வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி
Asian Paints Colourizing Net Profit to Rs. 823 Crore – Q2FY20
பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்திய பன்னாட்டு நிறுவனம் ஏசியன் பெயிண்ட்ஸ்(Asian Paints). இந்த நிறுவனத்தின் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ளது. இரண்டாம் காலண்டான ஜூலை-செப்டம்பர் காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 5,050 கோடியாக இருந்துள்ளது.
சொல்லப்பட்ட காலத்தில் இதர வருமானமாக 105 கோடி ரூபாயும், செலவினங்கள் ரூ. 4,319 கோடியாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 852 கோடி ரூபாய் எனவும், இரண்டாம் காலாண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net Profit) ரூ. 823 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 9 சதவீத வளர்ச்சியையும், நிறுவனத்தின் நிகர லாபம் 67 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 4,615 கோடியாகவும், இதர வருமானம் ரூ. 65 கோடியாகவும் இருந்தது. அப்போதைய நிகர லாபம் ரூ. 491 கோடியாக இருந்துள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) ரூ. 1.70 லட்சம் கோடியாக இருக்கிறது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 10.66 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாக உள்ளது. அதே போல லாப வளர்ச்சி, கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், பத்து வருட காலத்தில் 18 சதவீதமாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதம் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கில் பத்து வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், 27 சதவீத வருமானத்தை பெற்றிருக்கலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை