நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23 – சிறு பார்வை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23 – சிறு பார்வை 

India’s Gross Domestic Product(GDP) growth – 2022-23 Insights

முன்னொரு காலத்தில் இந்திய பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக சொல்லப்பட்டிருந்தாலும், இன்றளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும்பாலும் சேவைத்துறையை சார்ந்து தான் உள்ளது. நாட்டின் பொருளாதார உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு மட்டும் 50 சதவீதத்திற்கும் மேலாக  உள்ளது. விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி துறையின் ஒட்டுமொத்த பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது. எனினும் இத்துறை தான் நாட்டின் வேலைவாய்ப்பினை வழங்குவதில் 50 சதவீதத்திற்கு மேலாக காணப்படுகிறது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சந்தை எதிர்பார்த்த அளவினை காட்டிலும் அதிகமாக தான் வளர்ச்சியடைந்துள்ளது. நடப்பு 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் பொருளாதார வளர்ச்சியை காணுகையில், 2021-22ம் நிதியாண்டில் அதிகபட்சமாக 9.1 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இது 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலமாகும். அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில்(2020-21) நாட்டின் பொருளாதாரம் 5.8 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது. 

குறைவான வளர்ச்சி அளவாக 2019-20ம் நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருந்துள்ளது. மற்றைய அனைத்து நிதியாண்டுகளிலும்(2010க்கு பிறகு) நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 5 சதவீதத்திற்கு அதிகமாக தான் இருந்துள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நாட்டின் பொருளாதார மதிப்பு 3.75 அமெரிக்க டிரில்லியன் டாலர்கள். 2014ம் ஆண்டில் உலகளவில் பத்தாவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

india-full-year-gdp-growth- Since 2006

உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில்(GDP Contribution) இந்தியாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 3.2 சதவீதமாகும். முதலிடத்தில் அமெரிக்கா(26.8 டிரில்லியன் டாலர்கள்) 25 சதவீத பங்களிப்புடனும், இரண்டாவது இடத்தில் சீனா(19.3 டிரில்லியன் டாலர்கள்) 17.50 சதவீத பங்களிப்புடனும் உள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடம் முறையே ஜப்பான்(4.4 டிரில்லியன் டாலர்கள்) மற்றும் ஜெர்மனி(4.30 டிரில்லியன் டாலர்கள்) ஆகிய நாடுகள் உள்ளன.

நாட்டின் வரி வருவாய் வளர்ச்சியடைந்து வருவதும், உலகளவில் கடன்-பொருளாதாரத்திற்கான(Debt to GDP) இடைவெளி குறைந்து காணப்படுவதும் இந்தியாவிற்கு சாதகமான நிலையாக இருந்து வருகிறது. பணவீக்கம், உலகளாவிய தேவையில் பலவீனம் காணப்படுதல், தனிநபர் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு, வேலைவாய்ப்பின்மை விகித மாறுபாடு ஆகியவை பாதகமான நிலையாக உள்ளது.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் கடன்-பொருளாதார தன்மை முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனை ஒப்பிடுகையில் இந்தியாவின் கடன்-பொருளாதார தன்மை 81 சதவீதமாக தான் உள்ளது. குறைந்த கடன் மலிவு தன்மை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும் சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

நாடு சுதந்திரம்(1947) பெறப்பட்ட நிலையிலிருந்து 1991ம் ஆண்டு வரை பெரும்பாலும் நாம் சோவியத் யூனியனின் பாணியில் தான் பொருளாதாரத்தை திட்டமிட்டு வந்துள்ளோம். அதற்கு பிறகான காலக்கட்டத்தில் புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டு, பொருளாதார ஒழுங்குமுறையுடன் பாதுகாப்புவாத பொருளாதார திட்டமிடல்கள் ஊக்குவிக்கப்பட்டன. 

2022ம் ஆண்டு தரவின் படி, உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், ஆறாம் மிகப்பெரிய இறக்குமதியாளாராகவும் இந்தியா உள்ளது. உலகின் ஆறாவது மிகப்பெரிய நுகர்வு சந்தையாகவும் இந்தியா இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக தான் வெளிநாட்டு நிறுவனங்களும், அன்னிய முதலீடுகளும் இங்கே கவனம் செலுத்துகின்றன. 

நாட்டின் முக்கிய வர்த்தக பங்காளிகளாக அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு, சவுதி, ரசியா, ஜெர்மனி, இந்தோனேசியா, ஹாங்காங், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. 2021-22ம் ஆண்டின் முடிவில் அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு மட்டும் சுமார் 82 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 

உலகின் முதல் பத்து பங்குச்சந்தையில்(தரவரிசை) மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு இடங்களில் அமெரிக்க சந்தைகளான நியூயார்க் மற்றும் நாஷ்டாக் சந்தைகளும், மூன்றாமிடத்தில் சீனாவின் ஷாங்காய் சந்தையும் உள்ளன. 

147 வருட பழமையான மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு சுமார் 280 லட்சம் கோடி ரூபாய். இச்சந்தையில் 5000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின் மதிப்பு 269 லட்சம் கோடி ரூபாய். இங்கே சுமார் 2000 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.