எச்சரிக்கை செய்யும் ஜூன் மாத பணவீக்க விகிதம் – 6.09 சதவீதம்
India’s Retail Inflation to 6.09 Percent in the month of June 2020
நடப்பாண்டில் நாட்டின் விலைவாசி விகிதம் ஏற்ற-இறக்கத்தில் காணப்பட்டிருந்தாலும், சராசரியாக 6 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக இருந்த நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம்(CPI Retail Inflation), மார்ச் மாதத்தில் 5.84 சதவீதமாக குறைந்திருந்தது. அதே சமயத்தில் ஊரடங்கு காலத்தில் எதிர்பாராத விலை நகர்வால், சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
ஜூன் மாத முடிவில் 6.09 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் உள்ளது. உணவுப்பொருட்களின் விலை மட்டும் உயர்ந்துள்ள நிலையில், பொருளாதாரம் மீட்கப்படும் பட்சத்தில், எதிர்பாராத விலை உயர்வு ஏற்படலாம். ஜூன் மாதத்தில் சந்தை எதிர்பார்த்த 5.3 சதவீத பணவீக்கத்தை விட, கூடுதலாக விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஜூன் மாதத்தில் புகையிலை மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் விலை 9.7 சதவீதமும், உணவுப்பொருட்களின் பணவீக்கம் 7.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பருப்பு வகைகள் 17 சதவீதமும், மீன் மற்றும் இறைச்சி 16 சதவீதமும் மசாலா பொருட்கள் 11.74 சதவீதமாகவும் விலை உயர்ந்துள்ளது. அதே வேளையில் பழங்களின் விலை 0.68 சதவீதமாகவும், காய்கறி வகைகளின் விலை 1.86 சதவீதமாகவும் உள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பொருளாதார எண்கள் சரியாக கிடைக்கப்பெறவில்லை என மத்திய புள்ளியியல் அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நாட்டின் வணிக ஏற்றுமதி 37 சதவீதம் சரிந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நாட்டின் ஏற்றுமதி அளவு 51.32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இது போல வணிக இறக்குமதி அளவும் 60.44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. காலாண்டு அடிப்படையில் இறக்குமதி 52.43 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 9.12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. சேவையுடன் சேர்த்த ஒட்டுமொத்த அளவை காணும் போது, வர்த்தக உபரியாக(Trade Surplus) 11.70 பில்லியன் டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது.
மந்தநிலை என்ற நிலையிலிருந்து, கொரோனா தாக்கத்திற்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் பெருமந்தநிலையை எட்டியுள்ளது. ஊரடங்கு காலத்திற்கு பிறகான இயல்பு வாழ்க்கை திரும்பும் பட்சத்தில், நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பாரத ரிசர்வ் வங்கியின் அடுத்தகட்ட நிதிக்கொள்கை குழு கூட்டம் முக்கியத்துவம் பெறும். மத்திய வங்கி, வட்டி விகித மாற்றத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படலாம். விலைவாசி உயர்ந்தால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கலாம். போதிய மழைப்பொழிவு, தேவை நுகர்வு அதிகரித்தால் மட்டுமே அது பொருளாதாரத்தை ஊக்குவிக்க துணைபுரியும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை