உலக பொருளாதார நெருக்கடி பதற்றம் – முதலீட்டாளராக நாம் என்ன செய்யலாம் ?
Global Financial Crisis – What can an investor do ?
கடந்த இரண்டு வருடங்களாக சொல்லி கொண்டிருந்த பொருளாதார மந்தநிலை இப்போது உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம். பிரெக்ஸிட் ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், அமெரிக்க-சீன வர்த்தக போர், அமெரிக்க-ஈரான் போர் பதற்றம், வாகனத்துறை விற்பனை மந்தம், உலக வெப்பமயமாதல், சீனாவின் அதிகப்படியான கடன், கொரோனா வைரஸ், சவூதி அரேபியாவின் எண்ணெய் போர் என கடந்த சில மாதங்களாக உலக பொருளாதார செய்திகள் இப்படி தான் இருந்துள்ளன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இது தவிர உள்நாட்டில் அரசின் புதிய கொள்கைகள் மற்றும் சட்டங்களில் மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவது, வேலைவாய்ப்பின்மை விகிதம், வங்கி திவால் மற்றும் கட்டுப்பாடுகள் என அனைத்தும் வைரல் செய்திகளாக இருந்துள்ளது. இவற்றிற்கான காரணத்தை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என சொன்னாலும், உண்மையில் இந்த பொருளாதாரம் அவர்களை தான் பாதித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் குறைந்தாலும், அரசின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில்(CAD) வேண்டுமானால் மாற்றம் ஏற்படலாம். என் வாழ்க்கை தரம் என்ன உயரவா போகிறது என சாமானியன் கேட்கலாம். இது தான் உலக அரசியல் நடப்பாக தற்போது உள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் திரு. பால் க்ரெக்மேன் கூறும் போது, ‘ நாம் நிரந்தர பொருளாதார மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை இப்போது சந்தை தெரிவிக்கிறது ‘ என தெரிவித்துள்ளார்.
இது போல உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான ஜே.பி.மோர்கன்(JP Morgan) தெரிவிக்கும் போது, ‘ உலக மந்தநிலை ஆபத்து உண்மையாகவே இருக்கிறது. கொரோனோ வைரஸ் பற்றிய செய்திகள் சந்தையை வெகுவாக பாதித்து வருவதை காண்கிறோம். அமெரிக்காவின் அரசு கடன் பத்திரங்கள் விகிதம் குறைவாக இருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான விஷயமாக இல்லை ‘ என கூறியுள்ளது.
இந்த செய்திகள் எல்லாம் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறதா என்றால் அது தான் இல்லை. முதலீட்டு ஜாம்பவான்களுக்கும், பல்வேறு நாடுகளின் அரசுக்கும் இந்த நிலை பல மாதங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால், இந்த நிலையை உறுதி செய்ய முன்வருவது யார் என்பதே கேள்வி. எனவே தான் தற்போது இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலை அல்லது வீழ்ச்சி என்றால் நாம் அச்சம் அடைய தேவையில்லை. இவை பொருளாதார உலகில் ஒரு சுழற்சி முறையே. எப்போதெல்லாம் நாம் இயற்கையை மீறுகிறோமோ அப்போதெல்லாம் நம்மை எச்சரிக்கை செய்ய சில சமிக்ஞைகள் வரும். அது போல தான் இதுவும்.
பொருளாதார மந்தநிலையை சிறு முதலீட்டாளராக நாம் சரி செய்ய முடியாது. ஏன், பெரிய முதலீட்டாளர்களாலும் முடியாது தான், ஆனால் தொழிலில் இருக்கும் பெரு நிறுவனங்கள் அரசுடன் ஆலோசனை செய்யும். அவற்றால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சிறு முதலீட்டாளராக நாம் செய்ய வேண்டியது எச்சரிக்கையுடன் கூடிய முதலீட்டு முறை தான். இது போன்ற சமயங்களில் அதிக கடனை வாங்காதீர்கள், முடிந்தவரை கடனை குறைத்து கொள்ளுங்கள்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் கவனத்திற்கு:
- உங்கள் நிதி இலக்குகளை(Financial Goals) சார்ந்து தான் உங்கள் முதலீடு எப்போதும் இருக்க வேண்டும். உங்கள் இலக்கிற்கான காலம் 15 வருடங்கள் எனில், நீங்கள் அதனை மட்டும் தான் கவனிக்க வேண்டும். பொருளாதார மந்தநிலை அல்லது வீழ்ச்சி என்பது வந்து போக கூடிய ஒன்று. அது ஒரு தற்காலிகமான நிலையே.
- பொதுவாக பரஸ்பர நிதிகளை பொறுத்தவரை, எஸ்.ஐ.பி. முதலீடு(SIP Investing) எப்போதும் சிறந்தது. பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தை அதிகப்படியான இறக்கம் காண்பதால், நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு அதிகமான யூனிட்கள் கிடைக்கப்பெறுவது கவனிக்கத்தக்கது.
- உபரித்தொகை(Surplus Cash) ஏதேனும் இருப்பின், ஒரு முறை முதலீட்டையும்(Lumpsum) மேற்கொள்ளலாம். அதே வேளையில், இதற்கு அடுத்து இறக்கம் காணாது என யாராலும் கணிக்க முடியாது. வாய்ப்பை பயன்படுத்துங்கள், இல்லையெனில் இது போன்ற காலங்களில் உங்கள் எஸ்.ஐ.பி. தொகையை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.
- பொருளாதார மந்தநிலை காலங்களில், நஷ்டத்தை தவிர்க்கிறேன் என மியூச்சுவல் பண்ட் தொகையை வெளியே எடுத்து விடாதீர்கள். அது தான் உண்மையில் நஷ்டம். நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்த தொகை மற்றும் மீண்டும் முதலீடு செய்யப்போகும் தொகை, உங்கள் கூட்டு வட்டியின் பலனை அதிகரிக்க செய்யும். இது தான் பணம் பண்ணும் மகத்துவம்.
பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்பவர்களுக்கு:
- மியூச்சுவல் பண்டையும், நேரடி சந்தையையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். பரஸ்பர நிதிகள் உங்கள் நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய உதவும். ஆனால் நேரடி பங்குச்சந்தை என்பது உங்களுக்கான செல்வ வளத்தை ஏற்படுத்துவதற்கு. என் பிள்ளைகள் மேற்படிப்பு கல்விக்கு சேர்க்கிறேன், மகள் திருமணத்திற்கு, ஓய்வுகால சேமிப்பு என்பவர்கள் தயவு செய்து பரஸ்பர நிதிகளை மட்டும் தேர்ந்தெடுங்கள். பரஸ்பர நிதிகளில் உங்கள் ரிஸ்க் தன்மைக்கு ஏற்றவாறு பல திட்டங்கள் உள்ளன.
- ஆனால், பங்குச்சந்தை அவ்வாறு கிடையாது, நீங்கள் தான் நீந்த வேண்டும். உங்களுக்கு நீச்சல் கற்று கொடுக்க வேண்டுமானால் ஒரு பயிற்சியாளர் தேவைப்படலாம். நீங்கள் மட்டுமே பங்குகளை ஆராய்ந்து கிடைக்கப்பெறும் லாப-நட்டத்தை ஏற்று கொண்டு நீண்டகாலத்தில் செல்வத்தை(Wealth Creation) ஏற்படுத்த முடியும்.
- பங்குகளில் முதலீடு செய்ய உள்ளோர், உபரி தொகையை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கி முதலீடு செய்வது கூடாது. அவ்வாறான சூழ்நிலை சந்தையில் ஏற்பட்டாலும், அப்போது வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்க முன்வராது. வங்கிகளே அதிகப்படியான பங்குகளை வாங்கி குவிக்கும்.
- பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தை வாரந்தோறும் அதிகப்படியான சரிவை ஏற்படுத்தும். உங்களுக்கு தேவையான உத்தி – சரியான பங்குகளை கண்டறிவது. இதற்கு அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) தான் பின்பற்ற வேண்டும். அங்கே டெக்னிக்கல்கள் வேலை செய்யாது. தினம் தினம் சந்தைக்கு எதிர்மறையான செய்திகள் வந்து சேரும். பெரிய முதலைகள் பங்குகளை விற்று தள்ளும். சில முதலைகள் குறிப்பிட்ட பங்குகளை கீழே இறங்க செய்து, அடிமட்ட விலையில் முதலீடு செய்யும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- இது போன்ற காலங்களில் உங்களுக்கான முதலீட்டு தொகையை சிறிய அளவிலாவது ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்களிடம் ரூ. 5000 அல்லது 15,000 அல்லது ரூ. 50,000 அல்லது 5 லட்சம் என ஏதாவது ஒரு தொகையை ரொக்கமாக வைத்திருங்கள். நீங்கள் அலசி ஆராய்ந்த பங்குகள் 10-20 சதவீதம் வீழ்ச்சியடைந்தால், சிறுக சிறுக வாங்குங்கள். மறுமுறை வீழ்ச்சியடையும் போது மீண்டும் வாங்குவதற்கான தொகையை கையிருப்பாக வைத்திருப்பது நன்று.
- நீங்கள் வாங்கும் பங்குகளின் குறைந்த விலை எது என்பதை யாராலும் சொல்ல முடியாது. எனவே ஒவ்வொரு வீழ்ச்சியையும் வாய்ப்பாக மாற்றி கொள்ளுங்கள். துவக்கநிலையில் சிறிய அளவில் பங்குகளை வாங்குவதும், இறக்கம் காண காண அதே முறையில் செய்வது தான் சாமர்த்தியம். ஒரே முழுங்காக முழுங்குகிறேன் என பெரிய மீனை விழுங்கி விடாதீர்கள்.
- உதாரணமாக உங்களிடம் ரூ. 50,000 என்ற உபரி தொகை இருந்தால் ஆரம்ப நிலையில் 10-20 சதவீத தொகையை முதலீடு செய்யுங்கள். பின்பு அடுத்த இறக்கத்தில் அதே முறையை கடைபிடியுங்கள். சந்தை ஏற்றம் கண்டால், கவலைப்படாதீர்கள். மேலே சென்று முதலீடு செய்ய முயற்சிக்காதீர்கள். விலை மலிவாக இருக்கிறது என அனைத்து பங்குகளையும் ஒரே மாதிரியாக புரிந்து கொள்ளாதீர்கள். தரமான நிறுவனத்தின் உண்மையான பங்கு விலை தான் நமக்கு இப்போது தேவை.
- நீங்கள் செய்யக்கூடிய முதலீடு அடுத்த 5 வருடங்களுக்கானது. அது உடனடியாக ஏற்றத்தை பெறாது. நாட்டின் வளர்ச்சி மேம்படும் நிலையில், தொழிலில் வளர்ச்சியும் கூடும். அப்போது உங்கள் பங்கின் விலையை காணுங்கள்.
சந்தை வீழ்ச்சி என்பது பொதுவாக தன்னை தானே சந்தை சரி செய்து கொள்வது தான். இந்த சூழ்நிலையில் தாக்குபிடிப்பவர்கள் காலத்தை வென்றுவிடுவார்கள். என்னிடம் பணம் இல்லை, நான் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள், இது அவசர காலம்(Emergency) என கருதி உங்கள் அனாவசிய செலவுகளை குறைத்து சந்தையில் முதலீடு செய்ய பணத்தை சேமியுங்கள். இதனையும் செய்ய முடியாதவர்கள், சந்தையின் போக்கை கவனியுங்கள். வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
நினைவில் கொள்ள வேண்டியவை:
- தரகு நிறுவனங்கள் அளிக்கும் பங்கு பரிந்துரைகளை(Trading Tips & Calls) பின்பற்றி முதலீடு செய்யாதீர்கள். மோசடி பேர்வழிகளும் இந்த சமயத்தில் உலா வருவார்கள். நிப்டி50 பங்குகள் பாதுகாப்பானவை என நினைத்து முதலீடு செய்ய வேண்டாம் – யெஸ் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் ஆகிய பங்குகளும் நிப்டி தான்.
- பொருளாதார மந்தநிலை என்று யார் சொன்னார்கள் என கேட்க வேண்டாம். யாரும் சொல்ல மாட்டார்கள், சில சமிக்ஞைகள் மட்டும் தான். நடைபெற்று முடிந்தவுடன் தான் அனைவரும் சொல்வார்கள். உங்களை பொறுத்தவரை இது தொடர்ச்சியான இறக்கம் மற்றும் வாய்ப்பு என எண்ணி கொள்ளுங்கள்.
- இது போன்ற சமயங்களில் சந்தை தினந்தோறும் இறக்கம் காணுமா என சந்தேகிக்க வேண்டாம். பொருளாதார மந்தநிலை காலங்களில், சில நாட்கள் சந்தை ஏற்றம் காணவும் செய்யும். அமெரிக்க சந்தை கடந்த ஒரு மாதத்தில் 17 சதவீதமும், இந்திய சந்தை நடப்பு வருடத்தில் 14 சதவீதமும் இறக்கம் கண்டுள்ளது.
- கடந்த 2008ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை 5 மாதங்கள் ஏற்றமும், 7 மாதங்கள் இறக்கமும் கண்டுள்ளது. நான்கு மாதங்கள் 10 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதிகபட்சமாக அக்டோபர் 2008 மாதத்தில் 28 சதவீதம். ஏற்றத்தில் ஒரு முறை கூட சந்தை பத்து சதவீதத்தை தாண்டவில்லை.
- நேர்மறையாக இருப்பது நன்று. அதனை விட எதிர்மறை நிகழ்வை புரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கையாக இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
Thanks sir
LikeLike