ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு – வரைவு விதிமுறை வெளியீடு
Rs.1 Crore Personal Accident Policy – Draft Norms – IRDAI
மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீட்டு திட்டமாகும்(Pradhan Mantri Suraksha Bima Yojana). இது ஒரு விபத்து காப்பீட்டு திட்டம், அனைவரும் பயன்பெறும் வகையில் 2 லட்ச ரூபாய் என்ற பாதுகாப்பு தொகையை குறைந்த பிரீமியத்தில் பெறலாம்.
அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் இத்திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனிநபர் ஒருவர், ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே செலுத்தி ரூ. 2 லட்சம் காப்பீட்டை பெறலாம். வாகன காப்பீட்டுடன் தனிநபர் விபத்து காப்பீடு சேர்ந்து வந்தாலும், முழுமையான தனிநபர் விபத்து காப்பீடு(Standalone Policy) என்பது அதனை தனி பிரிவாக எடுத்து கொண்டால் நமக்கு முழு பலனை அளிக்கும்.
விபத்து காப்பீட்டை பொறுத்தவரை மருத்துவ காப்பீட்டை அளிக்கும் நிறுவனங்களும் அதற்கான தனிநபர் பாலிசிகளை அளித்து வருகிறது. வெறுமென விபத்தினால் ஏற்படும் இறப்பு மட்டுமில்லாமல், நிரந்தர மற்றும் பகுதி சார்ந்த இயலாமை(Permanent and Partial Disability) இருக்கும் நிலையில் அதற்கான மருத்துவ செலவு மற்றும் முழு காப்பீடு தொகையும் வழங்கப்படுகிறது.
காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.(IRDAI) தற்போது விபத்து காப்பீடு சார்ந்த புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தனிநபர் விபத்து காப்பீட்டுக்கான தொகையில் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வரைவை அறிவித்துள்ளது.
இந்த வரைவுமுறை வரும் ஏப்ரல் 1, 2021 முதல் புதிய விபத்து காப்பீட்டு திட்டமாக வெளிவர உள்ளது. திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனிநபர் இணையலாம் எனவும், விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் காப்பீட்டு தொகையில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக பெறலாம் என்ற கூடுதல் அம்சங்களையும் கூறியுள்ளது.
எனினும் குறைந்தபட்ச பிரீமிய தொகை எவ்வளவு என்பதனை ஐ.ஆர்.டி.ஏ. சொல்லவில்லை. இதன் காரணமாக காப்பீட்டு நிறுவனங்களே பிரீமிய தொகையை நிர்ணயிக்கலாம் என தெரிகிறது. காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டு, இல்லையெனில் ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை