Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி திட்டம்

நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி திட்டம் 

India’s First International REIT Fund – Kotak Mutual Fund

பொதுவாக பங்குச்சந்தைக்கும், ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனை துறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு நீர்மை நிறை(Liquidity) தான். பங்குச்சந்தையை பொறுத்தவரை பணப்புழக்கம் எப்போதும் அதிகம். அதே வேளையில் நாம் செய்த முதலீட்டு தொகையிலிருந்து சிறிய அளவில் கூட பங்குகளை விற்று எளிதாக பணமாக்கலாம். ஆனால் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள ஒரே குறை, இந்த நீர்மை நிறை தான்.

மேலும் ரியல் எஸ்டேட் துறையில் நாம் பங்குகளை போல வாங்கிய நாளன்றோ அல்லது நமக்கு எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது பங்குகளை விற்பது போல இங்கே செய்ய முடியாது. அதற்கான கட்டணங்களும் வீட்டுமனை துறையில் சற்று அதிகம். இந்த குறையை களைய ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்(Real Estate Investment Trust) என்னும்  அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு செபியால் துவங்கப்பட்டது.

இதுவே அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட காலம் 1960ம் ஆண்டு. ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், சிறு முதலீட்டாளர்களும் தாங்கள் செய்த முதலீட்டை எளிதாக விற்பதற்கும், தொடர் வருமானத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அமைப்பு உதவியது. இந்த துறையில் நுழையும் நிறுவனங்களுக்கும் சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டது.

குறைந்தபட்ச முதலீடாக 500 கோடி ரூபாயும், 80 சதவீத முதலீடு முழுவதுமாக முடிவடைந்த கட்டிடங்களிலும், 10 சதவீத தொகை மட்டுமே கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் மனையிலும்(Under construction) இருக்க வேண்டுமென்ற வரைமுறைகள் உண்டு. ஈட்டப்படும் வருவாய், முதலீட்டாளர்களுக்கு 90 சதவீதம் என்ற அளவில் ஈவுத்தொகையாக (Dividends) மட்டுமே அளிக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்யாமல், ஒரு பெரு மனை சொத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்து விட்டு, கணிசமான வருவாயை எதிர்பார்க்கலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மதிப்பீடுகள் செய்யப்படும் என்பதும் இதன் சிறப்பு.

ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதிக்கும்(REIT Funds), ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதி திட்டத்திற்கும்(Real Estate Funds) இடையே உள்ள வேறுபாடு, REIT முதலீட்டில் அதிகப்படியான ஈவுத்தொகை வருவாயை பெறலாம் என்பதே.

ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டில் பங்கு பெறும் நிறுவனங்கள் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், சேமிக்கும் கிடங்குகள் போன்ற தொடர் வருவாய் அளிக்கும் சொத்துக்களை சொந்தமாக கொண்டிருக்கும் அல்லது நிதியளிக்கும் நிறுவனங்களாக இருக்கும். இது பங்குச்சந்தையில்  பட்டியலிடப்படுவது போன்று வெளிப்படைத்தன்மையுடன் பட்டியலிடப்படும். சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை யாரும் முதலீடு செய்து தொடர் வருவாய் மற்றும் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தலாம். நடப்பில் வீட்டுமனை துறையில் காணப்படும் குறைகளை களைந்து, நேர்மையான முறையில் சிறிய முதலீடும் செய்வதற்கு இந்த முதலீட்டு டிரஸ்ட் உதவும்.

கடந்த ஆண்டு நாட்டின் முதல் REIT ஐ.பி.ஓ. வெளிவந்தது. முதன்மை சந்தையில் வெளிவந்த எம்பஸி ஆபிஸ் பார்க்ஸ் (Embassy Office Parks) நிறுவனம் வாடகை மற்றும் தொடர் வருவாய் அளிக்கும் வீட்டுமனை துறையில் முதலீடு செய்து வருகிறது. மேலும் தனக்கென பல ரியல் ஸ்டேட் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளது.

சொல்லப்பட்ட நிறுவனம் உள்நாட்டு சந்தையில் இருந்து வரும் நிலையில், தற்போது கோடக்(Kotak) பரஸ்பர நிதி நிறுவனம் நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டமாக வந்திருக்கும் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி, திறந்த முடிவு திட்டமாக வந்துள்ளது(Open Ended fund – Fof).

நடப்பு டிசம்பர் 7 முதல் 21 வரை ஆரம்ப நிலை பதிவாக வரும் இத்திட்டம் பின்னர் பொதுவெளியில் பரஸ்பர நிதியின் கீழ் செயல்படும். இதன் முதலீட்டு சொத்து பங்களிப்பு சிங்கப்பூரில் 48.8 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 33.7 சதவீதமும், ஹாங்காங் நாட்டில் 9 சதவீதமாகவும் உள்ளது. நியூஸிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஒரு சதவீதத்திற்கு மேலாக முதலீடு செய்யப்படும். உள்நாட்டில் 0.9 சதவீதம் என்ற அளவில் மட்டுமே முதலீடு அமையும்.

SMAM(Sumitomo Mitsui DS Asset Management Company) ஆசிய ரியல் எஸ்டேட் முதலீட்டு திட்டத்தின் படி செயல்படும் இந்த திட்டம், ஆசிய-பசிபிக் பகுதியில் முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீத வருவாயை அளிக்கும் இத்திட்டத்தின் முதலீடு டாலர்களில் கையாளப்படுவதால் வெளிநாடுகளில் காணப்படும் ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், உள்நாட்டு முதலீட்டாளருக்கு சாதகமாக அமையும்.

எனினும் இது போன்ற திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு தற்போது குறைவு என்பதால், இந்த துறை சிறப்பாக செயல்பட இன்னும் சில காலமாகும். வரி விதிப்புகளும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 6.93 சதவீதம்

நாட்டின் நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 6.93 சதவீதம் 

India’s Retail Inflation to 6.93 Percent in November 2020 – CPI

நடப்பு 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 5.84 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI – Retail Inflation), அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதம் வரை சென்றது. சொல்லப்பட்ட அக்டோபர் மாத பணவீக்க விகிதம், கடந்த ஆறு ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டிருந்தது.

மத்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க கொள்கையின் படி, சில்லரை விலை பணவீக்க இலக்கு 2-6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத பணவீக்கம் வெளியிடப்பட்ட நிலையில், இது 6.93 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக நாட்டின் பணவீக்கம், மத்திய வங்கியின் இலக்கினை விட அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உணவுப்பொருட்கள், வீட்டுமனை, புகையிலை, காலணி மற்றும் துணிமணிகளின் விலை கணிசமாக அதிகரித்து வந்ததன் காரணமாக சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக உள்ளது. சில்லரை விலை பணவீக்கத்தில் 46 சதவீதம் உணவு மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பும், பால் பொருட்கள் 6.61 சதவீதமும், தானிய வகைகள் 9.67 சதவீதமும், காய்கறிகள் 6 சதவீதமும் பங்களிப்பை கொண்டுள்ளது.

எண்ணெய் வகைகள் 3.56 சதவீதம், மாமிசம் மற்றும் மீன் 3.61 சதவீதம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பங்களிப்பு 8.6 சதவீதம், சுகாதாரம் 6 சதவீதமாகவும் உள்ளது. வீட்டுமனை 10 சதவீத பங்களிப்பை சில்லரை பணவீக்கத்தில் கொண்டுள்ளது.

ஒளி மற்றும் எரிபொருட்களின் பங்களிப்பு(Fuel and Light) 6.84 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 6.53 சதவீதத்தையும் உள்ளடக்கியுள்ளது. நாட்டின் மொத்த விலை பணவீக்கம்(WPI) நவம்பர் மாதத்தில் 1.55 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஒன்பது மாத உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இளமையில் ஓய்வு – நிச்சயமாக்கும் ஸ்மார்ட் பிளான்

இளமையில் ஓய்வு – நிச்சயமாக்கும் ஸ்மார்ட் பிளான்

Early Retirement – Smart Plan for Success

நவீன யுகத்தில், “Workaholic” என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும் வேலைப்பளு, வேலை திருப்தியின்மை என்பது ஒரு பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது.

அது என்ன ‘ Workaholic ‘ ?

Workaholic என்பது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் (அ) எப்போதும் வேலை, வேலை என்றிருப்பது.

நம்மில் பெரும்பாலோர் விருப்பமில்லாமல் பணிச்சுமையை ஏற்பதற்கு காரணம் பொருளாதார தேவை தான். இது இன்றைய காலத்தின் அதிக சம்பளம் மற்றும் ஆடம்பரத்துக்கும் பொருந்தும்.  உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகள் மறைந்து, இன்று விருப்பங்களை நிறைவேற்றும் நிலை மட்டும் தான் தலை தூக்கி உள்ளது. எனக்கு எது தேவை என்பதை விட, எனக்கு இது வேண்டும் என்ற கொள்கை இன்று வளர்கிறது. நாகரீக மாற்றத்தில் இதுவும் அடங்கும் தானே.

“ கால் காசுனாலும் கவர்ன்மென்ட் வேலை “ என்பதெல்லாம் இன்று பொய்யாகி விட்டது.இன்றையளவில் எல்லா வேலைகளிலும் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு என்ற விஷயம் இல்லாமையால், சம்பள அதிகரிப்பை மட்டுமே பெரும்பாலோர் எதிர்பார்க்கின்றனர். ஒரு புறம் நிறுவனங்களுக்கு வேலைக்கு  ஆட்கள் கிடைக்கவில்லை, மறுபுறம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற போதும், தாங்கள் பணிபுரியும் துறையில் நாட்டமின்மை, பணிச்சுமையாக கருதுதல் என்பது வாடிக்கையாகி விட்டது. முன்னொரு காலத்தில் ஒரே துறை அல்லது ஒரே  நிறுவனத்தில் 30 அல்லது 40 வருடங்கள் பணிபுரிந்த அனுபவங்கள் இன்று பார்க்க முடிவதில்லை. இன்னும் சொல்ல போனால், இன்றைய தலைமை அதிகாரிகளும் நீண்ட காலம் ஒரு நிறுவனத்தில் நீடிப்பதில்லை. இதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுவது, நாம் நமக்கு பிடித்த  துறையை அல்லது கல்வியை தேர்ந்தெடுக்காதது  தான்; பணியில்  சுமை என்று  நாம் பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. தினக்கூலியிலிருந்து, டாட்டா (Tata) வரை எல்லாருக்கும் பணிச்சுமை உள்ளது. அந்த பணிச்சுமை தான் சிலரை மாபெரும் மனிதர்களாக மாற்றியுள்ளது. ஆனால் நவீன யுகம் மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது. இன்றைய தலைமுறையில் பணிச்சுமை என்பதை விட, வேறு ஒரு வார்த்தை புதுமையாக்கப்பட்டுள்ளது – “ இளமையில் ஓய்வு(Early Retirement) ”

இளமையில் ஓய்வு:

“ அப்போதெல்லாம் நாங்க 60 வயது வரை உழைத்து ஓய்வு பெற்றோம் “ என்ற வாசகத்தை இனி நாம் கேட்க போவதில்லை. இன்று இளமையில் ஓய்வு என்ற வார்த்தை தான் போக்காக (Trending) உள்ளது.  இளமையில் ஓய்வு பெறுவதை இருவகையாக பிரித்து பார்க்கலாம்,

  • இருக்கும் பணியிலிருந்து இளமையில் ஓய்வு பெற்று புதிதாக தொழில் தொடங்குவது / தொழில்முனைவோராக விரும்புவது. (Become an Entrepreneur )
  • இனி எந்த வேலையிலும், தொழிலிலும் ஈடுபட போவதில்லை; வாழ்க்கையை விருப்பம் போல கழிக்க வேண்டும் என விரும்புவது. (Live as Life, Live as like ).
Become an Entrepreneur:

இருக்கும் பணியிலிருந்து  இளமையில் ஓய்வு பெற்று அல்லது தன்னை விடுவித்து கொண்டு தொழில் முனைவோராக களமிறங்குவது இன்று நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் தான். “ நல்ல தொழில் செய்ய வேண்டும், நாலு பேருக்கு வேலை தர வேண்டும் “ என்பது ஒரு லட்சிய நோக்கமே. பணம் சம்பாதிக்க தான் தொழில் தொடங்கினாலும், மறைமுகமாக நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் தொழில்முனைவோராக சிறக்க சரியான திட்டமிடல் மற்றும் செயலாற்றல் அவசியம். வெறும் புதுமையான யோசனைகளை மட்டும் வைத்து கொண்டு வெற்றி பெற்று விட முடியாது.

Live as Life, Live as like:

“ இனி மேல் நான் எந்த வேலைக்கும் செல்வதை விரும்பவில்லை; தொழில் செய்யவும் இல்லை. எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ போகிறேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக வேண்டும், இயற்கையை ரசிக்க வேண்டும்” – இதுவும் இங்கு நடக்கும். சில சமயங்களில் பலருக்கு இந்த நிலை பயன்படாமல் போனாலும், சிலருக்கு அர்த்தமுள்ளதாகி விடும். இருக்கும் வாழ்க்கையை பிடித்தவாறு உணர வேண்டும், பிறரை நேசிக்க வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை. அப்படியே வாழலாம். இன்று நாம் பார்க்கும் புதுமையான தொண்டுகளும், புவி சார்ந்த நிகழ்வுகளும் அப்படி தான் அமைந்தன.

‘ அப்புறம் என்ன பிரச்சனை என்கிறீர்களா  ? ‘

இனிமேல் தானே விஷயம் இருக்கு. இருக்கும் வேலையை விட்டு விட்டு நீங்கள் தொழில்முனைவோரானாலும் சரி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக உருவாக்கினாலும் சரி – வேலையை கடந்தவுடன் தான் நமது வாழ்க்கை ஆரம்பமாகிறது என்பதை மறக்க வேண்டாம். இளமையில் ஓய்வு பெறுவதற்கு ஒரு மன தைரியம் வேண்டும். இளமை கால ஓய்வு என்பது நாம் இனி வாழ போகும் காலம் நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அக்கரைக்கு இக்கரை பச்சையாகி விட கூடாது. அதனால் நமது இளமை கால ஓய்வுக்கான நிதித்திட்டமிடல்(Financial Planning) அவசியம்.

உதாரணத்திற்கு, நாம் 40 வயதில் ஓய்வு பெற விரும்பினால் நாம் அடுத்து எத்தனை வயது அல்லது காலம் வரை இருக்க போகிறோம் என்பது முக்கியம். 70 வயது வரை நம்மால் வாழ முடியும் என்ற எண்ணம் (கணிப்பு தான்) இருந்தால், ( 70-40 = 30 ) 30 வருடத்திற்கான  செலவுகளை (அடிப்படை தேவை, மருத்துவம், போக்குவரத்து ) எவ்வாறு  கையாள போகிறோம் என்பது நிபந்தனை. வேலையை துறந்து பின் செயலாற்றல் மிகவும் கடினம். நம்மால் தொழிலில் சிறந்து விளங்க எவ்வளவு காலமாகும், நமது குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவுகள் என்பவை எல்லாம் கணக்கிடப்பட வேண்டும். இதற்கான தகவல்கள்  நிதி சார்ந்த, காப்பீடு  சம்மந்தமான இணையதளத்தில் Retirement Planning, Retirement Calculator என்ற வசதி உள்ளது. அவற்றை பயன்படுத்தி நமக்கு தேவையான கார்பஸ் தொகையை தயார் செய்து கொள்ளலாம் அல்லது  சொத்துக்களை கையாள வேண்டும். பணவீக்கத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

பொதுவாக, இந்த Retirement Calculator சரியாக சொன்னாலும், நாம் சற்று கூடுதலான பாதுகாப்பை ஏற்படுத்துவது நலம். ஏனென்றால் நாம் இளமையில் சம்பாதிப்பதை விட, வயதான காலத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. அதாவது நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது, பயணக்கட்டணத்தை விட சற்று கூடுதலான தொகையை வைத்திருப்போமே, அது போன்று கூடுதலாக கார்பஸ் தொகையை ஏற்படுத்த வேண்டும்.

General Retirement Planning:

இந்த முறையில், நமக்கு தேவைப்படும் காரணிகள் – நமது தற்போதைய வயது, ஓய்வு பெறப்போகும் வயது, தற்போதைய ஆண்டு வருமானம், மாத செலவுகள், தற்போதைய  முதலீடு மற்றும் சேமிப்பு இருப்பு, எதிர்காலத்தில் அதற்கு எதிர்பார்க்கும் வருமானம், பணவீக்கம் ஆகியவற்றை நாம் குறித்து வைத்து கொண்டு, நமது இளமை கால நிதித்திட்டமிடலை துவக்கலாம்.

( Current Age, Retirement Age, Annual Income, Monthly Expenses, Current Savings and Investing, Expected Return on Investment(ROI), Inflation )

Early Retirement Formula (ERF):

டக் மஸ்ஸி (Doug Massey) என்ற ஆசிரியர் ஓய்வு கால திட்டத்திற்கான விதியை உருவாக்கியுள்ளார். இவர் தனது 41வது வயதில் மற்றவர்களுக்காக வேலை செய்வதிலிருந்தும், தொழில் மற்றும் முதலீட்டில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்து (ஓய்வு) கொண்டார்.

ERF =  Your Age X  Networth / Yearly Expenses

Maintain the ERF value is > 1000

உதாரணத்திற்கு, உங்களுடைய வயது 30 மற்றும் உங்களிடம் இருக்கும் சொத்து (மனை, வீடு, முதலீடு, சேமிப்பு, பணம் கையிருப்பு) ரூ. 2,00,00,000 /- (2 கோடி) மற்றும் ஆண்டு செலவு- ரூ. 6,00,000 /- எனில்,

[ 30 X 2 Crores / 6 lakhs ] = 1000

– ஓய்வு எண் 1000 க்கு குறையாமல் இருப்பது நல்லது.

இதை போல, நீங்களும் உங்களுடைய இளமை கால ஓய்வு எண்ணை கணக்கிடலாம். அவர் இந்த விதியில் பரிந்துரைப்பது கூடுதலான தொகையை சேர்க்க வேண்டும் என்பது தான்.

இளமையில் ஓய்வு பெறுவதும் ஒரு சாமர்த்தியமான இலக்கு தான்; இலக்கை சரியாக திட்டமிடுங்கள், அதிகப்படியான தொகையை எதிர்காலத்திற்காக இன்றே முதலீடு செய்யுங்கள்.

இளமையில் வெல்லுங்கள் !

வாழ்க வளமுடன், 

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு – வரைவு விதிமுறை வெளியீடு

ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு – வரைவு விதிமுறை வெளியீடு 

Rs.1 Crore Personal Accident Policy – Draft Norms – IRDAI

மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீட்டு திட்டமாகும்(Pradhan Mantri Suraksha Bima Yojana). இது ஒரு விபத்து காப்பீட்டு திட்டம், அனைவரும் பயன்பெறும் வகையில் 2 லட்ச ரூபாய் என்ற பாதுகாப்பு தொகையை குறைந்த பிரீமியத்தில் பெறலாம்.

அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் இத்திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனிநபர் ஒருவர், ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே செலுத்தி ரூ. 2 லட்சம் காப்பீட்டை பெறலாம். வாகன காப்பீட்டுடன் தனிநபர் விபத்து காப்பீடு சேர்ந்து வந்தாலும், முழுமையான தனிநபர் விபத்து காப்பீடு(Standalone Policy) என்பது அதனை தனி பிரிவாக எடுத்து கொண்டால் நமக்கு முழு பலனை அளிக்கும்.

விபத்து காப்பீட்டை பொறுத்தவரை மருத்துவ காப்பீட்டை அளிக்கும் நிறுவனங்களும் அதற்கான தனிநபர் பாலிசிகளை அளித்து வருகிறது. வெறுமென விபத்தினால் ஏற்படும் இறப்பு மட்டுமில்லாமல், நிரந்தர மற்றும் பகுதி சார்ந்த இயலாமை(Permanent and Partial Disability) இருக்கும் நிலையில் அதற்கான மருத்துவ செலவு மற்றும் முழு காப்பீடு தொகையும் வழங்கப்படுகிறது.

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.(IRDAI) தற்போது விபத்து காப்பீடு சார்ந்த புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தனிநபர் விபத்து காப்பீட்டுக்கான தொகையில் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வரைவை அறிவித்துள்ளது.

இந்த வரைவுமுறை வரும் ஏப்ரல் 1, 2021 முதல் புதிய விபத்து காப்பீட்டு திட்டமாக வெளிவர உள்ளது. திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனிநபர் இணையலாம் எனவும், விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் காப்பீட்டு தொகையில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக பெறலாம் என்ற கூடுதல் அம்சங்களையும் கூறியுள்ளது.

எனினும் குறைந்தபட்ச பிரீமிய தொகை எவ்வளவு என்பதனை ஐ.ஆர்.டி.ஏ. சொல்லவில்லை. இதன் காரணமாக காப்பீட்டு நிறுவனங்களே பிரீமிய தொகையை நிர்ணயிக்கலாம் என தெரிகிறது. காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை  மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டு, இல்லையெனில் ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவின் பணக்கார பெண்களில் முதலிடம் – ரோஷ்ணி – எச்.சி.எல்

இந்தியாவின் பணக்கார பெண்களில் முதலிடம் – ரோஷ்ணி – எச்.சி.எல்.

Top Rich woman in India – Roshni Nadar of HCL Technologies

தொழில்முனைவோர்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நாகரீக மாற்றங்கள் ஏற்பட்டு விட்டாலும், தொழில்முனைவில் பெண்கள் ஈடுபடுவது என்பது இன்றும் சவாலான விஷயமாக தான் இருந்து வருகிறது. அப்படியிருக்கும் நிலையில் பெண் தொழில்முனைவோர் ஒருவர் உயர்மட்ட அளவில் நிர்வகிப்பதும், போட்டி சூழலில் சாதிப்பதும் அந்த சமூகத்திற்கு சாதகமான அம்சமாக அமையும்.

இன்று நம் நாட்டில் தொழில்முனைவோர்களாக சாதிப்பதில் பெரும்பாலும் திருமணமான பெண்களே உள்ளனர். படித்து முடித்தவுடன் தொழில்முனைவில் ஈடுபடும் பெண்மணிகளின் விகிதம் அதிகமாகும் போது, அது தனிநபர் வளர்ச்சி மட்டுமில்லாமல் வரக்கூடிய சந்ததிகளின் வளர்ச்சியை பிரதிபலிக்க கூடும்.

நம்மூரில் சேமிப்பு மற்றும் பண நிர்வாகத்தில் இன்றும் வீட்டு பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. சிட் பண்டு, அஞ்சலக சிறு சேமிப்பு முதல் வீட்டிலிருந்தே தொழில்முனைவை ஏற்படுத்துவது வரை அவர்களது நிதி சார்ந்த பண்பு மேம்பட்டு காணப்படுகிறது.

கோடக் வெல்த்(Kotak Wealth) மற்றும் கரூன் இந்தியா(Hurun India) நிறுவனம் இணைந்து நடத்தும் நாட்டின் பணக்கார பெண்மணிகளின் பட்டியல் நேற்று(03-12-2020) வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் தனிநபர் ஒருவரின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக சில நெறிமுறைகளையும் இந்த நிகழ்வு கொண்டுள்ளது. அதாவது இந்த பட்டியலில் இடம் பெறுவோர் ஒரு நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் அல்லது நிர்வாக இயக்குனராக இருக்க வேண்டும், அவர் ஊதியம் பெறும் நபராக இருக்க வேண்டும், நிர்வாகத்தின் முக்கிய பதவிகளை வகிப்பவராக இருத்தல் வேண்டும் என சில கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது.

பட்டியலில் அடையாளம் காணப்பட்ட பெண்கள் கல்வி மற்றும் சுகாதார பராமரிப்புக்காக தங்களது பங்களிப்பை எவ்வாறு அளிக்கின்றனர் என்பதனையும் இந்த தரவு தெரிவிக்கிறது. சொல்லப்பட்ட பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்தை(HCL Technologies) சேர்ந்த ரோஷ்ணி ஆவார். இவர் தற்போது நிறுவனத்தின் தலைவராக உள்ளார். எச்.சி.எல். நிறுவனத்தை துவங்கிய சிவ நாடாரின்(Shiv Nadar) புதல்வி தான் ரோஷ்ணி.

10 பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் எச்.சி.எல். நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகவும், இதன் கிளைகள் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை கொண்டிருக்கிறது. ரோஷ்ணி அவர்களின் செல்வ மதிப்பு ரூ.54,850 கோடி. இரண்டாம் இடத்தில் பயோகான்(Biocon) நிறுவனத்தின் தலைவரான பிரபல கிரண் மசும்தார் உள்ளார். இவரது செல்வ மதிப்பு 36,600 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவதாக மருந்து துறையில் உள்ள யு.எஸ்.வி.(USV) நிறுவனத்தின் தலைமை பதவியில் உள்ள லீனா காந்தி உள்ளார். இவரது செல்வ மதிப்பு ரூ.21,340 கோடி. நான்காம் இடத்தில் டிவிஸ் லேப் நிறுவனத்தின் நீலிமா அவர்களும், ஐந்தாம் இடத்தில் மீண்டும் தமிழகத்தை சேர்ந்த பெண்மணி, ராதா வேம்பு (Zoho) அவர்களும் உள்ளனர். சொல்லப்பட்ட செல்வத்தின் மதிப்பு செப்டம்பர் 2020 காலாண்டுடன் முடிவடையும் நிலையில் கணக்கிடப்பட்டுள்ளது.

நூறு பேர் கொண்ட பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் 19 பெண்கள் நாற்பது வயதுக்கு குறைவானவர்கள், நகரங்கள் அடிப்படையில் மும்பை 32 பெண் பணக்காரர்களையும், டெல்லி 20 நபர்களையும், ஹைதராபாத் 10 நபர்களையும் உள்ளடக்கியுள்ளது. 15 சதவீத பெண்மணிகள் மெட்ரோ அல்லாத நகரங்களிலிருந்து வந்தவர்கள்.

39 வயதாகும் திருமதி. ரோஷ்ணி, சந்தையில் பட்டியலிடப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற சாதனையையும் கொண்டுள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களில் 54வது இடத்தை பிடித்துள்ளார் ரோஷ்ணி (போர்ப்ஸ் பட்டியல்). இவரது கணவர் ஷிகர் மல்ஹோத்ரா, எச்.சி.எல். சுகாதார பிரிவில் துணை தலைவராக உள்ளார். ரோஷ்ணிக்கு இரு புதல்வர்கள் உள்ளனர்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் டாட்டா

பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் டாட்டா 

Tata Group to buy Big Basket with a majority Stake

பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் பிக் பேஸ்கட்(Bigbasket). இணையம் வழியாக மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் இதன் மளிகை பொருட்களாக இருந்து வருகிறது.

உலகளவில் காணப்படும் சில பெரு நிறுவனங்களுடன் இணைந்து தனது சந்தைப்படுத்துதலை விரிவாக்கம் செய்தது பிக் பேஸ்கட். சுமார் 18,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 1000 பிராண்டுகளுக்கு மேலாக தனது மளிகை அட்டவணையில் கொண்டிருந்த இந்நிறுவனம் பெங்களூரு மட்டுமில்லாமல், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே, கோவை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மைசூரு என பல மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தனது சேவையை அளித்து வருகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனமாக வலம் வந்த பிக் பேஸ்கட் நிறுவனத்தில் 17 முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். சொல்லப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீட்டை ஈர்த்துள்ளது இந்தநிறுவனம். முதன்மை முதலீட்டாளர்களாக சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பேஸ்கட் நிறுவனத்தை கையகப்படுத்த சில பெரு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருந்தாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாட்டா குழுமம் சார்பில் பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடப்பதாக செய்திகள் வெளிவந்தன.

மளிகை விற்பனையில் ஏற்கனவே அனுபவம் கொண்டிருக்கும் டாட்டா குழுமத்திற்கு இந்த நிறுவன கையகப்படுத்துதல் வெற்றிகரமாக முடிந்தால், சந்தையில் புதிய போட்டியை ஏற்படுத்தும். இந்நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று, பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை டாட்டா குழுமம் வாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் மளிகை வணிகத்தில் கால்பதித்துள்ள நிலையில், டாட்டா குழுமத்தின் இந்த கையகப்படுத்தல் சந்தையில் சவாலாக இருக்கும்.

டாட்டா குழுமம்(Tata Group) பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் நிலையில், அதன் மதிப்பு சுமார் 1.3 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இணைய வழி மளிகை வணிகத்தில் நாட்டின் 50 சதவீத பங்களிப்பை பிக் பேஸ்கட் கொண்டுள்ளது. நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் மதிப்பு 1.6 பில்லியன் டாலர்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கின் போது, இந்த நிறுவனம் இரண்டே நாட்களில் தனது 80 சதவீத வேலையாட்களை இழந்தது. எனினும் அவற்றிலிருந்து மீண்டு வந்த நிறுவனம் 16 நாட்களில் 12,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 5,200 கோடி ரூபாயாகவும், ரூ. 920 கோடியை நிகர நஷ்டமாகவும் சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேக்கர்களால் பிக் பேஸ்கட் நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 7.5 சதவீத வீழ்ச்சி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 7.5 சதவீத வீழ்ச்சி 

India technically enters into Recession – Q2FY21 – GDP

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் உலகளவில் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்திருந்தது. நம் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த மந்தநிலை, மார்ச் 2020 க்கு பிறகு மிகவும் பாதிப்படைந்தது.

ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமை, உற்பத்தி குறைவு, ஏற்றுமதி-இறக்குமதியில் ஏற்பட்ட தடை ஆகியவை பொருளாதாரத்திற்கு பாதகமாக இருந்தது. எனினும் அரசு சார்பில் பல ஊக்கமளிக்கும் நிதி சலுகைகள் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டது. 2020-21ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

நேற்று(27-11-2020) நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு சார்ந்த தகவல்கள் வெளியிடப்பட்டது. சொல்லப்பட்ட காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. எனினும் சந்தை எதிர்பார்த்த 8.8 சதவீத வீழ்ச்சி என்ற அளவை விட இது குறைவாக உள்ளது.

ஜூன் மாதத்திற்கு பிறகான ஊரடங்கில் தளர்வு, வேலைவாய்ப்பு சற்று மீண்டது மற்றும் பண்டிகை காலத்தை ஒட்டி நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது. எனினும் பொருளாதாரத்தை முழுவதுமாக மீட்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரத ரிசர்வ் வங்கி(RBI) சார்பில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி சார்ந்த குறிப்பு சொல்லப்பட்டிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் இரண்டாம் காலாண்டில் 7.5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், வரலாற்றின் முதல் பொருளாதார மந்தநிலையாகவும்(First Recession) தற்போது சொல்லப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய தொய்வு நிலையாக நடப்பாண்டு இருந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்க பெரும்பாலான நாடுகள் பணத்தை அச்சடித்து பண புழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விரைவில் எட்டப்படும் என ஒவ்வொரு அரசும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம், முதலாம் காலாண்டு வீழ்ச்சியை காட்டிலும் இரண்டாம் காலாண்டில் சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது. பண்டிகை காலத்திற்கு பிறகு ஏற்படும் நுகர்வு தன்மை(Consumption) தான் சந்தைக்கு அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்தும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன ?

டாட்டா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன ?

Market Capitalization of Tata Group of Companies 

புதிய தொழில்முனைவு புகுதலும், பழையன கழிதலுமாக இருந்தாலும், தொழில்களில் நெறிமுறைகளை ஏற்படுத்தி நீண்டகாலம் பின்பற்றுபவர்கள் சிலரே. அப்படிப்பட்டவர்கள் சிறந்த தொழிலதிபர்களாகவும், மாபெரும் பணக்காரர்களாகவும் உருவெடுக்கின்றனர். உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளவர்களின் மதிப்பு என்னவோ முதலீட்டாளர்களை உள்ளடக்கிய (நம்மையும் சேர்த்து) சொத்து மதிப்பாக தான் சொல்லப்படுகிறது. உண்மையில் உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த நபரிடம் உள்ள மதிப்பு அவருடைய சொந்த மதிப்பாக இருப்பதில்லை.

ஆம், அவருடைய நிறுவனத்தின் சந்தை மதிப்பாக தான் உள்ளது. நாம் நினைப்பது போல சந்தை மதிப்பை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடியாது. அப்படியே பெருமளவிலான சந்தை மதிப்பை பெற்றிருந்தாலும் அதனை பல வருடங்களுக்கு தக்க வைப்பது சவாலான விஷயம் தான். ஒவ்வொரு நாட்டின் அரசுக்கு மக்களின் வரி பணம் எப்படி தேவையோ, அது போல மக்களின் நம்பிக்கையும், முதலீடும் சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தேவை.

பாரம்பரிய தொழிலாக இருந்தாலும், நாணயமாக நீண்டகாலம் தொழில் செய்யும் நிறுவனங்களை தான் சந்தை வரவேற்கிறது. புதிய சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு எளிமையான ஸ்டார்ட் அப் நிறுவனமாக வலம் வந்தாலும், மக்களுக்கு அளிக்கப்படும் சேவை சிறப்பாக இருக்கும் நிலையில் சந்தை அதனை வரவேற்க தயங்குவதில்லை.

ஒவ்வொரு வருடமும் துவங்கப்படும் நிறுவனங்கள் பல, அதனை காட்டிலும் மூடப்படும் தொழில்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக தான் உள்ளது. இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும், நெறிமுறைகளை வகுத்து தொழில் புரிபவர்களை நுகர்வோர் சந்தை எப்போதும் எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் நீண்டகாலம் தொழில் புரியும் நிறுவனங்கள் என்றால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகம். அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் டாட்டா குழுமம்(Tata Group).

1868ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் தான் டாட்டா எனும் தனியார் நிறுவனம். இன்று லட்சங்களில் பணியாளர்களையும், பில்லியன் டாலர்களில் வருவாயையும் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் கால்பதித்த இந்த குழுமத்தின் நிறுவனங்கள் டாட்டா என்ற பிராண்டுடன்(Brand) பெயரை குறிக்கும். உலகளவில் பல நிறுவனங்களை கையகப்படுத்தலும் டாட்டா குழுமத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய தொழிற்துறையில் டாட்டா என்ற பெயரை கொண்டிருக்காமல் பல நிறுவனங்கள் டாட்டா குழுமத்திற்கு சொந்தமாக உள்ளன.

பங்குச்சந்தையில் டாட்டா குழும நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தையின் முக்கிய குறியீடுகளில்(Index) தவிர்க்க முடியாத இடத்தை டாட்டா குழும நிறுவனங்கள் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சில டாட்டா குழும நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பை காண்போம்.

நவம்பர் 26ம் தேதியின் படி (ரூபாய் மதிப்பில்),

  • டி.சி.எஸ்.(Tata Consultancy Services) –  10.21 லட்சம் கோடி
  • டைட்டன் கம்பெனி – 1.18 லட்சம் கோடி
  • டாட்டா ஸ்டீல் – 65,000 கோடி
  • இன்டெர்குளோப் (இண்டிகோ) – 59,500 கோடி
  • டாட்டா மோட்டார்ஸ் – 58,000 கோடி 
  • டாட்டா கன்ஸ்யூமர் – 48,000 கோடி
  • டாடா கம்யூனிகேஷன்ஸ் – 30,500 கோடி
  • வோல்டாஸ் – 25,500 கோடி
  • ட்ரென்ட் லிமிடெட் – 25,200 கோடி
  • டாட்டா பவர் – 20,000 கோடி 
  • இந்தியன் ஹோட்டல்ஸ் – 13,400 கோடி
  • டாட்டா கெமிக்கல்ஸ் – 9,800 கோடி
  • டாட்டா எல்எக்ஸி – 9,400 கோடி
  • டாட்டா இன்வெஸ்ட்மென்ட் – 4,700 கோடி 
  • டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் – 3,800 கோடி 
  • டாட்டா ஸ்டீல் லாங் (Sponge Iron) – 2,000 கோடி 
  • டாட்டா காபி – 1,900 கோடி
  • டாட்டா மெட்டாலிக்ஸ் – 1,600 கோடி 
  • டின்பிளேட்(Tinplate) கம்பெனி – 1,500 கோடி
  • தாஜ் GVK – 900 கோடி
  • நெல்கோ – 425 கோடி

இன்னும் இங்கு சொல்லப்படாத நிறுவனங்களும் சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில், சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ரூ.12.83 லட்சம் கோடி) முதலிடத்தில் இருந்தாலும், ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் கணிசமான பங்களிப்பை டாட்டா குழுமம் மட்டுமே கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சன் டி.வி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.335 கோடி

சன் டி.வி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.335 கோடி 

Sun TV Network reported a Net Profit of Rs.335 Crore – Q2FY21

தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் தான் சன் குழுமம்(Sun Group). ஊடக துறையில் உள்ள இந்நிறுவனம் நாளிதழ் வெளியீடு, ஒளிபரப்பு, வானொலி, படம், கேபிள் தொலைக்காட்சி, விளையாட்டு உரிமம் ஆகியவற்றில் தொழில் புரிந்து வருகிறது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களையும், பல துணை நிறுவனங்களையும் கொண்டிருக்கிறது.

விமான போக்குவரத்து துறையில் தனது சேவையை கொண்டிருந்த இந்நிறுவனம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் (Spicejet) உள்ள அனைத்து பங்குகளையும் விற்று வெளியேறியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.17,500 கோடி. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வந்து கொண்டிருக்கும் சன் டி.வி. பங்கின் புத்தக மதிப்பு 160 ரூபாயாகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 138 மடங்குகளிலும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் ஒரு சதவீதத்திற்கு குறைவான பங்குகள் அடமானமாக இருந்துள்ளது. இந்திய டி.வி. துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் இந்த நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 6,100 கோடி ரூபாயாக உள்ளது. பணவரத்தும், பங்கு மூலதனத்தின் மீதான வருவாயும் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது.

2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை நேற்று(12-11-2020) வெளியிட்டது இந்த நிறுவனம். நிறுவனத்தின் வருவாய் 769 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.274 கோடியாகவும்(Quarterly results) சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 54 கோடி ரூபாய் இருந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.335 கோடி.

சொல்லப்பட்ட நிகர லாபம், ஜூன் காலாண்டை காட்டிலும் 23 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே வேளையில், முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 10 சதவீத குறைவாகும். விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், இதுவே 10 வருட காலத்தில் 9 சதவீதமாகவும் உள்ளது.

லாபம், கடந்த ஐந்து மற்றும் பத்து வருட காலங்களில் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இறக்கம் கண்டிருந்தாலும், மார்ச் மாத வீழ்ச்சியில் பங்கு ஒன்றுக்கு 300 ரூபாய்க்கு குறைவாக வர்த்தகமானது. அப்போதைய நிலையில், பணப்பாய்வு முறைப்படி(Discounted Cash Flow) பங்கின் விலையும் மலிவாக காணப்பட்டது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.3,368 கோடி

ஐ.டி.சி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.3,368 கோடி 

ITC reported a Net Profit of Rs.3,368 Crore – Q2FY21

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஐ.டி.சி. துவங்கப்பட்டு நூறு வருடங்களுக்கு மேலாகிறது. ஆரம்ப நிலையில் புகையிலை சார்ந்த நிறுவனமாக சொல்லப்பட்டாலும், இன்று எப்.எம்.சி.ஜி.(FMCG) என அழைக்கப்படும் நுகர்வோர் பொருட்கள் துறையில் முக்கிய நிறுவனமாக பங்கு வகிக்கிறது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் நுகர்வோர் பொருட்கள், புகையிலை, விடுதிகள், ஆடைகள், பேப்பர் மற்றும் பேக்கேஜிங், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் தொழில் செய்து வருகிறது.

ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.14 லட்சம் கோடி. இதன் புத்தக மதிப்பு 53 ரூபாய். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 330 மடங்குகளில் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் நேரடியாக இல்லையென்றாலும், எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்திடம் 16 சதவீத பங்குகளும், இந்திய யூனிட் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் 8 சதவீத பங்குகளும் உள்ளது. அந்நிய முதலீட்டாளர்களிடம் சுமார் 13 சதவீத பங்குகளும், பொதுவெளியில்(Public holding) உள்ள பங்குகளில் பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனங்கள் சுமார் 30 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.

செப்டம்பர் காலாண்டுக்கான(Quarterly results) முடிவுகள் நேற்று(06-11-2020) வெளியிடப்பட்டது. நிறுவனத்தின் வருவாய் ரூ.13,148 கோடியாகவும், செலவினம் 8,747 கோடி ரூபாயாகவும் உள்ளது. இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் பேப்பர், எழுது பொருட்கள் மற்றும் விடுதி மூலம் குறிப்பிடத்தக்க விற்பனை இல்லாமல் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து இருப்பது கவனிக்கத்தக்கது. இதர வருமானமாக ரூ.582 கோடி சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ.4,565 கோடியாகவும், சொல்லப்பட்ட காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,368 கோடியை நிறுவனம் ஈட்டியுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.49,388 கோடியாகவும், நிகர லாபம் ரூ.15,306 கோடியாகவும் இருந்தது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.64,044 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கான பணவரத்து(Cash Flow) நன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 33 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.160க்கு குறைவாக வர்த்தகமாகும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரு அரிய  முதலீட்டு வாய்ப்பாக அமையும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com