2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 8.2 சதவீதம்
India’s Economic growth in the Financial year 2023-24: 8.2 Percent
2020-21ம் நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிகழ்வால் அப்போது நாட்டின் பொருளாதாரம் (-5.8) சதவீத வீழ்ச்சியை கண்டிருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்து சுணக்கத்தில் இருந்த பொருளாதாரம் மீண்டெழுந்து 2021-22ம் நிதியாண்டில் 9.7 சதவீதமாக சொல்லப்பட்டது.
2022-23ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 7 சதவீத வளர்ச்சியை கண்டிருந்த நிலையில், கடந்த 2023-24ம் நிதியாண்டில் 8.2 சதவீதமாக தற்போது சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக உலகளவில் காணப்பட்ட பொருளாதார ஏற்ற-இறக்கம், போர் பதற்ற சூழ்நிலை மற்றும் கட்டுக்குள் அடங்காத விலைவாசி விகிதம் ஆகிய நிகழ்வுகள் இருப்பினும் அரசுக்கான வரி வருவாய் உயர்ந்து வருவதன் காரணமாக தற்போதைய பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாகியுள்ளது.
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(CPI Inflation), கடந்த ஒரு வருடத்தில் சராசரியாக 5 முதல் 6 சதவீதம் வரை என்ற அளவில் இருந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கான இலக்கும் 4 – 6 சதவீதம் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச அளவாக கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமும், குறைந்த அளவாக மே 2023 காலத்தில் 4.31 சதவீதமுமாக பணவீக்க விகிதம் இருந்துள்ளது.
2023-24ம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) மூலம் அரசு ஈட்டிய வருவாய் 20.18 லட்சம் கோடி ரூபாய். இந்த வருவாய், இதற்கு முந்தைய ஆண்டுடன்(2022-23) ஒப்பிடுகையில் 11.70 சதவீத வருவாய் வளர்ச்சியாகும். சொல்லப்பட்ட நிதியாண்டில் மாத சராசரி ஜி.எஸ்.டி. வருவாய் 1.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.
ஈட்டப்பட்ட வருவாயில் மத்திய பங்களிப்பு 3.76 லட்சம் கோடி ரூபாயாகவும், மாநில பங்களிப்பு 4.71 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் பங்களிப்பு ரூ.10.27 லட்சம் கோடியாகவும், செஸ்(CESS) வரி வருவாய் பங்களிப்பு ரூ.1.45 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது.
கடந்த 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சந்தை எதிர்பார்த்த அளவினை காட்டிலும் கூடுதலாக வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும் விவசாயத்துறையின் வளர்ச்சி பங்களிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தேசிய புள்ளியியல் அலுவலகம்(NSO) முன்னர், 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிட்டிருந்தது.
பெரும்பாலான அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிட்டிருந்த அளவுகளை காட்டிலும், தற்போது சொல்லப்பட்ட வளர்ச்சி அதிகமான இடைவெளியை ஏற்படுத்தியதற்கு காரணமாக உயர்ந்து வரும் ஜி.எஸ்.டி. வருவாயாக இருக்கலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்திற்கு மேலாகவும், விவசாயத்துறை 12 சதவீத பங்களிப்பையும் மற்றும் உற்பத்தித் துறை 15 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. 12 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டிருக்கும் விவசாயத்துறை நாட்டின் 50 சதவீத வேலை வாய்ப்பை அளித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை

