Stock Market Crash

உங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் உள்ளதா ? வாருங்கள் நண்பர்களே !

உங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் உள்ளதா ? வாருங்கள் நண்பர்களே !

Things to do when your Investment Portfolio is in Red 

மும்பை பங்குச்சந்தை நடப்பு வருடத்தில் மட்டும் 30 சதவீதத்தை இறக்கமாக கண்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 14 சதவீதமும், கடந்த மூன்று வருட சராசரி வருவாய் மூன்று சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது. நமது தளத்தில் கடந்த ஒரு வருடமாக உலக பொருளாதார மந்தநிலை காரணிகளை சொல்லி வருகிறோம். நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக ஏழு காலாண்டுகளாக சரிவை சந்தித்துள்ளது. இது அடுத்த சில காலாண்டுகள் தொடரும் என்பதே உண்மை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகம் முழுவதும் காணப்படும் வர்த்தக விநியோக சங்கிலி(Supply Chain) வெட்டப்பட்டுள்ளது. இது சரியாவதற்கான காலம் சில மாதங்கள் ஆகலாம். நடப்பு 2020ம் வருடம் பொருளாதார வீழ்ச்சிக்கான காலமாகவே நாம் எடுத்து கொள்ளலாம். இவற்றில் பயப்பட எந்த நிலையும் இல்லை. மீண்டு வருவதே நமக்கான அடுத்த இலக்கு. பங்குச்சந்தை தான் வீழ்ச்சியடைகிறது, எனக்கென்ன என சிலர் கேட்கலாம். உண்மையில் இங்கு பங்குச்சந்தைக்கு பிரச்சனை எதுவுமில்லை. வீழும் பங்குச்சந்தை எப்போதும் அசுரபலமாக மீண்டும் எழுந்து விடும். 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியிலும் இது தான் நடந்தது.

அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்கள் பொருளாதார ரீதியாக ஏற்படும் விஷயங்களை நாம் சமாளித்தாக வேண்டும். இங்கே குறிப்பிடுவது இன்னும் பல நாடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் சென்றடையவில்லை. துறைமுகங்களிலும், சாலைகளிலும் பல அத்தியாவசிய பொருட்கள் தேக்கமடைந்திருக்கலாம். கால தாமதம் தான் நமது தொழிலையும், நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் பாதிக்கும். நமது அன்றாட வாழ்க்கை மாறுபட்டு காணப்படும். வேலைவாய்ப்பின்மை விகிதம் குடும்ப பட்ஜெட்டிலும் துண்டு விழ செய்யும்.

முதலீடு என எடுத்து கொள்ளும் போது, பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் உள்ள உங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் உள்ளதா ? கவலையடைய வேண்டாம். சரியான நிகழ்வை தான் நீங்கள் சந்தித்து வருகிறீர்கள். உலக பொருளாதாரம் வீழ்ந்தால்(Recession), நம் முதலீடும் குறைய தானே செய்யும். பாதுகாப்பான வங்கி டெபாசிட் என அங்கே சென்றால், வங்கிகளில் ஏற்பட்ட சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் வங்கி வட்டி விகித குறைவு ஆகியவை சந்தையை விட பெரிய பிரச்னையாக உள்ளது.

வங்கிகளில் காணப்படும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம்(Interest Rates) குறைவாக இருப்பதும், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தாதும், பங்குச்சந்தையை காட்டிலும் மிக பெரிய ரிஸ்க் என்றே சொல்லலாம். குறுகிய காலத்தில் அவசர கால தேவைக்கு உங்கள் சேமிப்பு கணக்கில் வரவை வைத்து கொள்ளுங்கள். நீண்ட காலத்திற்கு பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளை தேர்ந்தெடுங்கள். சரி விஷயத்திற்கு வருவோம்…

உங்கள் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீடு சிவப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணம் பங்குச்சந்தையில் காணப்பட்ட வீழ்ச்சி தான். அதற்காக இப்போது அந்த முதலீடுகளை நஷ்டத்தில் வெளியே எடுத்து விடாதீர்கள். பின்பு, நீங்கள் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை தவற விடுகிறீர்கள்  என்று அர்த்தம். பங்குச்சந்தை வீழ்ச்சி இப்படியே செல்லாது. சில மாதங்கள் ஆகலாம், இந்த வருடம் முழுவதும் இப்படி இருக்கலாம். மீண்டு எழும், பல மடங்குகளில் – ஆம், நீங்கள் சந்தையை நகர்த்த வேண்டாம். இறக்கத்திற்கு காரணமான பண முதலைகள் மீண்டும் முதலீடு செய்வர். அவர்கள் தான் சந்தையை அடுத்த இடத்திற்கு மீட்டு செல்வர். உங்களது முதலீடு 5,000 ரூபாய் அல்லது 5 லட்சம் ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை. என்ன, ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளீர்களா ? அட, பண முதலைகள் டிரில்லியன் டாலர்களில் முதலீடுகளை வைத்துள்ளனர். அவர்கள் தான் சந்தை நகர்வை தீர்மானிப்பது.

சிவப்பு நிறத்தில் இருக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள்(பரிகாரங்கள்):

நான் எதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறீர்களா ? எனது முன்னோர் செய்த காரியத்தை நான் தான் ஏற்று கொள்ள வேண்டுமல்லவா. அதனை போல தான் முதலீடுகளிலும். நாம் செய்த சிறு சிறு முதலீட்டு தவறு தான் இவை. பரவாயில்லை, சரி செய்து கொள்ளலாம்.

முதலில் பங்குச்சந்தைக்கு(Equity Investors) வருவோம், அப்புறம் பரஸ்பர நிதிகள். பங்குச்சந்தையில் உள்ளவர்கள் நடப்பு காலத்தில் முடிந்தவரை தாங்கள் வாங்கிய பங்குகளில் நிதி நலன்களை(Financial Health) சரி செய்து கொள்வதற்கான அருமையான தருணம் இது. அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனங்களை மட்டும் உங்கள் முதலீட்டு போர்ட்போலியோ சாதனத்தில் வைத்திருப்பது நன்று. இங்கே நீங்கள் இதுவரை வாங்கிய பங்குகளின் விலை முக்கியமல்ல. நிறுவனத்தின் நிர்வாகமும், நிதி அறிக்கையும் தான்.

சரியான நிர்வாகம் இல்லாத மற்றும் திவால் ஆகப்போகும் நிறுவனங்களின் பங்குகளை வெளியேற்றுங்கள். காளை சந்தையில் எந்த பங்குகளும் எவெரெஸ்ட் சிகரம் போன்று விலையேறும். ஆனால், கரடி சந்தை தான் உண்மையான நிலையை விவரிக்கும். நீங்கள் கஷ்டப்படும் போது உங்கள் உறவு மற்றும் நட்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் – இது சந்தைக்கும் பொருந்தும்.

நல்ல நிர்வாகம் மற்றும் நிதி அறிக்கையை கொண்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளை அதன் உண்மையான விலையில் வாங்குங்கள். மலிவான விலை கண்டிப்பாக கிடைக்கும். அதற்காக ஊடகங்களில் வரும் விளம்பரத்தை பார்த்து பங்குகளை வாங்கிய பின்பு மாட்டி கொள்ள வேண்டாம். அடிப்படை பகுப்பாய்வுக்கான இலவச வகுப்புக்களை நம் தளத்தில் கொடுத்துள்ளோம். படித்து பயன் பெறுங்கள், முடிந்தால் சந்தேகம் கேளுங்கள்.

Fundamental Analysis – Share Market Free Course Registration

உங்களுக்கு நேரம் இல்லையெனில்,  சரியான நிதி ஆலோசகரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான கட்டணத்தை வழங்கி முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.

முடிந்தவரை இப்போதைய நிலையில் P/E மற்றும் P/B விகிதங்களை  தனிப்பட்ட பங்குகளில் தவிருங்கள். இந்த விகிதங்கள் அடிப்படை முறை மட்டுமே, அவை நல்ல நிறுவனங்களை  பிரதிபலிக்காது. ஏற்கனவே நீங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் நன்றாக உள்ளது, ஆனால் விலை மட்டும் பெருத்த சரிவை சந்தித்துள்ளதா ?  கவலை வேண்டாம், இப்போது மலிவான விலையில் சிறிய அளவில் பங்குகளை வாங்குங்கள். மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்ப்பது நலம். ஒவ்வொரு 10-20 % வீழ்ச்சியில் பங்குகளை வாங்க தயாராகுங்கள். அதற்காக காலம் தாழ்த்தியும் முதலீடு செய்ய வேண்டாம். இங்கே யாருக்கும் தெரியாது, குறைந்தபட்ச விலை இது தான் என்று. நீங்கள் செய்துள்ள முதலீட்டு அளவை பார்த்து சராசரி செய்து கொள்ளுங்கள்.

புதிய பங்குகளில் வாய்ப்பு கிடைக்கிறது என்றால், துவக்கத்தில் சிறிய அளவிலான பங்குகளை வாங்குங்கள். பின்பு அதன் விலை தன்மையை கண்டறிந்து கணிசமான தொகையை முதலீடு செய்யுங்கள். உங்களால் நம்ப முடியாவிட்டாலும் பரவாயில்லை, பங்குச்சந்தையின் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் செய்யப்படும் முதலீடு, அதற்கடுத்த 5 வருடங்களில் 10-15 மடங்குகளில் வருவாயை அளித்துள்ளது. இதற்கு மேல் வேறொரு நேர்மையான வாய்ப்பு கிட்டுமா என தெரியவில்லை.

நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் காண்பித்தாலும், நீங்கள் அதனை விற்று விட்டால் மட்டுமே, அது உங்களுக்கான நட்டம். இல்லையென்றால் அது சில மாதங்களுக்கு பிறகு பசுமையான பச்சை நிறத்தில் இருக்கும்.

பரஸ்பர நிதி முதலீட்டாளருக்கு(Mutual Funds Investors):

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 • உங்களை தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். பங்குச்சந்தையில் நேரிடையாக உள்ளவர்களுக்கு ரிஸ்க் தன்மை பற்றி ஓரளவுக்கு தெரியும். ஆனால், பரஸ்பர நிதியில் உள்ளவர்களுக்கு ?  நண்பர் சொன்னார், ஏஜென்ட் சொன்னார், நிதி ஆலோசகர் பரிந்துரைத்தார் மற்றும் விளம்பரம் (மியூச்சுவல் பண்ட் சரியானது !) பார்த்து முதலீடு செய்தேன் என சொல்பவரா நீங்கள் ?
 • இந்த உலகில் முதலீடு என வரும் போது, எந்தவொரு முதலீட்டிற்கும் ரிஸ்க் தன்மை என்பது இல்லாமல் இல்லை. வங்கிகளிலும் வட்டி விகித மாற்றங்கள் ரிஸ்க் தன்மை கொண்டவை தான். குறைவான வட்டி வருவாய் இருப்பின், நீண்ட காலத்தில் உங்களால் பணவீக்கத்தை தாண்டிய நிதி இலக்குகளை அடைய முடியாது.
 • நீங்கள் ஏற்கனவே செய்துள்ள முதலீடு சிவப்பு நிறத்தில் இருந்தால், முதலில் நீங்கள் செய்துள்ள முதலீட்டு திட்டத்தை பற்றி யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது பங்கு சார்ந்த திட்டமாக இருக்கும் பட்சத்தில், தற்போதைய சூழ்நிலையில் இறங்க தான் செய்யும். முதலீட்டை எடுத்து விடாதீர்கள், அது தான் பெருத்த நஷ்டம்.
 • இதனை சமாளிக்க நீங்கள் இரு விஷயங்களை செய்தாக வேண்டும் – முதலில் நீங்கள் மாத எஸ்.ஐ.பி.(SIP Investing) முறையில் முதலீடு செய்து வந்தால், உங்கள் எஸ்.ஐ.பி. தொகையை அதிகரித்து அடுத்த ஒரு வருடத்திற்கு முதலீடு செய்யுங்கள். உதாரணமாக உங்களது மாத எஸ்.ஐ.பி. ரூ. 10,000 எனில் இதனை அடுத்த ஒரு வருடத்திற்கு ரூ. 15,000 அல்லது ரூ. 20,000 என மாற்றி கொள்ளுங்கள்.
 • கையில் ரொக்கமாக அதிக தொகையை கொண்டிருப்பவர்கள், சந்தையின் ஒவ்வொரு சரிவிலும் ஒரு முறை முதலீட்டை(Lumpsum) செய்யுங்கள் அல்லது வாராந்திர எஸ்.ஐ.பி.(Weekly SIP) முறையை தேர்ந்தெடுங்கள். தற்போதைய உங்களது பழைய முதலீட்டை எக்காரணத்திற்காகவும் கடன் பத்திரங்களுக்கு(Debt Funds) மாற்றி கொள்ள வேண்டாம் (அவசர காலத்திற்கு தவிர்த்து). அதற்கான உத்தி சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது.
 • உங்களுடைய வேலை அடுத்த ஒரு வருடத்திற்கு பரஸ்பர நிதிகளில் முதலீட்டை அதிகப்படுத்தி கொள்வது தான். உங்கள் தேவை குறுகிய காலம் எனில், அதற்கான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பரஸ்பர நிதிகளில் அடுத்த ஒரு வருடத்தில் கோடிகளை அள்ளுவேன் என தவறான முதலீட்டு உத்தியை பயன்படுத்த வேண்டாம்.
 • உங்களது முதலீட்டு இலக்கு நீண்ட காலமாக இருப்பது நலம். தற்போது சந்தையில் அமைந்திருக்கும் வாய்ப்பு, அடுத்து எந்த காலத்தில் கிடைக்கப்பெறும் என யாருக்கும் தெரியாது. இந்த சமயத்தில் செய்யப்படும் முதலீடு அதிக யூனிட்களை கைப்பற்றும். இதனால் பிற்காலத்தில் உங்கள் நிதி இலக்கிற்கான தொகையும் எளிமையாகும்.

தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு நீர்க்குமிழி(Bubble) உடைந்திருப்பது தான். இது 2008ம் ஆண்டிலும் நடைபெற்றது. அப்போது வேறொரு காரணம், இப்போது கொரோனா வைரஸ் மீது பழியை போட்டு விட்டார்கள். எது நடந்தாலும், இந்த நிலை அடுத்த ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு செல்லும்.

எச்சரிக்கை:  பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர் (அஞ்சலக மற்றும் வங்கி டெபாசிட்தாரர்களுக்கும்) கவனத்திற்கு, கீழே சொல்லப்படும் நான்கு விஷயங்களை செய்து விட்டு முதலீடு செய்ய புறப்படுங்கள். இல்லையெனில், நெஞ்சு வலியை வைத்து கொண்டு, பங்குச்சந்தைக்கு வர வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்ளப்படுகிறது.

எந்தவொரு முதலீட்டை மேற்கொள்ளும் முன்(Precaution):
 • டேர்ம் பாலிசியை(காப்பீடு) பெறுவது அவசியம்
 • தனிநபர் விபத்து காப்பீடு இன்றையளவில் கட்டாயம்.
 • குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு
 • அவசர கால தேவைக்கான நிதி

Term Insurance Plan | Personal Accident Insurance | Mediclaim Policy | Emergency Fund

வாருங்கள் நண்பர்களே, சிவப்பு நிறத்தை பச்சையாக்குவோம்….

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s