உலக நாடுகளின் போட்டி தரவரிசை: சிங்கப்பூருக்கு முதலிடம், சரிந்த அமெரிக்கா
World Competitiveness Ranking 2020 – Singapore tops in the list
ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மேலாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம்(IMD) வணிகம் சார்ந்த கல்வி மையத்தை நடத்தி வருகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் மற்றும் போட்டி திறனை கொண்ட நாடுகளின் பட்டியலையும் ஆராய்ந்து வெளியிடுகிறது.
ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் இந்த பட்டியல் தற்போது 2020ம் ஆண்டுக்கான தர வரிசையை தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் போட்டி தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்திலும், ஹாங்காங் இரண்டாம் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தரவரிசை பட்டியல் சார்ந்த தரவுகள் நான்கு முக்கிய பொருளாதார காரணிகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. பொருளாதார செயல்பாடு(Economic Performance), அரசு செயல்திறன்(Government Efficiency), வணிக திறன்(Business Efficiency) மற்றும் உட்கட்டமைப்பு(Infrastructure) ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகிறது. 2020ம் ஆண்டின் இரண்டாம் இடத்தில் டென்மார்க், மூன்றாம் இடத்தில் ஸ்விட்சர்லாந்து உள்ளன.
நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே நெதர்லாந்து, ஹாங்காங் நாடுகள் உள்ளன. கடந்த முறை மூன்றாம் இடத்தில் இருந்த ஸ்வீடன் இம்முறை ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. நார்வே, கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் 7,8 மற்றும் ஒன்பதாவது இடத்தை அடைந்துள்ளன.
2019ம் ஆண்டு(World Competitiveness Ranking) மூன்றாம் இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சீன குடியரசில் உள்ள தைவான் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் சீன நாடு 14வது இடத்திலிருந்து 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா 43வது இடத்தில் உள்ளது. கடந்த வருடமும் இதே இடத்தில் இருந்தது, அதே நேரம் 2016ம் ஆண்டு 41வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவிலான நாடுகளின் பொருளாதார செயல்பாட்டில் இந்தியாவிற்கு 37வது இடமும், அரசு செயல்திறனில் 50வது இடமும் கிடைத்துள்ளது. தொழில்புரியும் திறனில் 32வது இடமும், உட்கட்டமைப்பில் 49வது இடமும் 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்த தரவுகளில் 63 நாடுகள் உள்ளன. 63வது இடத்தில் வெனிசுலா நாடு உள்ளது. முன்னணி பொருளாதார நாடுகளில் தற்போது அமெரிக்க மற்றும் சீன நாடுகள் தான் பின்னுக்கு சென்றுள்ளது. பொருளாதார செயல்பாட்டு காரணியை பொறுத்தவரை உள்நாட்டு பொருளாதார நிலவரம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, அந்நிய முதலீடு, வேலைவாய்ப்புகள் மற்றும் விலைவாசி ஆகியவைகளை கொண்டு அளவிடப்படுகிறது.
அரசு செயல்திறனை காணும் போது நிதி ஆதாரம், வரி சார்ந்த கொள்கைகள், நிறுவன கட்டமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு, வணிக சட்டங்கள் ஆகியவை முக்கிய புள்ளிவிவரங்களாக பெறப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை