நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

Jyothy Labs Limited – Fundamental Analysis – Stocks

கேரள மாநிலத்தை சேர்ந்த திரு. எம்.பி. ராமச்சந்திரன் அவர்களால், கேரளாவை தலைமையிடமாக கொண்டு 1983ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் ஜோதி லேப்ஸ் நிறுவனம் (Jyothy Laboratories). எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையில் தொழில் புரிந்து வரும் இந்நிறுவனம் ஆரம்பநிலையில் ஒரே ஒரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தது. இன்று ஆண்டுக்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான வருவாயை கொண்டும், சுமார் 6,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

வீட்டு பராமரிப்பு, துணிமணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பிரபல சொட்டு நீலமான, ‘உஜாலா’ உற்பத்திக்காக 1992ம் ஆண்டு சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை துவக்கியது. துணிமணி பராமரிப்பில், ‘ Ujala, Henko, Mr.White மற்றும் More Light’ இதன் முக்கிய பிராண்டுகள். நாட்டின் துணிமணி பராமரிப்புக்கான பொருட்கள் பிரிவில், 81 சதவீத சந்தை மதிப்பை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் துணிமணி பராமரிப்பு பிரிவு மட்டும் 37 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில்(Dish Wash) இதன் ஒட்டுமொத்த வருவாயில் 38 சதவீதத்தையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில், ‘Exo, Prill’ இதன் முக்கிய பிராண்டுகள். இந்த துறையில் 11 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஜோதி லேப்ஸ் வலம் வருகிறது.

தனிநபர் பராமரிப்பு பிரிவில், ‘Margo, Neem Active மற்றும் Fa’ இதன் பிரபல பிராண்டு பொருட்கள். வீட்டு பூச்சிக்கொல்லி சார்ந்த பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த பிரிவில் 21 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் வைத்துள்ளது. ‘Maxo கொசுவர்த்தி, T-Shine Cleaner, Maya ஊதுபத்திகள்’ ஆகியவை இதன் பிராண்டுகளாக உள்ளன. 

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேர, சரக்கு மேலாண்மை அமைப்பையும்(Freight Management System) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நான்காம் தொழில் புரட்சியின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஜோதி லேப்ஸ் முதலீடு செய்துள்ளது. 

2007ம் ஆண்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. தற்போது நிறுவனத்தின் தலைமையிடமாக மும்பை உள்ளது. இத்துறையில் புதிதாக நுழையும் மற்றும் ஏற்கனவே சந்தையில் சிறந்து விளங்கும் துறை சார் நிறுவனங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டில் கென்கேல் இந்தியா(Henkel India) நிறுவனத்தை ஜோதி லேப்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.     

ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்டு பொருட்களுக்கு, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், திரைப்பட துறையில் உள்ள நடிகைகள் ஷில்பா  ஷெட்டி மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோர் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ரா. லட்சுமி நாராயணன் அவர்களும், நிர்வாக இயக்குனராக எம்.ஆர். ஜோதி அவர்களும் உள்ளனர். நாட்டின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இன்றளவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,196 கோடியாகவும், இயக்க லாபம்(Operating Profit) 248 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் சராசரியாக வருடத்திற்கு 12-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 159 கோடி. செப்டம்பர் 2022 காலாண்டின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.1,428 கோடி. 

ஜோதி லேப்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக பங்குச்சந்தையில் உள்ளது. உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களிடம் 17 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடம் 13 சதவீத பங்குகளும் உள்ளது. கடன் தன்மை குறைவாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் 14 சதவீதமாக(5 வருட காலத்தில்) இருப்பதும் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.     

ஜோதி லேப்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.134 ஆகவும், அதிகபட்ச விலையாக 223 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு துவக்கத்தில் இந்த பங்கின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு மற்றும் பணப்பாய்வு(Discounted Cash Flow) முறையில் மதிப்பிடும் போது, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ. 130-160 என்ற சராசரியை பெறும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s