ஐ.டி.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,857 கோடி
ITC reported Net Profit of Rs. 3,857 Crore in Q4FY20 – Quarterly results
நாட்டின் வேகமாக நகரும் நுகர்வோர் துறையில்(FMCG) மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது ஐ.டி.சி. நிறுவனம். புகையிலை தொழிலை முதன்மையாக கொண்டிருந்தாலும் உணவு பொருட்கள், விடுதிகள், காகித பலகைகள் மற்றும் பேக்கேஜிங், விவசாயம் சார்ந்த பொருட்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் முக்கிய இடத்தை கொண்டுள்ளது இந்நிறுவனம்.
ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.40 லட்சம் கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், நடப்பு பங்கு விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 370 மடங்கிலும், நிகர சொத்து மதிப்பு ரூ.58,487 கோடியாகவும் இருக்கிறது.
கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 14 சதவீதமாகவும் இருந்துள்ளது. பங்கு மீதான வருவாய்(Return on Equity) 27 சதவீதமாக உள்ளது. எனினும் இந்த பங்கு விலை கடந்த 12 மாதங்களில் 30 வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.
2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,561 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 8,057 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 3,857 கோடி. இது கடந்த 2019ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவீத வளர்ச்சியாகும். 2019-2020 ஒட்டுமொத்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 53,991 கோடி ரூபாயும், நிகர லாபம் 15,584 கோடி ரூபாயாகவும் உள்ளது.
காலாண்டு அடிப்படையில் காணும் போது, அனைத்து பிரிவுகளிலும் வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது ஐ.டி.சி. நிறுவனம். அதே வேளையில் வரிக்கு முந்தைய லாபத்தில் குறைந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2020ம் ஆண்டின் மார்ச் முடிவில் ரூ. 64,044 கோடியாக இருந்துள்ளது.
பங்கு ஒன்றுக்கு 10.15 ரூபாயை ஈவு தொகையாக(Dividend) முதலீட்டாளர்களுக்கு ஐ.டி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. உபரி பணவரத்து(Free Cash Flow) அடிப்படையில் 30 சதவீத வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளது இந்நிறுவனம். வருட அடிப்படையில் வரிக்கு பிந்தைய லாபம் 21 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை