All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ்

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ் 

Berger Paints – Paint your imagination – Fundamental Analysis 

ஜெர்மனியை சேர்ந்த லூயிஸ் ஸ்டெய்கன் பெர்கர்(Louis Steigenberger) என்பவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் பெர்கர் பெயிண்ட்ஸ். முதலில் தனது முழுப்பெயரை நிறுவன பெயராக கொண்டிருந்த நிலையில், பின்னர் அதனை லீவிஸ் பெர்கர்(Lewis Berger) என மாற்றம் செய்தார். பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. நிறுவனத்தின் தற்போதைய சேர்மனாக திரு. குல்தீப் சிங் உள்ளார்.

பெயிண்ட் துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம் ரஷ்யா, நேபாளம், போலந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கிளைகளையும், 3500க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. இதன் பிரதான தொழில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையே ஆகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 48,000 கோடி மற்றும் புத்தக மதிப்பு 25 ரூபாய். தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக விலையில் 20 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை முதலீட்டாளர்களுக்கு 67 சதவீத வருவாயை தந்துள்ளது.

பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஒருவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ. 11.70 லட்சமாகும்(Including One Bonus & One Split). சுமார் 117 மடங்கில் இந்த பங்கின் முதலீடு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்தால், கடன்-பங்கு(Debt-Equity) விகிதம் 0.20 ஆக உள்ளது. 0.5 க்கு கீழ் இந்த விகிதம் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் கடன் தன்மை குறைவாக உள்ளதாக எடுத்து கொள்ளலாம். இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 75 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை. விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 15 சதவீதமாகவும் இருக்கிறது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 15 சதவீதமும், பத்து வருடங்களில் 20 சதவீதமாகவும் உள்ளது.

பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 38 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. பங்கின் மீதான வருவாயும் சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது. 2008ம் ஆண்டில் 299 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 2,376 கோடியாக உள்ளது.

நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஆறு முறை போனஸ் பங்குகளையும், இரு முறை பங்கின் முக மதிப்பையும்(Facevalue Split) மாற்றியுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் இயக்க லாபம் சராசரியாக 15 சதவீத வளர்ச்சியில் உள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான நிகர லாபம் பங்குதாரர்களுக்கு நன்மை தரக்கூடியவையாக அமைந்துள்ளது.

பணப்பாய்வும்(Cash Flow) ஒவ்வொரு நிதியாண்டில் சராசரியாக வரவு வைக்கப்படுகிறது. இது போல நிறுவனம் சார்பாக முதலீடும், சொத்துக்களை வாங்குவதும் நடைபெறத்தான் செய்கிறது.

செப்டம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1599 கோடியாகவும், நிகர லாபம் 195 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,062 கோடி மற்றும் செலவினங்கள் ரூ. 5,181 கோடி. நிகர லாபமாக ரூ. 498 கோடி. இதர வருமானமாக 69 கோடி ரூபாய் உள்ளது.

சமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax), பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபத்தை தக்க வைக்க உதவியுள்ளது. அதே வேளையில் விற்பனை வளர்ச்சியில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது பெர்கர் பெயிண்ட்ஸ் உச்சத்தில் இருப்பதால், விலை குறைவதற்கான வாய்ப்பு இருந்தால் இந்த பங்குகளை கவனிக்கலாம். போனஸ் பங்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு தெரிந்தாலும், அந்த நடவடிக்கைக்கு பின்னர் இந்த பங்கின் செயல்பாட்டை தேர்ந்தெடுக்கலாம்.

சந்தையில் பங்குகளை வாங்க தயாராகும் ஒருவர், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் ரிஸ்க் தன்மையை(Risk Management) அறிந்த பின்னரே, முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ஒரு சிறந்த நிதி ஆலோசகரை அணுகுவது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வீட்டுமனை துறை ஊக்குவிக்கப்படும் – நிதி அமைச்சர்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வீட்டுமனை துறை ஊக்குவிக்கப்படும் – நிதி அமைச்சர் 

Realty Sector will be prompted to improve Economy – Finance Minister

நேற்று (05-11-2019) தேசிய பங்குச்சந்தை அமைப்பு சார்பாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக வீட்டுமனை துறைக்கான ஊக்குவிப்பு ஏற்படுத்தப்படும் ‘ என்றார்.

மேலும் கூறுகையில், வீட்டு மனை துறையில் கடந்த காலங்களில் காணப்பட்ட பொருளாதார சுணக்கம் வரும் நாட்களில் சரி செய்யப்படும் எனவும், இதற்கு மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் ஒத்துழைப்பு தரப்படும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக வீட்டு மனைகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வீடு விற்பனை மற்றும் கட்டுமான பணிகள் குறைவாக உள்ளன. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டை காட்டிலும், இரண்டாம் காலாண்டில் அடுக்குமாடி இல்லங்களின் விற்பனையும் குறைந்துள்ளது.

இது போல வீட்டு மனை(Real Estate) மற்றும் கட்டுமான துறையில் உள்ள நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுவதும் அதிகரித்து வந்துள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும், நடப்பு வருடத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திவால் நிலை இரு மடங்காகி உள்ளது கவனிக்கத்தக்கது.

நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறையின்(Infrastructure) பங்கு மிக அவசியமானது. இதனை சார்ந்து வரும் 2022ம் ஆண்டுக்குள் கட்டுமான துறையை ஊக்குவிக்க 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவையாக உள்ளது. இதுவரை தேசிய நெடுஞ்சாலை இணைப்பில் 24 சதவீதம் நிறைவு என்ற நிலையில் தான் உள்ளது.

கட்டுமான துறையில் வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், அதற்கான முதலீடு மற்றும் நிலங்களை கையகப்படுத்தல்(Land Acquisition) ஆகியவற்றில் அரசு பின்னடைவை சந்தித்து வருகிறது. அனைவருக்கும் வீடு(Housing for All) மற்றும் ஸ்மார்ட் சிட்டி(Smart City), 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு ஆகியவை வளர்ச்சிக்கு துணைபுரியும் பட்சத்தில், மீண்டும் வீடு மற்றும் கட்டுமான துறை ஏற்றம் பெறலாம்.

தற்போதைய நிலையில், இந்த துறைக்கான முதலீட்டு தேவை அதிகமாகியுள்ளது. அது போல வங்கிகள் சார்பிலும் கடன் வழங்கும் தன்மை எளிதாக்கப்பட வேண்டும் என்பதே இந்த துறையில் உள்ள நிறுவனங்களின் எதிர்பார்ப்பு.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை  

www.varthagamadurai.com

யெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே

யெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே 

India’s Warren Buffet bought 1.29 Crore of Yes Bank Shares

இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக்(Aptech) கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா(Rakesh Jhunjhunwala).

கடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளிவிவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உள்ளார். பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய். தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்துள்ள ஜுன்ஜுன்வாலா பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக்கி உள்ளார்.

டைட்டன்(Titan), லூபின்(Lupin), ஸ்பைஸ் ஜெட், ராலிஸ் இந்தியா, பெடரல் வங்கி, கரூர் வைசியா, டெல்டா கார்ப்(Delta Corp) என இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் திரு. வாரன் பப்பெட்டை போன்று ஜுன்ஜுன்வாலா முதலீட்டு உத்திகளை பயன்படுத்தி செல்வம் சேர்த்துள்ளார் என்றும், அதனால் இவர் இந்தியாவின் வாரன் பப்பெட் எனவும் சொல்லப்படுகிறார்.

வங்கி செயல்பாடுகளுக்கு தேவையான முதலீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் யெஸ் வங்கி கடந்த வாரம் 8500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று (04-11-2019) யெஸ் வங்கியின் பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கியுள்ளார். நேற்றைய சந்தை வர்த்தகத்தில் சுமார் 87 கோடி ரூபாய் மதிப்பிலான 1.29 கோடி யெஸ் வங்கி(YES Bank) பங்குகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் பங்குச்சந்தையில் வாங்கிய விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 67.10 எனவும், யெஸ் வங்கியின் மொத்த சந்தை மதிப்பில், ஜுன்ஜுன்வாலா வாங்கிய பங்குகளின் பங்களிப்பு 0.5 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக பங்குச்சந்தையிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி பெற்றவர்களை நகல் எடுப்பது இயல்பு தான். இருப்பினும் முதலீடு சார்ந்த உத்தியில் இது பெரும்பாலும் வெற்றியடையாது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார். நாமும் அவ்வாறு முதலீடு செய்தால் அவரை போன்று பணக்காரர் ஆகலாம் என பங்குகளை ஆராயாமல் முதலீடு செய்ய கூடாது. அவருடைய பங்கு அணுகுமுறை மற்றும் பங்குகளை வைத்திருக்கும் காலம் மாறுபடலாம்.

உதாரணத்திற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அடுத்த 10-20 வருடங்களுக்கு யெஸ் வங்கி பங்குகளை வைத்திருந்து காத்திருக்க தயாராகலாம். பங்கு விலை பெரும்  வீழ்ச்சியடைந்தாலோ அல்லது நிறுவனமே காணாமல் போனாலோ, அவருக்கு முதலீட்டு இழப்பை தாங்கக்கூடிய பலம் உள்ளது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா என்பதே முதலீட்டு கேள்வி.

பொதுவாக எந்தவொரு முதலீட்டை பொறுத்தவரை, முதலீட்டு உத்திகள்(Investment Strategy) மற்றும் ரிஸ்க் தன்மை(Risk) அறிந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள், ஊடகங்களில் பங்கு பரிந்துரை வருகிறது என்பதற்காக வெறுமென நமது பணத்தை வீணடிக்க கூடாது.

நாம் வாங்கப்போகும் பங்குகளின் தொழில் என்ன, அந்த தொழில் நமக்கு எளிய வகையில் புரிகிறதா, நிறுவனத்தின் லாப-நட்ட மற்றும் இருப்பு நிலை நிதி அறிக்கைகள் என்ன சொல்கிறது, நிர்வாக திறன், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, எதிர்காலத்தில் நிறுவனத்திற்கான வாய்ப்புகள்(SWOT analysis) போன்றவற்றை தெரிந்து வைத்திருப்பது நல்லது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

8500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் யெஸ் வங்கி

8500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் யெஸ் வங்கி 

YES Bank had received a Binding offer of Rs. 8500 Crore

தனியார் வங்கியான யெஸ் வங்கியின் சந்தை மதிப்பு தற்போது 18,000 கோடி ரூபாயாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதன் மதிப்பு ரூ. 70,000 கோடிக்கு மேலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குடும்ப பிரச்னையாக ஆரம்பித்து பின்னர் நிறுவனர்களிடையே சலசலப்பு, இயக்குனர் குழுவிலும், தலைமை பதவியிலும் முரண்பாடு என நிர்வாக குறைபாட்டால் யெஸ் வங்கியின் பங்கு கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் ஆட்டம் கண்டது.

 

கடந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் இந்த பங்கின் விலை 400 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி இருந்தது. 2017ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 10 ரூபாய் முக மதிப்பை(Face Value) கொண்டிருந்த யெஸ் வங்கி 2 ரூபாய் முக மதிப்பாக பிரிக்கப்பட்டது. அப்படியெனில், அதன் பங்கு விலை சொல்லப்பட்ட காலத்தில் 2000 ரூபாய்  பெறுமானம் என சொல்லலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

யெஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர வாராக்கடன் விகிதம் 3 சதவீதத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த வங்கியின் விற்பனை வளர்ச்சி கடந்த காலங்களில் நன்றாக இருந்தாலும், வாராக்கடன் அளவு மற்றும் போதிய நிதி இல்லாததும் வங்கியின் லாப வளர்ச்சியை பாதித்துள்ளது. 

 

நிறுவனர் ராணா கபூர் தனது பெரும்பாலான பங்குகளை விற்று விட்டார் என்றே சொல்லலாம். தற்போது தலைமையில் உள்ள திரு. ரவ்நீத் கில்லின்(Ravneet Gill) இலக்கு வங்கிக்கான முதலீட்டை பெறுவது மட்டுமே. மிக வேகமாக வளர்ந்து வரும் வங்கியாகவும், தனியார் வங்கிகளில் எச்.டி.எப்.சி. வங்கிக்கு அடுத்ததாகவும் சொல்லப்பட்ட யெஸ் வங்கி முதலீடுகளை பெற்று, சரியான நிர்வாகத்தை கொண்டு வருமா என்பதே முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு.

 

நேற்று (31-10-2019) சந்தைக்கு யெஸ் வங்கியினால் தெரிவிக்கப்பட்ட தகவல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (8500 கோடி) எனவும் கூறியுள்ளது.

 

செபியிடம்(SEBI) இதற்கான ஒப்புதலை யெஸ் வங்கி பெறும்பட்சத்தில், அதற்கான வளர்ச்சி பாதைக்கு வங்கி செல்லக்கூடும். யெஸ் வங்கியின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் இன்று (01-11-2019) வெளிவர உள்ள நிலையில், இந்த பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படும்.

 

யெஸ் வங்கியின் பங்கு விலை கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 120 சதவீதம் விலையேற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 63 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. முதலீட்டை ஈர்க்க(Global Investment) உள்ள செய்தியால், நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கின் விலை 24 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தைக்கு வரும் திட்டம் தற்போது இல்லை : எல்.ஐ.சி.

பங்குச்சந்தைக்கு வரும் திட்டம் தற்போது இல்லை : எல்.ஐ.சி.

Currently not planning to go for IPO – Life Insurance Corporation of India (LIC)

 

நாட்டில் உள்ள ஒரே பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியா(LIC India) ஆகும். 245 சிறு மற்றும் குறு காப்பீடு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே, 1956ம் ஆண்டு எல்.ஐ.சி. நிறுவனமாக தொடங்கப்பட்டது. 29 கோடி பாலிசிதாரர்களை கொண்டிருக்கும் இந்நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த காப்பீடு மதிப்பு ரூ. 30 லட்சம் கோடி.

 

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்யும் ஒரே நிறுவனம் எல்.ஐ.சி யாக உள்ளது. நடப்பு வருடத்தில் இதுவரை பங்குச்சந்தை முதலீடாக 33,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி50(Nifty50) குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் 27 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.30 லட்சம் கோடி ரூபாய்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடனில் தத்தளித்து கொண்டிருந்த ஐ.டி.பி.ஐ.(IDBI Bank) வங்கியின் முக்கிய பங்குதாரராக இருந்த இந்த காப்பீடு நிறுவனம், வங்கியையும் கையகப்படுத்தியது. மேலும் எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி.(ITC), டாட்டா மோட்டார்ஸ், விப்ரோ, எஸ்.பி.ஐ.(SBI), மாருதி, பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா, எல் & டி(L&T) மற்றும் பல பெரு நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தை முதலீடு செய்துள்ளது.

 

இதன் அதிகபட்ச பங்களிப்பு ஐ.டி.சி. மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஒ.என்.ஜி.சி.(ONGC) நிறுவனங்களில் உள்ளது. வெகு நாட்களாக பங்குச்சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம், தற்போதைய நிலையில் இந்த செயல்பாட்டை தாமதப்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசும் இதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டு தான் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ரிஸ்க் எடுக்கா விட்டாலும், இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் காப்பீடாக பெற்ற பணத்தை கொண்டு சந்தையில் தனது முதலீட்டை பரவலாக்கி உள்ளது. நடப்பு ஆண்டில் எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் கண்ட லாபம்(Equity Profit) ரூ. 13,000 கோடி. இது கடந்த வருடம் 23,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் பேசிய எல்.ஐ.சி. சேர்மன் திரு. குமார் அவர்கள், ‘ பங்குச்சந்தைக்கு வருவதற்கான திட்டம்(Initial Public Offer – IPO) தற்போது முடிவெடுக்கப்படவில்லை. பொருளாதார மந்த நிலையிலும், காப்பீடு தொழில் வளர்ச்சியில் தான் உள்ளது. எல்.ஐ.சி. யின் மியூச்சுவல் பண்டு தொழிலிலும் நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது ‘ என்றார்.

 

வருங்காலத்தில் எல்.ஐ.சி. கிளைகளை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையெனவும், ஏற்கனவே இருக்கும் சிறு கிளைகளை ஐ.டி.பி.ஐ. வங்கி கிளைகளுடன் இணைக்கும் செயல்பாடு நடைபெற்று கொண்டிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. 

 

எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு தற்போதைய கடனாக(Debt) ரூ. 2.72 லட்சம் கோடி உள்ளது. இந்த வங்கி கடந்த 10 காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. மொத்த வாரக்கடனும்(Gross NPA) மிக அதிகமாக 30 சதவீதத்திற்கு அருகாமையில் உள்ளது. 

 

நிகர வாராக்கடன் 8 சதவீதம் என்ற அளவிலும், இந்த பங்கு கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 50 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?

வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?

How to repay your Housing loan Smartly ?

 

இன்றைய காலத்தில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ ஒரு கனவு என்றால், அதனை வீட்டுக்கடனாக பெற்று மாத வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த 20-30 வருடங்களுக்கு தவணையாக செலுத்துவது பெரும்பாடாக உள்ளது. நீங்கள் கடனாக வாங்கிய வீடு, அதாவது வீட்டுக்கடன் மூலம் அடைந்த வீடு உங்களுக்கு 30 வருடங்களுக்கு பின்பு தான் சொந்தமாக கருதப்படும். அதுவரை அந்த வீடு ஒரு கடனாக(Liability) தான் வங்கியால் அங்கீகரிக்கப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேவைக்கு ஒரு வீடு இருப்பது நல்லது, அதே வேளையில் நன்றாக சம்பாதிக்கிறேன், வரி சேமிப்புக்காக(Tax Savings) வீட்டுக்கடன் வாங்குகிறேன் என இரண்டு, மூன்று வீடுகளை வாங்க முயன்றால் அது நமக்கு ஒரு செலவினத்தை தான் தரும். அதுவும் ஒரு நீண்டகால கடனை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம். 

 

உங்களிடம் அதிகப்படியான பணம் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, வீடுகளை வாங்கி விற்பனை செய்தல் மற்றும் வீடுகளை பெருமளவில் வாடகைக்கு விட்டு, அதிகப்படியான வருமானத்தை ஈட்டுபவராக இருந்தால் நீங்கள் இந்த பதிவை படிக்க தேவையில்லை. உங்கள் நேரத்தை தொழிலில் செலுத்தலாம்.

 

நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலானோர் நிதிச்சிக்கலில் மாட்டிக்கொள்வது வருவாயில் 50 சதவீதத்திற்கும் மேல் கடனை கொண்டிருப்பது தான். வீட்டுக்கடன்(Home Loan), தனி நபர் கடன்(Personal Loan), வாகன கடன் என கடன் பட்டியல் நீளும். இருப்பினும், கடனை நாம் சாமர்த்தியமாக அடைப்பதே நமக்கான கட்டாய இலக்காகும். 

 

உதாரணமாக ஒருவர் வீட்டுக்கடனாக(Housing Loan) ரூ. 25 லட்சத்தை பெற்றுள்ளார் என வைத்து கொள்வோம். வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 9.60 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. நமது தவணைக்காலம் 30 ஆண்டுகள். அப்படியெனில், நமது மாத தவணைத்தொகை ரூ. 21,204 (அடுத்த 30 வருடங்களுக்கு).

 

இப்போது நமது கடன் மதிப்பீட்டை பார்ப்போம். ரூ. 25 லட்சத்தை 9.60 சதவீத வட்டியில் நாம் கடனாக பெற்றுள்ள போது, 30 வருடங்களில் நமது வட்டி தொகை மட்டும் (அசலை தவிர்த்து) 51,33,440 ரூபாய். அதாவது நமது மொத்த தவணை தொகை (ரூ. 21,204 X 30 வருடங்கள் அல்லது 360 மாதங்கள்) – ரூ. 76,33,440. வீட்டுக்கடனில் நாம் கட்ட வேண்டிய வட்டி தொகை மட்டும் 67 சதவீதமாகும். 

 

இதுவே நாம் வாங்கிய வீட்டுக்கடனை அதே வட்டி விகிதத்தில், 20 வருடங்களில் கட்டி முடிக்க நினைத்தால், மாத தவணை தொகை ரூ. 23,467. செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ. 31,32,080. அதாவது மொத்த தொகையில் வட்டியின் பங்களிப்பு 55 சதவீதமாகும். ஆக, தவணை காலத்தை அதிகரிக்கும் போது, நமது தவணை தொகை குறைவாக இருப்பினும், செலுத்த வேண்டிய வட்டி தொகை அதிகரிக்கும். கடனை விரைவாக செலுத்த வேண்டிய நிலையில், நமக்கான தவணை தொகை அதிகமாகி, வட்டி தொகை குறையும்.

repaying home loan

இங்கு நாம் இரு நண்பர்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். ராமன்(X), ரவி(Y) இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரே காலத்தில், தங்களுக்கான வீட்டுக்கடனை பெறுகிறார்கள். அவர்களது வீட்டுக்கடன் தொகையும், வட்டி விகிதமும் ஒன்று தான். ஆனால், தவணை காலம் மட்டும் மாறுபடுகிறது. ராமன் தனது 25 லட்சம் ரூபாய் வீட்டுக்கடனை 9.60 சதவீத வட்டியில் 20 வருடங்களில் செலுத்த உள்ளார். அதே சமயத்தில், ரவி தனக்கான தவணை காலத்தை 30 வருடங்களாக திட்டமிட்டுள்ளார்.

 

ராமனின் வீட்டுக்கடனுக்கான மாத தவணை தொகை ரூ. 23,467 மற்றும் ரவியின் தவணை தொகை ரூ. 21,204. இருவருக்கும் மத்தியில் உள்ள இடைவெளி தொகை ரூ. 2263 ( 23,467 – 21,204). அதாவது, ராமனை காட்டிலும் மாத தவணையில் ரூ. 2263 ஐ குறைவாக ரவி செலுத்துகிறார். தவணை காலத்தை கவனத்தில் கொண்டிருப்பதும் அவசியம். சொல்லப்பட்ட ரூ. 2263 இடைவெளி தொகையை ரவி ஒரு பரஸ்பர நிதி திட்டத்தில்(SIP – Equity Mutual Funds) மாத முதலீடாக செலுத்துகிறார் என கொள்வோம். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருவரும் தங்களது மாத தவணையை செலுத்தி வரும் நிலையில், 17 வருட முடிவின் போது ராமன் கட்டிய மொத்த தவணை தொகை ரூ. 47,87,222 (23,467 X 17 வருடங்கள் அல்லது 204 மாதங்கள்) ஆக இருக்கும். அதே காலத்தில் ரவி கட்டிய மொத்த தவணை தொகை ரூ. 43,25,616 (21,204 X 204 மாதங்கள்). 

 

நாம் சொன்ன ரவியின் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை 17 வருட முடிவில், 4,61,606 ரூபாயாக இருக்கும். ரவியின் 17 வருட முடிவின் தவணை தொகை மற்றும் முதலீட்டு தொகையை சேர்த்தால்(SIP Corpus), ரூ. 47,87,222 ஆக இருக்கும். ராமனுக்கு தவணை செலுத்த கூடிய காலம் இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. அதே போல ரவிக்கு அது 13 வருடங்களாகும். 

 

இந்த சமயத்தில் ரவியின் மாத முதலீடான 2263 ரூபாய், 15 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் 17 வருட முடிவில் 21,27,253 ரூபாயாக இருக்கும். ராமன் அடுத்த 13 வருடங்களில் செலுத்த வேண்டிய அசல் தொகை 18,85,811 ரூபாய். இதனை தனது பரஸ்பர நிதி முதலீடு திட்டத்தில் உள்ள பணத்தை கொண்டு 17 வருட முடிவில் அடைத்தால், அவருக்கு மீதமிருக்கும் தொகை ரூ. 2.41 லட்சம். இதன் மூலம் ரவி தனது கடனையும் அடைத்து விட்டு, பரஸ்பர நிதி முதலீட்டின் மூலம் சிறிய தொகையையும் (ரூ. 2.41 லட்சம்) மீதம் பெற்றுள்ளார்.

 

மறுபுறத்தில், ராமன் அடுத்த 3 வருடங்களில் அடைக்க வேண்டிய அசல் தொகை ரூ. 7,31,514. ராமன் தனது வீட்டுக்கடனை 20 வருடங்கள் கட்டி முடிக்க வேண்டிய சூழ்நிலையில், ரவி சாமர்த்தியமாக ஒரு முதலீடு திட்டத்தின் மூலம் 17 வருடங்களில் தனது கடனை அடைத்து விட்டார். ராமனை விட ரவிக்கு கிடைத்த மொத்த சலுகையின் மதிப்பு  10.86 லட்சம் ரூபாய் ( பரஸ்பர நிதி முதலீட்டின் எஞ்சிய தொகை மற்றும் அடுத்த 3 வருடங்களில் செலுத்த வேண்டிய தவணை தொகை).

 

ராமனும், ரவியை போன்று சாமர்த்தியமாக செயல்பட வேண்டுமென்றால் கூடுதலாக ஒரு முதலீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் வீட்டுக்கடனுக்கான வட்டி(Bank Interest Rate) விகிதம் குறைவாக இருப்பதும், முதலீட்டின் மூலம் பெறக்கூடிய வருவாய் (SIP Returns) அதிகமாக அமைவதும் தான் வாய்ப்பாக கருதப்படும். முதலீடு செய்யும் ஒருவர் பணவீக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதி திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் 15 சதவீத வருவாயை ஏற்படுத்த முடியாது. நீண்ட காலத்தில் ஒருவர் முதலீடு செய்யும் பட்சத்தில், நல்ல வட்டி வருவாயை ஈட்டலாம். வீட்டுக்கடனை அடைக்கும் போது, முதலீடு செய்கிறேன் என ஒருவர் வட்டி குறைவான முதலீட்டு சாதனத்தை எடுத்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட முடியாது. 

 

நாம் பெறக்கூடிய முதலீட்டின் மீதான வருவாய்(Return on Investment), வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த திட்ட முறை செயல்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு ஒருவர் தனது கடனை அடைப்பதில் திட்டமிடலாம்.

(கணக்கீடு தரவுகள்: எச்.டி.எப்.சி.(HDFC MF) மியூச்சுவல் பண்டு பயன்பாடு)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

உணவக வணிகத்தில் இறங்க உள்ளீர்களா – இது உங்களுக்கு தான்

உணவக வணிகத்தில் இறங்க உள்ளீர்களா – இது உங்களுக்கு தான் 

Are you get into the Food Startups ? – Business Insider 

நேற்று மதியம் நானும், என்னுடைய உறவுமுறைகளில் உள்ள சகோதரர் ஒருவரும் பேசி கொண்டிருக்கும் போது, ‘ அவர் உணவு சார்ந்த தொழிலை தனது நண்பர்களுடன் சேர்ந்து துவங்க உள்ளதாக கூறினார். மேலும் அதனை சார்ந்து என்னுடைய அபிப்பிராயத்தை கேட்க முனைந்தார் ‘. எனக்கு உணவு சார்ந்த தொழிலை பற்றி அவ்வளவாக தெரியாது எனினும், அந்த சகோதரருக்கு சிறு வயது என்பதால் தொழில்முனைவை கொண்டாட, அவர் தொழில் செய்ய ஊக்கத்தை ஏற்படுத்தினேன்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான் பலமுறை சொன்னது போல, விவசாயம் என்பதும் ஒரு தொழில் என்பதை நாம் மறக்க கூடாது. தனது நிலத்தில் உற்றார், உறவினர் மற்றும் ஊர்க்காரர்களை வேலைக்கு அமர்த்தி, களையெடுக்க தினக்கூலி வழங்கி, காலம் வரும் வரை காத்திருந்து அறுவடை செய்பவர் ஒரு தொழில்முனைவை தான் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் விவசாயி, தொழில்முனைவோர், தொழிலதிபர், கூலி வேலை என பல பெயர்களை ஏற்படுத்தினாலும், அவர் செய்து கொண்டிருப்பது தொழில் தான்.

கோடிகளில் தொழில் செய்து வருபவர் தற்கொலை செய்து கொண்டாலும், கூலியாக இருந்தும் தனது சொந்த நிலத்தில் விவசாயத்தை செய்து வருபவரும் தொழிலை தான் செய்கிறார். நான் ஏன் இந்த விஷயத்தை அழுத்தமாக சொல்கிறேன் என்றால், தொழில்முனைவு(Entrepreneurship) என்பது தன்னை தானே சமாதானம் செய்து கொள்வதல்ல, மாறாக தன்னை வெற்றி கொள்வதே ஆகும்.

நமது சகோதரர் கதைக்கு வருவோம், உணவு சார்ந்த சேவைகளில் இன்று ஸ்விக்கி(Swiggy), ஜோமோடோ(Zomato), உபேர் ஈட்ஸ்(Uber Eats) என பல பிராண்டுகள் வந்து விட்டன. அப்புறம் எங்கே நாம் தொழில் செய்வது என கேட்கலாம். காலங்காலமாக இந்த நிகழ்வு மாற்றம் பெற்று கொண்டு தான் இருக்கிறது. தொழில் என்பது ஒரு ரிஸ்க் தன்மை கொண்ட செயல் எனினும், வேறு யார் அதை செய்வது. தொழில் விருத்தி அடையாவிட்டால், அனைவருக்குமான வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரம் எங்கே என்பது கேள்வி.

இளவயதிலேயே தொழிலில் ஈடுபட்டு தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. எண்ணத்தில் மட்டுமே கொண்டு, தொழில் செய்யாமல் விட்டுவிட்டால், அது ஒரு வாழ்க்கை தோல்வி தான். சகோதரர் கேட்டிருக்கிறார் என்பதற்காக உணவு சார்ந்த சில காரணிகளை இணையத்தில் கூகுள் செய்தேன்.

நம்மை போன்ற நுகர்வு சந்தையை கொண்டிருக்கும் நாடுகளில், உணவுக்கு எப்போதும் தேவை அதிகம் தான். பொதுவாக உணவு சார்ந்த தொழிலை பொறுத்தவரை வீணாகும் உணவு(Food Wastage) தான் தொழிலை பாதிக்கும் காரணியாக இருக்கும். இரண்டாவதாக சேவை பரிமாற்றத்தில் கவனமாக செயல்படுவது அவசியமாகும். நாம் எந்த மாதிரியான உணவு வகைகளை பரிமாற உள்ளோம், உணவகம் அமைவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் இடம், நமது வேலையாட்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.

நாம் மற்ற உணவகத்திலிருந்து உணவு வகைகளை பெற்று கொண்டு விநியோக தொழிலை(Delivery Business) மட்டும் மேற்கொள்ள உள்ளோமா, தொழிலுக்கான பட்ஜெட் திட்டமிடல், நமது வாடிக்கையாளர்கள் யார்(Target Audience) என கண்டறிவதும் அவசியமான ஒன்றாகும். உணவு தொழிலுக்கான அரசு உரிமங்கள், உணவை எந்த முறைகளில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற போகிறோம் என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உணவு சார்ந்த ஸ்டார்ட் அப்(Startups) தொழில்களில் கடந்த ஐந்து வருடங்களாக முதலீடு பெருகி வருகிறது. நாளுக்கு நாள் நுகர்வோர் தேவை அதிகரித்து வருவதால், அதற்கான முதலீட்டு வாய்ப்புகளும் திறந்தநிலையில் உள்ளது. பொருளாதார மந்த நிலை என்று சொல்லப்படும் காலத்திலும், உணவு சார்ந்த தொழிலில் தேவைகள் இருந்த வண்ணம் தான் உள்ளன.

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே சில உணவகங்களில் தோல்வியை தழுவ செய்கின்றன. நடப்பு 2019ம் ஆண்டில் உணவு சார்ந்த தொழில்கள் பெற்ற முதலீடு சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த வருடத்தை காட்டிலும் இரு மடங்கு என சொல்லப்படுகிறது. நாம் இந்த தொழிலில் சரியான முறையில் சேவைகளை அளித்து வரும் நிலையில், முதலீடுகளை ஈர்ப்பது கடினமான விஷயமாக இருக்காது.

கடந்த ஒரு வருடத்தில் ஸ்விக்கி நிறுவனம் 50 கோடி விநியோகங்களை(டெலிவரி) அளித்துள்ளது. வெறும் கைபேசி செயலியை(Mobile App) கொண்டு உணவு விநியோக சேவையில் ஈடுபட்டு வரும் பெரு நிறுவனங்கள், இயந்திர வழி கற்றலுக்கு(Machine Learning – AI) மாறி கொண்டிருக்கின்றன. இந்த சேவையில் தானியங்கி முறையை அமல்படுத்த நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் தயாராக உள்ளனர்.

நம் மதுரையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் உணவு விற்பனையை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சுஸ்(Swiggy,Uber Eats and Zomato) நிறுவனங்களே இதற்கு சான்றாக உள்ளன. ஒரு முறை நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் திரு. குமரவேல்(C K Kumaravel, Naturals Salon) சொன்னது போல, ‘ மதுரையில் உள்ள இளைஞர்கள் சிலர் இங்குள்ள உணவகங்களை இணைத்து ஒரு உணவு விநியோக செயலியை ஏற்படுத்தி இருந்தால், இன்று ஸ்விக்கி, ஜோமாடோ போன்ற நிறுவனங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கிருந்தோ வந்த நிறுவனங்கள் தென்னகத்தின் கோவில் நகரத்தில் சில புள்ளிவிவரங்களை கொண்டு தொழில் செய்யக்கூடிய நம்பிக்கை இருந்தால், நாம் ஏன் உள்ளூர் இளைஞர்கள் செய்ய முடியாது ‘ என்று கூறினார்.

உணவு தொழில் மற்றும் விநியோக சேவையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து தொழில்முனைவை ஏற்படுத்துவதே உத்தமம். ஆழம் தெரியாமல் காலை விட கூடாது. அதற்கான காலை விட கூடாது என சொல்லவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா நிறுவனமாக ஜியோ மாறும் – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடனில்லா நிறுவனமாக ஜியோ மாறும் – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 

Reliance JIO will become a Debt Free Company in 2020 – Reliance Industries

 

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 9 லட்சம் கோடி. இந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் அதனை சந்தைப்படுத்துதல், சில்லறை வணிகம் மற்றும் டிஜிட்டல் சேவை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இன்று 35 கோடிக்கும் மேலான சந்தாதாரர்களை கொண்டிருக்கும் ஜியோ(JIO), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். ஜியோவின் வருகைக்கு பின்னர், நாட்டின் தொலைத்தொடர்பு சேவையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஜியோவின் அதிரடியான இணைய சேவையே காரணமாக அமைந்துள்ளன.

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இணைய வழி வைரல்களை ஏற்படுத்திய பெருமை ரிலையன்ஸ் ஜியோவை சாரும். துவக்க காலத்தில் ஜியோ நிறுவனம் வருமானத்தை பெறாவிட்டாலும், பின்பு வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டு, லாப பாதைக்கு செல்ல ஆரம்பித்தது.

 

தற்போது, டிஜிட்டல் சேவையை மேம்படுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றுமொரு துணை நிறுவனத்தை உருவாக்க முனைந்துள்ளது. இதற்கான கூட்டமும் நடைபெற்று, நேற்று (25-10-2019) நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் ஒப்புதலை பெற்றுள்ளது. 

 

அதன் படி, டிஜிட்டல் சேவைக்காக புதிய துணை நிறுவனம் துவங்க உள்ளதாகவும், ஆரம்ப நிலையில் ரூ. 1.08 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் எனவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முதலீடு உரிமை பங்குகளாக திரட்டப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 

அதே போல, நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடனில்லா நிறுவனமாக(Virtually Debt Free), அதாவது கடனை வெகுவாக குறைக்கும் உத்தியில் உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. 

 

சொல்லப்பட்ட புதிய நிறுவனம் மூலம் சிறந்த மற்றும் மாற்றத்தக்க டிஜிட்டல் சேவையை அளிக்க உள்ளதாக நிறுவனர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய கடன் 2.52 லட்சம் கோடி ரூபாய். 

 

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5.66 லட்சம் கோடியாகவும், இயக்க லாபம் 84,000 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் 39,588 கோடி ரூபாய் ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்(Reliance Industries) தனது முதலீட்டாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் 39 சதவீத வருவாயை தந்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்

எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் 

India Jumps in the ease of doing business to Rank No. 63 – World Bank

 

உலக வங்கி சார்பில் வணிக விதிமுறைகளை அளவிடுதல் சார்ந்த புள்ளிவிவரங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. புதிய தொழில் தொடங்குவது, எளிதாக தொழில் செய்வதற்கான சூழ்நிலை(Ease of doing business), கட்டுமான அனுமதிகளை கையாள்வது, தொழிலுக்கான மின் இணைப்பை பெறுதல், கடன் பெறுதல் மற்றும் வரிகளை செலுத்துதல் என தொழில் சார்ந்த புள்ளிவிவரங்களை உலக வங்கி அளிக்கும்.

 

எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் பட்டியலில் நியூஸிலாந்து(New Zealand) முதலிடத்தில் உள்ளன. இந்த நாடு புதிய தொழில் துவங்குவதற்கான தரவரிசையிலும் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எளிதாக தொழில் செய்வதற்கான தரவரிசையில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும், ஹாங்காங்கை சிறப்பு நிர்வாக பிராந்தியமாக கொண்டிருக்கும் சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்தியா தர வரிசையில் 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. 190 நாடுகளை கொண்ட பட்டியலில்(World Bank – Doing Business Rank) 2014ம் ஆண்டு இந்தியா 144வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் எளிதாக தொழில் செய்ய ஏதுவாக உள்ள நகரங்களில் லூதியானா(Ludhiana) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் மற்றும் பத்தாம் இடத்தில் மும்பையும் உள்ளது. 

 

புதிய தொழில் தொடங்கும் தர வரிசையில் தமிழகம் பத்தாவது இடத்திலும், எளிதாக தொழில் செய்ய ஏதுவான நகரங்களின் பட்டியலில் 15வது இடத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.

 

தர வரிசையில் இந்தியா கடந்த ஆறு வருடங்களில் முன்னேற்றம் கண்டிருப்பதற்கு காரணமாக சொல்லப்படுவது, பெரு நிறுவனங்கள் இந்திய நுகர்வோர் சந்தையை பிடித்தது, அயல் நாடுகளில் ஏற்பட்டுள்ள வர்த்தக போர் மற்றும் அரசின் புதிய கொள்கைகள் ஆகியவை ஆகும். புதிய தொழில் தொடங்குவதற்கான(Starting Business) வரிசையில் இந்தியாவிற்கு 136வது இடம் அளிக்கப்பட்டுள்ளது பாதகமானது.

 

மின் இணைப்புகளை பெறுவதில் 22ம் இடமும், சொத்துக்களை பதிவு செய்வதில் 154வது இடமும், கடன் பெறுதலில் 25வது இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவில் பெரு நிறுவனங்கள் மட்டுமே புதிய தொழில்களை துவங்குவது என்ற நிலை மாறி, வரும் காலத்தில் பெரும்பாலானவர்கள் தொழில் தொடங்குவதற்கான நிலை எளிதாக்கப்படலாம். 

 

எளிதாக தொழில் செய்ய ஏதுவாக நாடுகளில் இந்தியா முன்னேற்றம் பெற்றிருந்தாலும், சுகாதாரம் மற்றும் உலகளாவிய பசி அட்டவணையில்(Global Hunger Index) 102வது இடத்தில் இருப்பது கவலை அளிக்கக்கூடியது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி

வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி

Asian Paints Colourizing Net Profit to Rs. 823 Crore – Q2FY20

பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்திய பன்னாட்டு நிறுவனம் ஏசியன் பெயிண்ட்ஸ்(Asian Paints). இந்த நிறுவனத்தின் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ளது. இரண்டாம் காலண்டான ஜூலை-செப்டம்பர் காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 5,050 கோடியாக இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் இதர வருமானமாக 105 கோடி ரூபாயும், செலவினங்கள் ரூ. 4,319 கோடியாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 852 கோடி ரூபாய் எனவும், இரண்டாம் காலாண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net Profit) ரூ. 823 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 9 சதவீத வளர்ச்சியையும், நிறுவனத்தின் நிகர லாபம் 67 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 4,615 கோடியாகவும், இதர வருமானம் ரூ. 65 கோடியாகவும் இருந்தது. அப்போதைய நிகர லாபம் ரூ. 491 கோடியாக இருந்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) ரூ. 1.70 லட்சம் கோடியாக இருக்கிறது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 10.66 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாக உள்ளது. அதே போல லாப வளர்ச்சி, கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், பத்து வருட காலத்தில் 18 சதவீதமாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதம் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கில் பத்து வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், 27 சதவீத வருமானத்தை பெற்றிருக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com