நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வீட்டுமனை துறை ஊக்குவிக்கப்படும் – நிதி அமைச்சர்
Realty Sector will be prompted to improve Economy – Finance Minister
நேற்று (05-11-2019) தேசிய பங்குச்சந்தை அமைப்பு சார்பாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக வீட்டுமனை துறைக்கான ஊக்குவிப்பு ஏற்படுத்தப்படும் ‘ என்றார்.
மேலும் கூறுகையில், வீட்டு மனை துறையில் கடந்த காலங்களில் காணப்பட்ட பொருளாதார சுணக்கம் வரும் நாட்களில் சரி செய்யப்படும் எனவும், இதற்கு மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் ஒத்துழைப்பு தரப்படும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக வீட்டு மனைகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வீடு விற்பனை மற்றும் கட்டுமான பணிகள் குறைவாக உள்ளன. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டை காட்டிலும், இரண்டாம் காலாண்டில் அடுக்குமாடி இல்லங்களின் விற்பனையும் குறைந்துள்ளது.
இது போல வீட்டு மனை(Real Estate) மற்றும் கட்டுமான துறையில் உள்ள நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுவதும் அதிகரித்து வந்துள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும், நடப்பு வருடத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திவால் நிலை இரு மடங்காகி உள்ளது கவனிக்கத்தக்கது.
நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறையின்(Infrastructure) பங்கு மிக அவசியமானது. இதனை சார்ந்து வரும் 2022ம் ஆண்டுக்குள் கட்டுமான துறையை ஊக்குவிக்க 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவையாக உள்ளது. இதுவரை தேசிய நெடுஞ்சாலை இணைப்பில் 24 சதவீதம் நிறைவு என்ற நிலையில் தான் உள்ளது.
கட்டுமான துறையில் வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், அதற்கான முதலீடு மற்றும் நிலங்களை கையகப்படுத்தல்(Land Acquisition) ஆகியவற்றில் அரசு பின்னடைவை சந்தித்து வருகிறது. அனைவருக்கும் வீடு(Housing for All) மற்றும் ஸ்மார்ட் சிட்டி(Smart City), 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு ஆகியவை வளர்ச்சிக்கு துணைபுரியும் பட்சத்தில், மீண்டும் வீடு மற்றும் கட்டுமான துறை ஏற்றம் பெறலாம்.
தற்போதைய நிலையில், இந்த துறைக்கான முதலீட்டு தேவை அதிகமாகியுள்ளது. அது போல வங்கிகள் சார்பிலும் கடன் வழங்கும் தன்மை எளிதாக்கப்பட வேண்டும் என்பதே இந்த துறையில் உள்ள நிறுவனங்களின் எதிர்பார்ப்பு.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை