All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

Asset Class returns Since 1994 in India – Investment Returns Year on Year (Exclusive article)

பொதுவாக பங்குச்சந்தை முதலீடு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. ஆம், பங்குச்சந்தையில் முதலீடு செய்கையில் அதிக ஏற்ற-இறக்கத்தை நாம் சந்தித்தாக வேண்டும். ஆனால், பங்குச்சந்தையை தவிர்த்து மற்ற முதலீடுகள் உண்மையில் அபாயமில்லையா(ரிஸ்க் தன்மை) ? இதனை நம்மில் ஒவ்வொருவரும் சிந்தனையாக மாற்றியிருந்தால், அதற்கான விழிப்புணர்வு(Awareness) நமக்கு கிடைத்திருக்கும்.

உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பங்கு இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலெல்லாம் ஏற்பட்ட நிதிச்சிக்கல்கள் நம் நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் களைந்து, 1992ம் ஆண்டுக்குப் பிறகு அதனைக் கடந்து விட்டோம். உலகின் எந்தவொரு வளர்ந்த நாட்டின் பொருளாதாரத்திலும் தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு இருப்பதும், ஏழை-பணக்காரர்களுக்கான வருமான இடைவெளி அதிகமாக இருப்பதும் உண்மை தான். ஆனால் அதற்காக நாம் நிதி சார்ந்த கல்வியை கற்காமலும், விழிப்புணர்வை பெறுவதில் தயக்கம் காட்டுவதும் சரியா ?

இவ்வுலகில் ரிஸ்க் இல்லாமல் ஒரு நிகழ்வு இருக்கிறதா என்றால், அப்படியொன்றுமில்லை. சாலையை கடந்தாலும் அபாயம் தான், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரிஸ்க் தான். வங்கி டெபாசிட் பாதுகாப்பானது என நாம் எண்ணினால் மத்திய வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை பற்றியும்(Interest rate Risk), வங்கிகளுக்கான DICGC சார்ந்த விதிகளையும் படிக்க வேண்டும். தங்கத்தின் மீதான முதலீடு ரிஸ்க் இல்லையென நினைத்தால், தங்கத்தின் சந்தை எங்கே இருந்து இயக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் அது எந்த நாணயத்தால்(Currency) வர்த்தகமாகிறது என்ற விழிப்புணர்வை பெற வேண்டும்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறைப் பற்றி நாம் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை. எல்லா குடும்பங்களுக்கும் ஒரு வீடு தேவை என்ற போதிலும், அவற்றை நாம் முதலீட்டுக் கோணத்தில் அணுகும் போது, அவற்றில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க் நமக்கு தெரிவதில்லை. வீட்டுமனைத் துறையில் நாம் முதலீடு செய்யும் முன் நீர்மை நிறை(Liquidity), வரி விதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை(Transparency) பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அஞ்சலகங்கள், அரசு கடன் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதி என காணுகையில், இது ஒரு நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தைப் பொறுத்துத் தான் அமையும். கிரீஸ், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான், ரசியா, இன்னும் எண்ணற்ற நாடுகளில் வெவ்வேறு காலத்தில் நடந்த பொருளாதார மந்தம் நம் நாட்டில் இனி ஏற்படாது என நாம் எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். 

பொதுவாக ஒரு சாரார் பங்குச்சந்தை முதலீடு ஆபத்தானது, பணக்காரர்களுக்கானது, அது ஒரு சூதாட்டம் என மொத்தமாக ஒதுங்குவதும், மற்றொரு புறம் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக போன்சி(Ponzi Scam) மோசடித் திட்டங்களில் மொத்த பணத்தையும் இழந்து விட்டு நிற்பதும் அடிக்கடி நடந்து தான் வருகிறது. இது ஒரு புறமென்றால், இந்திய பண(Money Market) மற்றும் முதலீட்டுச் சந்தையில்(Capital Market) பெரிதாக வாய்ப்பொன்றுமில்லை என நினைத்துக் கொண்டு வெளிநாட்டுப் பங்குகளை வாங்குகிறேன், கிரிப்டோவில் விளையாடுகிறேன், ரம்மியில் கோடீஸ்வரராகுகிறேன், பங்குச்சந்தை மற்றும் போரெக்ஸ் சந்தையில் வர்த்தகம் மற்றும் இந்த செயலியில்(Mobile Apps) பணத்தை போட்டு விட்டு சும்மா இருந்தால் பணக்காரராகி விடலாம் என சிக்குகின்றனர்.

சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பதும், சந்தையைத் தாண்டி வேறுமொரு புதிய முதலீட்டு வாய்ப்பு இருப்பதாக கருதி, தெரியாத, ‘கேக்குறான் மேக்குறான்’ திட்டத்தில் உழைத்த பணத்தை தொலைப்பது – இரண்டும் ஒன்று தான். மருத்துவத் துறையில் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக, பொறியியல் துறையில் ஒரு சிறந்த என்ஜினீயராக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக வருவதற்கு நாம் நமது பள்ளிக்காலத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ அதற்கான விதையை நட்டிருக்க வேண்டும். அதனைத் தான் நாம் அனுபவம் பேசுகிறது என சொல்கிறோம். ஆனால், பங்குச்சந்தையிலோ ஒரு வாரம் பணம் பார்த்து விட்டால் போதும், மிகப் பெரிய வல்லுனராக நம்மை நாமே நினைத்துக் கொண்டு, சந்தையின் அடிப்டைக் கல்வியை கற்காமல், அதன் கோணத்தை அறியாமல் சூதாடி விட்டு, பின்பு பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் எனவும், இது பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்கக் கூடிய இடமென்றும், மேலும் இது நமக்கு சரிப்பட்டு வராது என நாம் புறந்தள்ளுகிறோம்.

டாட்டாவும், பிர்லாவும்:

பங்குச்சந்தையில் அவ்வளவு எளிதாக சம்பாதித்து பணக்காரராக விட முடியுமென்றால், ஏன் டாட்டா-பிர்லாவும், அம்பானி-அதானியும் பல துறைகளில் தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இருக்கும் மூலதனத்தை கொண்டே நித்தமும் ஆயிரம் கோடிகளை பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபமாக ஈட்டலாமே ! உண்மையில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும், வழங்கும் சேவைகளையும் நாம் பயன்படுவதால் மட்டுமே அவர்கள் தங்களது தொழிலில் பணக்காரர்களாக உள்ளனர். இதனைத் தான் நாமும் செய்ய வேண்டும் – ஒரு நிறுவனத்தின் அல்லது தொழிலின் உரிமையாளர் மற்றும் முதலீட்டாளரை போல !

கடந்த கால வருவாய் விகிதங்கள்:

சரி, இந்தியப் பங்குச்சந்தை முதலீடு கடந்த 30 ஆண்டுகளில் அப்படி என்ன செய்து விட்டது. மும்பையின் தலால் தெருவை அடையாளமாக கொண்ட மும்பை பங்குச்சந்தை என்னவோ 1875ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த தேசிய பங்குச்சந்தையும் 1992ம் ஆண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக, அதாவது 1994ம் ஆண்டு முதல் நாம் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்து வந்திருந்தால், நடப்பாண்டின் செப்டம்பர் மாத முடிவில் சென்செக்ஸ் குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 14.30 சதவீதமும், நிப்டி-500 குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 15.70 சதவீதமும் ஒரு முதலீட்டாளருக்கு வருவாயாக கிடைத்திருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 30 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்திருந்தால்(மொத்தம் 15 லட்சம் ரூபாய்), சென்செக்ஸ் குறியீட்டின் மூலம் இன்று உங்களது ஒட்டுமொத்த முதலீட்டு வருவாய் 2.41 கோடி ரூபாயாகவும், நிப்டி-500 குறியீட்டின் மூலம் அது 2.79 கோடி ரூபாயாகவும் வளர்ந்து நிற்கும். இங்கே அரசியல் சார்ந்த ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால் சந்தையில் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, முதலீடு செய்த பின் பொறுமையே உங்களது வருவாயை மிகப்பெரிய அளவில் மாற்றும்.

1994ம் ஆண்டு முடிவில் நாட்டின் பணவீக்கம் 9.50 சதவீதமாக இருந்த நிலையில், அந்த வருடத்தின் முடிவில் பொது வருங்கால வைப்பு நிதி அளித்துள்ள வருவாய் சுமார் 12 சதவீதமாகும். இது போன்ற ஒரு வருவாய் இன்று இருந்திருந்தால், நீங்கள் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அளவில் பங்குச்சந்தையில் ஆண்டுக்கு சராசரியாக 12 – 15% வருவாய் என  நீண்டகாலத்தில் கிடைத்தால், அவர் தான் சந்தையில் சாதனையாளர். சொல்லப்பட்ட 1994ம் வருடம் வங்கியில் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 10 சதவீதமாகவும், சென்செக்ஸ் குறியீடு 19.60 சதவீத வருவாயையும் வழங்கியுள்ளது. அதே வேளையில் தங்கத்தின் தங்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வருவாயையே அந்த வருடத்தில் கொடுத்துள்ளது.

தங்கத்தின் முதலீட்டு வருவாய்:

கடந்த 30 வருடங்களில் தங்கத்தின் மீதான முதலீட்டு வருவாய் ஆறு வருடங்கள், 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது. இதன் மோசமான காலமாக 1997ம் ஆண்டில் தங்கம் (-20.60) சதவீதமும், 2014, 2015ம் ஆண்டு முறையே (-10.80) சதவீதம் மற்றும் (-5.50) சதவீதம் என்ற அளவில் இறக்கத்தை கண்டுள்ளது. அதாவது 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், ஈட்டிய வருவாய் வெறும் 1.84 சதவீதமே. அதாவது சொல்லப்பட்ட வருடத்தில் நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) சராசரியாக 6.27 சதவீதமாகும். 

 தங்கத்தின் பொற்காலமாக 2005ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை(17.70%, 20.40%, 12.90%, 25.30%, 32.80%, 19.50%, 36.90%) இருந்துள்ளது. குறிப்பாக 2007-08ம் ஆண்டு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் உயர்ந்து வந்துள்ளது. 2011ம் ஆண்டு மட்டும் தங்கத்தின் மீதான முதலீடு 36.90 சதவீத வருவாயை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 30 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான வருவாய் சராசரியாக 11.10 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு:

இந்தியப் பங்குச்சந்தையை பொறுத்தவரை சென்செக்ஸ் குறியீடு கடந்த 30 வருடங்களில் 12 வருடங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை அளித்துள்ளது. அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 82 சதவீதத்தை வழங்கியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டான 2008ல் வரலாற்றில் மோசமான வீழ்ச்சியை சந்தித்த தருணம், சுமார் (-51.40) சதவீத வீழ்ச்சி. 30 வருடங்களில் 8 முறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது போல, நிப்டி-500 குறியீட்டை எடுத்துக் கொண்டால் அதுவும் 8 ஆண்டுகள் இறக்கத்தை சந்தித்துள்ளது. இந்த குறியீடு 1998ம் ஆண்டின் முடிவில் 97.20 சதவீதம் மற்றும் 2009ம் ஆண்டில் 92.90 சதவீத வருவாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிப்டி-500 குறியீடு ஒன்பது ஆண்டுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தை பெற்றுள்ளது. 

வெள்ளியில் வாய்ப்பு:

வெள்ளியில் முதலீட்டை மேற்கொள்ளும் போது, பெரும்பாலும் தங்கத்திற்கு எதிர்மாறாகத் தான் இருந்துள்ளது. வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறையில் காணப்படுவதால், பங்குச்சந்தையை போலவே அதிகமான வருவாயை வெள்ளி முதலீடு வழங்கியுள்ளது. இருப்பினும் முப்பது வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 9.70 சதவீத அளவில் உள்ளது. 

வெள்ளி அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 63.50 சதவீதமும் மற்றும் 2010ம் ஆண்டில் 59.90 சதவீதமும் தந்துள்ளது. மோசமான வீழ்ச்சியாக 2013ம் ஆண்டில் (-26.60) சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் ஆறு முறை வெள்ளி முதலீட்டின் மீதான வருவாய் 20 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. பொதுவாக நம்மில் பலர் தங்கத்தின் மீது கொண்டுள்ள காதலை, வெள்ளிக்கு கொடுக்க மறுக்கின்றனர், அது ஏனோ ! தங்கத்தினை காட்டிலும், வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறைக்கு தேவை. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன பேட்டரி தயாரிப்பு, சோலார் பேனல், மருத்துவம், மின்னணுப் பொருட்கள், ரசாயனம், நிழற் படக்கலை(Photography), நீர் சுத்திகரிப்பு, அச்சிடுதல் என பல துறைகளுக்கு வெள்ளியின் தேவை உள்ளது. வெள்ளியை அப்படியே வாங்காவிட்டாலும், முதலீட்டு நோக்கத்தில் சில்வர் இ.டி.எப்.(Silver ETF) அல்லது சில்வர் மியூச்சுவல் பண்டுகள்(Silver Funds) முறையில் வாங்கலாம்.

Asset class returns in India - 30 Yrs Data Since 1994

உங்களின் நிரந்தர பகைவன்:

நாட்டின் பணவீக்கத்தை பொறுத்தவரை 1998 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது. குறைந்தபட்ச விலைவாசியாக கடந்த 1999ம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த வருடத்தில் தான் சென்செக்ஸ் மற்றும் நிப்டி-500 குறியீடுகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் பணவீக்க விகிதம் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக காணப்பட்டாலும், உணவுப்பொருட்களின் விலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் நாட்டின் பணவீக்க விகிதம் சராசரியாக 6 முதல் 7 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

ரியல் எஸ்டேட் முதலீட்டு வருவாய்:

ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனைத் துறையில் முதலீடு, கடந்த 20 வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 8.40 சதவீத வளர்ச்சியை அளித்துள்ளது. வீட்டுமனைத் துறைக்கான முதலீட்டு வருவாய் தரவுகள் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களை கொண்டு கணக்கிடப்பட்டவை. கொல்கத்தா போன்ற நகரங்களில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வருவாய் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ரியல் எஸ்டேட் துறைக்கு மோசமான காலக்கட்டங்களாக 2008ம் ஆண்டும், 2020ம் ஆண்டும் இருந்துள்ளது. 

ரியல் எஸ்டேட் துறையில் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் நிலம், வீடு வாங்கலாம் என்ற போதிலும் ஒரு முதலீட்டுச் சாதனமாக அணுகும் போது, அத்துறையில் ஒழுங்குமுறை மற்றும் கொள்கைகள், விலை நிர்ணயம், தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவை குறைகளாகவும், அவற்றை நிர்வகிப்பது சவால்களாகவும் இருந்து வந்தது (கணக்கில் காட்டப்படாத பணமும், வரி ஏய்ப்பும் அப்புறம்). இதன் காரணமாகவே பெரிய முதலீட்டாளர்களும், பெரு நிறுவனங்களும் REIT மூலம் முதலீட்டை மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இன்னும் ரெய்ட் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக பரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கு(Retail Investors) கட்டிடத்துடன் கூடிய முதலீட்டை காட்டிலும் பெரும்பாலும் மனை(நிலம்) தான் பல மடங்கு வருவாயை நீண்டகாலத்தில் தந்துள்ளது. வீட்டு வாடகை மூலம் கிடைக்கப்பெறுகிற வருவாய், வங்கி வட்டி விகிதத்தை காட்டிலும் குறைவாக காணப்படுவதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகினறனர். இதன் காரணமாகத் தான் வீட்டு கட்டிடம் தேய்மானமாகவும், நிலம் வருவாய் அளிக்கும் வாய்ப்பாகவும் சொத்து மதிப்பீட்டு அளவில் பார்க்கப்படுகிறது(வணிகக் கட்டிடங்களுக்கு இது விதிவிலக்கு).

வங்கியில் உங்கள் பணம்:

வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம், கடந்த 30 வருடங்களில் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. 1994ம் ஆண்டில் 10 சதவீதமாக இருந்த நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக 1996ம் ஆண்டு, இது 12 சதவீதமாக இருந்துள்ளது. அப்போதைய நாட்டின் பணவீக்கமும் 9.50 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. பின்னர் 2004ம் ஆண்டு வாக்கில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 5.40 சதவீதமாக இருந்துள்ளது(பணவீக்கம் 3.80%). 2009ம் ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 15 சதவீதமாக உயர்ந்த நிலையில், அப்போதைய வட்டி விகிதம் 9.30 சதவீதம். பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் 8.80 சதவீதமாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் இருந்த நிலையில், அப்போதைய பணவீக்க விகிதம் 11.20%.

நடப்பில் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் 7.5 சதவீதத்திற்கும் குறைவே. அதே போன்று நாட்டின் பணவீக்கமும் தற்போது 6 சதவீதத்திற்குள் இருந்து வருகிறது. பொதுவாக அரசின் கடன் வாங்கும் கொள்கைகள் மற்றும் விலைவாசியை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் மாறுபடும். கடந்த சில வருடங்களாக அன்னிய முதலீடு அதிகரித்து வரும் நிலையில், வங்கி கொள்கைகள் மூலம் அரசின் கடன் வாங்கும் தன்மையும் குறைந்து வருகிறது. ஜப்பானும், அமெரிக்காவும் ஒரு சதவீதத்திற்கும், இரண்டு சதவீத வருவாய்க்கும் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கும் போது, அரசு ஏன் மக்களிடம் வங்கி மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்கப் போகிறது ?

ஓய்வுக்கால வைப்பு நிதித்திட்டம்:

பொது வருங்கால வைப்பு நிதியை(Public Provident Fund – PPF) பொறுத்தவரை, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை நிலையாக 12 சதவீத வட்டி வருவாய் கிடைத்த நிலையில் 2003ம் ஆண்டுக்கு பிறகு 8 சதவீதத்திற்கு கீழ் சரிந்தது. நடப்பில் 7.5 சதவீதத்திற்கும் குறைவாகவே வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கப்பெறுகிறது. எனினும் இது போன்ற திட்டங்கள், பெரும்பாலும் ஓய்வூதியக் காலத்திற்கு தேவையான தொகையாகவே இருக்கும். அப்படியிருக்கும் பி.எப். திட்டத்தை போல என்.பி.எஸ்.(NPS), ஓய்வுக்கால மியூச்சுவல் பண்டு(Retirement Funds) திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வரிச் சேமிப்பு மட்டுமில்லாமல் ஓய்வுக்காலத்திற்கு தேவையான கார்பஸ் தொகையையும் சற்று அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் விலைவாசிக்கு ஏற்றாற் போல ஓய்வூதியமும் கிடைக்கும்.

மேலே சொன்ன பல்வகையான முதலீட்டுச் சாதனங்களை காணும் போது, பங்குச்சந்தை முதலீட்டின் மூலமான வருவாய் முதலிடத்தையும், அதற்கடுத்தாற் போல் இரண்டாமிடத்தில் தங்கமும் உள்ளது கவனிக்கத்தக்கது. வெள்ளி மற்றும் ரியல் எஸ்டேட் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 1994ம் ஆண்டு முதல் வருடந்தோறும் 50,000 ரூபாயை இன்று வரை முதலீடாக மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு பங்கு முதலீட்டின் மூலம் 15 மடங்குகளிலும், தங்கத்தின் மூலம் 8 மடங்குகளிலும், வெள்ளியின் மூலம் 6 மடங்குகளிலும் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் 4.5 மடங்குகளிலும் வருவாய் கிடைத்திருக்கும். 

நீங்கள் செய்யவில்லையென்றால், வேறொருவர்…

என்ன தான் நாம் நம் பணத்தை ஆயுள் காப்பீட்டிலும்(Insurance), வங்கி டெபாசிட்டிலும் பாதுகாப்புக் கருதி செய்தாலும், மீண்டும் அந்த பணம் அதிக வருமானமீட்டும் பங்குகளைத் தான் தேடிச் செல்லும். ஆனால் நமக்குக் கிடைப்பதோ பாதுகாப்பான(நம்பிக்கையில் மட்டுமே) சொற்ப வருமானமே.  இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பற்றி சொல்லலாம். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 52 லட்சம் கோடி ரூபாய். எல்.ஐ.சி. நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாத பெரு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இல்லை என சொல்லலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகை பங்குச்சந்தைக்கு, ஈட்டும் அபரிதமான லாபமோ இந்நிறுவனத்திற்கு. முடிவில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான காப்பீடும் சிறு போனஸ் தொகையும். 

உங்களால் பங்குச்சந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். இல்லையெனில் தகுந்த ஆலோசகரின் முன்னிலையில் அல்லது பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் சந்தை அபாயத்தையும், உங்களது பயத்தையும் குறைக்கலாம். ஆனால் ரிஸ்க் என்பதை நாம் முழுவதும் தவிர்க்க முடியாது. இன்று பங்குச்சந்தை ரிஸ்க்கை பரவலாக்க மற்றும் நல்ல வருவாய் ஈட்ட இண்டெக்ஸ் பண்டுகளும்(Index Funds) உள்ளன. வெறுமென பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த வட்டி வருவாய், பணவீக்க விகிதம், இலக்கிற்கான தொகையை அடைய முடியாமல் போவதற்கு சற்று ரிஸ்க் எடுத்துத் தான் பார்க்கலாமே(அறிவார்ந்த – Calculated Risk) ! 

“எண்ணற்ற வழியில் எனக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது, நேர்மையாக அரசுக்கு வரி செலுத்தி அதற்கான வரித்தாக்கலும் செய்து வருகிறேன், தலைமுறை கடந்த சொத்துக்களும் எனக்கு இருக்கிறதென்றால்” நீங்கள் பணவீக்கத்தையும், பங்குச்சந்தை வருவாயைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக பங்குச்சந்தையில் உங்களது நிறுவனத்தை பட்டியலிட முனையலாம். “ மாதந்தோறும் போதுமான ஓய்வூதியத் தொகையை பெற்று நிம்மதியாக உள்ளேன். யாருக்காகவும் நான் சேமிக்க வேண்டிய அவசியமில்லை, என்னை நம்பி யாரும் நிதி சார்ந்து இல்லை ” என்றால் நீங்கள் மேலே சொன்ன முதலீட்டு வருவாயைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை(பணவீக்கத்தை கவனத்தில் கொள்க).

“ நீங்கள் கற்றுக் கொள்ளா விட்டால், விழிப்புணர்வை பெறா விட்டால் உங்கள் பணத்தைக் கொண்டு மற்றொருவர் தனது அறிவின் மூலம் பத்தும் செய்வார் “. – பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதன் விதி இது தான் !

தரவுப்பட பகிர்வுக்கு நன்றி(Data Table Courtesy): செல்வி. வித்யாஸ்ரீ – வாடிக்கையாளர் சேவை மேலாளர், (ஆதித்யா பிர்லா சன்லைப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்(ABSL AMC))

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

IPO(Initial Public Offer) Performance in the Indian Stock Market Since 2014

 

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில், டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையும், பங்குச்சந்தையில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களின் வரவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களாக பங்குச்சந்தையில் முதன்மைச் சந்தையான ஐ.பி.ஓ. வெளியீட்டில் ஆர்வம் காட்டும் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. இதற்கு சந்தை பெரிய அளவிலான இறக்கத்தை காணாமல் இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது.

நாட்டின் பங்குச்சந்தையில் பிரதான சந்தைகளாக மும்பை பங்குச்சந்தையும்(BSE), தேசிய பங்குச்சந்தையும்(NSE) உள்ளது. 1875ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தையில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுவெளியில் பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சந்தையின் மதிப்பு  சுமார் 5.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் 467 லட்சம் கோடி). 1992ம் ஆண்டில் துவங்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 463 லட்சம் கோடி(5.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்).

தேசிய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக நிப்டி50ம், மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக சென்செக்ஸ் உள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பட்டியலிட எஸ்.எம்.இ.(SME IPO) சந்தைகளும் கவனிக்கத்தக்கது. 

பொதுவாக ஐ.பி.ஓ.(Initial Public Offering) எனப்படும் முதன்மைச் சந்தையில் பட்டியலிட உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலைச் சந்தையில்(Secondary Market) தான் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது என முழு வணிகமும் நடைபெறும். 

ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்து லாபமீட்டலாமா ?

நடப்பாண்டில் இதுவரை 252 நிறுவனங்கள்(எஸ்.எம்.இ. உட்பட) இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ. முதலீட்டின் மூலம் திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ.70,667 கோடி. இதுவே பத்து வருடத்திற்கு முன்பு, அதாவது 2014ம் ஆண்டில் காணும் போது, 44 நிறுவனங்கள் சேர்த்து ரூ.1,494 கோடி முதலீடுகள் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

IPO Performance in India Since 2012 - 2024-sep

2012ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் அதிகபட்சமாக ஏற்றம் பெற்ற காலம், இந்த 2024ம் வருடம் தான். பட்டியலிடப்பட்ட நாளில் சராசரியாக சுமார் 47 சதவீத விலையேற்றத்தை பங்கு விலை பெற்றுள்ளது. 2019ம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களை தற்போது வரை வைத்திருந்தால், இது சராசரியாக 376 சதவீத வளர்ச்சியை தந்திருக்கும். எனினும், குறிப்பிட்ட பங்கின் விலையில் கிடைத்த வளர்ச்சியை இது சுட்டிக்காட்டவில்லை. 

கடந்த பத்து வருட காலத்தில் ஒரே ஆண்டில் அதிகபட்ச ஐ.பி.ஓ. நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதும் இதுவே முதன்முறை(2024ம் ஆண்டு). நடப்பாண்டு இன்னும் முடிவடையாத நிலையில், இதுவரை வெளியிடப்பட்ட 252 நிறுவனப் பங்குகளில் 229 நிறுவனப் பங்குகள், சந்தையில் வெளியிடப்பட்ட நாளன்று ஏற்றத்தில் துவங்கியுள்ளது. சொல்லப்பட்ட 252 நிறுவனங்கள் 70,667 கோடி ரூபாயை முதலீடாக திரட்டிய நிலையில், தற்போது அதன் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ.4 லட்சம் கோடி.

Mainboard IPOs in India Since 2007

 கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட சாக்சாப்ட் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட சாக்சாப்ட் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Saksoft Limited: Saksoft Group – Fundamental Analysis – Stocks

கடந்த 1931ம் ஆண்டு நாட்டின் தலைநகரான தில்லியில் (அட, 1911ம் ஆண்டு வரை நம்ம கல்கத்தா நகரம் தாங்க இந்தியாவின் தலைநகரம் !) பிறந்தவர் தான் திரு. அவ்தார் கிருஷ்ணா. இந்தியாவில் இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்த இவர், ஐக்கிய ராச்சியத்திற்கு(United Kingdom) சென்று உலோக வார்ப்பு சார்ந்த துறையில் தனது பயிற்சியை முடித்தார். பின்னர் இந்தியாவிற்கு திரும்பிய இவர், துர்காபூர் எஃகு ஆலை அமைப்பதற்கான குழுவில் இடம் பெற்றார்.

எஃகு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நாம் தொழில்முனைவை நோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கியது தான் சாக்சாப்ட் குழுமத்தின் முதல் படி. 1962ம் ஆண்டு வாக்கில் சாக் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனது நிறுவனத்தை ஏற்படுத்தி, ஜெர்மனியின் ஃப்ரைட் க்ரூப்ஸ் உடன் இணைந்து கார்பைடு வெட்டும் கருவிகள் மற்றும் உலோகத்தை உருவாக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டார். பின்னர் இந்த துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் சாக் இண்டஸ்ட்ரீஸ் வலம் வந்தது.

இன்று சாக்சாப்ட் குழுமத்தில் சாக்சாப்ட் டெக்னாலஜிஸ், சாக்சாப்ட் அப்ரைசீவ்ஸ், 360 லாஜிக்கா, அக்குமா, ட்ரீம் ஆர்பிட், டெராபாஸ்ட் நெட்ஒர்க்  என பத்துக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன. இது போக கல்வி மற்றும் மருத்துவத் துறையிலும் குறிப்பிடத்தக்க சேவைகளை இந்நிறுவன குழுமம் வழங்கி வருகிறது.    

சாக்சாப்ட் குழுமத்தின் ஒரு அங்கம் தான் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனம். கடந்த 1999ம் ஆண்டு திரு. அவ்தார் கிருஷ்ணா மற்றும் அவரது மகன் திரு. ஆதித்யா கிருஷ்ணா இருவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், நாட்டின் தகவல்தொழில்நுட்ப துறையின் நடுத்தர  / குறு நிறுவனங்கள் பிரிவில் உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை மையமாக கொண்ட நிறுவனங்களுக்கு தேவையான வணிக நுண்ணறிவு மற்றும் தகவல்தொழில்நுட்ப மேலாண்மை தீர்வுகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக மென்பொருள் பயன்பாடு மேம்பாடு, கிளவுட், மொபிலிட்டி, ஐஓடி(IoT) போன்ற பிரிவுகளில் தனது தகவல்தொழில்நுட்ப சேவைகளை இந்நிறுவனம் அளித்து வருகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் நிதி சார்ந்த பிரிவின் மூலம் 36 சதவீதமும், தொலைத்தொடர்பு பிரிவு 29 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தளவாட பிரிவு 13 சதவீத வருவாயை கொடுக்கிறது. 

Saksoft Ltd - Financial - Fundamental parameters

நிறுவனத்திற்கு சென்னையை தவிர்த்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க பிராந்தியம் என மொத்தம் 15 அலுவலகங்கள் உள்ளன. நிறுவனத்தின் வருவாயில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 72 சதவீதம்.

சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3,060 கோடி ரூபாய். நிறுவனர்களின் பங்களிப்பு 67 சதவீதமாகவும், அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 3.53 சதவீதமாகவும் உள்ளது. 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 762 கோடி ரூபாயாக இருந்துள்ளது. செலவினம் ரூ.644 கோடியாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 17 சதவீதமாகவும் உள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.128 கோடியாகவும், நிகர லாபம் 96 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி 16 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 21 சதவீதமாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) 21 சதவீதமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை(D/E: 0.05 மடங்குகள்). வட்டி பாதுகாப்பு விகிதம் 31 மடங்குகளிலும், நிறுவனர்களின் சார்பில் பங்கு அடமானம் இல்லையென்பதும் கவனிக்கத்தக்கது.

மார்ச் 2024 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 495 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நடப்பாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் 201 கோடி ரூபாயை வருவாயாகவும், நிகர லாபமாக ரூ.26 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் தனது பங்கின் முகமதிப்பு விலையை(Face Value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைத்துள்ளது. இது போக, தற்போது நடப்பு வாரத்தில் போனஸ் பங்குகளை (நான்கு பங்குகளுக்கு ஒரு பங்கு) இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னை பெருங்குடியில் குளோபல் இன்போசிட்டி பூங்காவில் அமைந்துள்ளது. இந்தியாவில் ஏழு அலுவலகங்களும், அமெரிக்காவில் ஐந்தும், இங்கிலாந்தில் இரண்டு மற்றும் சிங்கப்பூரில் இரு அலுவலகங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

ஜிஆர்பி லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஜிஆர்பி லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

GRP Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1974ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட ஜிஆர்பி லிமிடெட்(Gujarat Reclaim & Rubber Products Ltd), பயன்படுத்தப்பட்ட டயர்களிலிருந்து ரப்பரை மீட்டெடுக்கும் பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இது போக நைலான் கழிவுகளில் இருந்த எடுக்கப்படும் பொருட்கள், பாலிமர் கலவை, மறுபயன்படுத்தப்பட்ட பாலியோல்ஃபின்ஸ், பொறியியல் பிளாஸ்டிக்குகள் மற்றும் டை (Custom Die Forms) படிவங்கள் என தனது தொழிலை விரிவாக்கம் செய்துள்ளது.

நிறுவனத்தின் பாலிமர் கலவை நூறு சதவீத மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மரப்பொருட்களை விட வலுவாக மற்றும் நீடித்தவையாகவும் உள்ளன. இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு, விமானப் போக்குவரத்து, கடல், தொழிற்துறை மற்றும் விவசாயத்துறைக்கு பயன்படுகிறது.

நிறுவனத்தின் பொறியியல் பிளாஸ்டிக் பிரிவு, வாகனத் துறைக்கு தேவையான உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாடுகளுக்கு உதவுகிறது. பாலியோல்ஃபின்ஸ் பிரிவு பெயிண்ட், எண்ணெய் மற்றும் வாகனப் பேட்டரி உறைகளுக்கு பயன்படுகிறது. டை படிவங்கள் பிரிவு வாகனங்களுக்கு தேவையான கதவு விரிப்புகள், இணைப்பு பாய்கள், தொழிற்துறை பாய்கள் மற்றும் கப்பல்துறைக்கு தேவையான பம்பர்களுக்கு பயன்படுகிறது. 

உலகளாவிய பாலிமர் துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்நிறுவனத்தின் தயாரிப்பு பயன்படுகிறது. ஜிஆர்பி லிமிடெட் ஆண்டுக்கு சுமார் 81,200 மெட்ரிக் டன்களை கையாளும் திறன் கொண்ட ஏழு உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் நிறுவியுள்ளது. இதன் சேவைகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலும், 400க்கும் அதிகமான மதிப்புமிக்க வாடிக்கையாளர்களையும் நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக குட்இயர், பிரிட்ஜ்ஸ்டோன், சியட், அப்பல்லோ டயர், பிர்லா டயர், எம்ஆர்எப், யோகோகமா, பிரேலி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. டயர் உற்பத்தி துறையில் உலகின் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள், ஜிஆர்பி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிறுவனத்தின் மொத்த வருவாயில் டயர்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் ரப்பர் பிரிவின் பங்களிப்பு மட்டும் 94 சதவீதமாகும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஏற்றுமதி பங்களிப்பு மட்டும் சுமார் 70 சதவீதமாகும். மீட்டெடுக்கப்படும் ரப்பர் பிரிவில் நாட்டின் 18 சதவீத பங்களிப்பையும், ஏற்றுமதியில் நாட்டின் 40 சதவீத பங்களிப்பையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.  

2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 461 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.411 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 11 சதவீதமாகவும், வரிக்கு முந்தைய லாபம் 30 கோடி ரூபாயாகவும் உள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 23 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.68 மடங்கு என்ற அளவில் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 5.5 மடங்குகளிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1,251 என்ற விலையிலும் உள்ளது. நிறுவனத்தின் பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் சராசரியாக 7 சதவீதமாக இருக்கிறது.

நிறுவனர்களின் பங்களிப்பு 40 சதவீதமாகவும், பிற பொது முதலீட்டாளர்களின் பங்கு 60 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பில் 0.19 சதவீதம் என்ற அளவில் பங்கு அடமானம் உள்ளது. 2024ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 165 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவனத்தின் கடன்களில் குறுகிய கால கடன் ரூ.91 கோடியாகவும், நீண்டகால கடன் 22 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) ஒவ்வொரு ஆண்டும் சீராக வந்துள்ளது. அதே வேளையில் கடந்த சில வருடங்களாக நிறுவனம் அசையா சொத்துக்களில்(Fixed Assets) குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்து வருகிறது. 2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனம் ஒரு பங்குக்கு ஈட்டிய வருவாய் ரூ.170 (Earning per Share) ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.15,770 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. 

கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 300 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த 52 வார குறைந்தபட்ச விலை 3,417 ரூபாயாகவும், அதிகபட்ச விலை பங்கு ஒன்றுக்கு ரூ.16,746 ஆகவும் இருந்துள்ளது. தற்போது நிறுவனம் பங்கு ஒன்றுக்கு மூன்று பங்குகளை போனசாக(Bonus issue) வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான பதிவு நாள் வரக்கூடிய ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர்களாக (பட்டியலிடப்பட்ட) எல்ஜி ரப்பர் கம்பெனி, இன்டாக் ரப்பர், ஆப்கோடெக்ஸ், மகாலட்சுமி ரப்டெக் மற்றும் இன்னபிற நிறுவனங்கள் உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி 

TCS reported a Net Profit of Rs.12,105 Crore – Q1FY25

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய நிறுவனமாகவும், டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமுமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் 2024-25ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 62,613 கோடி ரூபாயாகவும், செலவினம் 45,951 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) 27 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக 962 கோடி ரூபாயை சொல்லியிருந்த இந்நிறுவனம் முதலாம் காலாண்டின் முடிவில் ரூ.12,105 கோடியை நிகர லாப ஈட்டியுள்ளது. BFSI பிரிவில் 23,074 கோடி ரூபாயையும், உற்பத்தி பிரிவில் 6,271 கோடி ரூபாயையும், நுகர்வோர் தொழிற் பிரிவில் ரூ.9,991 கோடியையும் வருவாயாக பெற்றுள்ளது. தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.10,794 கோடி மற்றும் மருத்துவப் பிரிவில் 6,909 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வட அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு ரூ. 15.14 லட்சம் கோடி. நாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனம் டி.சி.எஸ். ஆகும். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 90,127 கோடி ரூபாய். 

நிறுவனத்தின் கூட்டு வருவாய் வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்களிப்பு 4.86 சதவீதமாகவும் உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 82 மடங்குகளில் இருந்துள்ளது.

நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு மட்டும் சுமார் 13.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக கூகுள், அமேசான், அடோப், இன்டெல், ஆப்பிள், ஆரக்கிள், ஐபிஎம், பாஸ்ச் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை டி.சி.எஸ். நிறுவனத்திற்கு செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 50. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 43.8 சதவீதமாக உள்ளது. 

டி.சி.எஸ். நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இதுவரை மூன்று முறை ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. பங்குகளை திரும்பப் பெறும்(Buyback of Shares) செயல்பாடுகளை ஐந்து முறை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 8.2 சதவீதம்

2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 8.2 சதவீதம் 

India’s Economic growth in the Financial year 2023-24: 8.2 Percent

2020-21ம் நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிகழ்வால் அப்போது நாட்டின் பொருளாதாரம் (-5.8) சதவீத வீழ்ச்சியை கண்டிருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்து சுணக்கத்தில் இருந்த பொருளாதாரம் மீண்டெழுந்து 2021-22ம் நிதியாண்டில் 9.7 சதவீதமாக சொல்லப்பட்டது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 7 சதவீத வளர்ச்சியை கண்டிருந்த நிலையில், கடந்த 2023-24ம் நிதியாண்டில் 8.2 சதவீதமாக தற்போது சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக உலகளவில் காணப்பட்ட பொருளாதார ஏற்ற-இறக்கம், போர் பதற்ற சூழ்நிலை மற்றும் கட்டுக்குள் அடங்காத விலைவாசி விகிதம் ஆகிய நிகழ்வுகள் இருப்பினும் அரசுக்கான வரி வருவாய் உயர்ந்து வருவதன் காரணமாக தற்போதைய பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாகியுள்ளது.

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(CPI Inflation), கடந்த ஒரு வருடத்தில் சராசரியாக 5 முதல் 6 சதவீதம் வரை என்ற அளவில் இருந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கான இலக்கும் 4 – 6 சதவீதம் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச அளவாக கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமும், குறைந்த அளவாக மே 2023 காலத்தில் 4.31 சதவீதமுமாக பணவீக்க விகிதம் இருந்துள்ளது.

2023-24ம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) மூலம் அரசு ஈட்டிய வருவாய் 20.18 லட்சம் கோடி ரூபாய். இந்த வருவாய், இதற்கு முந்தைய ஆண்டுடன்(2022-23) ஒப்பிடுகையில் 11.70 சதவீத வருவாய் வளர்ச்சியாகும். சொல்லப்பட்ட நிதியாண்டில் மாத சராசரி ஜி.எஸ்.டி. வருவாய் 1.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.

ஈட்டப்பட்ட வருவாயில் மத்திய பங்களிப்பு 3.76 லட்சம் கோடி ரூபாயாகவும், மாநில பங்களிப்பு 4.71 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் பங்களிப்பு ரூ.10.27 லட்சம் கோடியாகவும், செஸ்(CESS) வரி வருவாய் பங்களிப்பு ரூ.1.45 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது.

கடந்த 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சந்தை எதிர்பார்த்த அளவினை காட்டிலும் கூடுதலாக வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும் விவசாயத்துறையின் வளர்ச்சி பங்களிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தேசிய புள்ளியியல் அலுவலகம்(NSO) முன்னர், 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிட்டிருந்தது.

பெரும்பாலான அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிட்டிருந்த அளவுகளை காட்டிலும், தற்போது சொல்லப்பட்ட வளர்ச்சி அதிகமான இடைவெளியை ஏற்படுத்தியதற்கு காரணமாக உயர்ந்து வரும் ஜி.எஸ்.டி. வருவாயாக இருக்கலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்திற்கு மேலாகவும், விவசாயத்துறை 12 சதவீத பங்களிப்பையும் மற்றும் உற்பத்தித் துறை 15 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. 12 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டிருக்கும் விவசாயத்துறை நாட்டின் 50 சதவீத வேலை வாய்ப்பை அளித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

  

  

கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் – நிதி அறிக்கை: 2023-24 சுருக்கம்

கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் – நிதி அறிக்கை: 2023-24 சுருக்கம் 

Financial Highlights of Kothari Petrochemicals Ltd – FY 2023-24

சென்னை – நுங்கம்பாக்கத்தில் தனது தலைமையகத்தை கொண்டு தொழில் புரிந்து வரும் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் சமீபத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் பிரபல HCK (HC Kothari Group) குழுமத்தின் துணை நிறுவனம் தான் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ். 1990களில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் எரிபொருள் சேர்க்கை, ரப்பர் உற்பத்தி, கிரீஸ், பி.வி.சி. குழாய் மற்றும் மாஸ்டர் பேட்ச் கலவை ஆகியவற்றுக்கு தேவையான உயர்தர மற்றும் நடுத்தர மூலக்கூறுகளை(Poly Isobutylene) தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மூலக்கூறுகள் பொதுவாக மடிப்பு ஓட்டும் தன்மை, நீர்க்கசிவு தன்மையை களைய, பாகுத்தன்மையை மேம்படுத்த மற்றும் சிறந்த மின் காப்பாகவும் பயன்படுகிறது. உட்கட்டமைப்பு, வாகனங்கள், பேக்கேஜிங், எரிபொருள், உலோகம், பசை மற்றும் ரப்பர் துறைகளுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது.

நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சென்னை – மணலியில் சுமார் 10,000 சதுர அடியில் உற்பத்திக்கு தேவையான வசதிகளுடன் 36,000 TPA திறன் கொண்டு இயங்கி வருகிறது. உரிமம் பெற்ற திறன் அடிப்படையில் 100 சதவீத திறன் உற்பத்தி பயன்படுத்தப்பட்டு வருவதாக நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக லூப்ரிசோல் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், சிங்கப்பூரின் இன்பைனம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.  

நிறுவனத்தின் பொருட்கள், 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய பசிபிக், தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவை. பாலி ஐசோபூடலைன் மூலக்கூறுகளின் தேவையும்(பல்வேறு பயன்பாடுகளுக்கு) சொல்லப்பட்ட நாடுகளில் அதிகமாக உள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.603 கோடியாகவும், செலவினம் 507 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 16 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. இது கடந்த 10 வருட காலத்தில் இல்லாத வளர்ச்சியாகும். இதர வருவாயாக ரூ.8 கோடியும், வரிக்கு முந்தைய லாபம் 95 கோடி ரூபாயாகவும் உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம், 64 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை காணுகையில், கடந்த 10 ஆண்டுகளில் விற்பனை சராசரியாக 6 சதவீதமும், லாபம் சராசரியாக 23 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமாகவும், 10 வருட காலத்தில் 21 சதவீதமாகவும் உள்ளது.

2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 12 கோடி ரூபாயை கொண்டுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 187 கோடி ரூபாயாக உள்ளது. பணவரத்து பொறுத்தவரை, நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதனை சரியாக கையாண்டு வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் ரூ.15.56 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களில் முதலீடு செய்துள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 71 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 42 ரூபாய் என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 81 மடங்குகளிலும் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 130 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

  

 

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

Understanding about Stress Test Methodology – Mutual Funds Investments

பொதுவாக, மருத்துவத் துறையில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) எனும் உடற்பயிற்சி அழுத்த சோதனை என்பது நமது உடல் செயல்பாடுகளின் போது, நமது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனை அளவிட உதவுகிறது. உதாரணமாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிற உடலியக்கம் சார்ந்த வேலைகளை செய்தல் அல்லது ட்ரெட் மில்(TMT) பரிசோதனை செய்யும் போது இதயத்தின் நிலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் அறியலாம். இந்த டெஸ்ட் முறை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிய உதவுகிறது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவரும் நமக்கு இதய நிலைக்கான சிகிச்சைகளை வழங்குவார்.

இதுவே முதலீட்டில் காணும் போது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள சொத்துக்களில் காணப்படும் பணப்புழக்கத்தை(Liquidity) மதிப்பிடுவதற்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. முக்கியமாக பொருளாதார மந்தநிலையின் போது அல்லது பங்குச்சந்தை அதிகமாக சரியும் காலங்களில் இந்த முறை பயன்படுகிறது. சொல்லப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் வெளியேறுவதற்கான காலத்தை இது குறிக்கிறது. 

பொதுவாக சந்தை சரியும் காலங்கள், கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதலீட்டாளர்கள் அச்சத்தில் அல்லது தேவைக்காக அதிக பணத்தை ஒரு குறிப்பிட்ட திட்டத்திலிருந்து எடுக்கும் போது, அத்திட்டத்தில் பணப்புழக்கம்(போதுமானதாக) எவ்வாறு உள்ளது, பெரும்பாலானோர் எளிதாக தங்களது பணத்தை பெற முடிகிறதா, இதனை பண்டு மேலாளர் எவ்வாறு கையாள்கிறார், அவ்வாறு பணம் வெளியேறும் சூழ்நிலையில் அத்திட்டம் மேற்கொண்டு எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளதா என்பதனை அறிய இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பயன்படுகிறது.

இது போன்ற செயல்முறை பொதுவாக, ‘வருமுன் காப்பது நலம்’ என்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையை தான் தற்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும்(SEBI), அதனை சார்ந்த ஆம்ப்பையும்(AMFI) இணைந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்பது ஒன்றும் புதிய முறையல்ல. இது பொதுவாக நிதித்துறையில், குறிப்பாக வங்கிகளில் அதன் திறனை மதிப்பிட செயல்படுத்தப்படும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோர் ஏதேனும் காரணத்தால் ஒரே காலத்தில் அதிக பணத்தை வெளியே எடுக்கும் போது, வங்கி திவாலாகாமல் செயல்படுத்தக் கூடிய நிலைகளை அல்லது வழிமுறைகளை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் பெறலாம்.

மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) கடன் பத்திரத் திட்டங்களுக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது கவனிக்கத்தக்கது. இதனை தான் நாம் பெரும்பாலும் Interest Rate Risk, Credit Rate Risk மற்றும் Liquidity Risk ஆகிய காரணிகளால் காண்கிறோம். உதாரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நடந்த நிகழ்வை நாம் சொல்லலாம்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தால் அதன் விளைவுகளை களைய, பங்குச்சந்தை ஒரே வாரத்தில் அதிக புள்ளிகள் சரிவை கண்டால் சமாளிக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தல் என பொருளாதாரத்தில் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பகுப்பாய்வு தீர்வை அளிக்கும். 

உதாரணமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த இழப்பை எவ்வாறு சரி செய்வது, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்த்து வைத்திருந்த பணத்தை முழுவதும் சிகிச்சைக்கு செலவழிக்காமல் இருக்க என்ன வழிகள் என நமது தனிநபர் நிதித்திட்டமிடலிலும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் நிகழ்வை நாம் காணலாம்.

தற்போது செபி-ஆம்பையால்(SEBI-AMFI) சொல்லப்பட்ட விஷயம், ‘மியூச்சுவல் பண்டில் காணப்படும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Mid & Small Cap Funds) திட்டங்களில் ஏதேனும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது முதலீட்டு பணத்தை கணிசமாக திரும்ப பெறுகையில், அத்திட்டத்தின் பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் அத்திட்டத்தை மேற்கொண்டு நடத்த இயலுமா’ என்பதனை அறிய ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதத் தரவுகளின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட ஏற்கனவே ஆம்ப்பை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சோதனையை தொடரவும், அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மிட் அல்லது ஸ்மால் கேப் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில்(AUM Portfolio) 25 சதவீதம் வரை பணம் வெளியே செல்ல எவ்வளவு நாட்கள் எடுக்கும், இதனைப் போல 50% வரை பணம் வெளியே செல்ல அதற்கு எடுக்கக்கூடிய காலம் எவ்வளவு என்பதனை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறை மூலம் செயல்படுத்தி அதன் முடிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மிட் கேப் திட்டத்திற்கு 50 சதவீதம் வரை பணம் வெளியேறுவதற்கு 27 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவே 25% வரை வெளியேறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மிட் கேப் பண்ட் பிரிவில் உள்ள மற்றொரு பண்டுக்கு இந்த வெளியேறும் நாட்கள் மாறுபடலாம். ஆக, விற்பனை ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்கள் அல்லது பணப்புழக்கம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பரிசோதனை சொல்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனும் அழுத்த சோதனை, பொருளாதார அவசர காலங்களிலும், சந்தை அதிகமாக சரியும் நிலைகளில் மட்டுமே என கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதற்காக இப்போது சந்தை சரியப்போகிறதா என கேட்க வேண்டாம். ஒரு வேளை நடந்தால் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி நிகழ்வு தான் இது. இதனால் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல உங்களது நிதி இலக்கை சார்ந்து முதலீட்டை நீண்டகாலத்தில் மேற்கொள்ளுதல் நலம்.

செபியும், ஆம்ப்பையும் ஏன் திடீரென்று தற்போது இந்த நிகழ்வை நடத்த சொல்கிறது ?

சிறு முதலீட்டாளர்களின் நலனை(முதலீடு) பாதுகாப்பதற்காக தான்.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான சந்தை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதுவும் வரலாற்றில் காணாத ஏற்றமும், அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் குறைந்த வருவாய் வளர்ச்சியும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் நான்கு கோடிக்கும் குறைவான டீமேட் கணக்குகள் இருந்த நிலையில், இன்று சுமார் 14 கோடி டீமேட் கணக்குகள் மொத்தமாக உள்ளது. 

கடந்த இரண்டு முதல் மூன்று வருடமாக, இந்தியாவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், பெரு நிறுவனங்கள்(Large Cap) அளித்த முதலீட்டு வருவாயை காட்டிலும், மிகவும் அதிகமாக கொடுத்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு புதிதாக வரும் டீமேட் கணக்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், கடந்த ஒரு வருட, இரண்டு வருட(Past Performance) முதலீட்டு வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் பண்டுகள் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. அவை எந்தளவு ஏற்றம் கண்டிருக்கிறதோ, அதே போன்று இறக்கத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற நிகழ்வு லார்ஜ் கேப் பங்குகள் அல்லது பண்டு திட்டங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாகவே செபியும் முதலீட்டாளர்களை எச்சரிக்கும் வண்ணம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவை பங்கு சார்ந்த திட்டங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், குறிப்பிட்ட ஸ்மால் கேப் திட்டங்களில் புதிய முதலீடு பெறுவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

பங்குச்சந்தையில் பொதுவாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதாவது வாங்கிய பங்குகளை அவ்வளவு எளிதாக விற்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகளின் விலை ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக ஏற்றத்தை மட்டுமே கண்டிருந்தாலும், விற்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதே வேளையில் இந்த சிக்கல் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டு திட்டங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம், பண்ட் மேலாளரின் அணுகுமுறை தான். அவர் பெரும்பாலும் பணப்புழக்கம் உள்ள பங்குகளை தான் வாங்குவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை வடிவமைப்பதும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அவசியம்.

கடந்த பிப்ரவரி மாத ஆம்ப்பை(AMFI) முதலீட்டு தரவு அறிக்கையின் படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில்(Growth / Equity Oriented Schemes) சுமார் 12,00,77,704 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது. இவற்றில் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் 3,23,80,735 கோடி ரூபாய். சொல்லப்பட்ட மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP) முதலீடு 19,187 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தனிநபர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 60.30 சதவீதமாகும்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர காலத்தில் ஹைபிரிட்(Hybrid) மற்றும் லார்ஜ் கேப் திட்டங்களிலும், நீண்ட காலத்தில் அஸெட் அலோகேஷன், மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் எஸ்.ஐ.பி(SIP) மற்றும் எஸ்.டி.பி.(STP) முறையில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே நீண்டகாலம் என்பது குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் அல்லது உங்களது நீண்டகால நிதி இலக்கு. குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் முடிந்தளவு துறை சார்ந்த அல்லது தீமாட்டிக்(Thematic) பண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் அறிக்கைகளை காண…

Disclosure of Stress Test & Liquidity Analysis  in respect of Mid Cap & Small Cap Funds

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com