்பாண்டின் இதே காலத்தில் 23,845 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. விற்பனை வளர்ச்சியில் 82 சதவீத வீழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் சந்தித்துள்ளது.

எஸ்கார்ட்ஸ்(Escorts) நிறுவனம் தனது ஜூன் மாத டிராக்டர் விற்பனையில் 21 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் அதன் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது. அசோக் லேலண்ட்(Ashok Leyland) மற்றும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. பொது போக்குவரத்து அவ்வப்போது நிறுத்தப்படுவதால், ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை ஓரளவு வந்துள்ளது. அதே வேளையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 27 சதவீதம் குறைவே. 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 6,16,526 ஆக இருந்த வாகன விற்பனை தற்போது 4,50,744 வாகனங்களாக உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,857 கோடி

ஐ.டி.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,857 கோடி 

ITC reported Net Profit of Rs. 3,857 Crore in Q4FY20 – Quarterly results

நாட்டின் வேகமாக நகரும் நுகர்வோர் துறையில்(FMCG) மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது ஐ.டி.சி. நிறுவனம். புகையிலை தொழிலை முதன்மையாக கொண்டிருந்தாலும் உணவு பொருட்கள், விடுதிகள், காகித பலகைகள் மற்றும் பேக்கேஜிங், விவசாயம் சார்ந்த பொருட்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் முக்கிய இடத்தை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.40 லட்சம் கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், நடப்பு பங்கு விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 370 மடங்கிலும், நிகர சொத்து மதிப்பு ரூ.58,487 கோடியாகவும் இருக்கிறது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 14 சதவீதமாகவும் இருந்துள்ளது. பங்கு மீதான வருவாய்(Return on Equity) 27 சதவீதமாக உள்ளது. எனினும் இந்த பங்கு விலை கடந்த 12 மாதங்களில் 30 வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,561 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 8,057 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 3,857 கோடி. இது கடந்த 2019ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவீத வளர்ச்சியாகும். 2019-2020 ஒட்டுமொத்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 53,991 கோடி ரூபாயும், நிகர லாபம் 15,584 கோடி ரூபாயாகவும் உள்ளது.

காலாண்டு அடிப்படையில் காணும் போது, அனைத்து பிரிவுகளிலும் வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது ஐ.டி.சி. நிறுவனம். அதே வேளையில் வரிக்கு முந்தைய லாபத்தில் குறைந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2020ம் ஆண்டின் மார்ச் முடிவில் ரூ. 64,044 கோடியாக இருந்துள்ளது.

பங்கு ஒன்றுக்கு 10.15 ரூபாயை ஈவு தொகையாக(Dividend) முதலீட்டாளர்களுக்கு ஐ.டி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. உபரி பணவரத்து(Free Cash Flow) அடிப்படையில் 30 சதவீத வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளது இந்நிறுவனம். வருட அடிப்படையில் வரிக்கு பிந்தைய லாபம் 21 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக நாடுகளின் போட்டி தரவரிசை: சிங்கப்பூருக்கு முதலிடம், சரிந்த அமெரிக்கா

உலக நாடுகளின் போட்டி தரவரிசை: சிங்கப்பூருக்கு முதலிடம், சரிந்த அமெரிக்கா 

World Competitiveness Ranking 2020 – Singapore tops in the list

ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மேலாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம்(IMD) வணிகம் சார்ந்த கல்வி மையத்தை நடத்தி வருகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் மற்றும் போட்டி திறனை கொண்ட நாடுகளின் பட்டியலையும் ஆராய்ந்து வெளியிடுகிறது.

ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் இந்த பட்டியல் தற்போது 2020ம் ஆண்டுக்கான தர வரிசையை தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் போட்டி தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்திலும், ஹாங்காங் இரண்டாம் இடத்திலும்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை பட்டியல் சார்ந்த தரவுகள் நான்கு முக்கிய பொருளாதார காரணிகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. பொருளாதார செயல்பாடு(Economic Performance), அரசு செயல்திறன்(Government Efficiency), வணிக திறன்(Business Efficiency) மற்றும் உட்கட்டமைப்பு(Infrastructure) ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகிறது. 2020ம் ஆண்டின் இரண்டாம் இடத்தில் டென்மார்க், மூன்றாம் இடத்தில் ஸ்விட்சர்லாந்து உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே நெதர்லாந்து, ஹாங்காங் நாடுகள் உள்ளன. கடந்த முறை மூன்றாம் இடத்தில் இருந்த ஸ்வீடன் இம்முறை ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. நார்வே, கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் 7,8 மற்றும் ஒன்பதாவது இடத்தை அடைந்துள்ளன.

2019ம் ஆண்டு(World Competitiveness Ranking) மூன்றாம் இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சீன குடியரசில் உள்ள தைவான் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் சீன நாடு 14வது இடத்திலிருந்து 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா 43வது இடத்தில் உள்ளது. கடந்த வருடமும் இதே இடத்தில் இருந்தது, அதே நேரம் 2016ம் ஆண்டு 41வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளவிலான நாடுகளின் பொருளாதார செயல்பாட்டில் இந்தியாவிற்கு 37வது இடமும், அரசு செயல்திறனில் 50வது இடமும் கிடைத்துள்ளது. தொழில்புரியும் திறனில் 32வது இடமும், உட்கட்டமைப்பில் 49வது இடமும் 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த தரவுகளில் 63 நாடுகள் உள்ளன. 63வது இடத்தில் வெனிசுலா நாடு உள்ளது. முன்னணி பொருளாதார நாடுகளில் தற்போது அமெரிக்க மற்றும் சீன நாடுகள் தான் பின்னுக்கு சென்றுள்ளது. பொருளாதார செயல்பாட்டு காரணியை பொறுத்தவரை உள்நாட்டு பொருளாதார நிலவரம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, அந்நிய முதலீடு, வேலைவாய்ப்புகள் மற்றும் விலைவாசி ஆகியவைகளை கொண்டு அளவிடப்படுகிறது.

அரசு செயல்திறனை காணும் போது நிதி ஆதாரம், வரி சார்ந்த கொள்கைகள், நிறுவன கட்டமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு, வணிக சட்டங்கள் ஆகியவை முக்கிய புள்ளிவிவரங்களாக பெறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com