Tag Archives: silver etf

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

India’s First Silver ETF Fund to invest – Investment opportunity 2022

பொதுவாக தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் பங்களிப்பு உற்பத்தி சார்ந்த துறையில் அதிகமாக உள்ளது. தங்கம் அணிகலன்களாக வலம் வந்தால், வெள்ளி தொழிற்துறைக்கு தேவையான முக்கிய மூலப்பொருளாக அமைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருவது பல நூற்றாண்டுகளை கடந்து வந்துள்ளது. வெள்ளியின் பங்களிப்பு தொழிற்துறையில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பங்கு சந்தைகள் சரியும். இதனை சரிக்கட்டும் ஆயுதமாக தங்கமும், வெள்ளியும் உதவும். நிதி சொத்துக்கள்(Financial Assets) வரிசையில் ஏற்கனவே தங்கம் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெள்ளி முதலீட்டிலும் இது சாத்தியப்பட்டுள்ளது.

நடைமுறையில் தங்கம் – அரசு பத்திரமாகவும், சந்தையில் இ.டி.எப். வடிவிலும் மற்றும் பரஸ்பர நிதியின் ஒரு திட்டமாகவும்(SGB, Gold ETF, Gold Fund) கிடைக்கப்பெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளி இ.டி.எப். முதலீடு சார்ந்த விதிமுறைகளை செபி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத முதலீடு இருக்க வேண்டுமென்றும், முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் முதலீடு 99.9 சதவீதம் தூய வெள்ளியாக வாங்குவதற்கு பயன்பட வேண்டும் என விதிமுறை சொல்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும், மேலும் இரண்டு நிறுவனங்கள்(Aditya Birla Sun life, Nippon India Mutual Funds) வெள்ளி சார்ந்த இ.டி.எப். திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.

புதிய பண்டு வகையாக(NFO) வரும் ஐ.சி.ஐ.சி.ஐ. சில்வர் இ.டி.எப். திட்டம் ஜனவரி 5 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பதிவுக்கு உள்ளது. பிறகு இதனை நாம் வெளிச்சந்தையிலும் வாங்கி கொள்ளலாம். உள்நாட்டு விலையில் உள்ள வெள்ளியின் செயல்திறனுக்கு ஏற்ப, Silver ETF விலையும் மாறுபடும்.

வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு இது புதிய மற்றும் எளிமையான வாய்ப்பாக காணப்படுகிறது. சில்வர் ETF மூலம் தர தூய்மை, பாதுகாப்பு மற்றும் விலை ஆகியவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ.100 (NFO) மட்டுமே.

இனி, வெள்ளியை நாம் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வாயிலாகவும் வாங்கி கொள்ளலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement