நாட்டின் நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 6.93 சதவீதம்
India’s Retail Inflation to 6.93 Percent in November 2020 – CPI
நடப்பு 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 5.84 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI – Retail Inflation), அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதம் வரை சென்றது. சொல்லப்பட்ட அக்டோபர் மாத பணவீக்க விகிதம், கடந்த ஆறு ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டிருந்தது.
மத்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க கொள்கையின் படி, சில்லரை விலை பணவீக்க இலக்கு 2-6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத பணவீக்கம் வெளியிடப்பட்ட நிலையில், இது 6.93 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக நாட்டின் பணவீக்கம், மத்திய வங்கியின் இலக்கினை விட அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உணவுப்பொருட்கள், வீட்டுமனை, புகையிலை, காலணி மற்றும் துணிமணிகளின் விலை கணிசமாக அதிகரித்து வந்ததன் காரணமாக சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக உள்ளது. சில்லரை விலை பணவீக்கத்தில் 46 சதவீதம் உணவு மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பும், பால் பொருட்கள் 6.61 சதவீதமும், தானிய வகைகள் 9.67 சதவீதமும், காய்கறிகள் 6 சதவீதமும் பங்களிப்பை கொண்டுள்ளது.
எண்ணெய் வகைகள் 3.56 சதவீதம், மாமிசம் மற்றும் மீன் 3.61 சதவீதம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பங்களிப்பு 8.6 சதவீதம், சுகாதாரம் 6 சதவீதமாகவும் உள்ளது. வீட்டுமனை 10 சதவீத பங்களிப்பை சில்லரை பணவீக்கத்தில் கொண்டுள்ளது.
ஒளி மற்றும் எரிபொருட்களின் பங்களிப்பு(Fuel and Light) 6.84 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 6.53 சதவீதத்தையும் உள்ளடக்கியுள்ளது. நாட்டின் மொத்த விலை பணவீக்கம்(WPI) நவம்பர் மாதத்தில் 1.55 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஒன்பது மாத உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை